‘மிளகாய் மெட்டி’ ஆசிரியர் : அகிலா அருகாமை உறவுகளின் வாழ்வு..

akila

இளஞ்சேரல்

கதைகளின்  வழியாக  பிறர் வாழ்வின் கணங்களை அறிந்து கொள்வது தனித்துவம்தான். நமக்குக் கதைகள் அவர்களுக்குச் சம்பவங்கள். அகிலா தன் அருகாமை உறவுகளின் இயல்புகளைக் காட்சிகளாக்கி உள்ளார்.  முதல் சிறுகதை நூல் எனச் சொல்லிவிட முடியாதபடி சிறந்த கதைகள் இடம் பெற்றுள்ளது. பால் பேதமற்ற படைப்பு மொழியில் தமிழ்ச்சிறுகதை உலகிற்கு மேலும் ஒரு சிறந்த தொகுப்பு.

 

அருகாமை உறவுகளிலிருந்து பெறுகின்ற அனுபவங்களில் புதுமையான வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்வதில்தான் கதைசொல்லியின் பணி இருக்கிறது. அந்த வகையில் அகிலா வாழ்வின் முக்கியமான தருணங்களைத் தொகுத்துக் கதைகளாக்கியுள்ளார்.. பதினான்கு கதைகளும் ஒவ்வொரு அனுபவத்தைப் பேசுகிறது. அகிலா இயல்பில் கவிஞர்.  ஏற்னெவே  மனநல ஆலோசகராக இருந்து பலருக்கு வாழ்வின் இனிய அம்சங்களைப் பகிர்ந்து கொண்டிருப்பவர். எண்ணற்ற பல முரண்பாடான பிரச்சனைகளைக் கேட்டு அதற்குத் தீர்வுகளுக்கு முனைந்தவர்.

 

இந்தக் கதைகளில் அதன் அம்சங்கள் தெரியவருகிறது. கதைசொல்லியாக நம் அருகாமை உறவுகளின ;உணர்வுகளைக் காட்டுகிறார். ‘வோல்கா’ கதையே குறியீடாக அமைகிறது. ரஷ்ய நதியான வோல்கா பெயரைத் தன் வயிற்று வலிக்குரிய புழுவுக்கு வைத்துக் கொள்கிற கதாபாத்திரம். சுற்றியுள்ள நண்பர்கள் வீடு சூழல் உடலில் தீராத நோய்மையாகிப் போகிற வாழ்க்கை. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்கிற பழமொழியை நினைவூட்டும் சமகாலப்பிரச்சனைகள் உள்ள ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு புழுவை வயிற்றில் கட்டிக்கொண்டுதான் வாழ்கிறான் எனும் படிமத்தைச் சொல்கிற முக்கியமான கச்சிதமான சிறுகதை.

 

செறிவுமிக்க வாழ்வின் தவிர்க்கவியலாத காட்சிகள். நடைமுறை வாழ்வின் ஏற்றம் இறக்கம் உள்ள பொழுதுகள். அடிக்கடி சந்திக்கும் முகங்கள். முகங்களின் பலவகையான உணர்வுகள். சட்டென வெட்டனக் கழிந்து விடுகிற நாட்களும் வருசங்களும் இயல்பை மீறாத சொற்களிலிருந்து வரும் உறவுகளின் கதைகள். கதைகள் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். ஓவ்வொரு பொழுதிலும் நிரப்பப்பட்டு வரும் காட்சிகளும் சம்பவங்களும் கதைகளைச் சொல்லிவிட்டுச் செல்கிறது. கவிஞர்கள் சொற்களைச் சுருக்கி உணர்வுகளை சில வரிகளில் ஆற்றாமையைச் சொல்வார்கள். கதைசொல்லிகள் இந்தச் சம்பவம் கேட்கிறவர்களின் ஆழ்மனதிற்குள் செல்லவேண்டுமென நினைப்பார்கள்.

 

‘கடவுளின் அம்மா’ கதையில் குழந்தைப் பேறு இல்லாத பெண்ணுக்கு வயிற்றில் கட்டி. குழந்தையின்மையினால் அவதியுறுகிற ஆன்மாக்களின் குரலாக வெளிப்படும் கதை. அந்தப் பெண் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் காப்பகத்திற்குச் சென்று அவர்களே தனக்குக் கடவுள் அளித்த குழந்தைகள் என முடிவு செய்து வாழத் துவங்குகிற பெண்ணின் கதை.இன்றைய உணவுமுறைச் சூழல்களில் செயற்கை ரசாயன வழி உணவுகளால் குழந்தைகள் மனவளர்ச்சியற்ற பிறக்கிறவையாக இருப்பது கொடுமையாகவே உள்ளது. அவர்களைப் பெற்றவர்களும் வளர்க்கப் போகிறவர்களும் கடவுளின் அம்மாக்கள்தான் என்பதை வலியுறுத்தும் கதை.

 

‘முக்கோணம்’ ரத்த உறவுகளின் வளர்ந்து பெரியவர்களான பிறகு இங்கு தாய்மையின் இடம் முக்கோணத்தின் எந்தப் பகுதி. எந்தப் புள்ளியிலும் நீ இல்லையென தாய்மையைப் பார்த்துக் கேட்கிற குடும்பத்தாரைப் பற்றிய கதை. வயதாகிவிடுகிற காலத்திதைப் புறந்தள்ளும் உறவுகளைப் பற்றியது. காப்பக வாழ்க்கைகள் பெருகிவிட்டது. நாமே அவர்களைக் கவனித்துக் கொள்ளலாம் என்று நினைத்தாலும் பணி அலுவலகம் எதிர்காலம் தொழில் போட்டி போன்றவற்றால் பாதிக்கப்படுகிற குடும்ப உறவுகள் பற்றிய சிறந்த கதை. முக்கோணக்காதல் கேள்விப் பட்டிருக்கிறோம் இங்கு முக்கோணக் குடும்ப வாழ்வு பற்றிய கதை.

 

‘தொங்கட்டான்கள்” கதை இந்தத் தொகுப்பின் உன்னதமான கதை. கதை வேறு மாநிலத்தில் நடந்தாலும் பெண்ணுக்குரிய கொடுமை எந்த நிலத்திலும் மாறுவதே இல்லை என்பதைக் குறிக்கும் கதை. அடிமைப் படுத்தப்படுகிற கிராமங்களில் உள்ள சிறுமிகள் பெண்களுக்கு அங்குள்ள நிலவுடமையாளர்கள் கொடுக்கும் ஒழுக்க தண்டனைகள். அதன் காரணமாக இயல்பாகவே மேலெழும் காதல் பற்றிய நுட்பமான கதை. காதில் அணிந்து கொள்கிற தொங்கட்டான்கள் போலத்தான் இங்கு பெண்களின் வாழ்க்கை. கொடுமைக்குள்ளாகிற மங்கை இறுதியில் அந்த நிலவுடைமையாளின் மகனையேத் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறாள் என்பது எத்தனைப் புதுமையான செய்தி. எந்த அடக்குமுறை வடிவங்கள் பெண்களுக்கு எதிராக வரும் பொழுது பெண்மை வெற்றி கொண்டுவிடும் என்னும் மையம் கொண்ட சிறுகதை இது.

 

‘பிறழ்வு” கதையும் ஒரு குடும்பத்தின் அழுத்தங்களால் குடும்பச்சிறைக்குள் அகப்பட்டுவிட்ட பெண் ஒருவரின் மனம் இக்கதை. ஏறக்குறைய நம் தமிழ் இந்தியக் குடும்பங்களில் ஏறக்குறைய சடங்காகிவிட்ட நிகழ்வுகள். தன் முழுவாழ்க்கையைத் தன் ரத்த உறவுகளுக்காகவும் இணையான பந்தங்களுக்காகவும் வாழ நேர்ந்து விடுகிற பெண்கள் வெறும் இயந்திர பொம்மைகள்தான். அந்த பொம்மைகள் சடாரென்று உக்கிரம் கொள்ள முனைந்தால் அவளுக்குப் பெயர் மனக் கோளாறு என்னும் பட்டம் வேறு.. எந்தச் சாதும் மிரண்டே தீரும்..என்பதைப் பேசும் கதை. அடுத்த தெருவை அடுத்த ஊரைக் கூடப ;பார்க்காமல் குடும்பத்திற்காகத் தன் ஆசாபாசங்களை இழந்து கடைசியில் மறித்துப ;போகிற பெண்கள் எத்தனை எத்தனை பேர்..சௌந்தர்யாவைப் போல.

 

‘லாடம்’  கதையும் குறியீடாகச் சொல்லப்பட்ட கதை. மாட்டின் வலிகளைப் போலவேதான் பெண்களின் வலியும். இங்கு லாடம் கட்டுகிறவர்களின் தோரணைகள். பேசப்படுகிறது. கால் குளம்புகளைச் சீவப்பட்டு ஆணிவைத்து அடித்துப் பிறகு எருதுகளை மறுபடியும் பொதி சுமக்கப் பயண்படுத்துவது போலவே லாடம் கட்டப்படாத ஆநிரைகளாக பெண்களின் நிலையைப பற்றிச் சொல்கிற கதை. அவருடைய மொழியில் ‘தனக்குப் பிடித்தமானவைகளைக் கையாளும் விதம் மனிதர்களுள் ஒரே ஒத்த மனப்பான்மையைத் தோற்றுவிக்கிறது’ என்கிறார் அகிலா. உண்மைதான்

 

அகிலாவின் முதல் சிறுகதைத் தொகுப்பிலும் எளிமைமிக்கவர்களாக வெளி உலக அச்சம் பீடித்தவர்களாக. எப்பொழுதும் பாதுகாப்பற்ற உணர்வுகளைப் பற்றியபடியே ரத்த உறவுகளுக்குள் பிரச்சனைகளைப் பேசுகிறவர்களாக உள்ளார்கள். சில சௌகரியங்களைப் பெற்றிருக்கிற மனிதர்களின் வாழ்க்கை இருக்கிறது. அவர்களின் நுண் உணர்வுகளைப் பேசியாக வேண்டும். ஏழ்மையில் எந்த நிலையிலும் வீழ்ந்து விடுவோம் எனும் பயம் கொண்ட வாழ்வு அது. நமக்குச் சௌகரியமாக விளிக்கப்படுகிற நடுத்தர உறவுகளின் அருகாமையின் இயல்பான கதைகள்.

 

கூட்டுக்குடும்ப முறைகளிலிருந்து சிதைந்த உறவுகள் அங்கொன்றுமாக இங்கொன்றுமாகச்  சிதறியிருந்தாலும் மனதளவில் மிகநெருக்கமாகவே  கவனிக்கப்படுகிறது என்பதை இவருடைய கதைகள்; வலியுறுத்துகிறது. தமிழ்ச்சூழலில் இலக்கிய வாசிப்பு என்பது எழுபது எண்பதுகளில் பெண் நிலைவாசிப்புதான் அதிகம். வாசகிகள் அதிகம் கொண்டதாக இருந்தது. மீண்டும் பரவலான பெண்வாசிப்பு முறையைத் தீவிரப்படுத்த அகிலாவின் கதைசொல்லும் முறை உதவும். கவிஞராக அறியப்பட்டவர் இப்பொழுது நல்ல கதைசொல்லியாகவும் தன்னை வரைந்து கொண்டிருக்கிறார்.. வாழ்த்துக்களுடன்.

 

இளஞ்சேரல்

எழுத்தாளர்

கோவை

 

Series Navigationகவிதைகிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் என்று நாசா கணக்கிடுகிறது. கடல்நீர் மட்டம் உயர்ந்து விரைவாகச் சூடேறுகிறது.