மண்ணில் புதைந்து கிடக்கும் வரலாற்று ஆவணங்கள்

This entry is part 22 of 26 in the series 22 பெப்ருவரி 2015
வைகை அனிஷ்
இந்திய வரலாற்றை அறிவியல் ப+ர்வமாக ஆய்வு செய்வதற்கும் உண்மையான வரலாற்றை காலவாரியாக எடுத்துக்கூறுவதற்கும் தொல்லியல் சான்றுகளே மிகுந்த துணைபுரிகின்றன. மனித குல வரலாற்றில் எளிய மக்களின் வாழ்வையும், நடுத்தர, உயர்குடி மக்களின் வாழ்வையும் தொல்லியல் சான்றுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்கள், தேவாலயங்கள்,பள்ளிவாசல்கள்,  மற்றும் அகழாய்வுகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் வாழ்ந்த மக்களின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.  இதே போன்று மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள், அவர் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் வரலாற்று உருவாக்கத்திற்கு அடிப்படைச்சான்றாய் அமைகின்றன.
ஒரு நாட்டின்,இனத்தின் வரலாற்றைப் பல்வேறு சான்றுகள் கொண்டே முழுமைப்படுத்த முடியும். இலக்கியம், கல்வெட்டு, நாணயம், தொல்லியல், வெளிநாட்டு குறிப்பு, செப்பேடு, அரசு ஆவணம் போன்றவை இன்றியமையாதது ஆகும்.
தமிழகத்தில் பண்டையக்காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகைகளாக நிலங்களை பிரித்து இருந்தனர். மலையும் மலை சார்ந்த பகுதி குறிஞ்சி எனவும், காடும் காடு சார்ந்த இடம் முல்லை எனவும், வயலும் வயல் சார்ந்த பகுதி மருதம் எனவும், கடலும் கடல் சார்ந்த பகுதி நெய்தல் எனவும், மணலும் மணல் சார்ந்த பகுதி பாலை எனவும் அழைக்கப்பட்டது. இந்நிலப் பாகுபாடு குறித்துத் தொல்காப்பியம் கூறுவது காண்க
~~மாயோன் மேயக் காடுறை உலகமும்
சேருயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேயப் பெருமணல் உலகமும்,
முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலெனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே
(தொல்பொருள் அகத்-5)
இவ்வாறு மலையும் மலை சார்ந்த பகுதியாக குறிஞ்சி நிலப்பகுதியில் கால்நடைகள் வளர்ப்புத்தொழில் அதிகமாக நடைபெற்றன. மேலும் ஆற்றின் கரை ஓரங்களில் இனக்குழுக்களாக இருந்து தங்கள் தொழிலை மேம்படுத்தி வந்தனர் பண்டைய காலத்தில். அப்போது காட்டு பகுதிகளில் புலி, சிறுத்தை, பன்றி போன்ற வனஉயிரினங்கள் தொல்லைகள் அதிகமாக இருந்தது. அவ்வாறு தொல்லைகள் கொடுத்த வனஉயிரினங்களில் இருந்து கால்நடைகளையும், பொதுமக்களையும் காப்பாற்ற ஆங்காங்கே வீரர்கள் நிறுத்தப்பட்டனர். அவ்வாறு நிறுத்தப்பட்ட வீரர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பையுடம் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் அவ்வீரனை மதித்து அவனுக்கு நடுகல் வைத்து வழிபடும் பழக்கம் இருந்தது.
அவ்வகையில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள சித்தர்கள் நத்தம் என்ற ஊரில் புலியுடன் சண்டையிட்ட போர்வீரன் நடுகல் ஒன்று கேட்பாரற்று மண்ணில் புதைந்தது. நமது முயற்சிக்குப்பின்னர் அக்கல் தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வணங்கி வருகிறார்கள்.
சித்தர்கள் நத்தம் புலிகுத்திக்கல்
இவ்வ+ர் அணைப்பட்டி அருகில் வைகையாற்றில் தென்கரையில் அமைந்துள்ளது. சோழவந்தானிலிருந்து நிலக்கோட்டைக்கும் செல்லும் பண்டைய பெருவழியில் அமைந்திருக்கிறது. இவ்வ+ர் வழியாகச் சென்ற பழைய பெருவழி இங்கு கண்டறியப்பட்ட கி.பி. 13ம் நூற்றாண்டு கல்வெட்டில் ~~சோழகுலாந்தகன் பெருவழி~~ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சித்தர்கள் நத்தத்தின் பழைய பெயர் பொருந்தல் ஆகும்;. இங்கு கண்டறியப்பட்ட கல்வெட்டு ~பொருத்தலான தேவேந்திரவல்லபுரம்~~  என்று இதனை குறிப்பிடுகிறது.  பொருந்தில் என்ற ஊர் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது. சங்க காலத்தில் ~~பொருந்தில் இளங்கீரனார்~~ என்று அழைக்கப்பட்ட சங்கப்புலவர் வாழ்ந்திருக்கின்றார். இவர் அகநானூற்றில் 19,351 ஆம் பாடலையும் புறநானூற்றில் 53 ஆம் பாடலையும் பாடியவர் ஆவார்.சித்தர்கள் நத்தம் பகுதியில் ஆற்றின் ஓரத்தில் பண்டைய காலத்தில் மக்களை புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. அப்பகுதியில் உள்ள தோப்புகளில் இன்றும் உழும்போது மண்கலயங்கள், மண்ஜாடிகள், முதுமக்கள் தாழி போன்றவை கிடைக்கின்றன.
இப்பகுதியில் புலிகுத்தி தார் என்று அழைக்கப்படும் இடத்தில் கி.பி.13 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த குலசேகரபாண்டியன் காலத்து நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கி.பி.1296  ஆம் ஆண்டு சோழகுலாந்தகப் பெருவழி என்று அழைக்கப்பட்ட இவ்வ+ர் வழியாகச் சென்ற பெருவழியில் இருந்து கொண்டு அதில் பயணம் செய்தவர்களின் உயிரைப் போக்கிவந்த பெருங்கடுவாய் புலி ஒன்றைக் கொன்ற வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இதுவாகும். பாகனூர் கூற்றப்றத்துப் பொருத்தலான தேவேந்திரவல்லபுரத்தில் இருந்த வீரக்கொடியார் என்றழைக்கப்பட்ட வணிகவீரர் குழுவில் குன்றாத பெருமாள் என்ற இவ்வீரன் இருந்தான் என்றும் இவ்வீரமகன் குடும்பத்தினருக்கு ஒரு மாவரை நிலம் ~உதிரப்பட்டியாக~ தானமாக தந்தார்கள் என்றும் நடுகல்லின் பின்புறம் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. பொருத்தலான தேவேந்திரவல்லவபுரம் என்று அழைக்கப்பட்ட வணிக நகரம்(சித்தர்கள் நத்தம்) மதுரையில் இருந்த சிவல்லப்பெரும்பள்ளி என்ற சமணப்பள்ளிக்குரிய நிலங்களைக் கொண்ட பள்ளிச்சந்தமாக இருந்துள்ளதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
கல்வெட்டு 2:
தேனி பகுதியில் பழமையான நடுகல் கண்டுபிடிப்பு
தேனி மாவட்டம், தேவதானப்பட்டி பகுதியில் பழமையும் வரலாறும் நிறைந்த பகுதியாகும். இப்பகுதியில் நவாப்கள், ஜமீன்கள், மன்னர்கள் என ஏராளமான அரசர்கள் ஆண்ட இப்பகுதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வரலாற்று சுவடுகள் இப்பகுதிமக்களுக்கு தெரியவருகிறது. மேலும் திண்டுக்கல் தலைமையிடமாகக்கொண்டு பிரிக்கப்பட்ட பாளையப்பட்டு பகுதிகளில் தேவதானப்பட்டியும் ஒன்று. இப்பகுதியில் ஏராளமான நடுகற்கள், கல்வெட்டுக்கள் என பல உள்ளன. அவ்வகையில் தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டியில் மாலையம்மன் கோவில் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் தொட்டிய நாயக்கர் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் இறந்தால் அந்த இடத்தில் புதைக்கும் வழக்கமும் அவ்வாறு புதைத்த கல்லறை மீது கற்களை வைத்து ஆடிமாதம் வழிபடுவதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு வைக்கப்படும் கற்கள் நடுகற்கள் என இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இவ்வாறு நடுகற்கள் அமைக்கப்பட்ட இடத்தின் அருகாமையில் ஒரு கல் பலவித வேலைப்பாடுகளுடன் கூடிய வகையில் உள்ளது. இதுமாதிரியான நடுகற்கள் இப்பகுதியில் வேறு எங்கும் இல்லாத வகையில் அமைந்துள்ளது.  நடுகற்கள் வைக்கப்படும் பழக்கம் தேனி மாவட்டத்தில் கோம்பை, மார்;க்கயன்கோட்டை, ப+லாநந்தபுரம், தேவாரம் ஆகிய பகுதிகளில் உண்டு. இந்நடுகற்கள் செவ்வக வடிவிலும் தூண்களாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. செவ்வக வடிவில் அமைந்த கற்களில் வீரர்களின் உருவங்கள், குறுவாள், வாள், கேடயம், அம்பு போன்ற ஆயுதங்களுடன் போரிடும் நிலையில் காட்டப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலத்தின் தாக்கத்தினால் தூண் வடிவில் நடுகற்கள் எடுக்கும் வழக்கம் இக்காலத்தில் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடுகற்களில் ஒரு பகுதியில் பெண் வேட்டைக்குச் செல்வது போலவும், அதன் கீழ் பெண் ஆயுதம் தாங்கிச் செல்வது போலவும் மற்றொரு பகுதியில் ஒரு பெண் பயங்கர ஆயுதத்துடன் ஒரு காலை மடக்கி மற்றொரு காலை தொங்கவிட்டு அமர்ந்து இருக்கம் நிலையில் உள்ளார். இவை இறந்தவர்களின் நினைவு கொள்ளும் வகையில் தொட்டியர் சமூகத்தினரால் நிறுவப்படுகிறது. இந்த கற்களில் ஒரு பக்கம் சதுரமாகவும் அதில் உருவம் பொறிக்கப்பட்டதாகவம், மற்ற பாகங்களில் ஒன்றன்கீழ் ஒன்றாக சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இறந்த வீரர்களை விண்ணுலக மங்கையர் வந்து அழைத்துச் செல்வர் என்ற நம்பிக்கை பழங்காலத்திலிருந்தே மக்களிடையே இருந்து வந்துள்ளது. இம்மாதிரியான நடுகற்கள் கிடைப்பது அப+ர்வம். தொல்லியல் துறையும், வரலாற்று ஆய்வாளர்களும் ஆய்வு மேற்கொண்டால் பண்டைய காலத்தின் நிகழ்வுகள் வெளிப்படும் .
வைகை அனிஷ்
3.பள்ளிவாசல் தெரு
தேவதானப்பட்டி
தேனி மாவட்டம்
செல்:9715-795795
Series Navigationமனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் அவலம்ரௌடி செய்த உதவி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *