“மணிக்கொடி’ – எனது முன்னுரை

This entry is part 1 of 27 in the series 19 ஜனவரி 2014

manikodi copy(1)“மணிக்கொடி’ எனும் இந்நாவல் கல்கியின் பொன்விழாப் போட்டியில் பரிசு பெற்ற நாவலாகும். நாடு தழுவிய மாபெரும் பிரச்சினைகளுக்கு காந்தியடிகளின் அகிம்சை வழிதான் சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவும், நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து மீட்க நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் பாடுபட்டதோடு தியாகங்களும் செய்தார்கள் என்பதைச் சொல்லுவதற்காகவும் இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டது.
வன்முறையில் ஈடுபட்டுச் செயற்பட்டுக் கொண்டிருந்த பயங்கரவாதிகளும் தீவிரவாதிகளும் எவ்வாறு படிப்படியாகத் தங்கள் வழிகளில் நம்பிக்கையிழந்து அகிம்சைதான் நல்லது என்கிற முடிவுக்கு வந்தார்கள் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட நாவலாதலால், இது பற்றிய உரையாடல்கள் இக்கதையின் பல்வேறு கட்டங்களில், அதன் பல்வேறு கதை மாந்தரிடையே நிகழ்கின்றன. கூறியது கூறல் போல் இது தோன்றக்கூடும்! ஆனால், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பலதரப்பட்ட கதைமாந்தர்கள் தங்களுள் விவாதிக்காமல் வன்முறை தவறு என்னும் முடிவுக்கு வருதல் சாத்தியமன்று என்பதால், இந்தக் கூறியது கூறல் மன்னிக்கப்படத் தகுந்ததே!
இருப்பினும், முழுக்க முழுக்க அகிம்சை வழியில்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது என்று சொல்லிவிட முடியாது! அகிம்சை வழியின் மேன்மையைப் புரிந்துகொண்டு எதிராளி விட்டுக்கொடுக்கவோ நேர்மையாக நடக்கவோ முன்வராதபோதும், அவன் வாளேந்தும் போதும், இருதரப்பு மனிதர்களும் அவ்வப் போது ஆங்காங்கு இரத்தம் சிந்தவேண்டிய கட்டாயம் நேர்ந்து விடுகிறது. இப்படித்தான் நாம் முடிவு செய்யவேண்டுமே தவிர, காந்தியடிகளின் அகிம்சை வழி பயனற்றது என்பதாக அன்று.
மதுரையைச் சேர்ந்த பேராசிரியை திருமதி. சந்திரா எடுத்துக்காட்டிய, வாஞ்சி அய்யர் இறந்தபோது அவர் மனைவி கருவுற்றிருந்தார் எனும் உண்மை இதில் இடம்பெறுகிறது. அவருக்கும் அதை உறுதிப்படுத்திய திரு. “ரகமி’ அவர்களுக்கும் எனது நன்றி.
சுதந்திர தின விழாவைக் காண தில்லி சென்ற மூன்று கதைமாந்தர்கள் ஊரைச் சுற்றிப் பார்க்கும்போது ராஜ்காட் எனும் இடத்துக்குப் போவதாகக் கதையில் வருகிறது. இது தவறு என்பதாய் ஒரு வாசகர் சுட்டிக் காட்டியதாய்த் தெரிய வந்துள்ளது. ஆனால் அவரது கூற்றே தவறானதாகும். எப்படியெனில், ராஜ்காட் என்பது பன்னெடுங்காலமாக யமுனை ஆற்றின் கரையில் இருந்துவரும் வரலாற்றுப் புகழ்வாய்ந்த அரச பரம்பரையினரின் இடுகாடு ஆகும். அது தில்லி செல்லும் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்க்கும் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்களில் ஒன்றாக இருந்து வந்துள்ள செய்தி Mr. S. Reuben என்பவரால் 1939ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்டு The Indian Commercial Agency (Fort, Bombay)  எனும் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட A Guide for Travellers in India என்கிற நூலில் காணக் கிடைக்கிறது. இதன் ஜெராக்ஸ் நறுக்கு இணைப்பு 1 ஆக இந்நூலின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கெனவே பிரசித்திபெற்ற ராஜ்காட்டில் காந்தியடிகளுக்கும் எரியூட்டப்பட்டது என்பது உண்மையே தவிர காந்தியடிகள் அங்கு எரியூட்டப்பட்டதன் பிறகுதான் அது புகழ்பெற்றது என்பது தவறாகும். ராஜ்காட் அதற்குப் பிறகு மேலும் புகழ் பெற்றது என்பதே உண்மையாகும். ராஜ்காட்டுக்கு ஏற்கெனவே இருந்த வரலாற்று முக்கியத்துவம் காந்தியடிகளுக்கு அங்கே சமாதி ஏற்பட்ட பிறகு அடிபட்டுவிட்டது! அல்லது பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது!
ராஜ்காட்டின் தொன்மையான வரலாற்றுப் பின்னணி தெரியாததால், நான் எழுதியதைத் தவறென்று நினைத்துச் சுட்டிக்காட்டிய அன்பருக்கு எனது இரட்டிப்பு நன்றி. இவரைப் போன்றே நினைத்திருக்கக்கூடிய மற்றவர்களுக்கும் இவ்விளக்கத்தின் வாயிலாக உண்மை நிலையை எடுத்துச் சொல்ல வாய்ப்புக் கிடைத்ததல்லவா!
நண்பர் திரு. ப. சுந்தரேசன் அவர்கள் Profiles of Gandhi எனும் நூலிலிருந்து கீழ்வரும் பகுதியை எடுத்தெழுதி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

“Gandhi died almost instantly, on Friday, January 30, 1948, at Birla House, New Delhi, shortly after 5.30 p.m…. several miles from the sacred Jamuna river … and the funeral cortege, two miles long made its way 5½ miles during more than four hours to RAJGHAT where the body was cremated.” (Article by Homer A. Jack from the abovesaid book edited by Norman Cousins and published by India Book Co., Kashmere Gate, Delhi – 6)

திரு. சுந்தரேசன் அவர்களுக்கும் எனது நன்றி.
மதுரை சர்வோதய இயக்கத்தைச் சேர்ந்த உயர்திரு. திருமலை அவர்கள் அடிக்கடி கடிதமெழுதி உற்சாகப்படுத்தினார்கள். அவருக்கும் நன்றி.
அடுத்து, தேசபக்தர்களின் தபால்தலைகளுடன் தபால் இலாகா அவ்வப்போது வெளியிட்ட தகவல் தாள்களைக் கொடுத்து உதவிய தபால் அலுவலக ஆய்வாளர் திரு. எஸ். ராஜகோபால் அவர்களுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
பழைய தமிழ் இதழ்கள் பற்றிய விவரங்களை எனக்குக் கொடுத்து உதவிய ராணி வார இதழின் முந்தைய ஆசிரியர் திரு. அ.மா. சாமி அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.நாவல் போட்டி நடுவர்கள் டாக்டர் விக்கிரமன், கவிஞர் மு.மேத்தா, கல்கி ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர்க்கும், 1995இல் இதனை முதலில் வெளியிட்ட வானதி திருநாவுக்கரசு அவர்களுக்கும், கடிதங்கள் எழுதிய வாசகர்களுக்கும் மீண்டும் நன்றி.
தங்களுக்கே உரிய தனிச்சிறப்புடன் தற்போது இதன் 2ஆம் பதிப்பை வெளியிடும் கவிதா திரு. சேது சொக்கலிஙம் அவர்களுக்கு நான் மிகப் பெரிய அளவில் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அழகிய அட்டைப்பட ஓவியம் வரைந்துள்ள ஓவியர் ஷ்யாம் அவர்களுக்கும் எனது நன்றி.  –

ஜோதிர்லதா  கிரிஜா

Series Navigationதாயகம் கடந்த தமிழ் – அனைத்துலக மாநாடு ஜனவரி 20, 21, 22, 2014 ஆகிய நாள்களில் கோயம்புத்தூர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில்கமலா இந்திரஜித் கதைகள்நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!முப்பது ஆண்டுகளாகப் பேசவில்லைமருமகளின் மர்மம் – 12நவீன அரபு இலக்கியம் : எச்.பீர்முகமது நூல் அறிமுகம்புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 42
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *