மாய யதார்த்தம்

 

 

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

திடீரென்று ஒரு மாயக் கதவு

திறந்துகொண்டதுபோல் தோன்றியது…

மாயக்கதவு மனதின் உள்ளும் வெளியும்

பப்பாதியாய்.

மாயம் ஏன் எப்போதும் கதவாகிறது?

ஜன்னலாவதில்லை?

எத்தனை உயரத்திலிருந்தாலும்

மாயஜன்னல்வழியாக வெளியே குதிப்பது

கடினமாக இருக்கவியலாதுதானே.

மாயஜன்னலிருந்தால் அதன்வழியாக

விண்நோக்கிப் பறப்பதும் சாத்தியமே.

ஒருவேளை மாயஜன்னல் வழியாய்

ஏகமுடிந்த வானத்தில்

மேகங்கள் மெய்யாகவே நீரலைகளா

யிருக்கக்கூடும்

ஆனாலும் மாயம் எப்போதும் கதவாகவே…

மாயக்கதவு எப்படியிருக்கும்

மாயம் என்றால் என்ன?

மன்னிக்கவும் –

அகராதிச்சொற்கள் மாயத்தைப்

பொருள்பெயர்த்தால்

அது சரியாக வராது.

அதற்கொரு மாய அகராதி வேண்டும்

மாய அகராதியெனில் அதை நிரப்ப

மாய வார்த்தைகள் வேண்டும்

மாயவார்த்தை என்று தனியாக

இருக்கிறதா என்ன!

எதிர்பார்க்குமொரு குறுஞ்செய்தியில்

இல்லாதிருக்கும்

சின்னச் சொல்லொன்று

என்றுமான வானவில்லாய்!

மாயமென்பது மனமா

வாழ்வின் மர்மமா

உணர்வின் மடைதிறப்பா

உன்மத்தப் பரவசமா

அறிவின்பாற்பட்ட அதிவிழிப்புநிலையா

அறிவிற்கப்பாற்பட்ட ஆனந்தக்கண்ணீரா

காலங்காலமாய் கடைந்து மேலெழும்பி

வரும்

அமிழ்தா அதன் கசடா…..

அசடின் கைவசமுள்ள மந்திரக்கோல்

சுழலச் சுழலும் பூமிக்கோளங்கள்

அவரவருக்குள்ளும் வெளியும்…..

மாயாதிமாயங்களும் மாயமாகிப்போகு

மொரு மாயவாழ்வின் தூல சூக்குமங்கள்

மகாமாயமாய்

மாயக்கானல்நீர்குடித்துத் தாகம் தணிக்கும்

மாயமானுடைய கொம்புகளின் கொலைக்

கூர்மைக்கும்

அழகிய விழிகளின் அப்பாவித்தனமான

பார்வைக்குமான

இணைப்புப்பால மாயம்

முதல் இடை கடை யற்று…..

 

Series Navigationதாயின் தவிப்பு பெருமை