ப மதியழகன் சிறு கவிதைகள்

அலை

 

பாதத்தின் கீழே

குழிபறிக்கும்

அலைகளுக்குத் தெரியாது

இவன் ஏற்கனவே

இறந்தவனென்று.

 

 

சில்லென்று

 

உறக்கத்தில் இருக்கும்

மரங்களை

உசுப்பிவிட்டுப் போகிறது

மழை.

 

 

கூடு

 

பொங்கலுக்கு

வீட்டை சுத்தம்

செய்யும் போது

பரண் மீது

அணில் கட்டிய கூட்டினை

கலைத்துவிட்டோம்

அந்தியில் கூடு திரும்பிய

அணில்

எப்படித் தவித்திருக்கும்

என்ற குற்றவுணர்வு மட்டும்

அடுத்த பொங்கல் வரை

நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.

 

 

அதுபோல

 

புளிய மரம்

கல்லடிபட்டது

பக்கத்திலுள்ள

தென்னை மரம் போல

ஆகியிருக்கலாமே  என

ஆசைகொண்டது

அந்தத் தென்னை மரத்திலிருந்து

தேங்காய் தோட்டத்து முதலாளியின்

கையில் விழுந்து

அவரை முடமாக்கியது

அடுத்த நாளே

தென்னைமரம் வெட்டப்பட்டது

இப்போது இல்லாமல்

போய்விட்ட

தென்னை மரத்தைப் பார்த்து

புளியமரம் இரக்கப்பட்டது.

 

 

பூ

 

காலடியில் மலர்கள்

பூத்தது

இவன் பார்த்தும்

பறிக்காத மலர்கள்.

 

 

மின்மினி

 

மேகம் மூடிய

வானத்தில்

மின்மினிப்பூச்சியையே

விண்மீன் என

சுட்டிக் காட்ட

நேர்ந்தது.

 

 

தனிமை

 

குளிர்காலத் தனிமை

கணப்பு அணைந்துவிட்டது

கிடுகிடுத்தது பற்கள்.

 

 

காத்திருப்பு

 

மலைகள் எதிரொலிக்கின்றன,

இறந்தவர்களை

அழைத்துப் பாருங்கள்

அவர்கள் உங்களுக்காக

இந்த மலைமுகட்டில்

காத்துக் கிடக்கலாம்

 

 

 

அருவருப்புக் கருதியே

ஈக்களை அடித்து

எறும்புக்கு வழங்குகிறோம்.

 

 

உச்சி

 

மலை உச்சியை

அடைந்த பிறகு

நான் விட்டுச் செல்வது

என் தடங்களை மட்டுமே.

 

 

குளிர்

 

பாதங்களை

மரத்துப் போக வைக்கும்

கடுங்குளிர்

கணப்பு அணையாமலிருக்க

இன்னமும் வேண்டும்

காய்ந்த  சுள்ளிகள்.

 

 

 

நிர்வாணம்

 

சூறாவளியில் சாய்ந்த

மரத்தின் வேர்

வானம் பார்த்துக் கிடந்தது.

 

 

சருகுகள்

 

வீழ்ந்த இலைகளை

அப்புறப்படுத்துகிறது காற்று

வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக.

 

 

பயணம்

 

மூடுபனியினூடே

சத்தமும், வெளிச்சமும்

பயணிக்க முடியவில்லை.

பின்தொடர்தல்

 

மனிதர்களுக்கு அப்பால்

மறைந்து போனாலும்

நிழல் துரத்திக் கொண்டு

வருகிறது.

 

 

பிணம்

 

புனித நதிகளில்

எல்லாம்

சடலம் மிதக்கிறது.

 

 

நம்பிக்கை

 

புகைப்படத்தில் இருப்பவர்

மரித்தாலும்

நிழற்படம் நம்பிக்கை

கொடுக்கிறது.

 

 

விரக்தி

 

வாழ்க்கையில்

பிடிப்பிழந்தவர்கள்

கடைசியாகத் தேடுவது

கிளிஜோசியனை.

 

 

பலி

 

பலியிடப்படவேண்டிய

ஆடுகளுக்குத் தான்

அனைத்து

அலங்காரங்களும்.

 

 

அடைக்கலம்

 

தர்காவில்

தீனி தின்று

தேவாலயத்தின் மீதமர்ந்து

இறகு கோதி

கோயிலில்

தஞ்சமடைகின்றன

அறுதலிப் புறாக்கள்.

 

Series Navigationரகளபுரம்அழித்தது யார் ?