யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–15

author
0 minutes, 35 seconds Read
This entry is part 13 of 14 in the series 7 மே 2017

 

பி.ஆர்.ஹரன்

நமது பாரத தேசத்துக் கலாச்சாரத்துடனும் ஆன்மிகப் பாரம்பரியத்துடனும் மிகவும் ஒன்றி இரண்டறக் கலந்துள்ளது யானை. வேத, இதிகாச, புராணங்களில் ஆரம்பித்து இன்றைய நவீன இலக்கியங்கள் வரை அனைத்திலும் யானைகள் பற்றிய குறிப்புகள் எராளமாகக் காணக் கிடைக்கின்றன.

ஹிந்து மதத்தில் எட்டு திசைகளையும் எட்டு யானைகள் பாதுகாப்பதாய் சொல்லப்படுகின்றது. அவைகளே அஷ்டதிக்கஜங்கள் என்று சொல்லப்படுகின்றன. கிழக்கு திசைக்கு ஐராவதம், தென்கிழக்கு திசைக்குப் புண்டரீகம், தெற்கு திசைக்கு வாமனம், தென்மேற்கு திசைக்கு குமுதம், மேற்கு திசைக்கு அஞ்சனம், வடமேற்கு திசைக்கு புஷ்பதந்தம், வடக்கு திசைக்கு சர்வபௌமம், வடகிழக்கு திசைக்கு சுப்ரதீபம் ஆகியவை.

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–15 - 1இதிகாசச் சான்றுகள்

 

ராமாயணத்தில் பல இடங்களில் யானைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. உதாரணத்துக்கு, ராமபிரான் சீதையுடனும் லக்ஷ்மணனுடனும் வனவாசம் கிளம்பிச் சென்ற பிறகு, அவர்களுடைய பிரிவினால் பெண்கள், குழந்தைகள் முதல் பசுக்கள், யானைகள் வரை அயோத்தி நகரமே துக்கத்தில் மூழ்கிவிடுவதாக வால்மீகி குறிப்பிடுகிறர்.

 

அதே போல, தசரதர் கௌசல்யாவிடம், தன்னுடைய இளம்பருவத்தில் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது, யானை தண்ணீர் குடிப்பதாக நினைத்து குடத்தில் நீர் முங்கிக்கொண்டிருந்த ரிஷி குமாரனை அம்பெய்து கொன்ற பாவச் செயலைத் துக்கம் மேலெழ விவரிப்பதாக வால்மீகி கூறுகிறார்.

 

மேலும், ராவணன் சீதையைக் கடத்தி வந்துச் சிறையில் அடைத்த பிறகு, அவனைச் சந்தித்துப் புத்திமதி கூறுவதற்காக விபீஷணன் செல்லும்போது, அவன் காணும் காட்சிகளை விவரித்து வரும் வால்மீகி, இலங்கையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் அபசகுனங்களை ராவணனுக்கு எடுத்துச் சொல்லும் விபீஷணன், யானைகள் சோர்ந்து காணப்படுவதையும் குறிப்பிடுவதாகச் சொல்கிறார்.

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–15 - 2

அருணகிரியார் தன்னுடைய திருப்புகழில் ராமாயணக் காவியத்தின் பல சம்பவங்களைக் குறிப்புகளாகக் கொடுத்து, இணைத்து ஒப்பீடும் செய்கிறார். அஷ்டதிக்கஜங்களால் (எட்டு யானைகளால்) தாக்கப்பட்டபோது, அவற்றை வெற்றிகொண்ட ராவணன் அவற்றின் தந்தங்கள் பதிந்த மார்பை உடையவனாக இருந்தான். ராமபிரானுடனான யுத்தத்தில் தோற்றபோது அத்தகைய மார்பையும் அவன் இழந்தான் என்று சொல்ல வருமிடத்தில் கம்பர் வாரணம் பொருத மார்பு என்று குறிப்பிடுகிறார். அவரைப் போலவே அருணகிரியாரும் வெய்ய வாரணம் போல் என்று ராவணனைக் குறிப்பிடுகிறார். அதாவது காமம் மிகும் போது யானைக்கு மதம் பிடிக்கும். வெய்ய வாரணம் என்றால் மதம் பிடித்த யானை என்று பொருள். சீதை மீது காமம் கொண்டவனாதலால் அவனை வெய்ய வாரணம் என்றார். மேலும், யானை என்றவுடன் அதன் துதிக்கை ஞாபகம் வருவதால், “வெய்ய வாரணம் போல் கைதான் இருபதுடையான்என்கிறார் அருணகிரியார்.

(http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=4264&Cat=3)

 

 

ராமாயணம் போலவே மஹாபாரதத்திலும் யானைகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கிருஷ்ணரைக் கொல்ல கம்ஸன் முயற்சி செய்த ஏனைய வழிகளில் குவாலயபீடம் என்னும் யானையை ஏவிவிடுவதும் ஒன்று. ஆனால் கிருஷ்ணர் அதைக் கொன்று விடுகிறார்.

 

மஹாபாரத யுத்தத்தில் துரோணரைச் செயலிழக்கச் செய்வதற்காக, அஸ்வத்தாமன் என்கிற யானையைப் பீமன் கொல்ல, அவர் மகன் அஸ்வத்தாமன் இறந்துவிட்டதாகச் சொல்கிறான் தருமன். மஹாபாரதப் போரில், காலாட்படைகள், குதிரைப்படைகள், தேர்ப்படைகள் போல யானைப்படைகளும் பங்கு பெற்றன.

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–15 - 3

பாஸன் என்கிற சம்ஸ்க்ருத நாடக ஆசிரியர் கர்ணபாரம் என்கிற காவியத்தை எழுதியுள்ளார். மஹாபாரத யுத்த சமயத்தில் கர்ணனின் மனதில் ஏற்படும் சஞ்சலங்களை விவரிக்கின்றது இக்காவியம். கவி காளிதாஸன் தன்னுடைய மாளவிகாக்னி மித்ரம் காவிய நாடகத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு, ‘பாஸன் போன்ற மஹா வித்வான்கள் அரங்கேற்றிய காவிய நாடகங்கள் முன்பு என்னுடைய நாடகக் காவியம் பிரசித்தி பெறுமா?’ என்று சந்தேகம் தெரிவித்தாராம். அந்த அளவுக்குக் கவித்திறன் படைத்தவர் பாஸன். அவர் தன்னுடைய  ‘கர்ணபாரம்’ காவிய நாடகத்தில் இரண்டு இடங்களில் யானைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

 

மஹாபாரதப் போர் ஆரம்பிப்பதற்கு முன்பாகத் தன் மகனான அர்ஜுனனுக்கு ஆதரவாகக் கர்ணனைப் பலவீனமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட இந்திரன், அந்தணர் வேடமணிந்து கர்ணனிடம் யாசகம் கேட்க வருகிறான். அப்போது அவனிடம், தன்னிடம் உள்ள அனைத்துவகைச் செல்வங்களையெல்லாம் பட்டியலிட்டு, எது வேண்டும் உனக்கு என்று கேட்கிறானாம் கர்ணன். அவ்வாறு பட்டியலிடும்போது, தன்னிடம் உள்ள பசுக்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டுவிட்டுப் பிறகுதான் பொன் மணிகளையும் பொருட்களையும் பட்டியலிடுகிறான். அவ்வாறு அவன் யானைகளைப் பரிசுகளாகத் தருவதாகச் சொல்லும்போது பின்வருமாறு சொல்லுவதாகக் கூறுகிறார் கவி பாஸன்:

அதாவது, மதநீரை அருவி போல் கொட்டக்கூடிய மஸ்தகத்தை உடையவையாகவும், இந்த மதநீருக்காகவே தன்னைச் சுற்றி வரும் வண்டுகளை உடையவையாகவும்,   சிறந்த மலையின் அடிவாரத்தைப் போன்ற பின்பகுதியை உடையவையாகவும், மேகங்களின் இடிச் சத்தத்திற்கு இணையாக பிளிறுபவையாகவும், வெண்மையான நகங்களையும், தந்தங்களையும் உடையவையாகவும், போரில் எதிரிகளை துவம்சம் பண்ணக்கூடியவையாகவும் உள்ள யானைகள் கூட்டங்களைத் தருகிறேன் என்கிறானாம் கர்ணன்.

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–15 - 4மற்றொரு இடத்தில், தன்னுடைய பராக்கிரமத்தைக் காண்பிப்பதற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த போருக்குச் செல்ல ஆயத்தமாகும் கர்ணன் மனதில் ஓர் சஞ்சலம் ஏற்படுகின்றது. முதலில் போரில் தனக்கு எதிராக ஈடுபட்டிருக்கும் பாண்டவர்கள் தன்னுடைய இளைய சகோதரர்கள் என்கிற எண்ணம் ஏற்படுகின்றது. அடுத்து தன் மாதாவான குந்தியின் வார்த்தைகளும் அவளுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியும் நினைவுக்கு வருகின்றது. உடனே அவன் மனதில் ஒரு விதமான விரக்தி ஏற்படுகின்றது. விரக்தி மேலிடத் தன் சாரதியான சல்லியனிடம், தான் அந்தணன் என்று பொய்சொல்லி நடித்துப் பரசுராமரிடம் வித்தைகள் பயின்றதால் அவருடைய சாபத்திற்கு உள்ளாகி அவரிடம் கற்ற அஸ்திரங்கள் தனக்குப் பயனில்லாமல் போகிவிட்டதைக் கூறி வருந்துகிறான். அவன் மேலும் தன் விரக்தியைப் பகிர்ந்துகொள்ளும்போது, “இந்தக் குதிரைகளும் கூட, ஏதோ பீதியில் கண்களை மூடி மூடி திறப்பவைகளாகவும், தடுக்கி விழுபவைகளாகவும், அவைகள் தன் வசத்தில் இல்லாதவைகளாகவும் இருக்கின்றன. வெகுதூரத்திற்கும் மணம் வீசக்கூடிய ஸப்தபர்ணா செடியின் இலைகளின் வாசனையைப் போல மணக்கும் மதஜலத்தைப் பொழியும் வலிமையான உறுதிமிக்க யானைகள் இந்தப் போருக்குச் செல்லவேண்டாம் என்று தெரிவிப்பது போல இருக்கின்றன என்கிறானாம் கர்ணன்.

 

சாஸ்திரங்களில் யானைகள்

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–15 - 5கஜ சாஸ்திரம் என்றே ஒரு சாஸ்திரம் உள்ளது. பசு சாஸ்திரம், பட்சி சாஸ்திரம், அஸ்வ (குதிரை) சாஸ்திரம் போல, இது யானைகளுக்கான சாஸ்திரமாகும். இது யானைகளின் வகைகள், குணாதிசயங்கள் பற்றி விளக்கமாகக் கூறுகிறது. மேலும், யானைகளுக்கு ஏற்படும் நோய்கள், அவற்றுக்கு நிவாரணமாக அளிக்கப்படும் மரபுவழி சிகிச்சைகள், அந்தச் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படும் மூலிகைகள் ஆகிய தகவல்களையும் அளிக்கின்றது. இந்த கஜ சாஸ்திரம் எனும் நூல், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ளது.

 

ஜோதிட சாஸ்திரம் எனப்படும் ஜோதிடக்கலை பற்றி விளக்கும் நூலிலும் யானைகள் பற்றிக் குறிப்பு உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தில் கஜகேசரி யோகம் என்று ஒரு யோகம் குறிப்பிடப்பட்டுள்ளது. கஜம் (யானை) போன்ற கம்பீரத் தோற்றமும் கேசரி (சிம்மம்) கொண்டிருக்கும் பலமும் கொடுக்கக்கூடிய யோகம் கஜகேசரி யோகம் என்று வழங்கப்படுகின்றது. ஒருவருடைய ஜாதகத்தில் குரு பகவானும் சந்திரனும் 1, 4, 7, 10 ஆகிய கேந்திர வீடுகளில் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும் என்று கூறப்படுகின்றது. இந்த யோகம் பெயரும், புகழும், செல்வமும், செல்வாக்கும், கீர்த்தியும், கௌரவமும் கொடுக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

 

காப்பியச் சான்றுகள்

பகவான் புத்தரைக் கொல்ல தேவதத்தர் நாளாகிரி என்கிற மதயானையை ஏவிவிட்டதாகவும், அந்த மதம் கொண்ட யானையைப் புத்தர் தன் பார்வையாலேயே அடக்கியதாகவும் புத்தரின் வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது.

ஐங்குறுங்காப்பியங்களுள் ஒன்றான பெருங்கதை என்னும் இலக்கிய நூல் கௌசாம்பி நாட்டு மன்னன் உதயணன் கதையைக் கூறுகின்றது. உதயணன் யாழ் மீட்டி அதன் இசையால் யானைகளைக் கட்டுப்படுத்துவதில் வல்லவனாகத் திகழ்ந்தான் என்று அந்நூல் குறிப்பிடுகின்றது.

சைவக்குரவர்களுள் ஒருவரான அப்பர் பெருமானைக் கொல்ல மகேந்திர வர்மப் பல்லவன் யானையை ஏவிவிட்ட வரலாறும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமண சமயத்தைத் தழுவியிருந்த மகேந்திரவர்மன், சமண குருமார்களின் ஆலோசனைப்படி அப்பர் பெருமானைக் கொல்லப் பலவழிகளில் முயற்சி செய்தும் அவனால் முடியவில்லை. சிவமெருமானின் பரிபூரண அருளினால் அப்பர் அவனுடைய அனைத்து முயற்சிகளையும் வெற்றிகொள்கிறார். கடைசியாக அவரைக்கொல்ல அவன் யானையை ஏவிவிட, அந்த யானையானது அப்பர் பெருமானிடம் வந்ததும் அவர் முன்னே மண்டியிட்டு அவரை நமஸ்கரித்து நின்றது. அதனையடுத்து, அப்பர் பெருமானின் சக்தியையும், சைவ சமயத்தின் பெருமையையும் புரிந்துகொண்ட மகேந்திரவர்மனும் சைவ சமயத்தைத் தழுவி அவருடைய அனுக்கிரகத்தைப் பெறுகிறான். இச்சம்பவத்தைச் சேக்கிழார் பெரியபுராணத்தில் பதிவு செய்கிறார்.

 

வரலாற்றுச் சான்றுகள்

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–15 - 6கிரேக்க மன்னன் அலெக்ஸண்டரை எதிர்த்து நின்று அவனுக்குத் தோல்வியின் அறிமுகத்தைத்தந்த பாரத மன்னன் புருஷோத்தமன் மாபெரும் யானைப் படையை வைத்திருந்தான். அந்தப் படையை வெற்றிகொள்ள முடியாமல் அலெக்ஸாண்டர் தவித்தான் என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. புருஷோத்தமனைப் போலவே சந்திர குப்த மௌரியனும் யானைப்படையை வைத்திருந்தான். அவன் படையில் 9000 போர்யானைகள் இருந்ததாக கிரேக்க யாத்ரிகர் மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார்.

சந்திரகுப்தனின் குருவான கௌடில்யர் என்கிற சாணக்கியர் தான் எழுதிய அர்த்த சாஸ்திரம் என்னும் நூலில் போர் முறைகளைப் பற்றியும் போர் தந்திரங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறார். மஹாபாரதத்தில் நடந்தது போலவே, போர் புரியும்போது எவ்வகையான வியூகங்களை அமைக்க வேண்டும் என்றெல்லாம் அந்நூலில் எழுதியுள்ளார். அவ்வாறு போர் முறைகளைப் பற்றி எழுதும்போது, எதிரிப்படைகளைத் துவம்சம் செய்யக்கூடிய யானைப்படையின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பெரிதும் குறிப்பிடுகிறார். போரில் ஒரு மன்னனின் வெற்றி அவனுடைய யானைப் படையையே பெரிதும் சார்ந்துள்ளது என்று குறிப்பிடுகிறார். மேலும் யானையைக் கொல்பவனுக்கு மரண தண்டனை பரிந்துரைக்கிறது அர்த்த சாஸ்திரம்.

மாமன்னர் ஹர்ஷவர்த்தனர் காலத்தில் பாரதத்திற்கு வந்த சீன யாத்ரிகர் ஹியூன் சாங் ஹர்ஷரின் யானைப்படையைப் பற்றி மிகவும் பாராட்டிக் குறிப்பிட்டுள்ளார். ஹர்ஷரின் வாழ்க்கை வரலாற்றை ஹர்ஷ சரிதம் என்கிற பெயரில் நூலாக எழுதிய பாணபட்டர், ஹர்ஷர் தன்னுடைய யானைப்படையில் உள்ள யானைகளின் எண்ணிக்கைக் குறையாமல் பார்த்துக்கொண்டார் என்றும், தன் படையில் சேர்ப்பதற்காக யானைகளைப் பலவிதங்களின் சேகரித்துக்கொண்டு வந்தார் என்றும் குறிப்பிடுகிறார். காடுகளிலிருந்தும், பரிசுகளாகப் பெற்றும், அபராதங்களாக விதித்தும், எதிரி நாடுகளை வென்று அங்கிருந்தும் கொண்டு வந்தார் என்று குறிப்பிடுகிறார்.

சீன யாத்ரிகர் ஹியூன் சாங் தென்னகத்தை ஆண்ட சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியின் ராஜ்ஜியத்துக்கும் வருகை புரிந்தபோது, அவனும் யானைப்படையை வைத்திருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

 

பாரதத்தின் மீது படையெடுத்த அரேபிய, துருக்கிய, ஆஃப்கானிய, மங்கோலிய, முகலாயப் படைகளுடன் போரிட்ட பாரத மன்னர்கள் பலரும் யானைப்படையைப் பெரிதும் பயன்படுத்தியுள்ளதும் வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. பெஷாவர் போர், பானிபட் போர் போன்ற போர்களில் ஆயிரக்கணக்கான யானைகள் கொல்லப்பட்டுள்ளன. பாரதத்திலேயே ஆட்சி புரியத்தொடங்கிய முகலாய மன்னர்களும் ஹிந்து மன்னர்களைப் போலவே யானைப்படைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினர். பாரதத்தில் தங்காமல் இருந்த கஜினி முகம்மதுவே 2500 யானைகள் வைத்திருந்தான் என்கிற குறிப்பு வரலாற்றில் உள்ளது. அலாவுத்தின் கில்ஜி ஆயிரக்கணக்கான யானைகளை வைத்திருந்தான். தில்லியை ஆண்ட இப்ரஹிம் லோதி 1000 யானைகளை வைத்திருந்ததாகபாபர் நாமாகுறிப்பிடுகிறது. பாபருக்கு எதிரான போரில் ராஜபுத்திரர்களும் யானைப்படையைப் பயன்படுத்தியுள்ளனர்.

அஃப்ஸல்கானைக் கொன்று பீஜப்பூரைக் கைப்பற்றிய மராட்டிய மன்னர் சத்திரபதி சிவாஜி 4000 குதிரைகள், 1200 ஒட்டகங்களுடன் 65 யானைகளையும் சிறைப்பிடித்ததாக வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது.   .

 

தமிழ் மன்னர்கள் வரலாற்றுச் சான்றுகள் 

 

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் - 15-7தமிழக மன்னர்களும் பெரும் யானைப்படைகளை வைத்திருந்தனர். சோழ மன்னர்கள் யானைகளுக்குப் பயிற்சி கொடுக்கத் தனியிடங்களை ஏற்பாடு செய்திருந்தனர். “சோழ அரசு 60,000 போர் யானைகளை வைத்திருந்தது. யானையின் முதுகில் அம்பாரிவீடுகளிலிருந்து வீரர்கள் விற்கள் ஏந்தி அவற்றின் வழியாக அம்புகள் எய்து தொலைவில் உள்ள எதிரிகளைக் கொன்றனர். அதே போல யானைகளின் மீதமர்ந்து ஈட்டிகள் ஏந்தியும் போரிட்டனர். ஈட்டிகளை எய்து அருகில் வரும் எதிரிகளைக் கொன்றனர். போரில் வெற்றி பெற்ற யானைகளுக்குப் பட்டங்களும் விருதுகளும் கொடுக்கப்பட்டன” என்று சீன யாத்ரிகர்கள் வரலாற்றில் குறித்துள்ளனர். மன்னன் கிருஷ்ணராஜன் தலைமையிலான இராட்டிரகூடர்களுக்கும் ராஜதித்ய சோழன் தலைமையிலான சோழர்களுக்கும் நடந்த பெரும் யுத்தத்தில் யானைமேல் அமர்ந்து போரிட்டு வீரமரணம் அடைந்த ராஜாதித்யர்யானை மேல் துஞ்சிய தேவர்என்று போற்றப்பட்டது வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது.   

 

 

கோவில் சம்பிரதாயங்களில் யானைகள்

 

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் - 15-8கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கொடுஞ்சிறாப்பள்ளி என்று ஓர் ஊர்  இருக்கிறது. இது லக்ஷ்மி நாராயண புரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கே ஒரு அக்ரஹாரம் உள்ளது. ஒவ்வொரு பக்கமும் 92 வீடுகள் கொண்டது. அவை மட்டுமில்லாமல், அந்த அக்ரஹாரத்தின் பின் பக்கம் மேலும் 32 வீடுகள் உண்டு. இந்த அக்ரஹாரத்தை நிறுவியவர் சேர மன்னர் மார்த்தாண்ட வர்மா. இந்த அக்ரஹாரத்தின் மேற்குப்பக்கம் கோபாலகிருஷ்ண ஸ்வாமிக்கும், தெற்குப்பக்கம் சுப்ரமண்யஸ்வாமிக்கும் ஆலயங்கள் இருக்கின்றன. கோபாலகிருஷ்ண ஸ்வாமிக்கு சித்திரை மாதமும் வைகுண்ட ஏகாதசி சமயத்திலும் தேர் திருவிழாக்கள் நடக்கும். அதே போல சுப்ரமண்யஸ்வாமி கோவிலில் தைப்பூசம் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும். மேலும் அருகே உள்ள கல்பாத்தி விஸ்வநாதஸ்வாமி கோவில், மந்தக்கரை மஹாகணபதி கோவில் போன்ற பல கோவில்களிலும் தேர் திருவிழாக்கள் நடப்பதுண்டு. நவராத்திரி-விஜயதசமி சமயத்திலும் திருவிழாக்கள் நடக்கும்.

 

மேற்கண்ட திருவிழாக்களில் 40 முதல் 50 யானைகள் கலந்துகொள்ளும். உற்சவ மூர்த்திகளை (சுவாமி விக்ரகங்களை) சுமந்து வருவது, புண்ணிய தீர்த்தங்களைச் சுமந்து வருவது, ஊர்வலங்களில் கலந்து கொள்வது போன்ற பல்வேறு சம்பிரதாயங்களில் இந்த யானைகள் பங்கு பெறுகின்றன.

 

திருவிழாக்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே யானைகளுக்கான அலங்காரங்களுக்குத் தேவையான பொருட்கள் தயாரிப்பது ஆரம்பமாகிவிடும். ஒவ்வொரு ஆண்டும் இவைப் புதியதாகத் தயாரிக்கப்படுகின்றன. இந்த யானைகளுக்குத் தேவையான அலங்காரப் பொருட்களைத் தயாரிப்பவர்களுக்கென தனியான கிராமங்களும் உண்டு.    

 

இதே போல கேரள மாநிலத்தின் அனைத்துக் கோவில்களிலும் யானைகளின் பங்கு இன்றியமையாததாக இருக்கின்றது. திருவிழாக்களிலும் உற்சவங்களிலும் பங்குபெறும் யானைகளின் எண்ணிக்கையில் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கலாமே ஒழிய, அவைகளுக்கான சம்பிரதாயங்களில் எவ்வித மாறுபாடுகளும் இல்லை.

 

கேரள மாநிலம் அளவுக்கு பெரும் எண்ணிக்கைகளில் யானைகள் மற்ற மாநிலக் கோவில்களில் பங்கு கொள்வதில்லையென்றாலும், அவற்றில் யானைகளின் பங்கு தொன்றுதொட்டு இருந்து வருகின்றது என்பதில் ஐயமில்லை. அனைத்துப் பெரிய கோவில்களிலும் கஜ பூஜை என்பது ஒரு இன்றியமையாத சம்பிரதாயமாக இருந்து வருகின்றது. கும்பாபிஷேக தினங்களில் யானைகள் மீதுதான் அபிஷேகத்துக்கான புண்ணிய நதித் தீர்த்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. உற்சவங்களின்போது, பிரத்யேகமாக உற்சவ மூர்த்தியை யானைகளின் மீது வைத்துத்தான் கோவிலைச் சுற்றிப் பிரதக்ஷணங்கள் நடைபெறுகின்றன. இந்த மாதிரியான கோவில் சம்பிரதாயங்களில் யானைகள் பயன்படுத்தப்படுவது ஆகமக் குறிப்புகளில் காணப்படுகின்றது.

 

கேரள, கர்நாடக மாநிலங்களில் சில பெரிய கோவில்களில் யானைகளுக்கு உணவு வழங்குவது ஒரு பாரம்பரியம் மிக்க சம்பிரதாயமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. திருச்சூர் வடக்குநாதன் கோவில், தர்மசாலா மஞ்சுநாத ஸ்வாமி கோவில் போன்ற கோவில்களில் இந்த சம்பிரதாயம் மிகவும் பிரபலம். கேரளாவில் இதற்கு ஆனையூட்டு என்று பெயர்.

 

கோவில்கள் மட்டுமல்லாமல் மடங்களிலும் யானைகள் பயன்பாட்டில் உள்ளன. பாரம்பரியம் மிக்க மடங்களில் கஜபூஜை இன்றியமையாத ஒன்றாகப் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, காஞ்சி மடத்திலும், தருமபுரம் ஆதீன மடம், சிருங்கேரி மடம், அஹோபில மடம் போன்ற பல மடங்களில் கஜபூஜைகள் நடந்து வருகின்றன.

 

திருக்கோவில் புராணங்களில் யானைகள்

 

சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கநாதரின் தங்கையாகக் கருதப்படுகிறாள். அதனால், ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஸ்ரீரங்கத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மாரியம்மனுக்குத் தீர்த்தவாரி நடத்தப்படுகிறது. அப்போது ஸ்ரீ ரங்கநாதர் கோவிலிலிருந்து மாலை, சந்தனம், பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் யானை மீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மாரியம்மனுக்குச் சீர்வரிசையாகச் சமர்ப்பிக்கப்படுகின்றன. (https://goo.gl/CeEjrh )

 

சிவகணங்களில் இருவர் சாபத்தினால் யானையாகவும் சிலந்தியாகவும் மாறி திருவானைக்காவல் காட்டில் இருந்த ஒரு சிவலிங்கத்துக்குப் பூஜைகள் செய்து, தங்கள் பக்தியினால் சண்டையில் ஈடுபட்டு மடிந்தனர். இருவரின் பக்தியையும் மெச்சிய சிவபெருமான் யானையைச் சிவகணங்களுக்குத் தலைவனாகவும், சிலந்தியை கோச்செங்கட்சோழனாகவும் பிறவி அளித்தார். இது திருவானைக்காவல் கோவிலின் தல வரலாறு. முற்பிறவி நினைவுக்கு ஆளான கோச்செங்கட்சோழன், யானைகள் ஏற முடியாதபடி, குறுகலான படிகளைக் கொண்ட உயரமான கோவில்களைக் கட்டினான். அவன் அவ்வாறு கட்டிய 70 கோவில்களும் மாடக்கோவில்கள் என வழங்கப்பட்டன. இவன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலாகும்.   http://www.shivatemples.com/nofct/nct60.php

 

பூலோகத்தில் இருக்கும் கரு நிற யானைகளுள் ஒன்றின் மேல் காதல்வயப்பட்ட இந்திரனின் வெள்ளை யானையான ஐராவதம், இந்திரனுக்குப் போர் புரியத் தேவையான சமயத்தில் பூலோகத்தில் காதலில் ஈடுபட்டிருந்ததால் சினமுற்ற இந்திரன் ஐராவதத்தைச் சபித்தான். அது தன் நிறத்தையும் பலத்தையும் இழந்தது. சாப விமோசனத்துக்காக ஏங்கித் திரிந்து கொண்டிருந்த ஐராவதம், சாபவிமோசனம் பெற கைலாயத்துக்குச் சென்றபோது, அங்கு ஒரு முனிவர், பூலோகத்தில் இருக்கும் 108 சிவ க்ஷேத்திரங்களில் மிகவும் முக்கிய க்ஷேத்திரங்களான பனசை (திருப்பனந்தாள்), மதுரை, கோகர்ணம் ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றில் சிவனைப் பூஜித்தால் பாப விமோசனம் கிடைக்கும் என்று அருளினார். அதன்படி, ஐராவதம் திருப்பனந்தாளில் சிவபெருமானைப் பூஜித்துச் சாபவிமோசனம் பெற்றுத் தன்னுடைய வெள்ளை நிறத்தையும் பலத்தையும் மீண்டும் அடைந்தது. இது செஞ்சடை வேதிய தேசிகர் எழுதிய திருப்பனந்தாள் புராணத்தின் ஐராவத சருக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ( http://www.thiruppanandal.org/ppage/panasai/elephant.html)

 

இந்திரனின் யானையான ஐராவதம் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் இறைவனை வணங்குவதாகவும் ஒரு ஐதீகம் உண்டு.

 

துர்வாச முனிவரின் சாபத்தால் தன் வெள்ளை நிறத்தை இழந்த இந்திரனின் யானையான ஐராவதம், தாராசுரம் தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுத் தன் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றது. ஆகவே தாராசுரம் இறைவன் ஐராவதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

 

கோவில் கட்டுமானத்தில் யானைகள்

 

தமிழகக் கோவில்களில் ஏழு வகைக் கோவில்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றில் பெருங்கோயில் என்று ஒரு வகை. இதை மாடக்கோயில் என்றும் கூறுவார்கள். யானை ஏறாத வண்ணம், பூமியின் மட்டத்திலிருந்து மேலே செல்லும்படி உயரமான படிக்கட்டுகள் வைத்துக் கட்டப்படும் கோவில்கள் மாடக் கோவில்கள் ஆகும். இவை “யானை ஏறா மாடக்கோவில்” எனப்படும்.

 

இந்த மாடக்கோவில்களில் ஒரு வகை தூங்கானை மாடக் கோவில் எனப்படுகின்றது. யானைத் தூங்கும் நிலையில் கட்டப்பெற்றிருக்கும் என்பதால் அப்பெயர் பெற்றது. இக்கோவிலின் விமானம் தூங்கும் நிலையில் உள்ள யானையின் பின்புறம் போலத் தோற்றம் அளிக்கும். இவ்வகை விமானத்தை கஜப்பிருஷ்டம் என்பர். (  http://www.tamilvu.org/courses/diploma/d061/d0611/html/d061116.htm)

 

 

கோவில் சிற்பங்களில் யானைகள்

 

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் - 15-7கோவில்களுக்கும் யானைகளுக்கும் உள்ள சம்மந்தத்தையும், சில கோவில்களின் தலவரலாறுகளில் யானைகள் இடம்பெறுவதையும் உணர்த்தும் விதமாகக் கோவில்களில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களிலும் யானைகளைக் காணலாம். ஏராளமான கோவில்களில் யானைச் சிற்பங்கள் உள்ளன.

 

தமிழகத்தில் கற்றளிக் கோவில்களைக் கட்ட ஆரம்பித்தது காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவர்கள் தான். மகேந்திரவர்மப் பல்லவன் தான் கற்கோவில்களைக் கட்ட ஆரம்பித்தவன். அவன் வழி வந்த ராஜசிம்மப் பல்லவன் காஞ்சிபுரத்திற்கும் உத்திரமேரூருக்கும் இடையே கைலாசநாதர் ஆலயம் ஒன்றை எழுப்பியுள்ளான். அற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் கொண்ட அக்கோவிலில் ஏராளமான சிங்கங்களைக் காணலாம். சொல்லப்போனால் சிம்மங்களே அந்தக் கோவிலைத் தாங்கி நிற்பது போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுக்கின்றது அக்கோவில். அந்தக் கோவிலில், யனையின் தோலை ஆடையாகப் போர்த்திய கஜாந்தகர் உருவில் சிவபெருமானின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் என்னும் ஊரில் உள்ள கைலாசநாதர் ஆலயத்திலும் அற்புதமான சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. ஆலயத்தின் கோபுரத்தைத் தேர்வடிவில் வடித்து அந்தத் தேரை யானைகளும் குதிரைகளும் இழுத்துச் செல்வது போல அமைக்கப்பட்டிருக்கிறது. பின் நாட்களில் இந்தக் கோவில் தில்லியை ஆண்ட அலாவுதின் கில்ஜியின் தளபதி மாலிக்காபூரின் படைகளால் தாக்குதலுக்கு உண்டானது. பலவகையான செல்வங்கள் கொள்ளையடிக்கப்பட்டு யானைகள் மீதும் குதிரைகள் மீதும் கொண்டு செல்லப்பட்டன. இந்த வரலாறு சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

சென்னையை அடுத்துள்ள மஹாபலிபுரத்திலும் ஏராளமான சிற்பங்கள் காணப்படுகின்றன. கடற்கரையில் உள்ள பஞ்ச பாண்டவர் ரதம் என்கிற சிற்பங்களுக்கு நடுவே யானையின் உருவம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கும்போது, நிஜ யானையைப் போலவே தோற்றம் அளிக்கும் அளவிற்கு அந்த யானை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் இருக்கும் சஹாதேவ ரதம் கஜ பிருஷ்டம் வடிவில் இருக்கின்றது. உருவ ஒற்றுமையை உணர்த்தவே இரண்டும் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன.

 

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் யானைகள் தாங்கி நிற்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த யானைச் சிற்பங்கள் கடந்த பல வருடங்களாக மறைந்திருந்தன. மாலிக்காபூர் படையெடுப்பினாலும், வெள்ளப் பிரச்சனைகளாலும் பூமிக்கு அடியில் மறைக்கப்பட்டிருந்த இந்த யானைச் சிற்பங்கள் தற்போது அகழாய்வினால் வெளியே கொண்டுவரப்பட்டுள்ளன. இவை மிகவும் தத்ரூபமாக உள்ளன.

 

தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவில் மகாமண்டபம் ராஜ கம்பீர மண்டபம் என்று அழைக்கப்படுகின்றது. இம்மண்டபம் ரதத்தின் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது, அதை ஒரு பக்கம் யானைகளும் மறுபக்கம் குதிரைகளும் இழுத்துச் செல்வது போல அற்புதமாக சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

கயிலாயத்தில் கணநாதன்

 

யானைகளுக்கும் கோவில்களுக்கும் இருக்கும் தொடர்பானது உலகம் தோன்றிய காலந்தொட்டு இருக்கின்றது என்கிற உண்மைக்கு, இந்தப் பிரபஞ்சத்தின் முழுமுதற்கடவுளான பரமசிவனின் ஆலயமான அந்தக் கயிலாயத்திலும் யானைமுகத்தோன் கணநாதன் இருப்பதே சாட்சி. அந்தக் கைலாயத்தின் வாயிற்காப்போனாக அல்லவா கணங்களின் தலைவனான கணநாதன் இருக்கின்றான்! ஆதிசிவனுக்கும் பராசக்திக்கும் மகனாகக் கைலாயத்தில் பிறந்த யானைமுகத்தோன் யானைகளுக்குத் தெய்வாம்சத்தைக் கொடுத்துள்ளான்.

 

அந்த யானைமுகத்தோனாகிய கணநாதனைப் பற்றி அழகாகச்சொல்கிறார் பக்திநூல் எழுத்தாளர் ரா.கணபதி. அவருடையஜய ஹனுமான்புத்தகதில் பின்வருமாறு வர்ணிக்கிறார்:

 

இந்தப் பிரபஞ்சத்தைச் சித்திரமாக வகை வகையான விசித்திரங்களுடன் புனைந்த கலைஞியான பராசக்தியும்,  “மஹாமாயா” என்கிற அவளே ஒரு சித்திரமெனில் அந்தச் சித்திரத்துக்கு ஆதாரமான சித்தாகிய சுவராக இருக்கும் அவளது பதியான பரமசிவனும், கயிலயங்கிரி அரண்மனையில் இருந்த சித்திரச் சாலையைக் களிப்புடன் பார்வையிடத் தொடங்கினர். அமரர் கணங்களும் பூதர் கணங்களும் ஒன்று சேர்ந்து சிருஷ்டியிலுள்ள சகல இனங்களையும் வண்ணத்தில் தீட்டி, எண்ணத்தாலேயே அந்த சிருஷ்டி முழுவதையும் பெற்றெடுத்த அம்மை-அப்பர்களான பார்வதி-பரமேச்வரர்களுக்குக் காணிக்கையாக்கியிருந்த ஓவியக்கூடம் அது.

 

அமரர் கணங்களும் பூதர் கணங்களும் பிரார்த்தித்துக்கொண்டதற்கு இணங்க அங்கு திவ்ய தம்பதியான பார்வதி-பரமேஸ்வரர் எழுந்தருளிப் பார்வையிட ஆரம்பித்தார்கள். அந்தச் சித்திரச்சாலையின் ஆரம்பத்தில் அனைத்துச் சிருஷ்டிக்கும் வித்தாக, அந்த

ஆதி தம்பதியரின் ஒன்று கலந்த வடிவேயாக உள்ள ப்ரணவம் தீட்டப்பட்டிருந்தது. சிவ-சக்தியரின் பாவனமான பார்வை அந்தச் சித்திரத்தில் புதைந்தது.

 

அதனுள்ளிருந்து வெளிப்பட்ட புதையலாக, அந்த ஓங்கார வடிவமே வலப்புறம் துதிக்கையை வளைத்த ஓர் யானையாகத் தெரியக் கண்டனர். ஒரே மனம் படைத்தவர்களாதலால் ஒரே விதமாக சிந்தித்து, இருவரும் ஒரே சமயத்தில் அவ்வாறு அந்த ஓங்கார வடிவத்தை ஒரு யானையாகக் கண்டனர்.

 

அவர்கள் சிருஷ்டித்த உயிர்களிலேயே மிகப் பெரிய உருவம் கொண்டது அது! அளவில் மட்டுமா பெரியது? அழகிலும் உயர்ந்தது அதுதான்! என்ன ஒரு கம்பீரமான அழகு! சாந்தம் மிகுந்த எழில்! கருணா சௌந்தர்யம்! கனிவின் லாவண்யம்! சாந்தக் கண்ணிலேயே குறும்பின் கோமளமும்!

 

அதன் குண ஸம்பத்துக்களோ, எதையும் மறவாத கூர்த்த அறிவு பெற்றது!

அறிவு இருக்கட்டும். அன்பைச் சொல்லுங்கள். மஹாபலம் பொருந்திய உயிரினமாக இருந்தாலும் மற்ற எந்த உயிரினத்தையும் துன்பப்படுத்தாத மிருகமல்லவா அது? மாமிசத்தைத் தீண்டாத மிருகமாயிற்றே! பழக்கினால் அந்த மஹாபலசாலியான மிருகம் அடிமையிலும் அடிமையாக எந்தக் காரியமும் செய்யுமே!

 

அன்பு வடிவமான உயிரினம் என்றால் யானைதான்! அதுவும் அன்பு செய்கிறது. நம்மையும் அன்பு செய்ய வைக்கிறது! அவ்வன்பின் வசீகரத்தால்தான் மற்ற எந்தப் பிராணியையும்விட யாணையையே மாளாமல்,  மீளாமல் பார்த்துக்கொண்டேயிருக்கத் தோன்றுகிறது!

 

இந்த எண்ணங்களெல்லாம் பார்வதி-பரமேச்வரர்களுக்குள் விம்மியெழுந்தது. உடனே அவர்களுக்கு ஓர் ஆசையும் எழும்பியது. ‘ஓம்’காரத்துள் கண்ட அப்புதையலைப் புதல்வனாகப் பெறும் ஆசை!

 

உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளும் அம்மையப்பரான அவர்கள் பெற்ற குழந்தைகள் தான் என்றாலும், அழகான சமர்த்தான குழந்தையாக அமைந்த யானையை, சகல ஜீவராசிகளைப் போல அதன் இனத்தைச் சேர்ந்த தாய்-தந்தையரின் குழந்தையான ஜீவாத்மாவாக இல்லாமல், தங்களுடைய சொந்தக் குழந்தையான சிவாத்மாவாகப் பெற்றெடுக்க வேண்டும் என்றும், உலகமும் அந்தக் குழந்தையைத் தங்களது சொந்தக் குழந்தையாக எண்ணிப் போற்றி வழிபடச் செய்ய வேண்டும் என்றும், சாதாரணமாக வழிபடாமல் தங்களுக்கும் முன்பாக முதல் ஸ்தானத்தில் வைத்து வழிபடச் செய்ய வேண்டும் என்றும் அவ்விருவருக்கும் ஒரே எண்ணம் மனதில் உதித்தது.

 

ஆயினும் அதனை உடனே செயலாக்கவில்லை. (அவர்கள் மனதில் சங்கல்பம் செய்தாலே, நினைத்த மாத்திரத்தில் செயலாகிவிடும் என்றாலும்,  அப்படி ஆகாமலும் செய்ய அந்த அலகிலா விளையாட்டுக்காரர்களால் முடியாதா என்ன?)

‘சித்தா-பக்திகளுடன் தேவர் குழந்தைகளும் பூதர் குழந்தைகளும் ஓவியக் கூடத்தைச் சமைத்துத் தங்களை அங்கே அழைத்து வந்திருக்கையில் அதை முதலில் பார்வையிட்டு முடிப்போம்’ என்கிற எண்ணத்துடன் அவர்கள் இருவரும் அடுத்த ஓவியத்தைக் கண்டனர்.

 

அந்த ஓவியம் இயற்கை வனப்பின் சிகரமாக, பார்வதி-பரமேஸ்வரன் தம்பதி  இந்தச் சிருஷ்டியில் புனைந்துள்ள ஒரு வனப் பிரதேசத்தை, அதிலுள்ள அனைத்து விலங்கினங்களுடனும் சித்தரிப்பதாக இருந்தது. அவற்றுள் எடுப்பாக நின்றது யானைச் சிற்பம் தான்!

 

ஒற்றை யானையைக் காட்டினால் அதனுடைய அன்பின் சிறப்பு எப்படித் தெரியும்? அன்பு செய்பவர் – செய்யப்படுபவர் என்று இருவரைக் காட்டினால்தானே அன்பின் சிறப்பை வெளிப்படுத்த முடியும்?

 

எனவே பரஸ்பரம் பிரேமை கொண்ட ஓர் யானைத் தம்பதியையே அந்த ஓவியம் காட்டியது. அதைக் கண்ட பின்னும் சிவ-சக்தியரால் தங்களது ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை.

 

அவ்விருவரும் அனைத்துமாக ஆனவர்கள்! அந்தச் சித்திரத்தைப் பார்த்த மாத்திரத்தில் அன்னை பார்வதி தானே அந்தச் சித்திரத்தில் உள்ள யானைத் தம்பதியில் பெண்யானையான ‘பிடி’ ஆனாள்! அப்பன் பரமேஸ்வரன் ஆண் யானையான ‘களிறு’ ஆனார்.

 

சித்திரங்கள் உயிர் பெற்று உருவாகி,  அவற்றின் பரஸ்பரப் பிரேமை ஒன்று கலந்தது. இருவரும் காதல் கடலில் மூழ்கினர். அந்தப் பிரேமையில் விளைந்த செல்வமாகக் குழந்தை கணபதி தோன்றினார்! யானைமுகர் ஆரா அமுதமாகத் தோன்றினார்!

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் - 15-10

தேவர்-பூதர் இருவரும் சேர்ந்து ஓவியக்கூடம் எழுப்பியதாகக் கண்டோம். அவர்களில் எளிதில் அடங்காத பூதரை அடக்கும் தலைவனாக – ஒரு சவால்கள் மிகுந்த பணியை

வெற்றிகரமாக ஆற்றினால்தானே பெருமை? அப்படிப்பட்டப் பெருமைப் படைத்தவனாக – புதல்வன் இருக்கவேண்டும் என்பதனால், ஸர்வலோகத்தை ஆளும்  சக்கரவர்த்தி-சக்கரவர்த்தினியரான ஈசனும் ஈச்வரியும், இளவரசாக உதித்த மதலையைப் பூத கணத்தின் பதியாக, அதிபதியாக, ஈசனாக, நாதனாக நியமித்தனர்.

 

அவன் கணபதி, கணாதிபதி, கணேசன், கணநாதன் எனப் பெயர் பெற்றான். மிகப் பெரும் ஆபத்தொன்றின்போது அமரர் படைக்கு அதிபதியாம் தேவஸேநாபதியாக அச் சிவ-சக்தியர் பின்னர் அளித்த திருக்குமாரன் முருகையன். அவனது அவதாரமான ஞானசம்பந்தப் பெருமானின் தெளிவான தமிழ் வாக்கிலேயே, கஜ தம்பதி ஆன சிவ-சக்திகளின் சுதனாய் கணபதி பிறந்ததை அறிகிறோம்.

 

பிடியதன் உருஉமை கொளமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடும் அவர்இடர்

கடிகண பதிவர அருளினன்…..

 

அனைத்து ஜீவராசிகளும் தாங்களே, தங்களிடமிருந்தே என்பதால் அவற்றில் உருவில் பெரிய ஆனைத் தம்பதியராகிக் கூடிக் களித்து கணபதியை அளித்தனர் பார்வதி பரமேஸ்வரன் தம்பதி.

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் - 15-9

இவ்வாறாக, கோவில்களுக்கும் யானைகளுக்குமான தொடர்பு மிகவும் நெருங்கியது என்பதை புராணங்கள், சாஸ்திரங்கள், இலக்கியங்கள், கோவில் கட்டுமானங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள் ஆகியவை மூலமாகத் தெளிவாகவும் உறுதியாகவும் தெரிந்துகொள்ள முடிகின்றது.

 

கட்டுமானங்கள், சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுக்களில் இடம் பெற்றிருக்கும் யானைகள் திருக்கோவில்களை எழுப்புவதற்கும் பெரிதும் பயன்பட்டிருக்கின்றன.  திருக்கோவில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, அந்நிலத்தை மேடு பள்ளங்கள் இல்லாமல் சமன் செய்வதற்கும், மண்ணைத் திடமாகக் கெட்டிப்படுத்துவதற்கும் யானைகளை அந்நிலத்தின் மீது நடக்கச்செய்வார்களாம். கற்பாறைகள் போன்ற பளுவான பொருட்களைத் தூக்குவதற்கும் யானைகளைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

 

பிரம்மாண்டமான ஆலயங்களை எழுப்புவதற்குப் பலம் வாய்ந்த யானைகளைப் பயன்படுத்தியிருப்பதில் வியப்பில்லை. யானைகள் காட்டு விலங்குகளாக இருந்தாலும் அவை புத்திகூர்மை மிகுந்தவை என்பதால் மனிதரால் பாரம்பரியமாகப் பல நூற்றாண்டுகளாகப் பழக்கப்படுத்தப்பட்டு வந்துள்ளன என்கிற உண்மைக்கு நாடெங்கும் வானுயர்ந்து நிற்கும் பல்லாயிரக்கணக்கான கோவில்களே சாட்சியாக இருக்கின்றன.

 

 

(தொடரும்)

 

 

Series Navigation‘கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும்’ ஒருமாதகாலச் சான்றிதழ்ப் படிப்புவேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 11
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *