மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 24

Spread the love

26 – எனது புத்திரனை கணத்தில் பார்க்கவேணும்.

– நேரம் காலம் கூடிவரவேணாமா? அந்தரப்பட்டாலெப்படி? அரசாங்க மனுஷர்களிடத்தில் அனுசரணையாக நடந்துகொள்ள தெரியவேணும். உனக்கிங்கே என்ன குறை வைத்திருக்கிறோம்? நீ கேட்டதுபோல எல்லாம் நடக்கிறது. கமலக்கண்ணியென்று நம்பி உனது விண்ணப்பங்களை தங்குதடையின்றி பூர்த்திசெய்யவேணுமாய் மஹாராயர் ஆக்கினைபண்ணியிருக்கிறார். அதைக் கெடுத்துக்கொள்ளாதே. நாளையே உன்னை சிரசாக்கினைசெய்யவோ மரணக்கிணற்றில் தள்ளிப்போடவோ¡ எமக்கு எத்தனை நாழிகை ஆகும்?.

கண்விழித்தபோது பகலுக்கு முதுமை தட்டியிருந்தது வெகுதூரத்தில் யாரோ இருவர் உரையாடுவதைபோலக் கேட்ட குரல்கள் இப்போது அண்மையில் கேட்டன. பெண்ணின் குரல் அடங்கிப்போனது. பதிலைக்கூறிய ஆணின் குரலும் ஏற்கனவே கேட்டதுபோல இருந்தது. எங்கென்று தெளிவாக நினைவுபடுத்த முடியவில்லை. பெண்ணின் குரல் அவள் கேட்டுக்கேட்டு பழகிய செண்பகத்தின் குரல். காலையில் குறிசொல்லும் மண்டபத்தில் கமலக்கண்ணியாக செண்பகத்தை எதிர்கொள்ள நேருமென்று ஒருபோதும் அவள் நினைத்ததில்லை. தலைபாரமாக இருந்தது. தலையணையில் கூந்தல் அவிழ்ந்திருந்தது. கழுத்துசதையிலும், பிடரியின் மயிற்காம்புகளிலிலும் வேர்வையின் கசகசப்பு. ஆடை கலைந்திருப்பதைப்போல உணர்ந்தாள் முலைக்காம்புகள் ஈக்கள் போல மார்பில் உட்கார்ந்திருந்தன. எனினும் அக்கறைகொள்ளாமல் படுத்திருந்தாள் குவிமாட சாளரத்தில் பகற்பொழுதின் எஞ்சிய வெளிச்சம், பிரவாகமெடுத்து வழிந்தது. திரைகளை ஒதுக்கியும் அசைத்தும் குளிர்ந்த காற்று தங்கு தடையின்றி வீசி வேர்த்திருந்த உடலை தாலாட்டியது. இளம் தளிர்போல வெப்பம் கண்ணிரப்பைகளில் குறுகுறுக்க விழிவெண்படலம் வெண் துகிலால் மூடப்பட்டது. வெதுவெதுப்பான நீராக சுரந்து தயங்கி பின்னர் ஒரு பாய்ச்சலுடன் சிறு சிறு துமிகளாக புருவ மையில் கலந்து கன்ன கதுப்புகளில் கண்ணீர் வடிந்தன. விரல்களால் துடைத்தபோது கண்மை விரல்முகப்பாக கன்னத்தில் தெரிந்தன.

சித்ராங்கிக்கு அழுவது ஒரு விளையாட்டுபோல. அல்லது அழுவதையும் விளையாட்டாக்கிக்கொண்டவள். அவள் அழுகை பிறந்த குழந்தையின் முதல் அழுகையை ஒத்தது. மனவலியோடு உடல் வலிக்கும் அழுகை சகாயம் செய்வதாக நினைக்கிராள். சஞ்சலம், துயரம், வலி, மகிழ்ச்சியென்று எல்லோருக்கும் அழுகைக்கு காரணம்வேண்டும். சித்ராங்கி காரணமின்றியும் அழுவாள். மீனாம்பாள் கேட்டால், செண்பகம் வற்புறுத்தினால் அக்காரணத்தை தனக்குச் சொல்லத் தெரிவில்லை என்பாள். பின்னர் அப்படி சொல்லப்போதாமல் பிரம்மன்தன்னை படைத்திருக்கிறான் எனத் தெரிவித்தும் அழுவாள்.

“காரணத்தைச் சொல்லிவிட்டு அழேன், இப்படி எதற்கெடுத்தாலும் அசட்டுத்தனமாக கண்ணைக்கசக்கி வியாக்கூலபட்டால் என்ன அர்த்தம்?” – என மீனாம்பாள் வினவினால் அழுகைக்கு எண்ணெய் வார்த்ததுபோல ஆகிவிடும். காய்ந்த சுள்ளிபோல சடசடவென்று அவளது சஞ்சலம் எரியத் தொடங்கிவிடும். எளிதாக அத்தீயை அணைக்க முடியாது. ‘நீ அழுது ஓயும் மட்டும் உன்னிடத்தில் காரணம் கேட்கமாட்டேன்”, போதுமா? “- மீனாம்பாள் எழுந்து போய்விடுவாள். தனக்குக் கருத்து தெரியும்வரை, இவளுடனிருந்த வேறொரு பெண்மணியைத் தாயாகப் பாவித்து வந்தாள்; அப்பெண்மணிக்கும் -தனக்கும் வயிற்றுக்குச் சோறும் தங்க இடமும் கொடுக்கும் பரோபகாரியாக மீனாம்பாளை சித்ராங்கி நினைத்தாள். அந்நாட்களில் சித்ராங்கி அதிகம் அழுது பார்த்தவர்கள் ஒருவருமில்லை. அப்பெண்மணி ஒருநாள், “உன்னைப் பெற்றவங்க இவங்களென்று”, மீனாம்பாளிடம் ஒப்படைத்துவிட்டு புறப்பட்டபோது தாம் அநாதையாக்கப்படதுபோல கிணற்றடியிலும், படித்துறையிலும் தன்னந்தனியாக பொருமியிருக்கிறாள். அப்போதுகூட வாய்விட்டு அழுதவளல்ல. இவள் பிராயத்து பிள்ளைகளோடு அம்மானை, கிளித்தட்டு விளையாடுகிறபொழுது தோற்றுபோகும் சந்தர்ப்பம் வரும், அந்நேரங்களில் சிநேகிதிகளிடத்தில் வெப்பமான சொற்களை பிரயோகித்துவிட்டு சோர்ந்திருக்கிறாளேயன்றி கண்ணீர் சிந்தியவளல்ல. மீனாம்பாளின் அண்மை என்ன மாயத்தை நிகழ்த்தியதென்று தெரியவில்லை. அவள் ஸ்பரிசத்திலும், பார்வையிலும், வார்த்தையிலு பூக்கும் வெதுவெதுப்பான அக்கறை காரணங்களின்றி அழவைத்தது. ஒன்று மட்டும் தெளிவாக விளங்கிற்று. தாயின் கவனத்திற்குப் போகவேண்டுமென்கிற எதிர்பார்ப்பு அவளது அழுகைக்கு இருந்தது. உடனேயோ, ஒன்றிரண்டு நொடிகள் அல்லது நிமிடங்கள் தாமதித்தோ மீனாம்பாள் அவளருகில் வரவேண்டும். அமரவேண்டும், மடியிலோ மார்பிலோ இவளை வாங்கிக்கொள்ளவேண்டும். அவள் கைவிரல்கள் தலைமயிரிடையே உழுதுசெல்லவேண்டும், சிறிது நேரம் மயிற்கால்களை பிரித்து பேன் தேடவேண்டும். இவள் தூங்கிவிழ, மீனாம்பாள் மடியில் கிடத்தி தாலாட்டுப்பாடவேண்டும்.

ஒருமுறை தாயிடம், ‘உனக்குப்பிடித்தது கும்பகோணம் கொழுந்து வெற்றிலையெனில் எஎனக்குப் பிடித்தது தேம்பி அழுவது எனசொல்லி எரிச்சலுண்டுபண்ணியிருக்கிறாள். “உனக்கு அழுகைதான் பிடித்தமானதென்றால், அதைக் கட்டிக்கொண்டு அழு. எதையாவது என்னிடம் யாசித்துப்பெற அழுகையை கருவியாக்கவேண்டாமென, தாய்க்காரி எச்சரித்த தருணங்களுமுண்டு.

– ம்..ம்.. என்று தலையாட்டும் பெண்ணின் வார்த்தைகள் நீர்மேலெழுத்தென்று மீனாம்பாளும் அறிவாள். கன்னிப்பருவத்தை அடைந்த நாள்முதல் அந்த அழுகை தோழியின் ஆதரவைத்தேடி போயிருக்கிறது. ஒன்று மட்டும் தெளிவாயிற்று. இளம் பிராயத்தில் தாயும், கன்னிப்பருவத்தில் செண்பகமும் அருகிலிருக்கிறார்களென்றால் அழுகை பீறிட்டுவருகிறது.

அறைக்கதவை திறக்கும் சப்தம். காலடிகள் ஓசைகளாக இவளை நெருங்கிவந்தன. பாதங்கள் செண்பகத்தின் கால்களென்றன.

27. – செண்பகம்?

– இல்லை. கமலக் கண்ணி. கிருஷ்ணபுரத்தின் காவல் தெய்வம்.

– தேவதைகள் அழுவதில்லை என்னைப்போல நீயும் மானுடப்பெண் அதனாற்தான் அழுதிருக்கிறாய். இன்னமும் கண்களில் நீர் துளிர்க்கிறதென்பதைக் கவனி. மன்னர் ஏமாறலாம், தளவாய் இராஜகுரு சேனாதிபதி, வெள்ளந்தியான குடிகள் இவர்களில் யாரைவேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்னை ஏமாற்ற முடியாது.

– ஏது எழுந்து உட்கார்ந்து நான்தான் செண்பகமென்று சத்தியம் செய்வீர்கள்போலிருக்கிறது. ஐந்துவருடங்களுக்கு முன்பு நான் கண்ட சித்ராங்கி அக்கா அல்ல நீங்கள்.

– வறுமை வந்தால் பேச்சும் வரும், என்றவள் செண்பகம் வார்த்தை கொடுத்த தெம்பை நிரூபணம்செய்ய விழைந்தவள்போல சித்ராங்கி எழுந்து உட்கார்ந்தாள். செண்பகமும் அருகிலிருந்த மனையை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்தாள்.

– ஆக நீங்களும் கிருஷ்ணபுரத்திற்கு வந்துவிட்டீர்கள்.

– நேற்று திடீரென்று மண்டபத்தில் உன்னை பார்த்ததும் அதிர்ச்சிகொண்டேன். பேயோ பிசாசோவென நினைத்தேன். ஐந்து வருடத்திற்கு முன்னால் ஜெகதீசனைத் தேடிவருகிறேன் என்று போனவள் மாயமானது எவ்வளவு பெரிய இடி. மூன்று நாட்கள் அன்னந்தண்ணி ஆகாரமின்றி கஷ்டப்பட்டோம். சோழகர் உன்னை கவர்ந்து சென்றிருப்பாரோ அல்லது ஆற்றில், கிணற்றில் விழுந்து மாண்டிருப்பாயோவென்று சந்தேகம்? நீ என்னடாவென்றால் குத்துக்கல்லாட்டம் எதிரே நிற்கிறாய். எப்போது கிருஷ்ணபுரம் வந்தாய்? ஏன் வந்தாய்?

– எல்லாவற்றையும் இங்கேவைத்து பேசகூடாது அக்க்கா. அதற்கு அத்தனை அவரசரமுமில்லை. முதலில் அம்மா எப்படி இருக்கிறார்கள், அதைச்சொல்லுங்கள்

– அம்மாவுடைய நிலமைதான் நாளுக்குநாள் வியாகூலபடுத்துகிறது அவர்களுக்கு என்னை பற்றிய கவலை. அவள் இறந்தால் நான் தனிமரமாகி போய்விடுவேன் என்கிற அச்சம். மகளைப்பிடித்து எவனாவது ஒரு கிழவனிடம் நிரந்தர ஆசைநாயகியாக ஆக்கிப்போட்டால் மனதிலுள்ள பாரம் குறைந்துவிடும், நாமும் கண்ணைமூடிவிடலாமென நினைக்கிறாள். வாழ்க்கை நாம் நினைப்பதுபோலவா நடக்கிறது. நாளுக்கு நாள் சுகவீனமாகி கடந்த சிலமாதங்களாக படுத்த படுக்கையாக இருக்கிறாள்.

– ஏன் என்ன நடந்தது?.

– எல்லாம் விதி வேறுசொல்ல என்ன இருக்கிறது. வீட்டில் ஒரு மாகாணி அரிசி இல்லை. இருந்த ஆபரணங்களையெல்லாம் ஒவ்வொன்றாக விற்று சாப்பிடாயிற்று. அரசரும் எங்களை கவனிப்பதில்லை. செண்பகம் எனக்கு பரத்தை தொழில் அலுத்துவிட்டது. உன்னால் உதவ முடியுமென்றால் சொல் இங்கேயே கூட வேலைக்குச்சேர்ந்து விடுவேன். இப்போதெல்லாம் அதிகாலையில் எழுந்து வாசற்படியில் நீர்தெளித்து, கோலம்போடுவது யாரென்று நினைக்கிறாய்? சாட்சாத் நானேதான். அதை இங்கேயும் செய்வேன்..

– அக்கா இதென்ன பேச்சு, உங்கள் வாயால் அப்படி சொல்லலாமா, அவ்வளவு கல் நெஞ்ச்க் காரியா நான். எந்த வேலையும் வேண்டாம் சும்மா உட்கார்ந்திருந்தால் போதும். நீங்கள் இருவரும் நாளைக்கேகேகூட இங்கேவந்து தங்கிகொள்ளலாம். இராயசத்துக்கு ஓலை எழுதி உத்தரவுக்கு ஏற்பாடு செய்கிறேன்.சம்மதமென்றால் சொல்லுங்கள்

– வேணாம் செண்பகம், இங்கேவந்து தங்குவதெல்லாம் அதிகபட்சம். தவிர நாங்கள் நீ நினைப்பது போல இருவரல்ல மூவர்?

– மூன்று பேரா?

– ஆமாம் மூன்றுபேர். எங்களோடு இருக்கும் அந்த மூன்றாவது நபர் யாரென்று நினைக்கிறாய். கேட்டாயென்றால் வியப்பாய். காலையில் எனக்கு நேர்ந்தது உனக்கும் நடக்கலாம்.

– என்ன அக்கா புதிர் போடுகிறீர்கள், நான் மூர்ச்சை ஆகமாட்டேன் சொல்லுங்கள். யார் அந்த மூன்றாவது நபர்.

– வேறு யார்? எனக்காக நீ தேடிக்கொண்டிருந்த ஜெகதீசனைத்தான் சொல்கிறேன்.

– சபேச தீட்சதர் மருமகனா?

– ஆமாம் அவரேதான். விதிமீது உனக்கு நம்பிக்கை இருக்கிறதா? அவரை இங்கே கண்டபிறகு அதிகமாக நம்புகிறேன். நீ அவரைப் பார்த்துவருகிறேனென்று சென்று காணாமற்போன பிறகு, என்னென்னவோ நடந்துவிட்டது. தில்லைதீட்சதர்கள் கோவிந்தராஜர் திருப்பணியை எதிர்த்து கோபுரத்திலிருந்து குதித்து உயிரைமாய்த்துக்கொண்டார்கள். சபேசதீட்சதர்குடும்பமும், ஈஸ்வரதீட்சதர் குடும்பமுமும் மொத்தபேரும் பலியாகிப்போனார்கள். தப்பித்தவர் ஜெகதீசன் மட்டுமே. அவர் தொடக்கத்திலேயே தீட்சதரின் யோசனையை எதிர்த்தவராம். தமது பந்துக்கள் அனைவரையும் பறிகொடுத்தது, இவர் மனதை ரொம்பவும் பாதித்திருக்கிறது, ஓரிரு கிழமைகள் சிதம்பரத்து தெருக்களில் மண்டல நாயக்கரை சபித்தபடி அலைந்திருக்கிறார். பிறகு அவரை பார்த்தவர்கள் எவருமில்லையென்றானது. சபேச தீட்சதர் குடும்பம் எவருமின்றி நீர்த்துபோனபிறகு அவர்களுக்கு வேண்டியவர்களும், பந்துக்களும் தில்லையில் வாழப்பிடிக்காமல் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். தீட்சதர் ஆதரவு இல்லையென்றானபிறகு எங்களுக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. நான்கு ஐந்துமாதங்கள் சிரமத்துடன் காலம் தள்ளிவேண்டியிருந்தது. அம்மா தஞ்சாவூருக்குப் போகலாமென்றாள். எனது மனதில் ஜெகதீசன் இருந்தார். ஏதோ ஒரு நம்பிக்கையில் அம்மாவின் மனதைக் கரைத்து தெற்கே தஞ்சை என்றிருந்த பயண திசை வடக்கே கிருஷ்ணபுரம் என்றானது. கடந்த மாதத்தில் ஒருநாள் தமது குறையை எம்பெருமானிடம் முறையிடப்போகிறேனென்று சிங்கபுரம் சென்ற அம்மா, திரும்பியபொழுது வண்டியின் பின்னால் பைத்தியக்காரனொருவர் தொடர்ந்து வரக் கண்டிருக்கிறாள். அவர் யாரென்று தெரியாமலேயே ஆசாமியை திண்னையில் உட்கார வைத்திருக்கிறாள்.

– அக்கா! உங்கள் கதையைகேட்டபிறகு நான் ஏதும் உதவி செய்ய இயலவில்லையெனில் நன்றி கெட்டவளாவேன். ஆனால் அதற்கு நீங்கள் எனக்கொரு சகாயம் செய்யவேண்டும்.

– என்னசெய்யவேண்டும்?

– உங்கள் பாடே திண்டாட்டத்திலிருக்கிறபொழுது எதற்காக ஒரு பைத்தியத்தைக் கட்டிக்கொண்டு அழவேண்டும்.

– செண்பகம்!எதற்காகவென்று உனக்குத் தெரியாதா?

– அதனாற்றான் வேண்டாமென்கிறேன்.. அவனுக்குகந்த தண்டனைதான் கிடைத்திருக்கிறது. என்கையிற் மட்டும் கிடைத்தானெனில் அவன் இரண்டு கண்களையும் பிடுங்கி கழுவில் ஏற்றுவேன். அற்ப மானுடன். துரோகி

செண்பகம் தொண்டைபுடைக்க கூச்சலிட்டதைக் கேட்டு சித்ராங்கியின் உடல் நடுங்கியது. அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அவள் கண்களை நேரிட்டுப்பார்க்க அஞ்சியவளாய் எழுந்துகொண்டாள்.

(தொடரும்)

Series Navigationசாயப்பட்டறைரௌத்திரம் பழகு!