மொழி பெயர்ப்பு கவிதைகள் ஜிசினா மெல்ப் [ Gcina Mhlophe ]

மொழிபெயர்ப்பு  :

மூலம்    : ஜிசினா மெல்ப் [ Gcina Mhlophe ]

தமிழில்   : தி.இரா.மீனா

       சில சமயங்களில் மழை பெய்யும்போது

இளம்பருவத்தில்  தனிமையிலிருக்கும்  போது

மனிதர்களுக்கு ஏன் ஆடை வேண்டுமென்று  வியப்படைந்த

தருணங்களை நினைத்து,

சில சமயங்களில் மழை பெய்யும் போது

எனக்குள் நான் சிரித்துக் கொள்கிறேன்.

எப்போது நான் பெரியவனாவேன்

நாளை நான் பெரியவனாவேன்’

என்று கத்திக் கொண்டே

மழையில் ஓடிய நேரங்களை

சில சமயங்களில் மழை பெய்யும்போது

நினைத்துக் கொள்கிறேன்.

சில சமயங்களில் மழை பெய்யும் போது

ஆடுகள் மழையிலிருந்து விலகி வேகமாக ஓடுவதும் 

செம்மறியாடுகள் மழையை ரசித்தபடி இருப்பதையும் 

நான் கவனித்த காலங்கள் நினவுக்கு வரும்.

சில சமயங்களில் மழை பெய்யும்போது

பள்ளி முடிந்த பிறகு ஆடைகளைக் களைந்து

புத்தகங்களையும் சீருடையையும் சிறு கட்டாக்கித்

எங்கள் தலையில் வைத்துக் கொண்டு ஆற்றைக் கடந்த

காலங்களை நினைத்துக் கொள்கிறேன்.

ஒன்றிரண்டு நாட்களுக்கு நாங்கள்

ஆற்று நீரைத் தேடிப் போகவேண்டாதபடி

கடுமையாகத் தொடர்ந்து மழை பெய்யும் போது

எங்கள் உருளைகள் நிறைந்திருக்கும் காலங்களை

மழை பெய்யும்போது நான் நினைத்துக் கொள்கிறேன்.

இடையீடின்றி மணிக்கணக்கில்

மழை கொட்டுகிற போது

தங்களுக்கென்று இருப்பிடமின்றி

போக இடமெதுவுமில்லாமல் 

சாப்பிட எதுவுமின்றி

மழைநீரை மட்டுமே பருகும்

மக்களை நினைத்துக் கொள்வேன்,

சில சமயங்களில் மழை பெய்யும்போது.

இடைவிடாமல் சில நாட்கள் மழை பெய்யும்போது

முகாம்களில் பிளாஸ்டிக் கூரைகளின் கீழ்

குழந்தைகளை ஈன்ற தாயரை

நினைத்துக் கொள்கிறேன்,

சில சமயங்களில் மழை பெய்யும்போது.

சில சமயங்களில் மழை பெய்யும்போது

பெரிய நகரங்களில்

சட்டத்திற்குப் புறம்பாக வேலை செய்பவர்கள்

மழையில் காவல் வண்டிகளை ஏமாற்றி

இருட்டு வரக் காத்திருந்து,

ஒளிய ஈரச்சந்துகள் தேடுவதை நினைத்துக் கொள்கிறேன்.

சில சமயங்களில் மழை பெய்யும்போது

கடினமான பனிக்கட்டியும் கலந்துவிட

உலகெங்கிலும் ஆயுள் தண்டணைக்குள்ளான கைதிகள்

மழைக்குப் பின்னால் வரும் வானவில்லை

இன்னமும் விரும்புவார்களா

என்று நினைத்துக் கொள்வேன்.

சில சமயங்களில் மழை நேரத்தில்

ஆலங்கட்டிகள் புல்லைக் கவ்வும்போது

அவை பற்கள் போலிருப்பதை,

சிரிக்கும் நண்பர்களின் பற்களை நினைவூட்டுவதை

என்னால் மறுக்க முடியாது.

ஒவ்வொருவருக்கும் சிரிப்பதற்கு எதுவோ இருக்கிறது

என்று நம்புகிறேன்.

***

             வெற்றிக்கான படைக்கலன்

என் இளமைக் காலங்களில்

நான் கனவு கண்டேன் பெரிதாகக் கனவு கண்டேன்

ஆனால் இறைவன் எனக்கென என்ன திட்டமிட்டிருக்கிறான்

என்பது தெரியவில்லை.

சில நேரங்களில் கடுமையான பொழுதுகள் 

அதிக காலம் நீடிப்பதாகத் தெரிந்தது.

ஆனால் மீண்டும் நான் மகிழ்வான மனதோடு பிறந்தேன்.

அதனால் சிரிப்பு என் மனதை விட்டு நீங்கவேயில்லை

நம்பிக்கை எப்போதும் என் நடைத்துணை குச்சியாக இருக்கிறது.

“சேவல் கூவாவிடினும் வைகறை வரும் ’ என

என் மக்கள் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

நான் வளரக் காரணமான மதிப்புகள்

என் வாழ்க்கைக்கு வடிவமும் வழிகாட்டியுமாய் இருக்கின்றன.

என் பெற்றோர் வெற்றிக்கான படைக்கலனாக 

என்னை உருவாக்க முயன்றனர் என்பது

நான் இளமையாயிருந்த நாளில் எனக்குத் தெரியவில்லை.

கடுமையான உழைப்பு மற்றும் மரியாதை ,

கதவுகளை நமக்குத் திறக்கின்றன

என்று எனக்கு இப்போது தெரிகிறது.

அவை இருக்கின்றன என்பது கூட நமக்குத் தெரிந்திருக்கவில்லை

சிறந்த கல்வியால் கூட அதைத் தரமுடிவதில்லை.

நமக்கு அறிகிற வேட்கை இருக்கிறவரை

பிரபஞ்சம் நமக்கு கற்றுத் தரும்.

பெறுவதற்கான வேட்கை நமக்கிருக்கும் வரை

வாழ்க்கையின் பரிசுகள் நம்மைத் தேடிவரும்.

நன்றி : Poetry International Archives

Series Navigationதோள்வலியும் தோளழகும் ( அனுமன்[ பகுதி1]அசோகமித்திரனின் புலிக்கலைஞனைப் முன் வைத்து..