”புள்ளும் சிலம்பின காண்”

 

 

“புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்,

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ,

பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு,

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி,

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை,

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்,

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்,

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவையில் ஆறாம் பாசுரம் இது.

மார்கழி நோன்பு நோற்பதற்காக விடியற்காலையில் எழுந்து புறப்படும் ஆயர் சிறுமிகள் ஒவ்வொரு வீட்டிலும் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களை எழுப்புகிறார்கள்.

ஒரு இல்லத்தின் கதவைத் தட்டுகிறார்கள். உள்ளே இன்னும் உறங்கிக் கொண்டிருக்கும் ஒருத்தி

“என்ன பொழுது விடிந்து விட்டதா?

என்று கேட்கிறாள்.

”விடியல் பொழுதிலே எழுந்து வருவதாகச் சொன்ன நீ இன்னும் உறங்கலாமா?”

என்று கேட்கிறார்கள்.

”அதற்கு அவள் பொழுது விடிந்ததற்கு எதேனும் அடையாளம் சொல்லுங்கள்” என்கிறாள்.

”நாங்கள்தான் வந்திருக்கிறோமே” என்கிறார்கள். அவள் ”வேறு ஏதாகிலும் சொல்லுங்கள்” என்று கேட்கிறாள்.

உடனே இவர்கள்

“புள்ளும் சிலம்பின காண்” என்றோர் அடையாளம் சொல்கிறார்கள் அதாவது ”பறவைகளெல்லாம் எழுந்து ஒலி எழுப்பிக் கிளம்பி விட்டன. அவை இரை தேடப் புறப்பட்டு விட்டன. நீ இறை தேட வேண்டாமா?” என்று கேட்கிறார்கள்.

’காலை எழுந்திருந்து கரியகுரு விக்கணங்கள்,

மாலின் வரவுசொல்லி”

என்று ”நாச்சியார் திருமொழி” யில் ஆண்டாள் பாடுவது இங்கே நினைவுக்கு வருகிறது.

அப் பெண் உடனே

“உங்களுக்குதான் உறக்கமே கிடையாதே, காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே என்று ‘திரு விருத்தத்தில் ஆழ்வார் கூறியிருக்கிறார். வேறு அடையாளம் சொல்லுங்கள் என்கிறாள்.

அவர்கள்

”புள்ளரையன் கோயிலில் வெள்ளைவிரி சங்கின் பேரரவம் கேட்டிலையோ என்று வேறோர் அடையாளம் சொல்கிறார்கள். புள்ளரையன் என்பது பறவைகளின் அரசனான கருடனைக்குறிக்கும்   அப்படிப்பட்ட கருடாழ்வாரின் கோயிலில் சங்கொலிக்கிறதைப் பேசுகிறார்கள். கருடனுக்கு இறைவனான நாராயணனின் கோயில் என்றும் கொள்ளலாம். கண்ணன் அவதரிக்கும் ஆய்பாடியில் பெருமாளுக்குக் கோயில் உண்டா என்றால் ஸ்ரீ ராமபிரான் அவதாரம் செய்த அயோத்தியில் ரங்கநாதன் கோயில் இருந்ததை எண்ணிக்கொள்ளலாம்.

கருடனனை ஏன் சொல்கிறார்கள் என்றால் கருடாழ்வாரைக் கொண்டே இவர்கள் பெருமாளின் அருளைப் பெற வேண்டியிருக்கிறது.

“வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்று  ஆழ்வார் பாடியிருப்பதால் வேதாத்மாவான கருடனை முன்னிட்டுச் சொல்கிறார்கள்.

அக்கோயிலில் ஒலிக்கும் சங்கை ’வெள்ளை விரி சங்கு’ என்று குறிப்பிடுகிறார்கள். நாச்சியார் திருமொழியில் “வெள்ளை விளிசங்கிடங் கையிற்கொண்ட விமலன்” என்று குறிப்பிடப்படுகிறது. அந்தச் சங்கின் பேரரவம் அதாவது பெருமுழக்கம் உன் காதில் விழவில்லையா? என்று கேட்டு அவளை எழுப்புகிறார்கள்.

தமிழ் நாட்டில் கோயிலில் திறக்கப்படும்போது சங்கொலிக்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. “கைம்மணி ஒன்றும் சங்கு இரண்டும் ஆக ஆள் பன்னிரண்டு கொண்டு பள்ளி எழுச்சி பாடுவது” என்று இராசராச சோழன் நிறுவிய செஞ்சி சேவூர் கல்வெட்டு கூறுகிறது.

”போர்க்களத்தின் நடுவே கிருஷ்ணன் ஒலித்த பாஞ்சன்யத்தின் ஒலி போலவும், சுக்ரீவனின் அரண்மனை வாசலில் நின்று இலட்சுமணன் தன் வில்லிலிலே நாண் ஏற்றி ஒலித்ததைப் போலவும் ஒலி எழும்பியதே, உன் காதில் விழ வில்லையா?” என்று கேட்கிறார்கள்.

உள்ளே இருப்பவள் பதில் சொல்லாமல் கிடக்கிறாள். அவளிடம்  பிள்ளைத் தன்மை இன்னும் மறைய வில்லை எனக் கருதி ‘பிள்ளாய்’ என்கிறார்கள். மேலும் அவள் இந்த பகவத் விஷயத்திற்குப் புதியவள். அவளிடம்,

”பக்தர்களான எங்களைக் காண நீ வர வேண்டாமா? ”பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே” என்று ஆழ்வார் பாடியிருப்பதால் நாங்கள் உன் வடிவைக் காண வேண்டுமென்று ஆசைப்பட்டிருக்கும்போது, நீ எங்கள் பேச்சைக் கேட்டுத் திருப்தி அடைவது உன் பிள்ளைத் தன்மையையே காட்டுகிறது’ என்கிறார்கள்.

அவள் திடுக்கிட்டு எழ வேண்டும் என்பதற்காக கிருஷ்ணனின் வரலாற்றைச் சொல்கிறார்கள். எம்பெருமானுக்கு ஆபத்து என்றால் அவள் உடனே எழுந்திருப்பாள் என்று தாய் வடிவத்திலே வந்த பூதனை எனும் அரக்கி கண்ணனுக்குப் பால் கொடுப்பது போல் வஞ்சனை செய்து அவனை மாய்க்க எண்ணமிட்டபோது கண்ணன் அந்த அரக்கியின் முலைதன்னை இறுகப் பிடித்துக் கொண்டு கோபத்துடன் கூடியவனாய், அவளை உயிருடன் சேர்த்துக் குடித்தான் என்பதைப் ’பேய் முலை நஞ்சுண்டு’ எனப் பாடுகிறார்கள். இவ் வரலாற்றைத் திருமங்கையாழ்வார்,

”வஞ்சனை செய்யத் தாயுருவாகி வந்தபேய் அலறிமண் சேர நஞ்சமர் முலையூடு உயிர்செகவுண்ட நாதனை”

எனப் பாடுவார்.

அது விரோதியாக வந்த வரலாறு அல்லவா? என்று அவள் கிடக்கிறாள். இப்போது இவர்கள் தாய் யசோதையே காப்பாக வைத்த சகடம் உடைக்கப் பட்டதைச் சொல்கிறார்கள். கம்சன் ஏவிய சகடாசூரன் வண்டிச் சக்கரமாக வந்தான். அவன் கண்ணனை அழிக்க வேகமாக வந்த போது கண்ணன் தன் காலால் அதை உதைத்தான். அதுப் பொடிப் பொடியாகப் போயிற்று. இதைக் கம்சனைப் பின்னால் உதைக்க அக் குழந்தை, தன் திருவடியை சோதனை செய்து பார்த்ததாகச் சொல்வார்கள்.  இப்படி கிருஷ்ணன் திருவடி நமக்கு மட்டுமன்றி அவனுக்கும் காப்பாயிற்றாம். இவ்வாறு ‘கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி’ என்கிறார்கள்.

நாராயணன் என்றாலே நாரம் என்பதைப் படுக்கையாகக் கொண்டவன் என்பது பொருள். நாரம் என்றால் தீர்த்தமாகும். அப்படிப்பட்ட வெள்ளத்தில் அவன் கிடக்கிறான். அவன் திருமேனிக்குத் தக்கபடி அது குளிர்ச்சியாக உள்ளது. அந்த நீர் உறுத்தாமல் இருக்க மென்மை, வாசனை, தண்மை உள்ள அரவான ஆதிசேஷன் மேல் அவன் பள்ளிகொண்டிருக்கிறான்.

அந்த ஆதிசேஷனை

”சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,

நின்றால் மரவடியாம்”

என்று முதல் திருவந்தாதியிலே பார்க்கலாம். இதைத்தான் ‘வெள்ளத்தில் துயிலமர்ந்த வித்து’ என்று ஆண்டாள் பாடுகிறார்.

வித்து என்பதை அவதாரங்களுக்கெல்லாம் விதையாக இருப்பவன் எனப் பொருள் கொள்ளலாம்.

’ஆலமர் வித்தின் அருங்குறளானான்’ என்று கம்பரும்

’முதல் தனி வித்தேயோ’

என்று நம்மாழ்வாரும் அருளிச் செய்கின்றனர்.

அப்படிப்பட்ட பெருமாளை முனிவர்களும் யோகிகளும் தங்கள் உள்ளத்தில் கொண்டுள்ளார்களாம்.

”அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து”

என்கிறபடி திருப்பாற்கடலோடும் ஆதிசேஷனோடும் பிராட்டியோடும் பெருமாளை அவர்கள் தம் நெஞ்சில் கொண்டிருக்கிறார்களாம்.

அவர்கள் உள்ளத்தில் பெருமாள் இருப்பதை,

“மது கைடபாதிகள் இல்லாத இடம்; பனிக் கடலிலே நீராடி உண்டான விடாய் தீர மனக் கடலிலே கொண்டு”

என்று ஈராயிரப்படி கூறும். ”முனிவர்களும் யோகிகளும் கிளம்பிவிட்டார்கள். நீ இன்னும் எழவில்லையே” என்கிறார்கள்.

பெருமானின் குணங்களை எப்போதும் மனனம் செய்து கொண்டே இருப்பவர்கள் முனிவர்கள் என்றும், எப்போதும் அவர் கூடவே இருந்து அடிமை செய்பவர்கள் யோகிகள் என்றும் கூறப்படுகிறார்கள்.

அந்த முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுகிறார்களாம். ஏன் தெரியுமா? அவர்கள் உள்ளே பகவான் இருக்கிறானாம். பிரகாலதானைப் பெரிய கற்களுடன் கட்டி மலையிலிருந்து உருட்டும்போது அவன் தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டானாம்.

அவன் தன் நோவைப் பொருட்படுத்தாமல் தன் உள்ளிருக்கும் பகவானுக்கு ஏதேனும் ஆகி விடுமோ என அஞ்சினானாம். அப்படியே உள்ளே இருக்கும் பெருமாளுக்கு எந்தத் துன்பமும் ஏற்படாமல் இருக்க ஒரு நிறைமாத கர்ப்பவதி இன்னும் சிறிது நேரத்தில் பிரசவம் ஆகப் போகிற சமயத்தில் எப்படி எழுந்திருப்பாளோ அப்படி மெள்ள அவர்கள் எழுந்திருப்பார்களாம். எழுந்த அவர்கள் ‘அரி, அரி’ என்று பெருங்குரலில் உரக்கச் சொல்வார்களாம். அரி எனும் சொல்லுக்குப் பாபங்களைப் போக்குபவன் என்பது பொருளாகும்.

’ஆதி அந்தம் அரி என யாவையும் ஓதினார்’ என்பார் கம்பர். ஹரி எனும் வடசொல் சத்ரு வாசகம் என்பார்கள். நமது அந்தரங்க, அகங்கார, மமகாரங்களைத் தொலைக்கும் வாசகம் அது.

’அவர்கள் அரி என ஒலிக்கும் பேரரவம் ஆயர்பாடி எங்கும்

ஒலிக்கிறதே. உன் காதில் கேட்கவில்லையா? எழுந்திரு. நாங்களும் எழுந்துவிட்டோம். கிருஷ்ணனைப் பிரிந்து கிடக்கிற நம் நெஞ்சம் மகிழ்ச்சியடைய உள்ளம் குளிர மார்கழி நீராடுவோம்’

என்று உள்ளே இருப்பவளை எழுப்புகிறார்கள்.

6—ஆம் பாசுரம் முதல் 15—ஆம் பாசுரம் வரை ஒவ்வொரு ஆழ்வாரையும் எழுப்புவதாகவும் சொல்வார்கள்.

இப்பாசுரம் பெரியாழ்வாரை எழுப்பும் பாசுரமாகும்.

பெரியாழ்வார் மதுரை நகரில் நாராயணன் ஒருவனே பரம்பொருள் என்று நிறுவிப் பொற்கிழியறுத்தார். அதைக் கண்டு மகிழ்ந்த பாண்டியன் அவரைப் பாராட்ட எண்ணினான். பெரியாழ்வாரைப் பட்டத்து யானை மீது ஏற்றி பவனி வரச் செய்தான். அக் காட்சியைக் காண திருமால் பிராட்டியோடு வைகுண்டத்திலிருந்து இறங்கிக் கருடழ்வாரின் மீது காட்சி தந்தார். அதைப் பார்த்தார் பெரியாழ்வார்.

மண்ணுலகிற்கு வந்த பகவானுக்குக் கண் எச்சில் பட்டு விடப் போகிறதே என்று பயந்து பகவானுக்கே,

’பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்

சேவடி செவ்வி திருக்காப்பு’

எனப் பல்லாண்டு பாடி மங்களாசாசனம் செய்தார். பெருமாளுக்கே ஏதேனும் கண் எச்சில்பட்டுத் தீங்கு வந்திடுமோ என அவர் சிறு பிள்ளைத்தனமாக எண்ணியதால் ‘பிள்ளாய்’ எனக் கூறி அவரை எழுப்புகிறார்களாம்.

மேலும் புள் என்பது பறவையைக் குறிக்கும். பறவைகள் நந்தவனமான சோலையில்தான் வசிக்கும். பெரியாழ்வாரும் நந்தவனத்திலேயே இருந்து பெருமாளுக்கு மாலை கட்டும் டைச் செய்து வந்தார்.

இப்பாசுரத்தில் வரும் ‘புள்ளரையன்’ என்பது கருடனைக் குறிப்பதாகும். பெரியாழ்வாரும் கருடாழ்வாரின் அம்சமாக அவதரித்தவர்.

“பாண்டியர் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று

ஈண்டிய சங்கம் எடுத்தூத” என்பது பெரியாழ்வார் தனியனில் இருப்பதைத்தான் ’வெள்ளை விளி சங்கு’ என்று குறிப்பதன் மூலம் ஆண்டாள் நாச்சியார் காட்டுகிறார்.

தவிர

‘படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டு’

எனச் சங்கிற்கும் பல்லாண்டு பாடியவர் பெரியாழ்வார் ஒருவர் மட்டுமே.

பெரியாழ்வார் தன்னை மறந்து அதிகமாக ஈடுபட்டது கிருஷ்ணாவதாரத்தில்தான். அவர்தான் பூதகி வதத்தையும் சகடாசூரன் வதத்தையும் முதன் முதல் பாடியவர்.

முனிவர்களும் யோகிகளும் பரமாத்மாவிடம் எதையும் கேட்க மாட்டார்கள். அதே போல பெரியாழ்வாரும் தாம் அருளிச் செய்த எந்தப் பாசுரத்திலும் எதையும் பகவானிடம் வேண்டவில்லை.

இத்தகு சீர்மிகு ப்ரமாணங்களால் இப்பாசுரம் பெரியாழ்வாரை எழுப்புகிறது எனலாம்.

ஆழ்வார்கள் வாழி!        அருளிச் செயல் வாழி!

 

Series Navigationநவீன அரபு இலக்கியம் : எச்.பீர்முகமது நூல் அறிமுகம்மருமகளின் மர்மம் – 12முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லைநோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!கமலா இந்திரஜித் கதைகள்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 42தாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்