மரணவெளியில் உலாவரும் கதைகள்

This entry is part 28 of 33 in the series 6 அக்டோபர் 2013

 

மரணவெளி.. அழகானது.

எப்போதும் எல்லா உயிரினங்களுக்கும் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொண்டிருக்கும் மரணவெளி.

மரணவெளி மாறாதது என்பதுடன் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டதும் கூட.

மரணம் காலத்தை வென்ற காலச்சூத்திரம்.

புத்தனும் ஏசுவும் சித்தர்களும் மரணவெளியில் நட்சத்திரங்களாக இருந்தாலும்

நிகழ்காலத்தின் முன் அவர்கள் கடந்தகாலமாக இருப்பது மட்டுமே மரணம்’

காலத்தை வென்று நிற்கும் காலச்சூத்திரத்தின் முதல் விதி.

பூமியைப் போல உயிரினங்கள் வேறு எந்த கிரஹத்திலாவது இருக்கிறதா என்பதைத் தேடும் அறிவியல் உலகம், அங்கெல்லாம் மரணத்தின் சுவடுகள்

இருக்கிறதா என்பதையே தேடிக் கொண்டிருக்கிறது. எங்கெல்லாம் மரணத்தின்

சுவடுகள் இருக்கிறதோ அங்கெல்லாம் வாழ்க்கையின் தடங்களும் இருக்கும்,

‘இருக்கிறது..!

 

மரணத்தைப் பற்றிய அச்சமோ ஆச்சரியமோ கடவுளைக் கற்பித்தது.

கொண்டாட வைத்தது. கடவுளும் மரணத்திலிருந்து தப்ப முடியாது என்பதை

தத்துவமாக்கியது. அந்த தத்துவத்தின் ஊடாக வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடும் மனநிலையை மண்ணில் விதைக்கவே பாடுபட்டது.

இப்படியாக எப்போதும் மரணம் அழகானதாகவும் அதிசயமானதாகவும்

சித்தர்களின் சித்துவேலைக்குள் அகப்படாத பரம்பொருளாகவும்

பிரபஞ்ச வெளியாகவும் எப்போதும் நம் கூடவே பயணித்துக் கொண்டிருக்கிறது.

 

மரணத்தைப் பற்றி எழுதாத எழுத்தாளர்கள் இல்லை.

நினைக்காத மனிதர்கள் இல்லை.

வெ.இறையன்பு அவர்கள் எழுதிய நாவல் “சாகாவரம்” முழுக்க முழுக்க மரணத்தைப் பற்றி ஒரு நாவல். மரணத்தை வென்ற சிரஞ்சீவி வெளியைத் தேடும் நசிகேதனின் கதை. வேதாளம் சொன்ன கதைகளின் உத்தியில்

14 வரிப்பாடலில் மரணத்தை வென்ற சிரஞ்சீவி வெளியை அடையும்

குறிப்பு சொல்லப்பட்டிருக்கும். ஒவ்வொரு பாடலாக வாசித்து வழி

கண்டுபிடித்து அந்த சிரஞ்சீவி வெளிக்கு வரும் போது அந்த இடம்

எப்படி இருந்தது என்பதை மிகச் சிறப்பாக விளக்கி இருப்பார்.

இறந்தகாலமோ எதிர்காலமொ இல்லாத தட்டையான நிகழ்காலம்.

மரங்கள் புதிதாகப் பூப்பதில்லை, இலை உதிர்வதில்லை, பாடாத பறவை,

இயக்கமில்லாத ஜடமான இயற்கை, பசி இல்லை, இரவு இல்லை,

மூப்பு இல்லை, உணர்வுகள் இல்லை, உறவுகளில் அர்த்தமில்லை,

காதலோ காமமோ இல்லை அது மரணத்தை வென்ற சிரஞ்சீவி வெளி அல்ல

என்பதை நசிகேதன் புரிந்து கொள்ளும் போது மரணம் வாழ்க்கையின்

ஜீவனாகிவிடுகிறது!

 

அதைப் போலவே மரணம் குறித்து வெ. வண்ணநிலவன் எழுதிய ‘பிணத்துக்காரர்கள்’ கதையையும் சொல்ல வேண்டும். அனாதைப் பிணங்களை எடுத்து வந்து சாலைகளில் வைத்து பிச்சை எடுக்கும் நான்கு மனிதர்களைப் பற்றிய கதை. ஆண் பிணத்தைவிட பெண் பிணத்திற்குத்தான் அதிகப் பிச்சைக் காசு கிடைக்கும் என்பதைப் போகிற போக்கில் உரையாடல்கள் மூலம் சொல்லிச் சென்ற கதை வாசித்து பல வருடங்கள் ஆனபின்பும் அக்கதையில் வரும் விளிம்பு நிலை மாந்தர்களின்

அந்த வாழ்க்கை அவலம் சாலையோரத்தில் நாம் கடந்து செல்லும்

அந்த மனிதர்களைப் பற்றி யோசிக்க வைத்த கதைகளில் முக்கியமானது.

 

இத்துடன் இப்போது இந்த வரிசையில் சேர்ந்திருக்கும் இரு சிறுகதை தொகுப்புகள் மரணம் குறித்த விசாலமான பார்வையை வைக்கின்றன

ஒன்று: த, அகிலன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு: : மரணத்தின் வாசனை:

அதன் குறுந்தலைப்பாக:  போர் தின்ற சனங்களின் கதை.

 

த. அகிலன் ஈழ சமூகத்தில்; 1983ல் பிறந்தவர். அவர் காட்டும் கதை மாந்தர்கள்

போர்க்களத்தில் மாண்டவர்கள் அல்லர். இன்னும் சொல்லப்போனால் ஈழ

விடுதலைப் போராட்டத்தின் போராளிகளும் அல்லர். ஆனால் அந்தச் சனங்களை போர் தின்று துப்பியது. அந்தப் போர்க்கால சூழலில் தன் வீட்டு நாய் முதல் மிளகாய்க் கண்டுகள் (இளம் மிளகாய்ச்செடி) வரை தங்கள் வாழ்க்கையின் சின்ன சின்ன சந்தோஷங்களைக் கூட இழந்துப் போன மனிதர்களைப் பற்றிய கதைகளின் தொகுப்பு. மரணமும் அது குறித்தான செய்திகளும் ஒரு கொடுநிழலைப் போல மனிதர்களைத் துரத்திக் கொண்டிருக்கும் கதை.

ஒவ்வொரு கதையும் வெவ்வேறானவை. அந்தக் கதைகளில் தான் கும்பிட்ட

அம்மனைத் தேடி வரும் “ஓர் ஊரில் ஒரு கிழவி’ கதை பிற கதைகளிலிருந்து வித்தியாசமானது. அக்கதை போர் தின்ற சனங்களின் கதை மட்டுமல்ல,

அந்த சனங்களின் வாழ்க்கையாகவும் வாழ்வின் நம்பிக்கையாகவும் இருந்த

பிம்பங்களை உடைத்து நொறுக்கியதன் வலி தாங்க முடியாத அலறலாக

நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

தன் காணியை காணியில் இருந்த கோவிலைத் தேடி வரும் அம்மம்மா.

அவள் பார்த்தக் காட்சி அங்கே காணியுமில்லை, கோவிலுமில்லை. எல்லாம்

உடைந்து சிதிலங்களாக. :

“என்ர ஆச்சி, தாயே, உன்னை இந்தக் கோலத்திலயா பாக்கோணும்,’ வாய் வார்த்தைகள் குழற குமுறி குமுறி தன் நேசத்தை எல்லாம் தீர்த்துவிடுகிற மாதிரி அழுகிறவள் இறுதியாக ஆவேசம் வந்தவள் போல அடுத்து சொல்லும்

வரிகள் வாசகனை உலுக்கி விடுகின்றன

 

‘வேசை, உன்னை இந்தக் கோலத்திலேயோடி நான் பார்க்கோணும், தோறை தோறை அறுந்த வேசை உன்னை இப்படி நான் பார்க்கோணும் எண்டுதானே என்னை உயிரோட வைச்சிருந்தனி”

 

மரணத்தின் வாசலில் பிறந்து அந்த மரணத்தின் வலியை வேதனையை

ஒவ்வொரு பருவத்திலும் சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைமுறையின் கதையாகவே அகிலனின் கதைகள் இருக்கின்றன.

போர் இலக்கிய வரிசையில் மட்டுமின்றி மரணம் குறித்த படைப்புகளிலும்

அகிலனின் இக்கதை தொகுப்பு தனித்த ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறது.

 

இரண்டாவதாக அண்மையில் நான் வாசித்த இன்னொரு கதை தொகுப்பு

இல. சைலபதி அவர்களின் “அப்துல்காதரின் குதிரை” என்ற சிறுகதை தொகுப்பு.

சென்னையில் அவரை நேரில் சந்திக்கும் போது கொடுத்தார். கொஞ்சம் தாமதமாகவே வாசித்தேன் என்றாலும் அக்கதைகளின்  ஊடாக சைலபதி

வைத்திருக்கும் மரணம் குறித்த விசாரனைகள் என்னை பிரமிப்பில் ஆழ்த்தின.

கதைகளின் ஊடாக அவர் என் கருத்துகளுக்கு முரணான பகுத்தறிவுக்கு ஒவ்வாத சில நம்பிக்கைகளை முன் வைத்திருந்தாலும் அந்த நம்பிக்கைகள்

அனைத்தும் தனிநபர் சார்ந்த நம்பிக்கைகளாக மட்டுமே காட்டப்படுகின்றன.

அந்த நம்பிக்கைகளின் ஊடாகவே அவர் மரணத்தையும் பார்க்கிறார். ஒரு சிறுகதை தொகுப்பில் அனைத்து கதைகளும் மரணம் குறித்த கதைகளாக

இருப்பது தற்செயலா?   அல்லது திட்டமிட்ட ஒரு தொகுப்பா?

அதிலும் அவருடைய முதல் தொகுப்பு இந்நூல் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

 

மரணமே கதைகளின் கருப்பொருளாக அந்த மரணத்தை மனிதர்கள்

உணரும் தருணங்களும் அணுகும் விதமும் சுயம் சார்ந்த அனுபவங்களுக்கு அப்பால் ஒரு மூன்றாவது மனிதனாக நின்று பார்க்கும் பார்வையுடனும்

கதைகள் நகர்கின்றன. மரணத்தைப் பற்றி இத்தனை விதங்களில் சொல்லத்

தெரிந்த ஒரு கதைசொல்லியாக சைலபதி இருக்கிறார் என்பதுடன் தன்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கும் மரணம் குறித்தும் அந்த மரணத்தைச் சுற்றி

இருக்கும் மனிதர்களைக் குறித்தும் அவருக்கென ஒரு சுயமான பார்வையைக்

கொண்டிருக்கிறார் என்பது இக்கதைகளின் மூலம் அவர் அடைந்திருக்கும்

முதல் வெற்றி எனலாம்.

அதிலும் குறிப்பாக ‘துஷ்டி’ என்ற கதை.

 

மரணத்தை கிராமத்தில் வாழ்பவர்கள் அணுகும் விதமும் நகரத்தில் வாழ்பவர்கள் அணுகும் விதமும் மிகவும் கச்சிதமாக சொல்லப்பட்டிருக்கும் கதை. கிராமத்தில் ஒரு வீட்டில் மரணம் என்றால் அன்றைக்கு ஊரார் கூடி

அழுது அந்த வீட்டில் கொட்டிக்கிடந்த துயரத்தை ஆளுக்கு கொஞ்சமாக

அள்ளிக்கொண்டு போய்விடுகிறார்கள் என்கிறார்.அவர்கள் அழுகைகள் பிய்த்து’

தின்றது போக மிச்சமிருந்த துயரம் தான் அதன் பின் மரணம் சம்பவித்த

‘வீட்டில் அந்த வீட்டாருடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அதுவே அவர்கள்

வாழ்க்கையை நகர்த்தும் உந்துசக்தியாக மரணத்தின் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதால் ஏற்படும் கிராம வாழ்க்கையின் பண்பாடாக காட்டுகிறார்.

இந்தப் பண்பாட்டிலிருந்து நகர்ப்புற வாழ்க்கையும் நகர மாந்தர்களும் எவ்வளவு தூரம் விலகி வந்துவிட்டார்கள் என்று துஷ்டி கதையில் வரும் அம்மா அல்லாடுகிறாள். தன் மரணத்திற்குப் பின் தன் பிள்ளைகளுக்கு அந்த நிலை வந்துவிடக் கூடாது என்று எண்ணி தன் மரணம் நகரத்தில் நடந்தேறிவிடக்கூடாது. என்று தீர்மானிக்கிறாள். கிராமத்திற்கு மீண்டும் அந்த

தன் கடைசிநாட்களில் அவள் போக விரும்புவதன் நோக்கமே இதுதான்.

‘செத்தவனுக்கு ஒரு கணம் தான். ஆனா அவன் கூட வாழ்றவங்களுக்குக் காலம்பூரா அது ஒரு சும. செத்தப்பவே அழுது தீர்க்கலைன்னா அது ஆயுசுக்கும்  அவங்க மனசு விட்டுப் போகாது. சாவ அன்னயோட அழுது தீர்க்கனும்’ என்று மரணத்தை அணுகும் முறையை அந்த அம்மாவின் மொழியில் தத்துவ பீடங்களின் மீது ஏறாமல் மிக எளிதாக சொல்லிவிடுகிறார்..

 

சைலபதியின் கதைகளில் வரும் மரணம் துஷ்டி வீடுகளில் துக்கம் விசாரித்துவிட்டு வரும் மரணம். நம் பக்கத்து வீட்டில் நம்முடம் நேற்றுவரை சிரித்துப் பேசிக்கொண்டிருந்த மனிதரின் மரணம். ஆனால் போர்தின்ற சனங்களின் கதையில் த. அகிலன் எழுதியிருக்கும் மரணம் , மரணமே

எழுதிய மரணத்தின் கதைகள். மரணத்தின் வாசனை, அழுது தீர்க்க முடியாத

காலம் பூரா நாம் சுமக்க வேண்டிய மரணத்தின் வலியாக கனக்கிறது.

மரணத்தின் வாசலில் இவர்களின் இந்தக் கதைகள்

மரணத்தைப் போல வாழ்க்கையின் நிஜங்களை விட்டு அகலாமல்

இருப்பதால் வாசகனுக்கு ரொம்பவும் நெருக்கமாகிவிடுகின்றன.

 

 

1) த . அகிலன் எழுதிய

மரணத்தின்  வாசனை

(போர் தின்ற சனங்களின் கதை.)

வெளியீடு: வடலி

12 சிறுகதைகள், பக் 179

விலை: ரூ.125/

 

 

2) இல.சைலபதி எழுதிய

அப்துல்காதரின் குதிரை

12 சிறுகதைகள். பக் 127

வெளியீடு: அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம்

விலை. ரூ 80/

 

Series Navigationசீதாயணம் தொடர்ப் படக்கதை -1~ சீதாயணம் ~ (முழு நாடகம்)
author

புதிய மாதவி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *