மூட முடியாத ஜன்னல்

எங்கேகின வெளியில்

புறாக்கள்?

சப்திக்கிறதே சடுதியில் மழை

புறாக்கள் சிறகடிப்பது போல்.

மழையோடு

மழையாய்

மறைந்தனவா அவை?

எப்போதும் என்னறையின் ஜன்னலின் பின்

அடையும் அவை காணோம்.

அறை ஜன்னல்

திறந்து பார்க்கலாம்.

ஆனால்,

எப்படி அறை ஜன்னல் மறைத்துப் பொழியும்

நீர் ஜன்னலைத் திறப்பது?

மழை ஓய்ந்தால்

நீர் ஜன்னல்

திறக்கலாம்.

மழை ஓயத் திறக்க

நீர் ஜன்னல்

காணோம்.

எப்போதும் திறக்காத என் அறை ஜன்னலை

இப்போது திறந்து காத்திருப்பேன்-

புறாக்களுக்காக.

திரும்பி வந்த புறாக்களோ  நுழையவில்லை

திறந்த ஜன்னலுக்குள்

புறாக்களுக்கு 

தெரியும் :

எப்போதும் திறந்தே இருக்கும்

மூட முடியாத-

ஒரே ஜன்னல்

வெளி.

கு.அழகர்சாமி

Series Navigationநான்கு கவிதைகள்மாசறு பொன்னே