போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 23

சரித்திர நாவல்

ராஜகஹத்தின் மூங்கிற் காட்டில் அனந்த பிண்டிகா புத்தரின் தரிசனத்துக்காகக் காந்திருந்தார். ஜனங்கள் நிறையவே சேர்ந்திருந்தனர். மலைச் சரிவாயிருந்தாலும் செங்குத்தாகச் சரியாததால், புத்தர் மற்றும் சீடரின் குடில்கள் உயரத்தில் எளிதாகக் கண்ணில் பட, அவரின் வருகைக்காகக் காத்திருந்தனர். முன் வரிசைக்குச் செல்ல அனந்த பிண்டிகாவுக்கு இயலவில்லை. மக்கள் கிட்டத்தட்ட ஒரு அரை வட்டமாக நெருக்கியடித்தபடி புத்தரின் நல்ல தரிசனத்தை எண்ணி உற்சாகமாயிருந்தனர். இதற்கு முன் அனந்த பிண்டிகா புத்தரின் உரையைக் கேட்டதில்லை. ஆனால் மகத நாடு முழுக்க வியாபார விஷயமாகச் சென்ற இடமெல்லாம் அவர் பற்றிய மதிப்பும் வியப்பும் மிக்க விவரங்களைக் கேள்விப் பட்டிருந்தார்.

புத்தர் தென்பட்ட உடனேயே சலசலப்பு அடங்கி அனைவரும் அவர் சொற்களைக் கவனமாய்க் கேட்க விழைந்து அமைதி காத்தனர்.

அனந்த பிண்டிகா மகிழ்ச்சியில் திக்குமுக்காடும் வண்ணம் புத்தர் சரிவில் மெல்ல இறங்கி, சீடர்கள் கூட்டத்தை விலக்கி வழிவகுக்க, கூட்டத்தின் மத்தியில் இருந்த ஒரு பாறையின் மீது ஏறி நின்றார். அனந்த பிண்டிகாவுக்கு மிகவும் அருகாமையில் வந்து பாறையின் மீது அவர் ஏறி நின்ற போது, தனது புண்ணியமெல்லாம் ஒன்றாய் வந்து புத்தர் வடிவில் தனக்கு அருளுவது போல இருந்தது. சாந்தமும் கருணையும் நிறைந்த அவரது திருமுகத்தைக் கண்டதும் உணர்ச்சிமயமாகி அனந்த பிண்டிகாவின் கண்கள் பனித்தன.

“நீங்கள் அனைவரும் பௌத்தம் நாம் உய்யும் வழி காட்டும் என்னும் நம்பிக்கையில் வந்திருக்கிறீர்கள். இந்த நம்பிக்கையில் ஒன்று பட்ட நீங்கள் பௌத்தம் என்னும் வழியில் நிற்கத் துணிவுடனும் தீர்மானத்துடனும் முன் வர வேண்டும். துணிவுக்கும் தீர்மானத்துக்கும் ஒரு வனவாசித் தாயின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியே நமக்கு உதாரணமாகும். பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையைக் குடிலின் உள்ளே விட்டு அவள், வாயிலில் தினை மாவை உரலில் இடித்துக் கொண்டிருந்தாள். மாலை நேரம் முடிந்து இருள் கவியும் நேரம். தீப்பந்த வெளிச்சத்துக்காக வரும் பூச்சிகள் மாவின் மீது விழாத படி ஒரு மூங்கிற் கூடையின் மத்தியில் துளையிட்டு அதன் வழியே உலக்கையைச் செலுத்தி மிகவும் கவனமாகப் பணியில் ஈடுபட்டிருந்தாள். கணவன் வீட்டுக்குத் திரும்பும் நேரம். ஒரு சலசலப்பு ஏற்பட அவர்தானா என்று நிமிர்ந்தவளுக்குப் பெரிய அதிர்ச்சி. பதுங்கி இருந்த ஒரு புலி பாயும் நிலையில் நின்றிருந்தது. ஒரு கணம் திக்கித்த அவள் உள்ளே உறங்கும் தன் குழந்தையை நினைத்தாள். தீப்பந்தத்தை எடுத்துச் சுழற்றியபடி புலியின் மீது பாய்ந்து விட்டாள். புலி இதை எதிர்பார்க்கவே இல்லை. முதல் அடி தீயுடன் அதன் முகத்தில் விழ அது பின் வாங்கியது. அவள் சுழற்றிய வேகத்தில் தீப்பந்தம் இன்னும் பெரிதாக எரிந்தது. அதில் இருந்த கொதிக்கும் எண்ணைத் துளிகள் சூடாகப் புலியின் முகத்தின் மீது தெறிக்க அது துடிதுடித்துத் தீயைக் கண்டு பயந்து வந்த வழியே ஓடி விட்டது.

புலியையோ வேறு எந்த மிருகத்தையோ வேட்டையாடியோ அவைகளுடன் போரிட்டோ பழக்கமில்லாதவள் அந்தத் தாய். ஆனால் தன் குழந்தையைப் பாதுக்காக்கும் தீர்மானமும் எல்லையற்ற தாயன்புமே அந்தத் தாய்க்கு அபாரமான துணிச்சலையும் சக்தியையும் கொடுத்தன.

இந்த அன்புதான், இத்தகைய தீர்மானமான அன்பு ஒன்றுதான் பௌத்தத்தின் செய்தி. தாயும் மகனும் சகோதர்களும் உறவும் என்று நாம் காட்டும் அன்பு – சகஜீவிகள் அனைவருக்கும் என்று விசாலமானதாக, சமூகம் முழுவதையும் உள்ளடக்கும் பூரணமான ஒன்றாகப் பரிணமிக்க வேண்டும். தான், தன் குடும்பம், தன் சுற்றம், தனக்கு உதவி செய்தோர் என்னும் சிறிய வட்டத்தைத் தாண்டி, சகஜீவிகள் அனைவரின் மீதும் அன்பு செலுத்துவது என்பது எளிதானதோ சுலபமானதோ அல்ல. தன்னலம் மறக்க, தன்னலம் ஏற்படுத்தும் இடையறா ஆசைகள் பற்றுகள் அறுபட வேண்டும். அந்த சாதனையை நிகழ்த்த, தியானமும் நன்னெறியுமான ஒரு வாழ்க்கை முறைக்கு நாம் மாற வேண்டும். அந்த மன மாற்றம் ஒரு பரிபூரணமான பரிணாமமாக மேம்படும் தீர்மானத்தில் நிலைக்க பௌத்தம் வழிகாட்டும். வாழ்க்கை என்பது தனிமனித வாழ்க்கை என்னும் கண்ணோட்டம் மாறி மனித இனத்தை, மற்ற உயிர்களை, அனைவரது வாழ்க்கையை உள்ளடக்கியது என்னும் உன்னதமான நிலைக்கு நம்மை நாமே உயர்த்திக் கொள்வோம்.

அனந்த பிண்டிகா தான் இருந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. புத்தரைத் தனியாக சந்தித்து ஓரிரு வர்த்தைகளேனும் பேச அவருடைய குடிலுக்கு விரைந்தவர்கள், தத்தம் வீட்டுக்குக் கலைந்து சென்றவர்கள், யாருமே அவரது கவனத்தைக் கலைக்கவில்லை.

பணம், லாபம், சொத்து, செல்வம் என்று தாம் வாழ்ந்த வாழ்க்கையில் என்ன குறை இருந்தது என்பதை மகான் புத்தர் தெளிவு படுத்திய பரவசத்தில், அதை உள்வாங்கும் ஆனந்தத்தில் திளைத்து அவர் வெகுநேரம் இருந்த இடத்திலேயே அமர்ந்திருந்தார்.

********************

“வாருங்கள் அனந்த பிண்டிகரே”

“வணக்கம் இளவரசர் ஜேதா”

“உங்கள் மகத நாட்டின் கலை நயம் மிக்க கம்பளங்கள், பட்டாடைகள், பொம்மைகள் அனைத்தையும் பார்த்தேன். நன்றி. நீங்கள் வணிகர் என்று கேள்விப் பட்டேன்”

“ஆம் இளவரசரே”

“அவ்வாறெனில் என்னைக் காண வந்ததில் ஒரு வணிக நோக்கம் இருக்கலாமே?”

“வணிகம் என்று கூற முடியாது. ஒரு ஆன்மீகப் பணிக்கு உங்கள் உதவி தேவை”

“எங்கள் கோசல நாட்டுத் தலைநகரான சவாத்தி வரை, மகத நாட்டிலிருந்து வந்திருக்கும் தங்களுக்கு அதை கூறத் தயக்கம் என்ன?”

‘உங்கள் அழகிய ஜேதாவனத்தைக் கண்டேன். மலர்களும் கொடிகளும் செடிகளும் மான்களும் பறவைகளுமாய் அழகின் உதாரணமாக இருக்கிறது ஜேதாவனம்”

“நல்லது. உங்களுக்கும், அந்த வனத்துக்கும் , ஆன்மீகத்துக்கும் என்னால் தொடர்பு படுத்திப் பார்க்க இயலவில்லையே?”

“மகான் புத்தருக்கு அந்த வனத்தைத் தாங்கள் தர இயலுமா?’

“புத்தர் தங்களைத் தூதுவராக அனுப்பினாரா?”

“இல்லை இளவரசரே. அவரது பக்தன் நான். அவருக்கு அது மிகவும் ரம்மியமான சூழலாக இருக்கும் என்று கருதித் தங்களிடம் வந்தேன்”

“அவர் சாக்கிய முனி என்றும், புத்தர் என்றும் ஞானம் சித்திக்கப் பட்டவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அழகிய என் ஜேதாவனத்தை அவருக்குப் பரிசாகத் தர எப்படி இயலும்?”

“தாங்கள் அனுமதித்தால் நான் ஒன்று கூறலாமா?”

“கூறுங்கள். நீங்கள் கோசல நாட்டில் புத்தருக்காக இடம் தேடும் போது பேசித் தானே தீர வேண்டும்?”

“நான் அதை விலைக்கு வாங்க அனுமதி உண்டா?”

சில கணங்கள் ஜேதா மௌனிக்க அனந்த பிண்டிகாவுக்கு அச்சமாகி விட்டது.

கடகடவென்று சிரித்த ஜேதா “நீங்கள் ஓய்வெடுங்கள். ஓரிரு நாட்கள் எங்கள் சவாத்தி நகரை சுற்றிப் பாருங்கள்” என்று கூறி எழுந்து போய் விட்டான்.

அன்று இரவெல்லாம் அனந்த பிண்டிகாவுக்குத் தூக்கமே பிடிக்கவில்லை. ஜேதா கோபிக்கவில்லை. அதே சமயம் சம்மதிக்கவுமில்லை என்பதே உண்மை. புத்தருக்காக எடுக்கும் இந்த முயற்சி வீணாகிப் போய்விடக் கூடாதே.

மறுநாள் காலை அனந்த பிண்டிகா நகரைச் சுற்றிப் பார்த்தார். மகதம் போன்றே மக்கள் நட்பாகத்தான் பழகினர். புத்தரைப் பற்றிப் பலரும் கேள்விப் பட்டிருந்தனர். எப்போது கோசலம் வருவார் என்று வினவினர். அவர்களோடு பேசப் பேச ஜேதாவும் இதே போல மனதுக்குள் ஆர்வமும் மரியாதையும் புத்தரின் மீது வைத்திருப்பான் என்றே தோன்றியது. வெறும் கையோடு திரும்புவதை எண்ணிக் கூடப் பார்க்க இயலவில்லை அனந்த பிண்டிகாவால்.

இரண்டாம் நாள் ஜேதாவே அழைக்க அனந்தபிண்டிகா அவன் முன் வணங்கி நின்றார். “இன்னும் அந்த எண்ணம் இருக்கிறதா வணிகரே?”

“ஒரு மகானுக்காகக் கேட்பதில் தவறில்லையே?”

“உங்களால் அதிக பட்சம் என்ன விலை கொடுக்க இயலும்?”

“தங்கள் எடைக்கு எடை தங்கம் தருகிறேன் இளவரசரே”

“அது அந்த வனத்தின் அழகுக்கு முன் ஒன்றுமே கிடையாது அனந்தபிண்டிகரே”

சற்றே யோசித்த பிறகு அனந்தபிண்டிகா “அந்த வனம் முழுவதும் செப்புக் காசுகளை வைத்தால் எவ்வளவு வருமோ அதை விலையாகத் தருகிறேன் இளவரசரே” என்றார்.

“வனம் மிகவும் பெரியது அனந்தபிண்டிகரே”

“பரவாயில்லை இளவரசரே. புத்தரின் அருளால் எங்கள் பரம்பரைச் செல்வம், நான் ஈட்டியவை இவற்றில் பாதியை வைத்து அத்தனை செப்புக் காசுகளைக் கொண்டு வருவேன்”

“புத்தரிடம் உங்கள் எண்ணத்தைக் கூறி அவர் ஆசீர்வதித்தால் காசுகளுடன் வாருங்கள்”

ராஜகஹ மூங்கில் வனத்தில் ஆனந்தன் எதிரே அமர்ந்திருந்தார் அனந்தபிண்டிகா.

“புத்தருக்கு சொந்தமாக ஜேதாவனம் இருக்க வேண்டும் என்பது உமது ஆசையா?”

இந்தக் கேள்வியே அனந்தபிண்டிகாவுக்கு வியப்பாக இருந்தது. புத்தருக்கு சொந்தமாக இருக்க வேண்டியது தானே அந்த எழிலும் அமைதியும் நிறைந்த ஜேதாவனம்? “ஆம் ஆனந்தரே. புத்தரை விடவும் அது சொந்தமாக வேறு யாருக்குத் தகுதி உண்டு?”

“அது இல்லை அனந்தபிண்டிகா. நீங்கள் புத்தரையோ பௌத்தத்தையோ விளங்கிக் கொண்டது போலவே தெரியவில்லையே?”

அனந்தபிண்டிகாவுக்கு மூக்கை உடைத்தது போல இருந்தது இந்தக் கேள்வி. புத்தரை விளங்கிக் கொள்ளாமலா பௌத்தத்தின் மகத்துவம் புரியாமலா இவ்வளவு முயற்சி எடுத்தேன்? “ஏன் ஆனந்தரே? புத்தரின் அருள் கோசலத்துக்கும் கிடைக்கட்டும் என்று சவாத்தியில் இந்த வனத்தைக் கண்ட போது முயற்சி எடுத்தேன். எல்லா தேசங்களிலும் புத்தரின் கருணை கடாட்சம் பட்டுமே?”

“அப்படி இல்லை அனந்தபிண்டிகரே. புத்தருக்கு சொந்தமானதும் வேறு எந்த பிட்சுவுக்குமே சொந்தமானதும் ஒரு திரு ஓடும் சில உடைகளுமே. நிலம், தோட்டம் , சொத்து என மகான் புத்தரின் பெயரில் இருக்க அவர் ஒப்ப மாட்டார்”

அனந்தபிண்டிகாவுக்கு வானமே இடிந்துத் தரையில் விழுந்தது போல இருந்தது. ஜேதா ஒப்பமாட்டார் என நினைத்திருந்த போது அவர் கிட்டத்தட்ட ஒப்புக் கொண்டாகி விட்டது. மகதத்தைப் போல, கபிலவாஸ்துவைப் போல, கோசலமும் சவாத்தி நகரமும் புண்ணிய பூமிகளாகக் கூடாதா? அவரையும் அறியாமல் அவரது கண்களில் நீர் வழிந்தது.

ஆனந்தர் பதறி எழுந்தார் “என்ன அனந்த பிண்டிகரே? எதற்கு இப்படிக் கண்ணீர் சிந்துகிறீர்கள்? இறுதி முடிவு புத்தபிரானுடையதே. அவரிடமே கேட்டு விடுவோம்”

புத்தர் நாட்கணக்கில் தியானத்தில் இருப்பது தெரிந்த அனந்தபிண்டிகாவுக்கு மனச் சோர்வு அதிகரித்தது. எடுத்த முடிவில் பின் வாங்க வேண்டாம் என நினைத்தார். ஜேதாவனத்தை நிரப்ப எத்தனை மூட்டை செப்புக்காசு தேவைப்படும் என்ற ஒன்று மட்டுமே அவர் மனதை ஆக்கிரமித்திருந்தது.

அனந்தபிண்டிகா தமது சொத்துக்கள் பலவற்றையும் விற்கும் செய்தி ராஜகஹம் தாண்டி மகதத்தின் பல வியாபாரிகளுக்கும் புதிராக இருந்தது. நல்ல நிலையில் வெற்றிகரமாக வணிகம் செய்யும் அனந்தபிண்டிகாவுக்கு திடீரென என்ன ஆயிற்று?

அனந்தபிண்டிகாவின் மிகப் பெரிய மாளிகைக்கு எதிரே இருந்த மைதானத்தில் மலை போல செப்புக்காசுகள் குவிக்கப் பட்டு இரவு பகலாகப் பணியாட்கள் காவல் காத்தனர்.

தினமும் மூங்கில் வனத்துக்கு புத்தரின் தரிசனத்துக்காகப் போய் வருவது, சொத்துக்களைக் காசாக்குவது என்னும் இரண்டு வேலைகளை மட்டுமே செய்தார் அனந்தபிண்டிகா. வண்டிகளில் காசு மூட்டைகளை ஏற்றும் வேலையையும் தொடங்கி விட்டார்.

ஒரு நாள் காலை ஆனந்தர் அனந்தபிண்டிகாவை புத்தரிடம அழைத்துச் சென்றார். அனந்தபிண்டிகா நடுங்கும் குரலில் தம் கோரிக்கையை முன் வைத்தார்.

“தங்கள் விசுவாசம் பௌத்தத்தின் மீது இருக்கட்டும். என் மீது அல்ல” என்றார் புத்தர்.

“ஜேதாவனம் உங்களுக்கும் பௌத்தத்துக்கும் ஆன்மீகத்துக்கு ஏற்ற அமைதியும் ரம்மியமுமான சூழல் உள்ளது புத்ததேவரே”

புத்தர் சில நொடிகள் காத்த மௌனத்தில் அனந்தபிண்டிகாவுக்குப் பதட்டத்தில் வியர்த்து வழிந்தது.

“தங்கள் அன்பைத் தட்டிக் கழிக்க விரும்பவில்லை. புத்தருக்கு இல்லை ஜேதாவனம். பௌத்த சங்கத்துக்கு உரியதாக இருக்கும். தங்கள் விருப்பப் படியே செய்யுங்கள்” ஆனந்தக் கண்ணிருடன் புத்தரின் பாதம் பணிந்தார் அனந்தபிண்டிகா.

ஐநூறுக்கும் மேற்பட்ட வண்டிகளில் மூட்டை மூட்டையாக வந்த காசுகளைப் பார்த்து சவாத்தி நகரமே அதிசயித்து ஜேதாவனத்தைச் சுற்றிக் கூடியது. தரையே தெரியாத படி காசுகளால் நிரப்பிய பிறகும் ஐம்பது வண்டிகளில் காசு மூட்டைகள் மீதம் இருந்தன.

“நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்” என்று அவர் தோளில் தட்டி, சிற்பிகளை அழைத்து ஒரு சிலாசாசனம் எழுதச் சொன்னான் ஜேதா.

Series Navigationமருத்துவக் கட்டுரை நிமோனியாமொழிபெயர்ப்புக் குறுநாவல் – இறுதிப் பகுதி ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்