பெண்ணுக்குள் நூறு நினைவா ?

Spread the love

 

 

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி.

 

 

 

பாதை இல்லா மேடு பள்ளத்தில்

பயணம் செய்யும் பார்வை ​
மின்சார மில்லா விளக்கின்
மையிருட்​டுத்​ துணையோடு !

கருமை போர்த்திய
நிழலுருவங்கள்
பார்வையில் பென்சில்
ஓவியங்களாக.

கீற்றாய் துணைக்கு வந்த
மஞ்சள் ஒளி
நிலவின் கொடையாய்
கொஞ்சம் கஞ்சத் தனத்துடன்.

தனித்திருக்கிறேன்
என்று சொல்லிக் கொண்ட போது
குளிர் காற்றும், கொசுவும்

​முணுமுணுக்கும்​

துணைக்கு நாங்கள் என்று.

தனித்தில்லாத நான்
தனிமை தனிமை தனிமை
என்று நித்தம் பிதற்றுகிறது
அர்த்தங்க ளற்று.

உணர்வுகள் வேறு படுகிறது
சந்திக்கும் உயிரினங்களின்
மன ஈர்ப்பிற்கு ஏற்ப
பகிரப்படும் சங்கதிகளும்
புரிதலோடு பரிமாறப்படும்
நட்பிற்காகவே.
விடியல்கள் தொடர்கிறதோ
என்னவோ?

வெட்ட வெளியில்
வானம் போல விரிய வேண்டும்
நட்பின் கரங்கள்.​
பிரபஞ்சங் களையும் கடந்து

சிலருக்காக மட்டும்
உயிர் நடனம் போடுகிறதோ
எழுத்துக்கள் ?
அவர்களின் கவிதை
வரிகளில் தொலைந்து
போகிறது மனது !​

 

இராப் பொழுதின் குளிருக்கு
இதமாய் முடங்க
ஒரு கூடும்​,​

தலைவருட அன்பினால்
தோய்தெடுக்கப்பட்ட
விரல்களும் வேண்டும்.
தாய்ப் பறவையின்
இறக்கைக்குள் கூட்டையும்
குஞ்சைப் போல
நானும் நேசத்திற்கு
ஏங்கும் குழந்தை தான் என்று

ஒரு வலி உணர்கிறேன்.
இதயத்தின் மையக் கூட்டில்
தடைசெய்யப் பட்ட பகுதி போல
புறக்கணிக்கப் படும்

நட்பு அவளது !​

எப்போதும் அவள் இடுப்புதான்
என் இருப்பிடம்.
அவள் உடற் சூடு
என் குளிருக்கு இதம்
குழைத்துத் தரும்

​​சோற்றில் !​
குழி விழுந்த கன்னமும்
இதழ்விரிக்கும்
முதுமையின் மழலையாய்

பொக்கையும்
மற்றொரு மழலையாய்.
பகிரப்படும் பாசமும்
பாசாங்கின்றி
பதியனிட்டுச் செல்கிறது !


அவள் தொடு உணர்வை
எதிர்பாராது கண்டுவிடும்
பாட்டியும் பேத்தியும்
உடனான காட்சி எல்லாம்

மண் வாசத்தில்
நைந்து போன
துண்டின் ஒரு முனை
முடிப்பில்
பத்திரமாய் ஊசலாடி வரும்
மரவள்ளிக் கிழங்கின்
அந்தச் சுவையை
இன்று கைச் சேர்ந்த
இந்த மரவள்ளிக் கிழங்கு
தரவில்லை !
ஊசலாட்டக் கிழங்கில்
என் தாத்தாவி​ன்
அன்பு மணத்தது !​
இன்றோ அவனோடு வாழ்ந்த
நினைவுகளின் தொடர்பில்
நானே கொள்முதல் செய்தது

பிஞ்சு விரல் கொண்டு
ஒற்றை விரல் பற்றி
தத்தி நடந்த போது
மலர்ந்து சிரித்தான் அவன்.

தடத் தடவென
பாய்ந்து ஓடி
தாவ முனைந்த போது
தரை விழாது
கை ஏந்தி
உச்சி முகர்ந்தான் அவன்.
மீசையைப்​ பிடித்திழுத்தேன்
பொய்க் கோபம் காட்டினான்
தலை முடி பற்றிக்​
கன்னம் கடித்தேன்​ !​

​புன்னகை யோடு​

கடும் ​வலி பொறுத்தான்.​ 

அவன்

தந்தையாய் மண்ணில் வந்த
என் தாயுமானவன்.

இந்த நிமிடம் வரை
அவன் பற்றிய தான நினைவுகள்
மனக் கடலின் ஆழத்தில்
கல்லறை யாக

வில்லை இன்னும் !

தினம் நொடிக் கணம் என்று
பேசாத பேச்சுகள் இல்லை
சுய உரையாடல் என்னும்
தொடர் நிகழ்வின் போது.​
எனக்கே தெரியாமல்
என்னை புதுப்பித்து மீட்டவன்
விழிகளில் பாதுகாப்பை வைத்து
நான் போகும் இடமெல்லாம்
தொடர்ப் பயணம் செய்தவன்

பட்ட கால் நோகும் என்று
பட்டுபோல் தோள் ஏற்றி
வலம் வந்த
பல்லக்குச் சுமப்பாளன்
அவன் எனக்கு.

தந்தை என்றொரு
ஒற்றைச் சொல்லின்
வலிமையை
நட்பென்னும் சாற்றில்
நனைத்து ஊட்டியவன்.
தண்ணீரால் தீர்ந்து விடாத
தாகம் அது
மழலையின் மந்தகாசப்
புன்னகையின் சாமரத்தில்
நீர்த்துப் போகிறது
நேசத்தின் ஆழ் கிணற்றில்

சிலரின் வலிகள் கூட
செய்திகளாய் மட்டுமே
மனம் வருடி
நேயத்தைத் திருடிச் செல்கிறது !
சூழ்நிலை
நயவஞ்சகமாக

வரிகளில் தொலைந்த மனம்
உற்சாகத்தில் துள்ளி
வெளிப்படுத்திய ஓசையின் வடிவை

மனமும் மனமும்
பேசிக் கொண்டதாம்.
வினா சிந்தையில்
உதிக்க
விடை எழுத்தில்
பவனி வருகிறது

மனங்களின் மதகுகள்
நேசத்திற்காக திறக்கப்பட்டால்
வஞ்சனைகளின் புதைகுழிகள்
அன்பினால் நிரப்பப்படும்

தயக்கங்களி னாலேயே
பிரியங்கள் மறைக்கப் படுகிறது !​

தவிப்புகளி னாலேயே
வெளியரங்க மாகித்
தழைக்கிறது !​

 

உன் உரையாடலுக்காக
தவிக்கும் மனதை
நினைவுகளி னாலேயே
நிரப்பித் தணிக்கிறேன்

உனக்கான

​வான ​வெளியில்
என் பிரியம் எப்போதும்
நமக்கானதாக.

பிடித்திருந்த வார்த்தைகளும்
பிடிக்காத தாகப்​

பாசாங்கு
செய்கிறது மனம் !
பிடித்தும் பிடிக்காமல்
போனது எதற்காக என்னும்​
வினாவில் லயித்து
பிரிய ஒத்திகை பார்க்கிறது,

கடந்த ஓர் நாள் இரவை
உறக்க மின்றி தவித்த
நாட் பொழுது ஒன்றில் !​

கனிவாய் விசாரித்து
ஆதரவாய் மொழி ஒன்று சொல்லி
மனக் கரையில் நின்று
நட்புப் படகு விட்டான்
அன்பு நீருற்றில் !
தவித்த மனம்
மீண்டும் மீண்டு மாய்த்
தேடுகிறது அவனை !

எந்த தூரத் தேசம்
பயணம் போனானோ…?
எப்பொருளை திரட்டச்
சென்றானோ…?
அவன் மொழியை
எதிர்பார்க்கும் மனதைத்
தேற்ற வழி இன்றி
தவித்துத் தான் போகிறேன்.

இன்று நாளையோ
நிச்சயம்

அவன் வந்துவிடக் கூடும்,​

நட்புத் தோணியில்
என்னை ஏற்றிக் கொண்டு
வாழ்க்கைக் கடலை
கடக்கச் செய்ய !

 

Series Navigationசீதாயணம் நாடகம் -11 படக்கதை -11 சி. ஜெயபாரதன், கனடாடௌரி தராத கௌரி கல்யாணம் – 29(அ)சிங்கப்பூர் அல்லது சிருங்காரப்பூர்