ப. திருமலையின் கொரோனா உலகம் – ஒரு பார்வை

குமரி எஸ். நீலகண்டன்

நான் பலதடவை ஒரு வித்தியாசமான வகையில் பெருமைப்படுவது உண்டு. காந்தி என்ற பெயரை உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவர் இந்த நொடியில் நிச்சயமாக சொல்லிக் கொண்டுதான் இருப்பார். பாரதியார், வள்ளுவர், கம்பரென தமிழுக்கு பெருமை சேர்க்கிற உலகம் வியக்கும் ஆளுமைகளையும் உலகில் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவராவது இந்த நொடியில் பேசிக் கொண்டோ எழுதிக் கொண்டோ இருப்பர். காற்று போல உலகில் பரவி புகழுடன் வியாபித்து நிற்பவர்கள் இந்த ஆளுமைகள். அப்படி என்றால் இந்த ஆளுமைகளின் பெயர்கள் அவர்கள் பிறந்ததிலிருந்து உலகில் எத்தனை தடவை உச்சரிக்கப்பட்டிருக்கும். சூரியனுக்கும் பூமிக்குமிடையேயான தூரம் போல்தான் அதனுடைய எண்ணிக்கை நீளமாய் இருக்கும். அவர்கள்தான் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ்பவர்கள்.

 ஆனால் நூற்றாண்டுகள், ஆயிரமாண்டுகளை கடந்த இந்த ஆளுமைகளின் பெயரை உச்சரித்த எண்ணிக்கைகளை விட குறுகிய காலத்திலேயே அதிகமாய் உச்சரிக்கப் பட்ட ஒரு பிரபலமான கொடுங்கோல ஆளுமைதான் கொரோனா. உலகின் ஒவ்வொரு மனிதனும்  கொரோனா கொரோனா என்றே சுவாசித்துக் கொண்டிருக்கிறான். இப்படி அகமும் புறமுமாய் மனிதர்களைச் சுற்றி ஒரு மாபெரும் இடியாப்பமாய் மனிதர்களுக்குள் சுருண்டும் பரந்தும் பறந்தும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது மாபெரும் கொரோனா.

            இந்தச் சூழலில் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்கள் எழுதிய  கொரோனா உலகம் என்ற நூல் குறிப்பிடத் தக்கது. கடந்த கால தொற்று நோய் வரலாறுகளோடு எளிய அறிவியல் தகவல்களுடன் நூல் துவங்குகிறது. கடந்த காலங்களில் வந்த வகை வகையான வைரஸ்களைப் பற்றியும் அதன் பாதிப்புகள் குறித்தும் செறிவான தகவல்கள் நூலில் விரவிக் கிடக்கின்றன. கொரோனா நோயின் வரலாறு மட்டுமல்ல ஊரடங்கின் வரலாறும் சுவைபட சொல்லப் பட்டிருக்கிறது. அரசின் ஊரடங்கும் அதை அரசும் மக்களும் எதிர் கொண்ட விதமும் அழகாக நூலில் சொல்லப் பட்டிருக்கிறது.

நோய்த் தாக்குதலோடு அல்லாது சமூகத்தில் குடும்பச் சூழலில் கொரோனா நோயின் வருகையால் வந்த பாதிப்புக்களையும் உதாரணங்களோடு சொல்லி இருக்கிறார் திருமலை . குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள், பட்டினி, இளைஞர்களைத் தாக்கிய மன அழுத்தம், ஊரடங்குக் கால கொலைக் குற்றங்கள் எல்லாவற்றையும் இந்நூலில் சிறப்புற அலசி இருக்கிறார் ஆசிரியர். கொரோனாவை பழங்குடியினர் எவ்வாறு எதிர் கொண்டனர் என்பதோடு அரசின் சலுகைகளைப் பெறுவதில் அவர்கள் பெறும் சிரமங்களையும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றிற்கு பயந்து ரத்த தானம் குறைந்ததையும் ரத்த தேவைகள் தொடர்பான பிரச்சனைகளையும் தனி அத்தியாயமாக தந்திருக்கிறார்.

பிராண்ட் பெயரற்ற ஜெனரிக் மருந்துகளின் கடைகள் நிறைய துவக்கப் பட வேண்டும் என்கிறார். அவை மட்டுமே ஏழைகளின் வாங்கும் திறனுக்கான வரப் பிரசாதமாக இருக்கும் என்கிறார். மிக க் குறைந்த விலையில் மருந்துகளை விற்கிற ஜன் ஔஷதி போன்ற மருந்தகங்கள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்று அறைகூவலிடுகிறார்.

கொரோனாவால் வீழ்ந்த பொருளாதாரத்தையும், வெளி மாநிலத் தொழிலாளர்கள் எதிர் கொண்ட பிரச்சனைகளையும் அலசுகிறது இந்நூல். பொருளாதாரத்தை மட்டும் கொரோனா பாதிக்கவில்லை. அந்த பொருளாதாரத்தை சுமந்து செல்லும் பணத் தாள்கள் வழியாக பரவும் கிருமிகள் குறித்தும் கட்டுரையாக தந்திருக்கிறார் திருமலை. கொரோனாவால் இறந்தவர்களையும் அவர்கள் இறுதிச் சடங்கு சார்ந்த குடும்பத்தினரின் நம்பிக்கைகளை நிறைவு செய்வதிலுள்ள மனித நேயத்தையும் விளக்கமாக எழுதி இருக்கிறார்.

கொரோனாக் காலக் கட்டத்தில் தெய்வத்தின் உருவங்களாக பணி செய்து வரும் சுகாதாரப்பணியாளர்களின் சேவையைப் பற்றியும் அவர்களின் சிரமங்களைக் குறித்தும் சிறப்புற சொல்லி இருக்கிறார் ஆசிரியர். கொரோனா காலத்தில் பரிதாபப் படுபவர்களாக இல்லாமல் பங்கேற்பாளராக இருக்க வேண்டியதன் அவசியத்தை கூறி இருக்கிறார். மதுவால் சரிகிற மக்களின் வாழ்க்கையைப் பற்றியும் மதுவிலக்கின் அவசியம் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார் திருமலை. மனிதத்தின் முக்கியத்துவத்தையும் நோயிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள ஆரோக்கியமான உணவுகள் குறித்தும் விளக்க இந்த நூல் தவறவில்லை. நம் ஆரோக்கியத்தை இன்னும் காக்க மாசற்ற காற்றை பேணவும் கூறுகிறது இந்நூல்.

தூய்மை, உழைப்பு, மது விலக்கல், புகை மறுத்தல், நீர் மருத்துவம், உணவே மருந்து என காந்திஜி காட்டிய வாழ்க்கை முறை கொரோனாவை எதிர்கொள்ள ஏற்றதாக இருக்கிறது. பாரம்பரிய மரபு சார்ந்த வாழ்க்கையை பின்பற்றுவோம் என்ற நம்பிக்கை வாசகத்துடன் மிளிர்கிறது இந்நூல். இந்த நூற்றாண்டின் பெரும் அச்சுறுத்தலான கொரோனா குறித்த வலுவான ஆவணம் இந்நூல்.

நூல் – கொரோனா நூலகம்

ஆசிரியர் – ப.திருமலை

பக்கங்கள் – 200

விலை – ரூ150

வெளியீடு –

தமிழர் ஆய்வு மையம்

1-825-4 அய்யப்பன் நகர்

கிருஷ்ணா நகர்

மதுரை – 625 014 

மின்னஞ்சல் – thirugeetha@gmail.com

 

Series Navigationவிதியே விதியேவாழும்காலத்தில் வாழ்த்துவோம்: ஜூன் 09 பேராசிரியர் மௌனகுருவுக்கு பிறந்த தினம்