“மும்பை கரிகாலன்”

======================================ருத்ரா இ பரமசிவன்

சூப்பர் ஸ்டார் அவர்களே !
மும்பை கரிகாலனாய்
வாள் ஏந்த புறப்பட்டீர்கள் .
சிவாஜியின் குதிரையும் வாளும்
உங்களிடம் உண்டு.
எங்களுக்கு பூரிப்பு தான்.
சிங்க மராட்டியன் கவிதை கொண்டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்
என்றானே பாரதி!
சிவாஜியின் வீரம் எங்கள் புற நானூறு!
ஆனால் அவன் குதிரையின் குளம்படிகள்
கிளப்பும் காவிப்புழுதியை வெறும்
குழப்பம் என்று நாங்கள் தள்ளுபடி செய்கிறோம்.
காவிரித்து பூவிரித்து வர
காவிரிக்கு
காடு திருத்த கரை உயர்த்த
கனல் வீரம் காட்டியவன்
கரிகாலன்.
தமிழ் உயிர் மெய் எழுத்துக்களில்
எல்லாம்
வீர வரலாறாய் விரவி நிற்பவன்
கரிகாலன்.
எதிரிகளின் சாணக்கியங்களை
எதிரிகளின் சாணக்கியங்களைக்கொண்டே
முறியடித்தவன் கரிகாலன்.
உங்கள் படத்தில் வரும்
மாமூல் வில்லன்
சமுதாயத்தின்
ஏதோ இருட்டு மூலைகளிலிருந்து
மானுட ரத்தம்
குடிக்க கும்பல் சேர்த்து
ஒரு கும்பாபிஷேகம்
நடத்திக்கொண்டிருப்பான்
என விஷுவலைஸ் பண்ணுகிறோம்.
நீங்கள் தூள் கிளப்பி
அடியெடுத்து வைக்கும்போதே
அண்டங்கள்
கண்ட துண்டங்கள் ஆகும்.
அதர்மம் அடி கலங்கி
கால் வழியே ஒண்ணுக்கும் போய்விடும்.
அப்புறம் என்ன?
சத்யமேவ ஜெயதே!
சினிமா செட்டிங் அமித்ஷாக்களின்
பாதாள பைரவி வேதாள வாய்கள்
பசியோடு திறந்திருக்க
அதனுள்
உணவு போல உட்புகுந்து
டைம் பாம்ப் ஆக வெடித்து
தர்மம் காப்பீர்கள் என
உறுதியாக நம்புகிறோம்.
கருப்புப்பணம் ஒழித்ததாக சொல்கிறவர்கள்
கருப்பு மனம் ஒழித்தார்களா?
ஒரு கிலோ மாட்டு இறைச்சிக்கு
அறுபது கிலோ மனித இறைச்சியை
பண்டமாற்றம் செய்யும்
மதவாத கருப்பு வானங்கள்
நம் விடியலின் கீற்றுகளையே
கசாப்பு செய்யத்தானே காத்திருக்கின்றன!
ஏனெனில்
எங்களுக்கு
கரிகாலன் என்ற பெயரில்
இருப்பது
சினிமா எனும் ஜிகினாவின்
ஜொலிப்புகள் அல்ல.
தமிழ் ..
காவிரி …
நீட் தேர்வு …
உழவர்களின்
ரத்தம் சொட்டும் ஏர் …
கீழடியின் அடியில் கிடக்கும்
தமிழ்த் தொன்மையின்
ஃ பாசில்கள் ..
எங்கள் சிந்து வெளியின் சித்திரங்கள் …
கடல் சார்ந்த எங்கள்
“திரையிடம் ” திராவிடம் ஆன
ஒரு உயிர்ச்சியின் வரலாறு…
எல்லாம்
கருக்கொண்டிருக்கிறது.
உங்கள் “கல்லாப்பெட்டி”
மருத்துவர்களால் அது
கருசிதைவு ஆகி விடுமோ என்று தான்
அஞ்சுகிறோம்.
ஈழம் என்றால்
லட்சம் தமிழ் ப்பிணங்கள்
என்றா அர்த்தம்?
இந்திய தேசமும்
இந்த “கார்ப்பரேட்” உலகமும்
தமிழின் இதயம் பிழிந்து
தேன் குடித்தனவே .
அதுவே ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.
எங்கள் சிதிலங்கள் மீண்டும்
உருக்கொள்ளும்
நெருப்பின் வார்ப்பு
அந்த “கரிகாலனில்” இருக்கிறது!
“ந‌டந்தாய் வாழி காவேரி”
என்ற சிலம்புக்கவிஞனின்
வழித்தடத்தில்
இடைஞ்சல் செய்யும்
அந்த அற்பப்புல்லைக் கூடவா
பிடுங்கியெறியாது உங்கள் வீரம்?
சூப்பர் ஸ்டார் அவர்களே!
நீங்கள் ஒலித்த “பச்சைத்தமிழனில் ”
எங்கள்செம்மொழியின் சிவப்புத்தமிழும்
ஒரு வெற்றியின்
யாப்பிலக்கணம்
எழுதிக்கொண்டிருக்கும் என்று
உறுதியாய் நம்புகிறோம்.
வாழ்த்துக்கள்!

Series Navigation65 மில்லியன் ஆண்டுக்கு முன்பு மெக்சிகோ சிக்குலுப் மீது முரண்கோள் தாக்கியது 10 பில்லியன் ஹிரோஷிமா அணு ஆயுத குண்டுகள் வெடிப்புக்கு ஒப்பாகும்எழுந்திருங்க தாத்தா….. ப்ளீஸ்……