மகிழ்ச்சியின் விலை !

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

அப்பா நினைவு நாள் காலையில்
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் கீழ்
அமர்ந்துள்ள ஏழைகளை
நோட்டமிட்டான் அவன்

மூன்று மாத தாடி மீசை
இனி அழுக்கே ஆகமுடியாமல்
கருத்த வேட்டி
வறுமை துயரமாய் மாறி
அந்தப் பெரியவர்
முகத்தில் ததும்புகிறது
அவர் கையில்
அந்தக் கைலியைக் கொடுத்தான் அவன்

அதை வாங்கிக்
கண்கள் அகலப் பார்த்த அவர்
கைகளை உயர்த்திக்
கடவுளை வாங்கினார்

அந்தக் கணங்களில்
அவர் முகத்தில் அதிக மகிழ்ச்சி

அந்த மகிழ்ச்சியின் விலை
அந்தக் கைலியின் விலைதானா ?

அடுத்த தெருக் கோடீஸ்வரனிடம்
தேவைக்குமேல்
முடங்கிக் கிடக்கும் பணத்தில்
எத்தனை ஏழைகளின் மகிழ்ச்சி
சிறைப்பட்டுக் கிடக்கிறது ?

Series Navigationசிறுவெண் காக்கைப் பத்துஆவணப்படம் வெளியீடு /கல்விக்கருத்தரங்கம்