“முள்வேலிக்குப் பின்னால் “ – 1 பத்திரிகையாளன் வருகை

பொன் குலேந்திரன் -கனடா

mulveli-1

ஜோன் வைட் (John White), டொராண்டோ கனடாவில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம்மொன்றின் பத்திரிகையாளன். பல நாடுகளின் பிரச்சனைகள் சார்ந்த கட்டுரைகள் பலவற்றை அலசி ஆராயந்து எழுதி விருதுகளையும், பராட்டுக்களைப் பெற்றவர் ஆப்கானிஸ்தான் , பாக்கிஸ்தான் , இரான் , இராக் சீரியா போன்ற நாடுகளுக்குச் சென்று ஆபத்தான நிலையிலும் முக்கியமானவர்களை நேர்கண்டு, அவர்களின் கருத்துக்களை பக்க சார்பற்ற வகையில் எழுதியவர். சிறிலங்காவினது இனக்கலவரங்கள் காரணமாக கனடாவிற்கு புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று இலட்சமிருக்கும். கனடாவுக்கு சிறீலங்காவின் இனப்பிரச்சனையினால் ஏற்பட்ட பாதிப்புகள் மீது ஜோனுக்கு அக்கரை அதிகம்.

மனித உரிமை மீறல்களுக்குப் பிரசித்தம் பெற்ற நாடு சிறீலங்கா. ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அரசினால் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு அருகேயுள்ள செட்டிக்குளப் பகுதிக்கு அகதிகளாக முள்வேலிகள் சூழந்த திறந்த வெளி சிறைக்குள் அரசினால் முகாம்களில் வைக்கப்பட்டார்கள். அதைப்பற்றி ஆராய்ந்து அவ்வேலிக்குப் பின்னால் மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதை அறியவும், பல அகதிகளை நேரில் கண்டு அவர்களின் உண்மை நிலையை அறிந்து எழுதும் நோக்கத்தோடு ஜோன் சிறீலங்காவுக்கு டொராண்டோவிலிருந்து லண்டன் சென்று, அதன் பின்னர் அங்கிருந்து கொழும்புக்கு சிறீலங்கன் எயர்லைனில் பயணமானார்.

mulveli-2

இதற்கு முன்னரும் 1983 ஆம் நடந்த இனக்கலவரவத்தைப் பற்றி அறிந்து எழுதிய அனுபவம்; ஜோனுக்குண்டு. அதன் பின்னர் ஐபிகேஏப் (IPKF) என்ற இந்திய அமைதிப்படை 1987 முதல் 1990 வரை வடமாகாணத்தில். இருந்த காலக்கட்டத்தில் தோன்றிய பிரச்சனைகளைப் பற்றியும், அதன்பிறகு 1993 நொவெம்பரில் விடுதலைப் புலிகளின் பூனகரி தாக்குதலைப் பற்றியும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பற்றியும், எழுதியவர் ஜோன். விடுதலைப் புலிகள் எவ்வாறு ஈழத்தமிழர்களின் முழு ஆதரவைப்பெற்று அவர்களின் உரிமைகளுக்காக போராடிவருகிறார்கள் என்பதை அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார்.

1948 ஆம் ஆண்டு சிறீலங்காவுக்கு சுதந்திரம் கிடைக்க முன்னர் பிரித்தானியர் ஆட்சிகாலத்தில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தது. அதற்குப் பின்னர் சிங்கள மொழி மாத்திரம் என்ற சட்டத்தை 1958இல் அரசு, அமுல் படுத்தியதைப் பற்றியும் அதைத் தொடர்ந்து நடந்த இனக்கலவரங்கள் பற்றியும் ஜோன் நன்கு அறிந்து வைத்திருந்தார்.

பல வருடங்கள் வன்னிப பகுதி தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் கடடுப்பாட்டுக்குள் இருந்தது. அதனால் பெரும் தொகையான தமிழ்மக்கள் விடுதலை புலிகளின் ஆதரவாளர்களாக மாறியது மட்டுமன்றி இயக்கத்திலும் சேர்ந்து தமிழ் ஈழத்தின் விடுதலைக்காக போர் புரிந்தனர். ஜோனுக்கு சிறிலங்காவில் லலித் வீரசேகரா என்ற சிங்கள ஊடகவியலாரனிதும், மகேஷ்வரநாதன் என்ற தமிழ் ஊடாகவியலாரினதும் தொடர்பு இருந்தது. அதுமட்டு மல்லாமல், லலித்தின் தாய் மாமனான மேஜர் விஜயரத்தினாவின் அறிமுகமும் கிடைத்தது. சிறீ லங்காவில் தனக்கு எந்த ஆபத்து ஏற்பட்டாலும் அதைச் சந்திக்கும் தயாரான நிலையிலேயே ஜோன் பயணத்தை மேற்கொண்டார்;. ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகார் நகரத்தில் தலீபன்கள் தன் உயிருக்கு ஏற்படுத்திய ஆபத்துகளைச் சந்தித்த அனுபவம் ஜோனுக்கு உண்டு. கனடா பத்திரிகைக்கு புனைப்பெயரில் பல அரசியல் கட்டுரைகளை ஜோன் எழுதியவர்.

சிறீலங்கா வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களின் வருகையை வரவேற்பதில்லை என்பதையும் ஜோன் நன்கு அறிவார். பத்திகையாளர்களைச் சந்தேகக் கண் கொண்டே சிறீலங்கா அரசு பார்த்தது. வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகள் பெற்றாலும் அங்கிருந்து வரும் ஊடகவியலாளர்களை மரியாதையாக சிறீலங்கா அரசு நடத்துவது கிடையாது. ஊள்நாட்டில் நடக்கும் உண்மை நிலைiயையும் , மனித உரிமை மீறல்கள் பற்றியும் உலகுக்கு பத்திரிகையாளர்கள் எடுத்துச்சொல்லி விடுவார்கள் என்ற பயம் சிறீலங்கா அரசுக்கு இருந்தது.

விமானம் பண்டாரநாயக்கா விமானநிலையத்தை அடைய அரைமணி நேரம் இருப்பதாகப் பைலட் அறிவித்தபோது ஜன்னலினூடக ஜோன் தன் பார்வையைச் செலுத்தினார். எங்கும் தென்னை மரங்களின் பச்சை நிறமானக் காட்சி. இலங்கைத் தீவு இயற்கை அழகு நிறைந்த சொர்க்கப் பூமி என்று நண்பர்கள் சொல்லி ஜோன் கேள்விப்பட்டார்.. நீண்ட வரலாறு உள்ள தீவு இலங்கை என்றும் நூல்களில் வாசித்து அறிந்தவர். சீட்டில் இருந்தபடியே திரும்பிப் பார்த்தபோது பெரும்பாலோர் வெளிநாட்டுச் சுந்றுலாப் பயணிகள் இருப்பதைக் கண்டார். தீவின் அழகால் கவரப்பட்டு அதைக்கண்டு இரசிக்க வருபவர்கள் அவர்கள். ஆனால் அவர்களுக்கு அத்திவீன் உள்நாட்டுப் பிரச்சனையை பற்றியோ, மனித உரிமை மீறல்கள் பற்றியோ எங்கே தெரியப்போகுது. இனப்பிரச்சனை மட்டும் தீவில் இல்லாது இருந்தால் இலங்கைத் தீவானது சிங்கப்பூரிலும் பார்க்க முன்னேறிய நாடாக வளர்ந்திருக்கும். எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சி செய்த பின்னர், நாட்டுக்கு 1948 இல் சுதந்திரம் வழங்கிச் சென்றபோது, இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தான் பிரிக்கப் பட்டபோது ஏற்பட்ட இந்து முஸ்லீம்; இனக்கலவரத்தை தெரிந்திருந்தும், இலங்கையில் சுதந்திரத்துக்குபின் இந்தியாவில் நடந்தது போல் இனக் கலவரம், எப்போதவாது வெடிக்கலாம் என்று எதிர்பார்த்து அதற்கு முன்னெச்சரிக்கையாக தீர்வுகாணாமல் போனது மிகப் பெரிய தவறு. பிரித்தானியர் தம் ஆட்சி செய்த தேசங்களை விட்டுப் போகும் போது வரும் நாட்களில் ஒரு பிரச்சனை தொடரக் கூடிய சூழலை உருவாக்கி விட்டே சென்றார்கள்.

“இறைவன் கொடுத்த இந்த சொர்கத்தீவை எதற்காக அரசியல்வாதிகள் சீரழிக்க வேண்டும்”? என வாயுக்குள் முணுமுணுத்துக் கொண்டார் ஜோன். பக்கத்து சீட்டில் இருந்த பயணி பிரசாத், இந்தியன் என்று அவரின் ஆங்கில உச்சரிப்பில் இருந்து ஜோன் அறிந்து கொண்டார்.

“உண்மை. இத்தீவு ஒரு காலத்தில் சொர்க்க பூமி தான். ஆனால் இப்போது அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கும் தீவாக நைஜீரியாவைப் போல் மாறிவிட்டது. 1948 ஆம் கிடைத்த சுதந்திரத்திற்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றம் தீவை நரகத்தீவாக மாற்றிவிட்டது. 1956ஆம் ஆண்டுக்குப் பின பல இனக்கலவரங்கள தமிழர்களைக் குறிவைத்தே இடம்பெற்றன”, என்றார் பிரசாத். அவர் பேச்சில் இருந்து அவர் வட இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதை ஜோன் ஊகித்தார்.

“நீங்கள் வட இந்தியரா”? என்று பிரசாத்தை நேரடியாகவே ஜோன் கேட்டு விட்டார்.

“ ஆம் நான் உத்திரபிரதேசத்தில் உள்ள அமேத்தி என்ற ஊரைச் சேர்ந்தவன்.”

“ ஓகோ அப்படியா. அது ராஜீவ் காந்தி போட்டியிட்டு வென்ற இடமாச்சே. அப்போ நீர் காங்கிரஸ் கட்சி ஆதரவாளரா? ஜோன் கேட்டார்.

“ நான் இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் இருந்தே காங்கிரஸ்தான். தாயைப்போல ராஜீவ் தானாகவே தனக்கு மரணத்தை தேடிக்கொண்டார். விடுதலைப் புலிகளை அடக்க நினைத்து அவர் எடுத்த முடிவுகளே அவருக்கு யமனாயிற்று” என்று சொல்லி பிரசாத் கவலைப்பட்டார்.

“ இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை அனுப்ப ராஜீவ் காந்தி எடுத்த முடிவு பிழையானது ” ஜோன் பதில் அளித்தார்.

“ அதை எப்படி சொல்லமுடியும்? இலங்கை ஜனாதிபதி ஜெயவர்தனா கேட்டதற்காகவே அவர் அந்த முடிவை எடுத்தார்” என்றார் பிரசாத்.

“ஆனால் ஜெயவர்தனா ராஜீவை விட அனுபவம் வாய்ந்த அரசியல் சாணக்கியன். தான் திட்டமிட்டபடி இந்திய அமைதிபடையை இலங்கைக்கு வரவழைத்து, தமிழர்களுக்கு ஒரு பாடம் படிப்பித்துவிட்டார். நான், அமைதிப் படை வடக்கில் இருந்த காலத்தில் ரிப்போர்டராக யாழ்ப்பாணம் போயிருந்தேன். அங்கு நடந்த பல மனித உரிமை மிறல்களைப் பற்றி எனக்குத் தெரியும். அமைதியைக் காக்க போன படை அதற்குப் பதிலாக மக்களிடையே பீதியை உருவாக்கியது. ஒரு இந்திய இராணுவ அதிகாரி எனக்குச் சொன்னார், “ யாழ்ப்பாணத் தமிழர்கள் வீடு வாசல்,டிவி, பிரிட்ஜ், மைக்கிரோவேவ், வோஷங் மெசின் ஆகியவையோடு வசதியான வாழ்க்கை வாழ்கிறார்கள். இதை விட வேறு என்ன அவர்களுக்குத் தேவை” என்று. அதற்கு நான் அவருக்குச் சொன்னேன், “அவர்களுக்குத் தேவை விலை மதிக்கமுடியாத சுதந்திரம். எப்படி இந்தியர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடினார்களோ அதே போன்று தான் அவர்களும் சிறீலங்கா அரசின அடக்குமுறைக்கும், இனத்துவேசக் கொள்கைகளுக்கும் எதிராகப் போராடுகிறார்கள்”, ஜோன் சொன்னார்.

“அரசுக்கு எதிரான விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளையும், புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட வேண்டாம் என்று மக்களுக்கு இந்தியப் படை விட்ட எச்சரிக்கையாகவும், எடுத்த நடவடிக்கையாக இருக்கலாம் அல்லவா?” பிரசாத் சொன்னார்”

“ அதற்காக அமைதியை நிலைநாட்டவே வந்திருக்கிறோம் என்று சொல்லிப் பெண்களைக் கற்பழித்தும், மக்க்களைக் கொலை செய்து இருக்கவேண்டியதில்லை. இந்தியப்படைக்கும்; சிங்களப்படைக்கும் என்ன வித்தயாசம்? இரண்டும் ஒன்றே:” ஜோன் சொன்னார்.

“ அப்போ நீர் சொல்லுகிறீரா அமைதிபடையை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியதால் தான ராஜீவ் காந்தி கொலை செயப்பட்டார் என்று”?

“நீரே தெரிந்துகொள்ளவேண்டும். அவரின் தாய் இந்திரா தங்க கோயிலை தாக்கியதால் சீக்கியர்களால் கொலை செய்யப்பட்டார். அதேமாதிரி இவருக்கும் நடந்திருக்கு”, ஜோன் சுருக்கமாக பதில் அளித்தார்.

“ ஆனால் இப்பொது பார்த்தீரா ஆயரக்கணக்கான உயர்களைப் பலிகொடுத்து கண்டது தான் என்ன? முள்ளிவாய்க்கால் கடைசி யுத்தத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள் எல்லோரும் இப்போது திறந்த வெளி முகாமகளில் அகதிகளாக இருக்கிறார்கள்”, என்றார் பிரசாத்.
அதைப்பற்றி உண்மை அறிந்து எழுதத் தானே நான் சிறீ லங்காவுக்குப் போகிறேன் என்பதை இவருக்கு நான் ஏன் சொல்லவேண்டும் என்று ஜோன் தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டார்,

“உங்கள் சீட் பெல்ட்டுகளை இறுகக் கட்டிக் கொள்ளுங்கள். விமானம் சில நிமிடங்களில் தரையில் இறங்கப்போகிறது” விமானக் கெப்டனின் அறிவித்தல் அவர்களுடைய சூடு பிடித்த வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

“மிஸ்டர் பிரசாத் உம்மைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. நேரம் போனது கூடத் தெரியவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் திரும்பவும் சந்திப்போம்” என்று பிரசாத்தோடு கைகுழுக்கி ஜோன் விடைபெற்றார்.

******

ஒரு கையில் கைப்பெட்டியும் மறுகையில் பயணப் பையோடும், தோள் பட்டையில் கமெராவோடு; குடிவரவு அதிகாரிகள் இருக்கும் மேசைக்கு போனபோது இரு கண்கள் தன்னை அவதானித்ததை கண்டும் காணாதது போல் ஜோன் இருந்தார். அதிகாரி ஜோனிடம் இருந்து பாஸ்போரட்டை வாங்கிப் பார்த்து அவர் கேட்ட கேள்விகளுக்கு அமைதியாக ஜோன் பதில் அளித்தார். தான் ஒரு கனேடிய ஊடகவியலாளர் என்று அதிகாரி கேட்டதிற்கு பதில் சொன்னார். அரசியல் கலக்காமல் அமைதியாக அதிகாரி கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னார். ஜோனின் பாஸ்போர்ட்டின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்துவிட்டு “பல நாடுகளுக்கு போய் இருக்கிறீர போல் தெரிகிறது” என்றார் அதிகாரி.

“ ஆம்.” சுருக்கமாக பதில் சொன்னார் ஜோன்.”

இருகிழமைகளுக்கு விசாவுக்கான சீல் அடித்து பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுத்தபடி “இந்த அழகிய தீவில் இரு வாரங்களை சந்தோஷமாக களிக்க என் வாழ்த்துக்கள்”, என்றார் அதிகாரி.

“நன்றி சேர். ஏற்கனவே பலதடவை சிறிலங்காவுக்கு வந்திருக்கிறன் என்று புன்முறுவலோடு பதில் அளித்துவிட்டு சுங்கப் பகுதிக்குச் சென்றார் ஜோன்.. சுங்க அதிகாரி ஜோனின் பாஸ்போரட்டை வாங்கிப் பார்த்துவிட்டு கனேடியன் என்று அறிந்தவுடன் ஒரு விதச் செக்கிங்கும் செய்யாமல் “நீர் போகலாம்”, என்றார்.

வரும் பயணிகளைச் சந்திக்க வருபவர்கள் நிற்கும் பகுதிக்கு ஜோன் போனபோது தனது பெயர் பலகையைத் தூக்கியபடி ஒருவர் டையோடு நிற்பதைக் கண்டார். அவரிடம் நேரே போய், “ நான் தான் டொரண்டோவில் இருந்து வரும் டொரண்டோ ஸ்டார் பத்திரிகையின் ஜேர்னலிஸட் ஜோன்;” என்று பெயர்ப் பலகையைத் தூக்கிக்கோண்டு நின்றவரிடம் தன்னை அறிமுகப்படுத்தினார்.

“வெல்கம் டு சிறீலங்கா ஜோன். என் பெயர் மகேஷ். நானும் உம்மைப் போல் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வேலை செய்யும் ஊடகவியலாளன்”, என்று ஆங்கிலத்தில் பதில் சொன்னார்.

“உமது பெயரில் இருந்து நீர் ஒரு சிறீலங்கன் டமில் என நினைக்கிறேன். நான் நினைப்பது சரியா” ஜோன் மகேஷைக் கேட்டார்.

“முற்றிலும் சரி ஜோன். எல்லாச் சிறிலங்கங்களின் பெயர்களைப் போல் என் பெயரும் நீண்டது. என் முழுப்பெயர் மகேஸ்வரநாதன். அதைச் சுருக்கி எல்லொரும் என்னை மகேஷ் என்று கூப்பிடுவார்கள். நீரும் என்னை அப்படியே கூப்பிடலாம்” மகேஷ் சொன்னார்.

“மகேஷ்; எவ்வளவு காலம் ஊடகவியலாளராக இருக்கிறீர்”?

“நான் இந்தப் பத்திரிகையில் சேர்ந்து 12 வருடங்கள். பேராதனை பல்கலைக்கழகத்தில், ஊடகத்துறையில் படித்துப் பட்டம் பெற்றவன். அதனால் என்னோடு பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்று, என்னைப்போல் ஊடகவியலாளராக வேலை செய்யும் லலித் சோமரத்தினா என்பவரைத் தெரியும். அவர் என் உற்றான்மை நண்பர். அவரின் தாய் மாமன் விஜயரத்தினா என்பவர் ஒரு ரிட்டையரான மேஜர் ஜெனரல். பல காலம் ஆர்மியில் வேலை செய்தவர்” என்று மேலதிக விபரங்களை மகேஷ் ஜோனுக்குச் சொன்னார்.

“ உமக்கு முக்கிய சிங்களப் உயர் மட்டத்துப் புள்ளிகளோடு தொடர்பு இருப்பதையிட்டு மகிழ்ச்சி. இது எனது வேலைக்கும் உதவும்”.

“ எனக்கு பல சிங்கள, முஸ்லீம் நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் பல்கலைக்கழகத்தில் என்னோடு ஒன்றாகப் படித்த நண்பர்கள். சிலர் உயர் அரச பதவிகளில் இருக்கிறார்கள். இலங்கையில் யாரைத் தெரியும் என்பதுதான் முக்கியம். அதனால் எந்த வேலையையும் விரைவாகத் தடைகள் ஏதுமின்றி செய்ய உதவும்”, மகேஷ் சொன்னார்.

“ நான் சிறீலங்காவுக்கு சுனாமி பற்றி நடந்ததை ஆராய்ந்து எழுத 2005 ஜனவரியில் வந்தனான். அப்போது ஐலணட் என்ற ஆங்கில ஊடகத்துக்கு வேலைசெய்த லலித் என்ற ஊடகவியலாளரை சந்தித்தனான். ஒரு வேலை அவரைத் தான் உமது நண்பர் என்கிறீரோ தெரியாது” என்றார் ஜோன்.

“ அவரே தான் நான் சொல்லும் லலித் சோமரத்தினா என்பவர். லலித் என்று கூப்பிடுவோம்”.

“ அது நல்லதாய் போச்சு. ஏற்கனவே எனக்குத் தெரிந்த ஒருவர் என் வேலைக்கு உதவலாம்.”
ஜோனின் சூட்கேசுகளை வானில் கொண்டு போய் வைக்கும்படி சிங்களத்தில் பக்கத்தில் நின்ற டிரைவருக்கு மகேஷ் சொன்னார்
.
“எந்த ஹோட்டலுக்குப் போயாக வேண்டும் ஜோன்”? மகேஷ் கேட்டார்

“கலதாரி ஹோட்டல். நான் இங்கு வரும்போது அங்குதான் தங்குவேன். ஹோட்டலின் ஜெனரல் மனேஜர் சொயிசா என் நண்பராகிவிடார். அதாலை ஹோட்டலில் நல்லாக என்னை கவனிப்பார்கள்” என்றார் ஜோன்.

இருவரையும் சுமது கொண்டு வான் கலதாரி ஹோட்டலை நோக்கிப் பயணித்தது.
*******

Series Navigationதிரும்பிப்பார்க்கின்றேன் – இந்திரா பார்த்தசாரதி – பெயருக்குப்பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதைதொடுவானம் 136. நுண்ணுயிரி இயல்