முதுமை

 

 

கட்டிப்பிடித்திருந்த

ஆசைகள் காணவில்லை

நம்பிக் கைகள்

தட்டிக் கொடுக்கிறது

 

‘அடுத்து என்ன’

கேள்வி துரத்துகிறது

 

அறியமுடியாததை

அலசத் தெரியவில்லை

அறிந்த்தை அலசுகிறேன்.

 

நியாயமான வாழ்க்கை

விரக்தி வியர்வையாகக் கூட

வெளிப்படவில்லை

 

எத்தனை சந்தோசங்களைத்

தின்றிருக்கிறேன்

அதற்கு கண்ணீரா விலை?

அழுவது மறந்தேன்

 

என்னிலிருந்து கன்றுகள்

இப்போது என்

கன்றுகளுக்குக் கன்றுகள்

கர்வத்துடன் சாய்கிறேன்.

 

என் கதையைப்

பதிவு செய்துவிட்டேன்

பொய்சாட்சி வேகாது

எடைக்குப் போட்டாலும்

எங்காவது உண்மை பேசும்

 

மனிதர்களுக்கு

மதிப்பெண் தந்தது குற்றம்

என் மதிப்பெண்ணை

யோசிக்கிறேன்

 

என் கடைசி  மூச்சு

பூக்களை வருடும்

புண்களைத் தொடாது

 

என்னைத் தாங்கிப் பிடிக்க

ஏராளக் கைகள்

என் கைக்கு இனி

வேலையில்லை

விரக்தி அது மட்டுமே

 

நோய் பயப்படுகிறது

சுதந்திரம் எனக்குள்

சிரிக்கிறது

 

உதிரும் பூவுக்கு ஆனந்தம்

வேருக்கு உரமாகுமாம்

 

மரமாகத்தான் வாழ்ந்தேன்

கல்லாலும் கொம்பாலும்

அடித்தவர்க்கு கனிகள் தந்தேன்

 

என் அனுமதி கேட்டே

சாய்க்கப்படுகிறேன்

ஓடிவாருங்கள்

மிச்சக் கனிகளைக் கவருங்கள்

 

இருக்கும் காலத்தில்

எதிர்காலம் கண்டவன் நான்

இறந்த பிறகும்

பிறக்கக் கற்றவன் நான்

 

வெண்டி வெடிப்பது இறப்பா?

விதைகளின் தெறிப்பா?

 

பொய்க்கூட்டங்கள் உமிகள்

இப்போது நான் அரிசி

 

ஒளிகள் இருந்தபோது

குருடாய் இருந்தேன்

இருள் வந்தது

பார்வையும் வந்தது

 

வார்த்தைகள் பேசியது

கேட்கவில்லை

இப்போது மௌனம் பேசுவதில்

செவிடாகிறேன்

 

நடக்கும் கால்கள்

படுத்துவிட்டன

முடமான ஞானம்

நடக்கிறது

 

நான்தான் தொலைவேன்

என் இடம் இருக்கும்

நாளை இமயம் முளைக்கும்

 

எழுதுவதை நிறுத்திவிட்டேன்

எழுதியதைப் படிக்கிறேன்

துளிகளால் கடலை அளக்கிறேன்

 

விழித்தால் கனவு

கனவென்று ஆகிவிடும்

விழிக்காதே

 

தாங்கிய சுமைகள்

தூக்கிச் செல்லும்

அதுதான் என் கவலை

பாரமாகிவிட்டேனே

 

 

அமீதாம்மாள்

Series Navigationகவிதையும் ரசனையும் – 17தேனூரும் ஆமூரும்