முன் வினையின் பின் வினை

This entry is part 2 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

எஸ்.கணேசன்

 

 

பதின்வயது மோகம்

அழுக்கைத் தாங்கின

வெள்ளித்திரையைத் தாண்டி

உன்னையும் தாக்கக்

குடும்பமே போர்க்களமாய்ப் போயிற்றே!

 

அளவற்ற செல்லத்தின்

சுதந்திரம் புரியாது

காதலின் அர்த்தத்தை

உன் வழியில் தேடி

நீ அலைந்த இளம்வயது

தாய்தந்தைக்குச் சடுதியில்

மூப்பைச் சாத்தியதே!

 

இளங்கலையில் தேறியிருக்க

வேண்டியபோது நீ

இளந்தாய் ஆகிவிட்டிருந்தாயே!

 

எதை இழந்து

எதைப் பெற்றாய்

என நீ அறியும் முன்

வாழ்க்கை உன்மீது

இருட்டையும் கசப்பையும்

அப்பிவிட்டுச் சென்றுவிட்டதே!

 

அதையும் தாண்டி

காலம்

உன் வேர்களைச் சிதைக்காதிருந்ததில்

இரண்டாம் முறையாய்

நீ பதியன் பட்டபோது

கிழிந்த நாட்களின் வடுக்கள்

உனக்கு எந்தப் பாடத்தையும்

சொல்லாமலா போயிற்று ?

 

எங்களின் அக்கறை பொதிந்த

வார்த்தைகள்

எப்படி உனக்கு

அமிலத்தில் தோய்ந்ததாய்ப் போனது ?

 

போதிமரம் ஒன்றும்

பௌதிக மரமல்ல;

உன் வாழ்க்கை

சொல்லிச் சென்ற

உருவமற்ற தத்துவம்தான்

என்பதை எப்படி

உனக்குப் புரியவைப்பது ?

 

கழைக்கூத்தாடியின்

சாட்டையடி போல

உன் வலியில்

சுகம் காண்கிறாயா ?

 

சுனாமியாய் அழிந்து

சுனாமியாய் அழித்து

படரவிடும் கோரம்

எப்போது நிற்கப்போகிறது ?

 

நேற்று இன்று என்ற நிலையில்

நாளையும் தொடரவேண்டாம் !

இரண்டாவது வாழ்க்கையையும்

கலைத்துவிட்டு

மூன்றாவது கனவுக்கு

உயிர் கொடுக்கும்

உன் முயற்சிக்கு

விதி வீசிச் செல்லும்

பரிகாசங்களுக்கு

உன் குழந்தைகள் அல்லவா

பதில் சொல்லவேண்டியிருக்கும் ?

 

 

எஸ்.   கணேசன்

Series Navigationமரியாதைக்குரிய களவாணிகள்!அன்புள்ள கவிப்பேரரசு. வைரமுத்துவிற்கு,

3 Comments

  1. Avatar இளங்கோ

    விடை தெரியாக் கேள்விகள்…

  2. Avatar Kavya

    சில இலக்கணப்பிழைகளைப் முதலில் பார்க்கலாம். கவிதை கொச்சைப்பேச்சில் (கொத்தமங்கலம் சுப்புவின் கவிதை நடையில்) இருந்தால் இலக்கணப்பிழைகளும் கவிதைக்கு உயிர் தரும்.

    இங்கே நடை பேச்சுநடை ஆனால் தூய தமிழ்நடை.

    //கிழிந்த நாட்களின் வடுக்கள்

    உனக்கு எந்தப் பாடத்தையும்

    சொல்லாமலா போயிற்று ?

    எங்களின் அக்கறை பொதிந்த

    வார்த்தைகள்

    எப்படி உனக்கு

    அமிலத்தில் தோய்ந்ததாய்ப் போனது //

    வ‌டுக்க‌ள், வார்த்தைக‌ள் – ப‌ன்மை.

    என‌வே,

    கிழிந்த நாட்களின் வடுக்கள்

    உனக்கு எந்தப் பாடத்தையும்

    சொல்லாமலா போயின‌ ?

    எங்களின் அக்கறை பொதிந்த

    வார்த்தைகள்

    எப்படி உனக்கு

    அமிலத்தில் தோய்ந்ததாய்ப் போயின‌?

    என்றுதான் வ‌ர‌வேண்டும்.

    இனி, க‌விதை ப‌ற்றி. ந‌ல்ல‌ க‌விதை. எழுப்ப‌ப்ப‌டும் கேள்விக‌ளை ஆங்கில‌ இல‌க்க‌ண‌த்தில், ரெடோரிக்க‌ல் க்வ‌சின்ஸ் என்பார்க‌ள். அஃதாவ‌து, கேள்விக‌ளுக்குப் ப‌தில்க‌ள் தெரிந்த‌வை. ஆனால் அறிய‌ ம‌றுக்கிறார்க‌ள். என‌வே ஆத‌ங்க‌த்தில் விளைவாக‌ கேள்விக‌ளாக‌வே முடிகின்ற‌ன‌.

    இதை எப்ப‌டி ப‌தில் தெரியா கேள்விக‌ள் என‌ச்சொல்ல‌ முடியும்?

    இள‌ங்க‌ன்று ப‌ய‌மறியாது. ஆயின் அக்க‌ன்று ப‌ட்ட‌றிவால் பின்ன‌ர் தெளிவு பெறும். ம‌னித‌ வாழ்க்கையும் அவ்வாறே. காத‌லும் காம‌மும் த‌வ‌றான‌ வ‌ழியில் இள‌ம் வ‌ய‌தில் உண‌ர்ச்சிப்பூர்வ‌மாக‌ செல்வ‌தை ஆங்கில‌த்தில் யூத்ஃபுல் இன்டிஸ்கீரிச‌ன்ஸ் என்பார். அதை அவ்வாறே ஏற்றுக்கொண்டு, பாசிட்டிவாக‌ பார்த்து, தாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ருக்கு இன்னும் ச‌ரியாக‌ அவ‌ர் ஏற்றுக்கொள்ளும்வ‌ண்ண‌ம் சொல்லாம‌ல் வெறும் ரெட்ட‌ர்க‌ல‌ஸ் க‌வ‌சின்ஸ்க‌ளால் அவ‌ரை மேலும் வ‌தைத்த‌ல் ச‌ரிய‌ன்று. எனினும் இஃதொரு க‌விதை. க‌விஞ‌ரின் க‌ருத்துக்க‌ள் – ச‌ரியோ த‌வ‌றோ – ப‌டிக்க‌ப்ப‌ட‌வேண்டும். இர‌சிக்க‌லாம் அவை ந‌ன்கு எழுத‌ப்ப‌ட்டிருப்பின்.

    க‌விதை ந‌ன்கு எழுதப்ப‌ட்டிருக்கிற‌து. ச‌பாஷ்.

  3. காமமே காதல் என்பார் வெள்ளித்திரை ஜேம்ஸ்பாண்டு அஃதே போல் இத்தெளிவற்ற தொடர்கதை.தொடர்கிறது.முனிவர் கதை கேட்டதுஉண்டோ ? ஒரு காரணத்தால் பன்றி ஆகிறார் முனிவர் அக்காலம் முடிந்தபின் மேல் உலகு வர அழைப்பு ஆனால் பன்றி முனி மற்த்து விடுகிறார்.பன்றி வாழ்வு மிகப் பிடித்துப்போய் அதில்தான் உழல்வேன் என்று அஃது போலவே .புதுமைப்பித்தன் கூற்று கற்பாம் பத்தினியாம்- பொன்னகரம்- கதையில்.மீண்டும் மீண்டும் .. மீள மனம் வருவதில்லையோ ? கவிதை ஆழம் நன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *