மே-09. அட்சய திருதியை தினம்

Spread the love

அறிவினைப் பெற்று அழகுடன் திகழ
ஆன்றோர் காட்டிய அட்சய திருநாள்!
வறியவர் வாழ்வில் வாஞ்சைக் கொண்டு
வழங்கிடும் தானம் வாழ்த்திடும் இந்நாள்!
குறிக்கோள் வைத்து குவலயம் காக்க
கொடுப்பது பெருகி குவிந்திடும் தன்னால்!
தெறிக்கும் உண்மை தேசம் தோறும்
திடமாய் நின்று தீரட்டும் உன்னால்!

வணிக நோக்கம் வளர்த்திடும் சிலரால்
வளமாய் சுயநலம் வருவதோ திருநாள்?
புனிதம் நிறைந்து புண்ணியம் பெருக
பூத்திடும் வாழ்வே புதுமைத் திருநாள்!
மனிதம் வளர்க்கும் மாபெரும் பணியே
மண்ணில் சிறந்த மங்கலத் திருநாள்!
கனிந்து செய்யும் கருணையின் தானம்
காட்டும் வாழ்வே அட்சய திருநாள்!

மனதை பொன்னாய் மாற்றிட வேண்டி
மண்ணில் வைத்தார் மாபெரும் திருநாள்!
கனவே வாழ்வாய் கண்டிடும் எளியோர்
கடும்பசி போக்க காட்டிய ஒருநாள்!
தினமும் உழைப்போர் தேடிடும் வாழ்வில்
தெய்வம் அருளும் தீர்க்க திருநாள்!
பணமும் பொருளும் பார்த்திட மட்டும்
பயனென வராது அட்சய திருநாள்!

-ப.கண்ணன்சேகர், திமிரி.

Series Navigationநீ இல்லாத வீடுஒன்றும் தெரியாது