மனதைத் திறந்து ஒரு புத்தகம் அழகியசிங்கரின் கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து

ஸிந்துஜா


முகநூல் ஒரு முகமூடி அணிந்தவர்களின் விளையாட்டு அரங்கமாகி விட்டது. பெரும்பாலோருக்கு அணிந்திருக்கும் முகமூடிகளைக் களைந்து ‘சட்’டென்று இன்னொன்றை எடுத்து அணிவதில் சிரமமும் இல்லை. தயக்கமும் இல்லை. முகநூலில் கரை புரண்டு ஓடும் வார்த்தை வெள்ளத்துக்கு உற்பத்தி ஸ்தானம் இவர்களே. சிலருக்கு ஜாதி, சிலருக்கு மதம், சிலருக்குப் பொறாமை, பலருக்கு டைம் பாஸ் என்று இந்த விளையாட்டு அரங்கத்தில் கூவம் விரிந்து ஓடுகிறது. சற்று விவரமான ஆட்கள் ,அவர்கள் விவரமான ஆட்கள் என்பதால், உண்மையைப் பேசுவதற்கு வெட்கப்படாதவர்களாகவும் உரத்த குரலில் சொல்லுபவர்களாகவுமிருக்கிறார்கள், கூவத்தைக் காவிரியாக ஆக்க முடியாது தங்களால் என்று இவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்றாலும் களத்தில் இறங்கி இருப்பதற்கு காரணம் கொஞ்சமாவது ஆரோக்கியமான ஆறாக மாற்ற முடியாதா என்ற நம்பிக்கையில்தான்.

இன்று எழுத்துத் துறைக்கு வந்திருக்கும் இளைஞர்களுக்கு ‘எழுத்து ஒரு தவம் என்பதெல்லாம் புரூடா’ என்ற சிந்தனைக்கு வழி வகுத்திருக்கிறது முகநூல். கைக்காசு செலவழித்து யாரிடமோ கொடுத்து ஒரு நாவலை அல்லது சிறுகதைத் தொகுப்பை அல்லது நிச்சயமாக ஒரு கவிதைத் தொகுப்பைக் கொண்டு வருபவனுக்கு நூறு ‘லைக்’குகள் விழுந்தவுடன் அவன் வேறு கிரகவாசியாகி விடுகிறான்.சில மாதங்களுக்கு முன்பு நடந்த புத்தகக் கண்காட்சியில் எனக்குப் பழக்கமான மூத்த எழுத்தாளரைச் சந்தித்தேன். அவர் ஒரு ஸ்டால் போட்டிருந்தார்.
“இந்தத் தடவை நல்ல விற்பனையா?” என்று அவர் சமீபத்தில் கொண்டு வந்திருந்த புத்தகத்தைப் பற்றிக் கேட்டேன்.
“இதுவரைக்கும் பதினோரு காப்பி போயிருக்கு” என்றார்.
“என்னது? நாளைக்கு புக் ஃபேர் முடியுதே சார்” என்றேன்.
அவர் பதில் எதுவும் சொல்லாது புன்னகை செய்தார்.
“அந்தப் புஸ்தகம் வரப் போகுதுன்னு நீங்க முகநூல்ல எழுதினப்போ நிறைய பேர் வரவேத்து எழுதினாங்களே சார். லைக் கூட கிட்டத்தட்ட இருநூறு வரலே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.
“நூத்தி அறுபத்தி எட்டு” என்று திருத்தினார்.”அதுல 124 பேர் இந்த புக் ஃபேர்ல வைக்கறதுக்கு புது புக் போட்டிருக்காங்க!”
இது ஒரு கதை என்றால் இன்னொரு விதமான கூட்டம் இருக்கிறது. நான் கவனித்த, சமீபத்தில்”பிரபல” மாகிக் கொண்டிருக்கும் ஒரு பெண் எழுத்தாளர், பத்திரிக்கைத் துறையைச் சார்ந்த உதவி ஆசிரியர், துணை ஆசிரியர் அல்லது ஆசிரியர் இவர்களைத் தவிர, விமரிசனம்
எழுதுபவர், முகவுரை எழுதிக் கொடுப்பவர் ஆகியவர்கள் வைத்திருக்கும் அவர்களது முக நூல் பக்கங்களில் “நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு சரி தோழர்!” என்றோ “உங்களுக்கு என் வாழ்த்துகள் தோழர்!” என்றோ ஒரு குறிப்பும் ‘லைக்’கும் போட்டு விடுவார்.அந்த விதத்தில் முக நூல் வியாபார நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இத்தகைய வினோதமான முகநூல் உலகீழ் உலா வருவதைப் பற்றி அழகியசிங்கரின் “திறந்த புத்தகம்” பேசுகிறது. மிக எளிய நடையில் சாதாரண விஷயங்களையும் கூட உற்சாகத்துடன் படிக்கும்படி ஒரு வாசகரை உந்தித் தள்ளுவது என்பது கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் நடைமுறையில் சாத்தியப்படுத்துவது கஷ்டமான காரியம். இதை அழகியசிங்கர் செய்து காண்பித்திருக்கிறார்.ஆங்காங்கே நகைச்சுவை மிளிரும் சொற்றொடர்களுடன்: அரசியல், இலக்கியம், சினிமா, நாடகம், சமூகம், மனிதர்கள், தின வாழ்க்கை என்று முகநூலில் ஒரு வருஷமாக எழுதிய தனது அனுபவங்களைத் தொகுத்துப் போட்டிருக்கிறார்.
இலக்கியம் அவருக்குப் பிடித்த விஷயம் என்பதால் “திறந்த புத்தகத்”தில் பல கட்டுரைகள் அழகியசிங்கரின் பத்திரிகை நடத்தும் அனுபவங்களை ,(நவீன விருட்சம் நடத்திய, நடத்தி கொண்டிருக்கும் நாட்களின் அனுபவங்களை வைத்து அவர் ஒரு தனிப் புத்தகமே எழுத முடியும் என்று தோன்றுகிறது.) அவர் சந்தித்துப் பழகிய இலக்கிய ஆளுமைகளை , சில வம்புகளை (!) -வம்புகள் இல்லாத புத்தகம் என்ன இலக்கியப் புத்தகம் ! -மிகுந்த சுவாரஸ்யத்துடன் விவரிக்கின்றது. இதைக் கவனியுங்கள்:
“இப்படித்தான் ஒரு முறை அவர் (ஐராவதம்) எழுதித் தந்த காலச்சுவடு ஆண்டு மலர் விமரிசனத்தையும் பிரசுரம் செய்து விட்டேன். அது பெரிய வம்பாகப் போய் விட்டது.’ தன்னை நவீன தமிழ் இலக்கிய உலகின் ஞானத் தந்தையாக அறிவிக்க மேற்கொண்டிருக்கும் முயற்சி’ என்று சுந்தர ராமசாமியைப் பற்றி எழுதி விட்டார்.அந்த விமரிசனத்தைத் தாக்கி அந்த மலரில் எழுதிய எல்லா எழுத்தாளர்களும் சுந்தர ராமசாமி உட்பட எனக்குப் பதில் எழுதினார்கள்.”(பக்.88)
“அந்த எதிர்ப்புக் கடிதங்களையும் நான் அடுத்த இதழில் பிரசுரம் செய்தேன். பெரிய வம்பாகப் போய் விட்டது. அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து வேறு சிலர் கடிதங்கள் எழுதினார்கள்.ஐராவதத்தைத் திட்டி எழுதிய கடிதங்களுக்கு ஐராவதம் திரும்பவும் திட்டி கடிதம் எழுதினார். சுந்தர ராமசாமியை ‘நாகர்கோவில் நவாப்’ என்று கிண்டலடித்து எழுதியிருந்தார். இந்தத் தருணத்தில் என் மனது சங்கடமாகப் போய் விட்டது. பேசாமல் பத்திரிகையை நிறுத்தி விடலாமென்று நினைத்தேன்.” (பக்.166)
மெல்லிய நகைச்சுவை சில பக்கங்களில் நம்மைக் கவருகின்றன. “‘சார், இவர் சத்தியநாதன். லாவண்யா என்ற பெயரில் கவிதைகள் எழுதுவார்” என்று நண்பர் அறிமுகப்படுத்தி வைத்தார். வந்ததடா ஆபத்து விருட்சத்துக்கு என்று நினைத்துக் கொண்டேன். (பக்.120) ‘ இப்போதெல்லாம் கட் அவுட் கல்யாண மண்டப வாசல்களில் கூட வைத்து விடுகிறார்கள்…மணமகனும் மணமகளும் கட்அவுட்டில் சிரித்துக் கொண்டிருப்பார்கள். அதன் பின் அவர்களிடம் அது மாதிரியான சிரிப்பு தென்படாது என்று எனக்குத் தோன்றும்.’ (பக்.79)
“அந்தப் புத்தகத்தை யார் எழுதியது என்று சொல்லப் போவதில்லை” என்று ஒரு கட்டுரை இருக்கிறது.(பக்.182-185) புத்தகம் எழுதியவர் சாப்பிடுவதைக் குறைப்பது பற்றியம் பசியை அடக்குவதின் மகாத்மியத்தைப் பற்றியும் வரிந்து கட்டிக் கொண்டு எழுதியதை அழகியசிங்கர் பதிவு செய்து எழுத்தாளர் பெயரைச் சொல்லாமலே முடிக்கிறார். ஆனால் பக்கம் 170ல் தீபாவளியும் எங்கள் தெருவும் என்ற கட்டுரையில் இந்த எழுத்தாளர் யார் என்று தெரிந்து விடுகிறது. “இந்த உணவு எதற்கு உண்கிறோம் என்று யோசிக்காத துவங்கி விட்டால் உண்பதின் மீது மிக்கது தெளிவான கவனம் வந்து விடும்…ருசி அறுத்தல் என்பது ஆன்மிகத்தில் மிக முக்கியமான பாகு வகிக்கிறது” என்று ‘இது போதும்’ என்ற தனது புத்தகத்தில் பாலகுமாரன் எழுதியிருக்கிறார் என்கிறார் !
“இந்தப் புத்தகம் விலை ரூ.20தான்” (பக் 186-189) என்று ரசிகமணி டி.கே.சி. எழுதிய புத்தகம் பற்றி ஒரு கட்டுரை இருக்கிறது. இதில் டி.கே.சி. அவரது மகளுக்கு எழுதிய கடிதம் இடம் பெற்றிருக்கிறது. “நேற்றும் இன்றும் வெயில்தான். மழை இல்லை ஆகையால்க் குழந்தைகள் அருவியை லேசில் விட்டு விட மாட்டார்கள்…” என்று எழுதுகிறார். ஆகையால்க்? இந்த வேண்டாத இடத்தில் மெய்யெழுத்தைப் போடும் பணி(பாணி?)யை டி.கே.சி.யிடமிருந்துதான் வண்ணதாசனும் கலாப்ரியாவும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள் போல

அழகியசிங்கரின் சில கருத்துக்கள் வம்பை விலைக்கு வாங்கும் தோரணை கொண்டவை. “நீங்கள் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் வெளியே வரும்போது,உங்களைப் பார்க்கும் போது மற்றவர்களுக்கு மரியாதை வரவேண்டும்” (பக்.45) என்று பெண்களைப் பார்த்துச் சொல்லுகிறார். ‘யு எம்.சி.பி.” என்று ஆணாதிக்க எதிர்ப்புப் பெண் எழுத்தாளர்கள் குரல் எழுப்புவது என் காதில் விழுகிறது. இதே மாதிரி “இன்று இந்தியா முழுவதும் எடுத்துக் கொண்டாலும் இப்படிப்பட்ட ஒரு கவிஞரைப் பார்ப்பது அரிது” (பக்.136) என்று ஞானக்கூத்தனைப் பற்றி எழுதுகிறார். ஞானக்கூத்தன் நல்ல கவிஞர் என்பதில் இரண்டாவது அபிப்பிராயம் ஏதும் இல்லை. ஆனால் மற்ற கவிஞர்களை மீறி உயர்ந்து நிற்பவர் என்று சொல்லும் போது ஓரு ஒப்பு நோக்கிய ஆதாரம் இருக்க வேண்டும்.\
பூஜை அறையில் வைக்கும் அளவிற்கு அசோகமித்திரன், ஞானக்கூத்தன், நகுலன் பற்றிக் காதலுடன் அழகியசிங்கர் எழுதுகிறார். இந்தப் புத்தகத்தை அவர் சமர்ப்பித்துள்ளது: அசோகமித்திரனுக்கு !

“திறந்த புத்தகம்” பல கவிதைகளையும்கொண்டிருக்கிறது. அழகியசிங்கரின் கவிதைகளைத் தவிர, மகாகவி பாரதி (ஆம்!) நகுலன், வைதீஸ்வரன், ஆத்மாநாம், தேவதச்சன், சார்வாகன், லாவண்யா, காளி-தாஸ் (ஸ்டெல்லா ப்ரூஸ்) ஆகியோரின் கவிதைகளையும் இந்தப் புத்தகம் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. அவற்றுள் எனக்குப் பிடித்த (முறையே ஏக்கத்தையும் பிரமிப்பையும் எதிரொலிக்கும்) இரண்டு கவிதைகள் கீழே:
வெளியேற்றம்
சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச் செல்லும்
புகையைப் போல
என் உடன்பிறப்புகள்.
நான் சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை.
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்.
அவ்வளவுதானே.

—-ஆத்மாநாம்

மழை விட்ட வானம்
காலடியில் சேறு
குளம்படிக் குழி
தண்ணீர் தளும்புகிறது.
சந்திரத் துண்டுகள்
சந்திரத் துண்டுகள்
தூள்கள் காலடியில்
வானத்தில்
மதி.
—-சார்வாகன்
“திறந்த புத்தகத்”தை வாங்கிப் படிக்க விரும்பும் வாசகர்களுக்கு :
கிடைக்குமிடம்:
விருட்சம், சீதாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ்
7, ராகவன் காலனி, மேற்கு மாம்பலம்
சென்னை 600 033
விலை : ரூ. 170/-

Series Navigationதொண்டைச் சதை வீக்கம்பாவமும் பாவமன்னிப்பும்