மரப்பாச்சி இல்லாத கொலு

This entry is part 24 of 34 in the series 28அக்டோபர் 2012

 

ஐந்து ஏழாகிப்

பின் ஒன்பதான படிகள்

முழுவதும் பொம்மைகள்!

குடும்பத்துடன் நிற்கும் ராமர்

ராசலீலையில் கிருஷ்ணர்

மழலைபொங்கும் முகத்தின்பின்

அனாவசியக் குடைதாங்கி நிற்கும்

வாமனன் நடுவான தசாவதாரம்

ராகவேந்திரர் புத்தர்

காமதேனு மஹாலக்ஷ்மி

என நீண்ட வரிசையின்

கடைசியில்

செட்டியாரும் மனைவியும்

காய்கறி பழங்களோடு

பலசரக்குக்கடை பரப்பி அமர்ந்திருக்க

எப்படி எல்லாமோ

மாற்றி அமைத்து

வைத்த கொலுவில்

 

முதலில் உட்கார்ந்திருக்கும் கணபதியோடு

பஞ்சகச்சமோ மடிசாரோ

கோட்சூட்டோ கவுனோ

எதைத் தைத்துப் போட்டாலும்

கூர்மூக்கின் கீழ்

செதுக்கி வைத்த

மாறாத புன்னகையோடு

விறைத்து நிற்கும்

ஐந்து தலைமுறை

மரப்பாச்சி தம்பதிகள்

போன முறை

நிஜப் பூனை தட்டிவிட்டு

இரண்டாய்ப் பிளந்து

மாண்டு போனதன்

நினைவு துரத்த

 

எடுப்பதில்லை இனியென்றானபின்

பரணே ஒற்றைப்படியாக

விஜயதசமியின் இரவில்

படுக்கவைத்த குவியலென

மரப்பெட்டிப் பிரமிடுக்குள்

கலைந்திருக்கும் பொம்மைகள்

முப்பொழுதும்

எலிகளோடு விளையாடும்

சத்தம் கேட்கும்

நவராத்திரிகளில்.

 

— ரமணி

Series Navigationதீயில் கருகிய சில உன்னத உறவுகள் நினைவுகள்“தீபாவளி…… தீரா வலி….. !”

3 Comments

  1. Avatar s.ganesan

    Ramani’s interesting description of golu dolls and his sentimental attachment with marapaachi dolls are narrated beautifully through மரப்பாச்சி இல்லாத கொலு kavidhai…aww enjoyable to read..

  2. Avatar ஜெயஸ்ரீ ஷங்கர்.

    \
    அன்பின் திரு.ரமணி அவர்களுக்கு,

    ஒரு நிஜ விஷயத்தைக் கவிதையாக்கி சொல்லித் தந்த விதம் அருமை.
    “பரணே …ஒற்றைப் படியாக..”
    எலிகளோடு விளையாடும்…”
    அருமையான சொல்லாடல்..
    நன்றி
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  3. Avatar ramani

    Thank You Mr. Ganesan and Jayashree Madam for your appreciation.

    ramani

Leave a Reply to ஜெயஸ்ரீ ஷங்கர். Cancel reply

Your email address will not be published. Required fields are marked *