மேடம் இன்னிக்கு…

author
1
0 minutes, 4 seconds Read
This entry is part 9 of 12 in the series 24 ஜூலை 2022

 

             

சிவபிரகாஷ்

                                                              

இன்றும் இளந்தேவன் காத்து க்கொண்டிருந்தான்.  வீட்டில் சுவற்றில் மாட்டியிருந்த லட்சுமி பட காலண்டரில் இன்று தேதி 4-7-1986 ஐ கண்டும்   அதற்கு மேல் உள்ள சுவர் கடிகாரம் 10.30 காலை ஐ யும்  இவனுக்கு உணர்த்திக்கொண்டிருக்க. ஒரே பரபரப்புடன் வீட்டிற்கும், வெளியேயும், “என்ன இன்னும் காணோமே” என புலம்பியபடி குட்டிப்போட்ட பூனையை போல் உலாவிக்கொண்டிருந்தான்.

பொறுக்க முடியாமல் வெளியே வந்தவன் அங்கே தனியாக விளையாடி க்கொண்டிருந்த அடுத்த வீட்டு பையனிடம். “ஏண்டா ரமேஷ், தபால்க்காரங்க வந்துட்டு போய்ட்டாங்களா?  விசாரிக்க… “தெரியல, நான் பாக்கல “என பையன் சொல்லி முடிப்பதற்குள். எதிர்புறத்திலிருந்து  அழகிய குரலில் சத்தம் கேட்டது.  “சார் போஸ்ட்”என எதிர்வீட்டு சுப்பையாவிடம்  கடிதத்தை கொடுத்து விட்டு. இவனை நோக்கி வருவது தெரிந்தது. “ஹாங் வந்துட்டாங்க”-சுட்டெரித்து வெயிலில் 4 வழுக்கை இளநீர் குடித்த திருப்தி. இவனை கடக்க முயன்ற தபால்காரரை மிகுந்த ஆவலுடன். “  மேடம் இன்னிக்கு “   என்றான்.

(ஆச்சர்யப்பட வேண்டாம் தபால்க்காரர் ஒரு அழகிய பெண்மணி தபால்களை பையில் திணித்து லேடீஸ் சைக்கிளில் பின்புறமாக மாட்டி மெதுவாக ஒட்டி வருவதை பார்த்தால் அப்படி ஒரு அழகு   எப்போதும் கும்பலாக வெட்டி கதையை பேசிக்கொண்டிருக்கும் கும்பல்கூட இவள் வருவதை கண்டால் வாயடைத்து சைட் அடித்திருக்கும் மச்சி… இது உன் ஆளு, இது என் ஆளு என அவள் காதுப்பட பேசினாலும் கண்டுக்காமல் கடந்து விடுவாள் அச்சு அசல் நடிகை ரேவதியை போலிருக்கும் இவள பெயர் மாலதி.)

சாரி சார் இல்ல. என புன்னகைத்தபடி அடுத்த வீட்டுக்கு நகர்ந்தாள்.

“ச்சே”-இன்னிக்கும் இல்லேன்னுட்டாளே  என 10 பச்சை மிளகாயை வெறும் வாயில் மென்று தின்ற எரிச்சலுடன் உள்ளே சென்று கதவை சட்டென்று சாத்தி சோகத்தோடு  போய் சோபாவில் அமர்ந்தான்.

இவன்  “இளந்தேவன்”நல்ல அழகுள்ள வாட்டசாட்டமானவன், படித்தவன், கல்லூரி பெண்களின் கனவு காதலன் போல் அப்படி ஒரு தோற்றம். மௌனராகம் படத்தில் வரும் நடிகர் கார்த்திக் போல் இருப்பவன்.

தினம் காலை நேரத்தில்… இவள் (தபால்காரியை) எதிர்பார்ப்பதும், அவள் வந்தவுடன் மேடம் இன்னிக்கு என்பதும், அதற்கு அவள் பல்லை இளிச்சுக்கிட்டே இல்லைங்கிறதும்  வாடிக்கையா போச்சே!

இளந்தேவன் இப்படி செய்யலாமா? வீட்ல இருந்துகிட்டே, இது அவங்க வீட்ல யாருக்கும் தெரியலையா? இல்லை தெரிஞ்சும் கண்டுக்காம மாதிரி இருக்காங்களா? என அக்கம்பக்கத்து வீட்டு பெண்களின் பேச்சும், ஒருத்தரை ஒருத்தர்  தினம் சாடை க்காட்டிக்கொள்வதும்  தொடர்ந்தது.

ஏனெனில் இருவர் வயதும் அப்படி.

பகல் பொழுது இவன் ஏக்கத்தை விட வேகமாக முன்னேறி இரவு வந்து வீட்டில் உள்ளோர் படுத்த பாயில் சொர்க்கம் பல கண்டிருக்க இவனுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. புரண்டு, புரண்டு படுத்தும் தூக்கம் வரவேயில்லை. எழுந்து சமையலறைக்கு சென்று டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு வந்து பாயை சுருட்டி ஒரந்தள்ளி வெறும் உடம்போடு, தரையில் அண்ணாந்து படுத்து, யோசித்து க்கொண்டே இருக்க  நடுநிசி தாண்டியது.

கடவுளே! இன்னும் எவ்வளவு நாள் அடுத்தவங்க விமர்சனங்களுக்கு ஆளாகிறது, என்னிக்கு  தான் நான் சொந்த கால்ல நிக்கிறது, என்னிக்கு நான் நல்ல வாழ்க்கை வாழ்றது. என்னிக்கு தான் இந்த தபால்காரி நல்ல விஷயம் சொல்ல போறாளோ  என்றபடியே கண்கள் இறுகியது.

வழக்கம் போல காலை பரபரப்புக்கிடையே கடமையை செய்ய தபால்காரி வந்து க்கொண்டிருந்தாள்…இவனை நோக்கி…. சார் இந்தாங்க நீங்க எதிர்பார்த்தது நடக்க போகுது  என்றபடி கடிதம் ஒன்று கொடுக்க, வாங்கியவன் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல  நான் எதிர்பார்த்தது இன்னிக்கு. என் கையில இருக்கும்போது  வாழ்க்கையில இதைவிட வேற சந்தோஷம் எதுவுமில்லை. என பூரிப்பாய் பேச  , நான் என் கடமையை தான் செஞ்சிருக்கேன். பேசல்லாம் இப்போ நேரமில்லை என்று புன்னகைத்தபடி நகர்ந்தாள்.

கடிதத்தை ஆர்வமுடன் பிரித்து படிக்க  படிக்க அதிர்ச்சியும், பேரிடியாகவும் இருந்தது. கடிதத்தின் விஷயம் விஷம் ஏற்றியது போலிருந்தது. வேறு ஒருவருக்கு அது கிடைத்ததை உணர்ந்துகொண்டான். நல்ல விஷயம் தந்தாள்ன்னு எத்தனை நன்றி சொன்னேன் அவள் இப்படி ஒரு கடிதத்தை கொடுத்திட்டு போறாளே பாவி . இப்படி எப்பவுமே ஏமாந்து போறோமே. நான் வாழறதுல அர்த்தமே இல்ல, விருப்பமுமில்ல சாகபோறேன், ஆமா சாகத்தான் வேண்டும். விறுவிறுவென படியேறி, இரண்டு தளத்துக்கு மேல் உள்ள மொட்டைமாடியிலிருந்து  கீழே குதிக்க.

ஆ…… ஆ….. ஆவென ஒரு அலரல் சத்தம்.

தடபுடாலென  வீட்டில் உள்ளோர் எழுந்து மின்விளக்கு போட

பயங்கர தூக்கத்திலிருந்தான் இளந்தேவன்? .

ஏங்க… ஏங்க… என்னாச்சு இது ஒரு குரல். தட்டி எழுப்பி

 டேய் என்னாச்சுடா? ஏன் இப்படி அலறல்? என கோரஸை கேட்க மெதுவாக தலை உயர்த்தி  “ஹாங்…ஹாங்…ஒன்னுமில்லை, கனவு கண்டிருப்பேன் போலிருக்கு அதான்.

அது சரி…. கனவா? நாங்க…. என்னமோ, ஏதோ ஆச்சுன்னு பயந்துட்டோம், இப்படியா கத்துவ, பாவி…. போடா என்றபடி கடிகாரத்தை பார்த்தாள் அம்மா, மணி காலை 5:30 மணி காட்டியது, இனி எங்க தூங்கறது? நான் போய் துணியை துவைச்சிட்டு, குளிச்சிட்டு வரேன். என்றவள்  தேவா….. பால்காரன் மணி இன்னிக்கு ஏதோ ஊருக்கு போறேன் நாளைக்கு வரமாட்டேன் ஒருநாள் மட்டும் வெளியே வாங்கிக்கோங்கன்னு சொல்லிட்டு போனான். அதனால் நீ போய் பால் வாங்கிட்டு வந்திரு. அப்பாவுக்கு முடியாது நீ போ… என்றவாறு பாத்ரூம் நோக்கி நடக்கலானாள். மற்றவர் உறங்கிக் கொண்டிருந்தனர்.   இரவு வெகுநேரம் தூங்காததாலும், விடியலில் எல்லோரும் எழுப்பிவிட்டதாலும், பாதி தூக்கம் கலையாமல், அம்மா சொன்னதுக்காக, தெரு முனையில் இருக்கும் பால் டிப்போவுக்கு சென்று பால் வாங்கி வந்து மீண்டும் வெறுந்தரையில் வந்து படுத்து. “நாம நெனச்சது நடந்து, கனவாக போச்சே “இன்னும் எத்தனை நாளைக்கு தான் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பாரமாக இருக்கிறது. என்னை நம்பி இவ்வளவு பேர் இருக்காங்க. என்னால சாதிக்க முடியுமா என மனசுக்குள் கேட்டபடி  கண் அயர்ந்தான்.

 திடீரென ஒரு குரல்  மணி 8.00ஆச்சு இன்னும் என்ன தூக்கம்? நானே எனக்கு வர பென்ஷன வெச்சு, உங்களுக்கு சோற்றை போடுறேன். துரை பகல் முழுக்க சுத்திட்டு, ராத்திரி விடிய, விடிய கதைய பேசிட்டு, காலை எழுந்திரிக்க கஷ்டமா இருக்கு, எப்போ தான் குடும்ப பொறுப்பு வரபோகுதோ? அப்பாவின் கேள்வி நியாயமாகப்பட்டது. “அப்பா – ரத்தின வேல், ஒய்வு பெற்ற அரசு ஊழியர். வேலையில இருக்கும் போதே, லோன் வாங்கியும், பொண்டாட்டி நகை, அப்புறம் கையில இருந்த காச போட்டு 600 சதுரடியில் இரண்டு மாடி கொண்ட வீடு கட்டியும், கீழ் பகுதியில், இவர்கள் குடும்பமும், இரண்டு மாடியை வாடகைக்கு விட்டு,, குடும்ப செலவை பார்த்து வருகிறார்.

துரை…. அதான் நம்ம கதாநாயகன் இளந்தேவன்  லேட்டா காலையில எந்திரிச்சி வழக்கம் போல தபால்கார பெண்மணியை எதிர்பார்ந்தான்.

அவள் (தபால்காரி) வருவது தெரிந்தது..

“மேடம் – இன்னிக்கு”

இன்றும் அதே பதில் “இல்லை “

ச்சே இன்னிக்குமா?

தபால் பெண்மணிக்கு ஒன்றும் புரியவில்லை, என்ன இவர் நான் வரும்போதெல்லாம். “மேடம் இன்னிக்கு”, மேடம் இன்னிக்குங்கிறார். இவருக்கு எந்த லெட்டரும் வந்ததில்லை ஆனால் கேட்கிறார். என்னன்னு புரியலையே, ஒருவேளை மத்த பசங்க மாதிரி இவரும் சைட் அடிக்கிறாரோ? சைட் அடிச்சா சைலண்டா பார்ப்பாங்க, இல்லைன்னா… கிண்டல் செய்வாங்க இவர் நேரடியா பேசுறார் ஆனால் பயத்துல எப்படி கேட்பதுன்னு  முழிக்கிறாரா ஒருவேளை நம்மள காதலிக்கிறாரா?

 Anyway இவரும் அழகாக இருக்கார். எனக்கும் இவரை பிடிச்சிருக்கு, காதலைநம்ம க்கிட்ட  நேரடியாக  சொல்றதுக்கு பதிலா, நம்மல முதல்ல சொல்ல வைக்க முயற்சி பண்றாரா?காதலை சொல்லிடலாமா? அவர் எதிர்பார்ப்பது போல்

நானே முதல்ல எப்படி சொல்றது ? ஒருவேளை நான் அப்படி எல்லாம் எதிர்பார்த்து பேசல நீங்க தப்ப புரிஞ்சுகிட்டீங்கன்னு சொல்லீட்டார்ன்னா என்ன செய்யறது? சரி பார்த்துக்கலாம் என யோசித்தபடியே தபால்பட்டுவாடா செய்ய வீடு வீடாக நகர்ந்து கொண்டிருந்தாள்.  “சார்…. போஸ்ட்”,  “மேடம்… போஸ்ட்”.

வேலை முடிந்து மாலை வீடு திரும்பியதிலிருந்து, இவளுக்கும் இளந்தேவனை போல் இருப்பு க்கொள்ளமுடியவில்லை, பசியும் எடுக்கவில்லை, அம்மா திட்டியதால் இரண்டு இட்லியை  வாயில் திணித்து, அவசரஅவசரமாக அம்மாவுக்கு உதவியாக கிச்சன் சிங்கிலிருந்த பாத்திரத்தை தேய்த்து, வீடு பெருக்கி, அம்மா வரும் முன்னே படுக்கைக்கு சென்றுவிட்டாள். இவள் அம்மாவுக்கு ஒன்னும் புரியவில்லை, என்ன- இவ,? என்னிக்கும் இல்லாம இன்னிக்கு  சரியா சாப்பிடாம, வீட்டு வேலையெல்லாம்  வேக முடிச்சிட்டு போறா. … ஹும்…. என்னமோ ? என பெருமூச்சுடன். வெளியில் காற்று வாங்கிக்கொண்டிருந்த தன் கணவருடன் அமர்ந்து பேச ஆரம்பித்தாள்.

கதையின் நாயகி (மாலதி) தபால்காரி படுத்துக் கொண்டு யோசனையில் மூழ்கினாள். எப்படி நாமால போய் சொல்றது, பேசாம அவர் எதிர்பார்க்கிறது மாதிரியும், யாருக்கும் தெரியாதது போல் கடிதம் வந்தது மாதிரி எழுதி கொடுத்திடலாமா?… ம்… அதான் சரி நல்ல. ஐடியா இதையே follow பண்ணலாம், என எழுந்து அம்மாவும், அப்பாவும், வேளியே பேசிக்கொண்டிருப்பதை உறுதி செய்து கொண்டு, மேஜை மேல் இருந்த நீன்ட நோட்புக் காகிதத்தை கிழித்து  எழுத தொடங்கினாள், எப்படி ஆரம்பிப்பது, என்ன சொல்லி ஆரம்பிப்பது எனமுடிவெடுக்க முடியாமல் வெறுமனே “ ஐ  லவ் யு” என எழுதி, வேலைக்கு எடுத்து செல்லும் தோள்பையில் வைத்துகொண்டு,காலையில் வேலைக்கு போற வழியில நாயர் பெட்டிக்கடையில் கவர் வாங்கி இக்கடிதத்தை வெச்சு கொடுத்திடலாம்னு முடிவு பண்ணி, நினைத்தபடி எந்த டென்ஷனும் இல்லாம படுத்து தூங்கியும் எழுந்தாள்.

 

வழக்கம் போல அவர் என்கிட்ட கேட்பார் கொடுத்திடலாம்னு  முடிவு பண்ணி மிகு‌ந்த எதிர்ப்பார்ப்போடு, அன்றாட பணிகளோடு சைக்கிளில் தோள்பையில் மற்ற தபால்களை தெரு மற்றும் கதவு எண் வரிசையாய் அடுக்கி, இளந்தேவன் இருக்கும் தெருவில் நுழைந்து, வீட்டின் அருகே பார்த்தாள். ஆனால்… அங்கே அவன் இல்லை, வாசலிலும் இல்லை. சிறிது நேரம் நின்று பார்த்தாள் அப்போதும் அவன் வெளியே வரவில்லை இவளிடம் எதுவும் கேட்கவுமில்லை. என்பதால் ஏமாற்றமானாள். சோர்ந்து… அடுத்த வீட்டு தபால்களை delivery செய்து நாளைக்கு பார்த்துக்கலாம். என சமாதானித்து மறுநாளில்…… அதே ஏமாற்றம் அவன் அங்கு இல்லை., வெளியேயும் வரவேயில்லை,

என்னாச்சு இவருக்கு ஒருவேளை உடம்பு கிடம்பு சரியில்லையா?நாளைக்கும் வரலீன்னா…. அவர் வீட்லேயே போய் கேட்கலாமா? என்ன போய் கேட்கிறது? என்ன விஷயம்னு அவங்க வீட்ல கேட்டாங்கன்னா என்ன சொல்றது. நான் எழுதின லெட்டர் ஐயும் கொடுக்க முடியாது.. என்ன வழி ….. இளந்தேவனுக்கு இருந்த அதே எரிச்சல் இவளுக்கும் தொற்றிக்கொண்டது.

எல்லாம் நல்லதுக்கு கூட இருக்கலாம், சரி நாளைக்கும் பார்க்கலாமென

நகர்ந்தாள் “சார் போஸ்ட் “,, அம்மா  போஸ்ட் “ பொழுது கடந்து, மறுநாள் விடிந்து, வழக்கம் போல்  மீண்டும் அதே பணி,

தெரு தெருவாக, வீட்டு எண்கள் பார்த்து தபாலை பட்டுவாடா செய்தபடி

இளந்தேவனை காண துடித்தாள். வீண் போகவில்லை  கண்ணெதிரே நிற்பதை உறுதிபடுத்தி கொண்டு அருகில் வந்தாள். ஆனால் அவனிடமிருந்து எந்த reactionம் இல்லை. எதுவும் கேட்காமல் பாராமுகமாக இருந்தான்.

இவளே வலிய சென்று “என்ன சார்? இரண்டு நாளா ஆளையே காணோம்? இன்னிக்கு என்கிட்ட எதுவுமே கேட்காம இருக்கீங்க  என்றாள்.

ஆமாமா….. நான் எப்ப கேட்டாலும் இல்லே இல்லேண்ட்றீங்க, அதான் என்றான்.

சரி… இன்னிக்கு கேளுங்க என்று பதில் கொடுத்தாள்.

இவன் மெல்ல புன்னகைத்து, அதுக்கு வாய்ப்பில்லாமல்  கிடைக்க வேண்டியது இப்போ கிடைச்சிடுச்சு  என்றவனை. What? கிடைச்சாச்சா என்ன சொல்ல வர்றீங்க என்றாள்.

நான்  ஒரு மாதத்துக்கு முன்பாக ஒரு கம்பெனிக்கு வேலைக்கு எழுதி போட்டிருந்தேன் அவங்களும் இன்டர்வியூக்கு கூப்பிடுவாங்க, கூப்பிடுவாங்கன்னு எதிர்பார்த்தேன். கூப்பிடல, அதான் இரண்டு நாள் முன்னாடி நேர்லேயே போய் விசாரித்து, கவனிக்க வேண்டியவங்களை எல்லாம்  கவனித்து, appointment வாங்கிட்டு வந்திட்டேன்.. வேலையும் கிடைச்சிடுச்சு அடுத்த வாரம் join பண்ண போறேன்.

இருங்க ஸ்வீட் வாங்கிக்குங்க என்றவன் ஜெயா, ஜெயா என அழைத்தான்

என்னங்க….? இது இளந்தேவனின் மனைவி.

ஒன்னுமில்லை வாங்கிட்டு வந்த அந்த  லட்டு ஐ  கொண்டுவா, போஸ்ட் மேடதுக்கு கொடுப்போம் என்றான்.

தட்டாமல் மனைவியின் அந்த லாலா கடை லட்டை நீட்ட….  4  வயது குழந்தை ஒன்று எனக்கும் ஒன்னு கொடு என்றது. இது.. இளந்தேவன், ஜெயாவின் பெண் வாரிசு லாவன்யா.

 வீட்டில் உள்ளேயிருந்து…. தேவா, ஜெயா, எங்கே இரண்டு பேரையும் காணோம், அம்மாவின் குரலுக்கு

இதோ வரேன்… நகர்ந்தார்கள்.

 

மாலதி…..இளந்தேவனுக்காக எழுதி வைத்திருந்த” ஐ லவ் யூ “ கடிதத்தை  எடுத்து “  ஐ  மிஸ் யூ” என திருத்தி  பெயரிடாமலும், யாரும் பார்க்க வகையிலும் அவன் வீட்டு வாசலில் விட்டெறிந்து சென்றாள்  விரக்தியுடன்.

 

பல மாதங்கள் கழித்து…..

 

 

சார் போஸ்ட், சார் போஸ்ட்… என அழைத்தபடி கடிதம் பட்டுவாடா செய்துகொண்டிருந்தாள்.

பிள்ளையார் கோயில் தெருவில் இங்கொருவர் இந்த மேடத்தை எதிர்பார்த்து, வீட்டிலிருந்த மளிகை கடை செட்டியார் காலண்டரில் நேற்றைய தேதியை கிழித்து இன்றைய தேதியை கண்டான் 04/10/1986  என்றிருந்தது. கையில் கட்டியிருந்த citizen வாட்சில் , தபால் பெண்மணி வரும் நேரத்தை உணர்த்தியது

எட்டி பார்த்தான் “. த்தோ “ வந்திட்டாங்கல்ல.

மேடம்  ஏதாவது லெட்டர் வந்திருக்கா?

இல்லை….. நகர்ந்தாள்

மறுநாள் அதே ஆள்

“மேடம்  இன்னிக்கு “

இல்லை….. ஸாரி… எப்பவுமே இல்லை, முகம்பாராமல் விருட்டென  கடந்தாள்.

இரண்டொரு நாளில்…. இவள் முகவரிக்கு வந்த கடிதத்தை பிரித்து படிக்க வேறு ஊருக்கு பணி மாற்றம் கடிதம் வர  பயணித்தாள்

“ சார் போஸ்ட் “

Series Navigationபூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பு விசை மாறுதலால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேரலாம்கைவசமாகும் எளிய ஞானம்
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *