மழையென்பது யாதென (2)

சேயோன் யாழ்வேந்தன்

 

மழையென்பது யாதெனக் கேட்கும்

மகவுக்குச் சொல்வேன்

நீ எனக்கு

நான் உனக்கு

 

மழையென்பது யாதென

சின்ன வயது சேயோனிடம் கேட்டால்

அம்மா வடை சுடுவதற்கு

சற்று முன் வருவதென்பான்

 

மழையென்பது யாதெனக் கேட்கும்

மனைவிக்குச் சொல்வேன்

வெறுத்துக் கெடுக்கும்

விரும்பியும் கெடுக்கும்

உன்னைப் போல்தான் அதுவும்

பொய்த்துக் கெடுக்கும்

பெய்தும் கெடுக்கும்

 

மழையென்பது யாதென

என்னை நான் கேட்பேன்

இறுகிக் கிடக்கும்

மனித மனங்களில்

கொஞ்சமாவது

ஈரம் தோன்ற

நனைத்து விடவேண்டுமென்ற

பிரபஞ்சத்தின் விடாமுயற்சியென்று

சொல்லிக்கொள்வேன்

 

ஒழுகும் இடங்களில்

அலுமினியக் குண்டான்களை வைத்துவிட்டு

ஈர விறகு அடுப்புக்கு

ஓய்வு கொடுத்து விட்டு

அழும் பிள்ளைகளை

அணைத்தபடி நிற்கும்

அதோ அவளிடம்

மழையென்பது யாதெனக் கேட்டால்

சனியன் என்பாள்

seyonyazhvaendhan@gmail.com

 

Series Navigationசும்மா ஊதுங்க பாஸ் -1கலப்பு