மொழிபெயர்ப்புக் கவிதை – நிர்ணயிக்கப்பட்ட தீ

 

 

வில்லியம் ஆல்ஃப்ரெட் கெய்ல்ஸ்   

ஆங்கில வழி தமிழில் : ட்டி. ஆர். நடராஜன் 

லகின் மிக உயரமான மரங்களில் ஒன்றாக 

சிவப்பு மரங்கள் பூமியிலிருந்து 350 அடி உயரத்துக்கு வளர்கின்றன. 

அவற்றின் வேர்கள் தனித்து விடப்பட்டால் பத்தடிக்கு மேல் போக முடியாது. 

ஆகவே இவ்வளவு பிரமாண்ட மரங்களாய் வளர அவற்றின் 

தனிமைப்படுத்தப்பட்ட  வேர்கள் உதவமாட்டா.. 

ஒவ்வொரு வேரும் ஒரு அங்குல தடிமனில் இருப்பதால் 

அவை பக்கத்திலுள்ள மற்ற வேர்களுடன் தத்தம் பழுப்பு நிற விரல்களால் 

பின்னிப் பிணைந்து

பலமான அஸ்திவாரத்தை எழுப்பிக் கொண்டு வளர்கின்றன. 

என்குடும்பமும் சிவப்பு மரங்களின் கூட்டம் போலத்தான்.   

வேர்களுக்குப் பதிலாக நாங்கள் சரணடைவது கடவுளை.  

சமோவாவிலிருந்து என் அம்மா அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த போது

அவள் தனது எந்தக் குழந்தைகளுக்கும்  தாய்மொழியைக் கற்றுத் தரவில்லை.   

இப்போது 26 வருடங்களுக்குப் பின் 

என் மண்ணின் கரங்களை நான் பிடித்து உணர்ந்ததில்லை.  

எப்படி  எங்கள் வேர்களைத் தீக்கிரையாக்கிய பின் 

எம் மண்ணின் மேல் நிற்க முடியும்?    

இன்று காற்றில் சாய்ந்து சரியும் மரமாக இருக்கிறேன். 

இழந்து விட்ட மொழிக்கும், அடைய முடியாத வானிற்கும்

நடுவில் நின்ற என் முழங்கால்களை ஒரு மனிதன் வெட்டி விட்டான்.

பசிபிக்கில் இரண்டாம் உலக யுத்தத்தின் மரபு வழி இதுதான்.

தீவில் வசிப்பவர்களாயும் புலம்பெயர்ஆசியர்களும் கற்றுணர்ந்தது 

அவர்களுடைய அயல்மொழிப் பேச்சும், வித்தியாசமான தோலும் 

தருவதென்னவோ சிறைப்பட்ட வாழ்க்கைதான்.  

சீருடையில் படியும் ரத்தம் சமூகத்தில் இடம் வாங்கித் தரும். 

அவர்களுடைய துண்டிக்கப்பட்ட நாக்குகளைத் தந்து 

குடிமை உரிமையை வாங்கிக் கொள்ளலாம்.  

இதுதான் உண்மை.

வேர்களை விட விரிவாகக் கிளைகள் பரவ சாத்தியமில்லை.  

தாய்நாடு என்பது வறுமையின் சின்னம் என்றாகுகையில் 

உனக்கு வேண்டியது கலாச்சாரமா அல்லது உடுத்தத் துணியா எனத் 

தீர்மானிக்க வேண்டியிருக்கையில்

நீ தேர்ந்தெடுப்பது எதை ?  

இப்படித்தான் சிவப்பு மரங்கள் வீழ்கின்றன. 

ஒருவரை ஒருவர் சேர்ந்தும் சார்ந்தும் இருப்பது மூலமே 

அவர்களுக்கு எதிரானவற்றைப் 

புறங்காணச் செய்ய முடியும் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

ஹவாய் புலம்பெயர்பவர்களின் சொர்க்கம்.  

நம்மில் பலரும் இறந்த காலத்தின் நினைவுகளுடன் நிற்க முயலுகிறோம்.   

கடலுக்கு அப்பாலிருந்து துயரத்துடன் வந்து சேர்ந்திருக்கும் 

பழைய ஆலமரங்கள் .நம்மிடையே உள்ளன.  

இந்த ஆலமரங்கள் இரக்கமற்றும் பழைய நினைவுகளில் 

அலைப்புறாமலும் தம் விதைகளிலிருந்தது வெடித்தெழுந்து 

வேறு விதானங்களை அடைகின்றன. 

அவர்களின் இருப்பை அவைகளே தீர்மானிக்கின்றன. 

மேலிருந்து கீழே விழுந்து தரையில் தமது வேர்களுடன் ஊர்கின்றன. 

அவையே அவற்றின் இருப்பிடமாகின்றன.

பாலினேஷியாவில்  நாங்கள் எப்போதும் எங்கள் பூமியிலிருந்து கற்றுக் கொண்டோம் .   

எனவே வேர்கள் இல்லையேயென்று நான் புலம்புவதில்லை.  

பதிலாக அவற்றை நான் வளர்க்கிறேன்.  

ஆகவே நான் ஒவ்வொரு நாளும்   வெடித்தெழும்  விதையாய் இருக்கிறேன்.   

என் பாஷை அயலகத்தினுடையது. 

என் சருமம் வித்தியாசமானது. 

ஒவ்வொரு தினமும் பூமியை நோக்கி நான் விழுகிறேன். 

அழுக்கில் புதுப்பிறவி எடுக்கிறேன்.  

சீருடையில் ரத்தமும். துண்டிக்கப்பட்ட நாக்குமாய் நான்..

தினமும் எனக்குள் ரத்தம் ஊற 

நான் நேசிப்பவர்களை இறுகக்

காட்டித் தழுவுகிறேன். 

ஆலமரமாய்   

              விரியும் 

                       வம்ச விருட்சமென 

                             நான் வளர்கிறேன். 

———————————–

குறிப்பு: வில்லியம் ஆல்ஃப்ரெட் கெய்ல்ஸ்,  ஹோனாலூலு, ஹவாயைச் சேர்ந்த ஸமோன்- அமெரிக்கக் கவி.   

Series Navigationதி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 19 – உப்பிலியும் வேதாந்தியும்லூயிஸ் க்ளிக்கின் இருண்மைக் கவியுலகு- ஒரு பார்வை