மொழிப்பெருங்கருணை

Spread the love

 

 

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

வழியேகும் அடரிருள் கானகத்தில்

கைப்பிடித்து அழைத்துச்செல்லும் மொழி

குழிகளிலிருந்தும் கட்டுவிரியன்களிலிருந்தும் காத்து

உயிர்பிழைக்கும் வழி கற்றுத் தந்தவாறு

பழிபாவங்களுக்கஞ்சி சில ஒழுக்கங்களுக்குட்பட்டுப்

போகுமாறெல்லாம் என்னை உயிர்ப்பித்தபடி

சுழித்தோடும் நதியாக தாகம் தீர்த்து

கரையோரங்களில் பூவாய்ப் பூத்து

சோர்ந்துபோகாமல் தீர்ந்துபோகாமல் மனதை அறிவை

அவற்றின் அருவசேமிப்பையெல்லாம்

காவல்காத்தவாறு

கூடவே வரும் மொழியின் அருந்துணைக்கு

யாது கைம்மாறு செய்யலாகும்

ஏழை யென்னால்

காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி நிற்பதல்லால்…..

 

Series Navigationவேட்டை‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்