பூனைகளின் மரணம்

This entry is part 27 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

– பத்மநாபபுரம் அரவிந்தன் –

யாரேனும் கண்டதுண்டோ .. பூனைகளின்
இயற்கையான மரணத்தை?
வாகனங்களில் அடிபட்டோ , நாய்களால்
கடிபட்டோ இரை பிடிக்கத் தாவுகையில்
தவறிக் கிணற்றுள் விழுந்தோ ..
விபத்து சார்ந்த மரணங்களையன்றி
பூனைகளின் இயற்கையான மரணம்
மனித மனதைப் போல பெரும் புதிர்…

குறிகிய இடத்துள் நெளிந்து நுழையும்
உயர இடத்தில் பரபரக்க ஏறும் …
எப்படித் துக்கிப் போட்டாலும்
கால்கள் ஊன்றித் தரையிறங்கும்
புழுதியில்ப் புரண்டு அழுக்காகும்
நாக்கால் நக்கியே தூய்மையாகும்

விரட்டி வேட்டயாடி .. சில நேரங்களில்
வேடிக்கையாய் விளையாடி ..
புணர்தல் குரலில் ஆவேசங் காட்டி
வாழும் பூனைகள் மரணத்தின் சூட்சுமத்தை
மறைத்தே வைத்திருக்கும்…

தன் மலக் கழிவைக் கூட குழி தோண்டிப்
புதைக்குமை … மரணத்தை தம்முள்
பதுக்கியபடி எங்கென்றே தெரியாமல்
மறையும் ஒரு நாள்.

Series Navigationபா. ரஞ்சித்தின் “ அட்டகத்தி “இடைவெளிகள் (9) – புலம்பெயர்தலும் உருளைக்கிழங்கு பொரியலும்

3 Comments

  1. இரு பிழைகள்
    ஒன்று :குறிகிய இடத்து அல்ல குறுகிய இடத்து ( அச்சு
    பிழைபோலும் )
    சந்திப்பிழை ப் தேவையில்லை இங்கு.புழுதியில் புரண்டு
    எனக்கு கவிதை பிடிக்கிறது ஒரு பூனையில் இத்தனை செய்திகளா அரவிந்தன் , மேலும் வடியுங்கள் கவிதைகள் மலர்கள் மணந்து வீசட்டும்.பி.கு தெனாலி ராமன் பூனைகள் வளர்த்த கதை தெரியுமா ? என் மின்னஞ்சல் கவிஞர் ஆராkavignarara@gmail.com

  2. Avatar Jenson Fernando

    ஆனைகளின் பேருரு கிடைக்காவிட்டாலும்
    அணிகொண்டு படைகளங் காணாவிட்டாலும்
    காதடைக்க பெருங்குரலில் பிளிறாவிட்டாலும்
    மூலவரைச் சுமக்கும்பேறு தகைக்காவிட்டாலும்

    புறமுதுகில் மணங்கமழ்புனுகு ஊறாவிட்டாலும்
    அரிமாவின் ரஜனிப்பிடரி வாய்க்காவிட்டாலும்
    கார்வண்ண புலிக்கோடு வரைபடாவிட்டாலும்
    எலிபிடிக்கும் இழிபணியில் வளர்ந்துவிட்டாலும்

    நமைப்போல இவற்றிகுமோர் தினசரி வாழ்வுண்டு
    வாழ்வுண்டானால் அதற்கோர் அந்திம முடிவுமுண்டே
    பாடைதூக்காமல் பறையடிகாமல் – காற்றிலிவைக்
    காணாமல்போவது எங்கனமெனும் அவதானம் அருமை

    • Avatar PADMANABHAPURAM ARAVINDHAN

      மிக்க நன்றி திரு ஜென்சன்..

      அற்புதமான கவிமொழியில் கவிதையாலே என் கவிதையைப் பாராட்டியதற்கு …பத்மநாபபுரம் அரவிந்தன் –

Leave a Reply to kavignar ara Cancel reply

Your email address will not be published. Required fields are marked *