மொழிவது சுகம் அக்டோபர் 2019 – தக்கார் எச்சம் : காந்தி

ஒரு சிலரே   உலகம் எங்கும் அறியப்பட்டவர்கள். அமெரிக்கா – அபிரகாம் லிங்கன், இங்கிலாந்து – சர்ச்சில், சீனா – மாசேதுங், வியட்நாம் – ஹோசிமின், ரஷ்யா – லெனின், பிரான்சு – தெகோல் , கியூபா – காஸ்ட்ரோ, இஸ்ரேல் – கோல்டா மேயர், எகிப்து – நாஸர், இந்தியா – காந்தி எனப் பட்டியலை விரித்துக்கொண்டு போகலாம்.  ஒரு தலைவர் உலகம் எங்கும் அறியப்படுவது என்பது வேறு கொண்டாடப்படுவது என்பது வேறு.

ஒரு தலைவரின் பெருமையும் புகழும்  அவர் மறைவிற்குப் பிறகு யார் அவர்களைக் கொண்டாடுகிறார்கள் என்பதைப்  பொறுத்தது.   நமக்குப் பிரச்சினை,  தலைவர்கள் அல்ல அவரை அடுத்து வருகின்றவர்கள்   

முன் வரிசையில் காத்துநிற்கும் இந்தக் அபிமானிகள் கூட்டத்தில்   கழுகுகளாக சில சாமர்த்தியசாலிகள் உண்டு . இவர்களுக்கு நோக்கம் தலைவர்களின் கொள்கையைக் கட்டிக் காப்பதல்ல, இறந்த தலைவர் விட்டுச்சென்ற அட்சயபாத்திரத்தின் ஓட்டை உடைசலைத் தட்டி ஈயம் பூசுவது. மறைந்த தலைவர் ஈட்டிய புகழை, தங்கள் வளர்ச்சிக்கு மடை திறந்து விடுவது.  தலைவரை முன்நிறுத்தி வளர்ந்ததும், ஒரு சில ஆண்டுகளில் இறந்த தலைவர் நிழல்  இவர்கள் நிஜம் என்பது எதார்த்தம். உண்மையில்  தலைமைக்கும் கொள்கைக்கும்  அபாயமாக இருப்பது  இந்த சாமர்த்தியசாலிகளே.

இத்தலைவர்களில் ஒரு சிலரை அவர்கள் பிறந்து கோலோச்சிய நாடுகளில்  தேசப்பிதா என  கொண்டாடுகின்றனர்,  வேறு சிலருக்குத் தங்கள் பிறந்த நாடுகள் அல்லாது பிற இடங்களில் அத்தலைவரின் கொள்கை வழி நடப்பதாக கூறிகொள்கிறவர்கள் சடங்காக அவரை நினைவு கூர்வதுண்டு.

         ஒரு தலைவரை அவர் பிறந்த நாட்டின் எல்லை கடந்து, மொழிகடந்து, நிறம் கடந்து, சமயம் கடந்து   எவ்வித நெருக்கடியும் இல்லாத நிலையில் உலகமக்களில் ஒரு பகுதியினர்ஒவ்வொரு நாளும்  நினைவு கூர்கின்றனர், ஆராதிக்கின்றனர்  என்கிறபோது அவர் அசாதரண தலைவர் ஆகிறார்.  பிரான்சு நாட்டில் நான் வசிக்கிற ஸ்ட்ராஸ்பூர் உட்பட மூன்று நகரங்களில் (இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்குமே அன்றி குறைவாக இருக்க வாய்ப்பில்லை. )  அரசின் பங்களிப்புடன் காந்தி சிலைகள். முச்சந்தியை அடைக்க அன்றி உண்மையான அக்கறையுடன் நிறுவப்படுள்ளன.  எங்கள் நகரில்  உள்ள ‘Café Philo’ விலும் ‘Espace Culturel des Bateliers என்கிற அமைப்பின் தத்துவ கலந்துரையாடல்களிலும் , வருடந்தோறும் காந்திய சிந்தனைகள் குறித்து பேசப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன. அமைதி குறித்த அரங்குகளில் ஐநா சபை தொடங்கி பிரான்சு பாராளுமன்றம்வரை அவப்போது  காந்தி  என்கிற மூன்று எழுத்து ஒலிக்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா முதல் இந்நாள் பிரெஞ்சு அதிபர் மக்ரோன்வரை காந்தி பெயரை உச்சரிப்பதைச் செய்திகளில் கேட்கிறேன்.  

நெல்சன் மண்டேலாவின் சுயசரிதையையும்,  மார்ட்டின் லூதர் கிங்கின் சுயசரிதையையும் காந்தி என்கிற பெயரின்றி வாசிக்க இயலாது என்பது வரலாறு தரும் உண்மை. இந்த தலைவர்கள் காந்தியைத் தங்கள் பிழைப்புக்காக கொண்டாடியவர்கள் அல்ல. எங்கோ பிறந்த ஒரு தலவைனை சாதிய விடுதலை, சமய விடுதலை, வர்க்க விடுதலை என்ற முழக்கமின்றி தங்கள் இன விடுதலைக்கு முன்னோடியாக கொண்டு  நேசித்த அபிமானிகள். அவர் தக்கார் என்பதை உலக ரங்கில் எண்பிக்கும் எச்சங்கள்.

காந்தி குறைகளற்ற மனிதரா ?  அப்படி யாராவது  ஒருவர் உலகில் உண்டென்றால் சொல்லுங்கள். ஆனால் உலகில் பண்பட்ட மனிதர்கள் என நம்பப்படுகிற  ரொமான் ரொலான் முதல்  மகாகவி பாரதிவரை பல மகான்கள் அவரை போற்றுகிறார்கள். வேறென்ன வேண்டும் ?

———————————————————–

Series Navigationகனவின் மெய்ப்பாடுநீக்கமற….