மொழிவது சுகம் 25 நவம்பர் 2017 : அ. பொறுமைக் கல் -அதிக் ரஹ்மி ஆ. என் கடன் உயிரை வதைப்பதே !

This entry is part 10 of 11 in the series 26 நவம்பர் 2017

Pierre de patience

. பொறுமைக் கல்  –அதிக் ரஹ்மி

ஆப்கானிய நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பிரெஞ்சுக் குடியுரிமைப்பெற்ற எழுத்தாளர் அதிக் ரஹ்மி (Atiq Rahimi )  என்பவரின் நாவல் Syngué  Sabour. இப்பெயர் அரபுப் பெயராக இருக்கலாம். பிரெஞ்சு மொழியில் Pierre de Patience  என்று நாவலுக்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. எளிமையான கதை அல்லது உண்மை. பொய்களை உரைப்பது கடினமான  வேலை. பிறரைக் கவர்ருவதற்கென  நகாசு வேலைகள் வேண்டும். பேன்ஸி ஸ்டோர் கூட்ட த்தை அள்ள பொன்மூலாம் பூசவேண்டும். ஆனால் உண்மையைச் சொல்வது, முகத்திற்கு மஞ்சள் இடுவதுபோல. தரிசித்த முகம் வீடுவரை நம்மோடு வரும், அதிகாலை இளங்காற்றுபோல மனதை ஸ்பரிசிக்கும். அதிக் ரஹ்மி  திரைப்படக் கலைஞன், எனவே ஒவ்வொருக் காட்சியையும், காமெராவின் கோணத்திற்கேற்ப அமைத்துக்கொண்டு நகர்த்துகிறார்.

ஆப்கான் யுத்தம் ஆண்டுகள் பலவாக தொடருவதை அறிவோம்.   சொந்தக் கவலைகளை மறக்க, அண்டை வீட்டானின் பிரச்சினை உதவுவதும் புதிதல்ல. பக்கத்து வீட்டுக்  குழாயிலும் தண்ணீர் வரவில்லை என்ற செய்தியில்தான் தற்காலிக நிவாரணம் கிடைக்கிறது.  ஆப்கான் போன்ற  நாடுகளில் அதிபர் உட்பட எல்லா வீடுகளிளும் பிரச்சினை. அண்டைவீட்டுப் பிரச்சினை மட்டுமல்ல  என் வீட்டுப் பிரச்சினையுங்க்கூட என  அம்மண்ணிற் பிறந்த  அதிக் ரஹ்மி எழுதியிருக்கிறார். அண்டைவீட்டில், எதிர்த்தவீட்டில் மட்டுமல்ல தன்வீடும் எழவு வீடுதான் எனச் சொல்கிறார் ஆசிரியர்.

ஆப்கானின் தீராப்பிரச்சினையான உள் நாட்டுப்போரில் ஒரு பிரினருக்கு ஆதரவாக போரில் இறங்கி  குண்டடிப்பட்டுக் கோமாவில் கிடக்கும் கணவனிடம், மனைவி  வீட்டையும் நாட்டையும் நிர்மூலமாக்கும் பணியை ஓயாது தொடரும் மனிதர்களை, அவர்களின் அறங்களை, இரக்கமற்ற வாழ்க்கை முறையை,  அதன் விளைவுகளை தனக்கமைந்த வாழ்க்கை அடிப்படையில் ஊரை எரிக்காமல், மனிதர்களை எரிக்காமல் வார்த்தை குண்டுகளால் துளைத்தெடுக்கிறாள். அர்த்தமற்ற சகோதரப்போரில் படுகாயமுற்று சவம்போல வீட்டில் கிடக்கும் கணவனையும்,பிள்ளைகளையும் காப்பாற்ற சோரம் போகும் பெண்மணி விரக்தியின் உச்சத்தில் சமூகத்தையும் மனிதர்களையும்  கடுமையாக விமர்சிக்கிறாள். கணவனை ‘பொறுமைக் கல்லாக’  பாவித்து அக்கல்லிடம்  ஒளிவு மறைவின்றி அனைத்தையும் கோபத்துடன் கொட்டுகிறாள். ஆப்கானிய சமூகத்தில் குடும்பம், பெண்களின் நிலைமை, பெண்களிடம் மட்டும் கன்னித் தன்மையை எதிர்பார்க்கும் ஆண் வர்க்கமென பராசக்தி வசனமொழியில் கதை சொல்லபட்டிருக்கிறது.

« மனிதரின்  நெற்றியில் திரவம் சொட்டு சொட்டாக விழுகிறது. சுருக்கங்களின் மடிப்பில் விழுந்தோடிய திரவம் சில நொடிகளுக்குப் பிறகு மூக்கின் தொடக்கத்திற்குத் தமது திசையை மாற்றிக்கொண்டு அங்கிருந்து கண் வட்டத்திற்குள் பரவி, பின்னர் கன்னத்தை வருடுவதுபோல ஓடி கனத்த அவருடைய மீசையில் முடிந்தது.

உறங்கப்போகும் சூரியன்

விழித்துக் கொள்ளும் மனிதரினம்

 

இன்றிரவும் அழிவுகள் தொடரும் !

இன்றிரவும் உயிர்ப்பலி தொடரும் !

 

காலையில் மழை பொழியும்

நேற்றைபோலவே

நகரமும் இடிபாடுகளும்

மழையில்  நனையும் !

காயங்களையும்

செத்த உடல்களையும்

மழை  நீர் கழுவும் ! »

 

பிரான்சு நாட்டின் கொன்க்கூர் இலக்கிய பரிசை (2008) வென்ற நாவல்.

 

ஆ என் கடன் உயிரை வதைப்பதே !

மனிதர் வாழ்க்கையில் கடன்படுவது இயற்கை. உலக மொழிகள் அனைத்திலும் கடன் என்ற சொல் இருக்கிறது.  ‘காதலன்’(l’amant) என்ற சுயபுனைவு  நாவலில் மார்க்கெரித் துராஸ் என்ற பிரெஞ்சு பெண் எழுத்தாளர், இந்தோ சீனாவில் பிரெஞ்சு கிழக்கிந்திய  நிறுவன ஊழியர்களுக்கு கடன் கொடுத்த செட்டியார்கள், அதிகாலையிலேயே வீட்டிற்கு வந்து,  எவ்வளவு சாக்குப்போக்குகள் சொன்னாலும் நம்பாமல், வட்டியைப் பெற்றபின்பே செல்வார்களென  குறிபிட்டிருப்பார்.

ஒருவரிடமிருந்து பெற்ற ஒரு பொருள், திரும்ப அவரிடம் ஒப்படைக்கப்படும்  என்ற உறுதியின்பேரிலும், நம்பிக்கையின் அடிப்படையிலும் இன்னொருவரிடம் கொடுக்கப் படுகிறது. அந்த இன்னொருவர் வாங்கியப் பொருளைத் திருப்பித் தரும்வரை கடனாளி. அன்றாட வாழ்க்கையில் விதவிதமான கடன் பரிமாற்றங்களைச் சந்திக்கிறோம்.  « கடைக்குப் போகலை, இரண்டு கரண்டி காப்பித்தூள் கொடுங்க, நாளைக்குத் திருப்பித் தரேன்(மாதத்தில் இருபது நாட்கள் இப்படி இரவல் வாங்கியே சிக்கனமாக குடும்பம்  நட த்தும் பெண்கள் இருக்கிறார்கள் எனப் பெருமைப் படாதீர்கள், எனக்குத் தெரிந்த அப்படியொரு பெண்மணி, மாதத்திற்கு பத்து சினிமாக்கள் பார்ப்பார்) » ; « அடட இந்தப் புத்தகம் உங்க கிட்ட இருக்கா ?» எனக்கேட்டு புத்தகத்தை இரவல் வாங்கிச் செல்பவர்கள், « பெயிண்ட் கடைக்கு வந்தேன் 5 ரூபாய் குறையுதுங்கிறான், கைமாத்தா கொடுங்க, நீங்க ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு வரும்போது,கொடுத்திடுவேன்! » இப்படி கடன் களுக்கு பல முகங்கள் இருக்கின்றன. இதற்கு வராக் கடன் என்று பெயர்.

இந்த வராக்கடன் பட்டியலில், வேறு சிலகாரணங்களை முன்னிட்டு பெரிய அளவில் பரிமாற்றம் செய்யப்படும் கடன்களும் இருக்கின்றன. உலக வங்கிக் கடன்கள், பன்னாட்டு  நிதி  நிறுவனத்தின் கடன்கள் , முன்னாள் இந்தியன்வங்கி மேலாளர் பாணியிலான கடன்கள், மல்லையாக்களுக்கு அளிக்கப்படும் கடன் களும் உள்ளன. இவை திரும்பவராதென கொடுப்பவருக்கும், திருப்பித் தரவேண்டிய அவசியமில்லையென வாங்கியவருக்கும் தெரியும்.

கடன் தரும் பொருள் எந்த வடிவத்திலும் இருக்கலாம். இக்டன் பணமாகவோ, பொருளாகவோ பரிமாற்றத்திற்கு உள்ளாகிறபோதுதான் பிரச்சினை. ஆனால் இவற்றையும் திரும்பத் தர உத்தேசமின்றி, மறந்த துபோல பாவனை செய்யும் மனிதர்களுக்கு சிக்கல்களில்லை. கடன்பெற்றவர் மானமுள்ள மனிதராக இருந்தால் தான் பிரச்சினை. வங்கித் தொழில்,  கடன் வர்த்தகம் போன்றவை இவர்களை நம்பியே இருக்கிறது.  கடன் பெற்ற பணத்தைத் திட்டமிட்ட பொருளியல் நடவடிக்கையில் முதலீடு செய்து தானும் பயன்பெற்று, வங்கிகள், நிதி  நிறுவனங்களை முடக்காமல் தம்மைப்போன்று பிறரும் பயனடையச் செய்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால்  நம்மில் பலருக்கு  எந்தவித திட்டமிடலும் கிடையாது. இத்தகைய மனிதர்கள்  கொஞ்சம் யோசித்து செயல்பட்டாலே கடன் தொல்லையிலிருந்து மீள்வது எளிது. கடன் கொடுத்த மனிதர்களை முழுக்கக் குற்றம் சாட்டுவதில்  நியாயமுமில்லை. கடன் கேட்கும் போதே இந்த முறைசாரா கடன் தொழிலில் உள்ள ஆபத்தை உணரவேண்டும்.

கடன் பிரச்சினையில் தவிப்பவர்களில் பெரும்பாலோர் கீழ்க்கண்டவையினர்தான் :

  1. 500 ரூபாய் சம்பாத்தியத்தில் 300 ரூபாயைக் குடித்து அழிப்பவர்கள்,
  2. வண்ணாரப்பேட்டையில் ரவுடியிஸம் பண்ணும் கதா நாயகன், டூயட் பாட லாஸ் வேகாஸ் போகவேண்டும் என்கிற இயக்குனரின் அறிவுபூர்வமான யோசனையை,அப்படியே ஏற்கும் தயாரிப்பாளர்,
  3. ஆழ்கிணறுக்கென கூட்டுறவு வங்கியில் பெற்ற கடனில் சூப்பர்வைசருக்கு, கடன் தரும் கோப்பைக் கவனிக்கிற கிளார்க் இவர்களுக்குப் பங்களித்ததுபோக இருக்கின்ற தொகையில் பெண்ணுடைய கல்யாணத்தையோ, மஞ்சள்  நீரையோ  நடத்தும் விவசாயி,
  4. கவர்மெண்ட் ஆஸ்பத்திரி வேண்டாம் பிரைவேட் ஆஸ்பத்திரியிலதான் நல்லாபார்பாங்க, கவர்மெண்ட் பள்ளிக்கூடம் வேணாம் அந்தக் கான்வெட்டுல தான், அந்த காலேஜுலதான் பிள்ளை படிக்கனுமென்று தங்கள் வருவாய் பற்றிய புரிதலின்றி இறங்குகிறவர்கள்.
  5. கடன் வாங்கிய பணத்தில் சபரிமலைக்குப் போகிறவர்கள்.
  6. மொய் வந்த தும் திருப்பிடுவேன், என பிள்ளைக்கோ பெண்ணுக்கோ தங்கள் நிலமைக்கு மீறி ஆடம்பரமாகச் திருமணம் செய்து வைப்பவர்கள்.
  7. அரசியல்வாதிகள், அரசு அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள், காவல் துறையினர் இவர்களில் பெரும்பாலோர் பணைத்தை அளவிடாமல் செலவழிப்பதற்குக் காரணம் இருக்கிறது, அவர்களின் வருவாய் அப்படி. அத்தகையோரின் வாழ்க்கையை அண்டைவீட்டிலும் எதிர்வீட்டிலும் காண்கிற மனிதர்களில்  ஒரு சிலருக்கு அவர்களைப்போலவே  பணத்தை எளிதாகச் சம்பாதிக்க கிடைக்கும் உபாயம், எதிர்ப்படும் நபரிடமெல்லாம் கடன் வாங்குவது.

1998ல்  நோபெல் பரிசுபெற்ற அமர்த்யா சென் வெளி  நாட்டைசேர்ந்தவர் இல்லை, இந்தியர்.  சிறு கடன் பிரச்சினைகளுக்கு, வறுமைக்கு எளிதான பல தீர்வுகளை உழைக்கும் மக்களுக்கென கைவசம் வைத்திருக்கும் அறிஞர்.  சமூகவியல், பொருளியல் இரண்டிலும் தேர்ந்தவர். அசோக்குமார் போன்றவர்களின் பிரச்சினைக்கு  தீர்வு கிடைக்குமா என்று தெரியாது ஆனால் தினக்கூலி கடனாளியைக் கந்துவட்டியிலிருந்துக் காப்பாற்ற அவரால் முடியும்

————————————-

Series Navigationவாட்ஸ் அப் வாழ்வியல்…!தொடுவானம் 197. திருப்தியான திருப்பத்தூர்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *