யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 9

Spread the love

பி.ஆர்.ஹரன்

 

உச்ச நீதிமன்றத்தில் மனு

 

சிறைப்படுத்தப்பட்ட யானைகள் மீட்கப்படவேண்டும்; கோவில்களிலிருந்து அவைகள் முழுவதுமாக விலக்கப்படவேண்டும் என்கிற நோக்கத்துடன் பிராணிகள் நல அமைப்புகள் போராடிவருகின்றன. இவ்வமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் யானைகளின் நலன் கருதி வழக்குகள் தொடுத்தும் வருகின்றன என்பதையும் பார்த்தோம். தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

supreme-court

மேற்கண்ட வழக்குகளில் PETA (People for Ethical Treatment of Animals), WRRC (Wildlife Rescue and Rehabilitation Center) போன்ற பிராணிகள் நல அமைப்புகள் தீவிரமாக பங்காற்றுகின்றன. இவர்களுக்கு ஆதரவாகவும், இவர்களுடன் சேர்ந்தும் இந்திய விலங்குகள் நலவாரியமும் (AWBI) இயங்கி வருகின்றது.

 

கடந்த 2014-ஆம் ஆண்டு, WRRC அமைப்பு, 1972-ஆம் ஆண்டு இந்திய வனவுயிரினங்கள் பாதுகாப்புச் சட்டம், 1960-ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் மற்றும் பல்வேறு மாநில அரசுகள் அறிவித்துள்ள உத்தரவுகள், வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை சிறைப்படுத்தப்பட்ட யானைகள் விஷயத்தில் முறையாக செயல்படுத்துவதற்குத் தேவையான உத்தரவுகளை, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடவேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கைத் (Writ Petition(s)(Civil) No(s). 743/2014) தொடர்ந்துள்ளது.

 

மனுவின் சாராம்சம்

peta-india

WRRC அமைப்பு தன்னுடைய ரிட் மனுவில் முக்கியமாகப் பின்வரும் குறிப்புகளைக் கொடுத்திருந்தது:

 

 • பல்வேறு மாநிலங்களில் உள்ள சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் உடல்நலன், பாதுகாப்பு மற்றும் முறையான பராமரிப்பில், மேற்கண்ட சட்டங்களும், உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்களும் எவ்வாறு மீறப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தும் தற்போதைய நிலையை இந்த நீதிமன்றத்தின் முன் வைக்கிறோம்.

 

 • 1972-ஆம் ஆண்டு இந்திய வனவுயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, அருகிவரும் உயிரினங்கள் (Endangered Species) பட்டியல் 1-இல் இடம்பெற்றுள்ளது யானை. இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் யானை, இந்தியாவின் பெரும்பான்மையான மக்களால் போற்றி வணங்கப்படுகின்றது. இதை அங்கீகரித்த மத்திய சுற்றுப்புறச்சூழல் மற்றும் வன அமைச்சகம் 21 அக்டோபர் 2010 தேதியிட்ட அறிவிப்பில், யானையை இந்திய தேசியப் பாரம்பரிய விலங்கு (National Heritage Animal) என்று அறிவித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த அங்கீகாரம் எந்த விதத்திலும் யானையின் நலனுக்குப் பயனளிக்கவில்லைன்பதை இந்த நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்துகிறோம்.

 

 • இந்தியக்காடுகளில் இருக்கும் யானைகளின் பாதுகாப்பு சம்பந்தமாக ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும், இந்தக் குறிப்பிட்ட மனுவானது, கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மற்றும் தனியார்கள் வசம் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் யானைகளின் நலன் மீது அக்கறை கொண்டு, அதற்குத் தேவையான உத்தரவுகளையும் ஆணைகளையும் கோரி இம்மனு எழுப்பப்பட்டுள்ளது.

 

 • சிறைப்படுத்தப்பட்டிருக்கும் யானைகள் அரசியல் சாஸனம் மற்றும் இந்திய சட்டங்கள் ஆகியவை அளித்திருக்கும் பாதுகாப்புகளை மீறி சித்திரவதைப் படுத்தப்படுவது; அன்பளிப்பு, நன்கொடை என்கிற பெயர்களில் சட்டத்திற்குப் புறம்பாக யானைகள் விற்கப்படுவது, மாற்றப்படுவது; வாணிப மற்றும் மத நிகழ்வுகளில் சட்டத்திற்குப் புறம்பாக யானைகள் பயன்படுத்தப்படுவது; வசதிகளற்ற கொட்டகைகளில் வைக்கப்பட்டு யானைகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருப்பது, ஆகிய அக்கறைத் தேவைப்படும்படியான நான்கு பிரதான விஷயங்கள் மீது இந்த நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம்.

 

 • உரிமையாளர்கள் மற்றும் பாகன்கள் சித்திரவதை செய்வதால், யானைகள் இறந்துபோவதும், காயங்கள் அடைவதும், நோய்வாய்ப்படுவதும் பற்றிய செய்திகள் நாடு முழுவதிலிருந்தும் வந்தவண்ணம் உள்ளன. மேலும் சிறைப்படுத்தப்பட்ட யானைகள் சித்திரவதைகளைப் பொறுக்க முடியாத நேரங்களில் மிரளும்போதும், மிரண்டு ஓடும்போதும் பாகன்கள், பொது மக்கள் உயிரிழப்பதும், பொதுச் சொத்துக்கள் சேதம் அடைவதும் நடக்கின்றன. இவ்வாறு யானைகள் மிரள்வதற்கு, அவைகளுக்கு முறையான பராமரிப்பு கிடைக்காததும், பலவிதமான துன்புறுத்தல்கள் நடைபெறுவதும் காரணமாகின்றன என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தத் துன்புறுத்தல்கள், 1960-ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் படி சித்திரவதைக் குற்றமாகக் கருதப்படுகின்றன.

 

 • இந்திய அரசின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, 2000-ஆம் ஆண்டில் இந்தியாவில் தனியார்கள், கோவில்கள், மத நிறுவனங்கள், சர்க்கஸ்கள், விலங்குகள் பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள், வனமுகாம்கள் ஆகிய இடங்களில் 3400 முதல் 3600 யானைகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளன.

 

 • இந்தியச் சட்டங்களில் உள்ள ஏற்பாடுகள், மாநில அரசுகள் ஏற்படுத்தியுள்ள விதிகள், வழிகாட்டுதல்கள், அவ்வப்போது உயர் நிதிமன்றங்கள் அளித்து வந்துள்ள உத்தரவுகள், ஆணைகள் ஆகியவை இருந்தும், சிறைப்படுத்தப்பட்ட யானைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதே உண்மையான நிலவரம். இவை அனைத்தும் மீறப்பட்டு யானைகள் கடும் துன்பத்துக்குள்ளாக்கப்படுகின்றன என்பதே உண்மை.

 

 • 1972-ஆம் ஆண்டு இந்திய வனவுயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, யானைகள் விற்கப்படுவதும் வாங்கப்படுவதும் தடை செய்யப்பட்டிருந்தாலும், அன்பளிப்பு, நன்கொடை, உரிமைமாற்றம், வாடகை, கடன், என்கிற பெயர்களில் யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சட்டத்திற்குப் புறம்பாக வாணிப முறையில் மாற்றப்படுகின்றன. இந்த மாற்றம், யானைகளின் வசதிகள் குறைவான பராமரிப்பிலும், துன்பத்திற்கு உள்ளாவதிலும் முடிவு பெறுகிறது.

 

 • 2003-ஆம் ஆண்டு வனவுயிர்கள் இருப்பு விதிகள் படியும், 1972-ஆம் ஆண்டு இந்திய வனவுயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 42வது பிரிவின்படியும், தலைமை வனவுயிர் காப்பாளரிடம் தங்கள் வசமுள்ள யானைகள் பற்றிய விவரங்களை உறுதியளிப்புப் பத்திரம் (Declaration form) மூலம் தெரிவித்து உரிமம் பெறவேண்டும். ஆனால் பலர் அவ்வறு உறுதியளித்து உரிமம் பெறுவதில்லை.

 

 • கண்காட்சிகள், சர்க்கஸ்கள், திருமணங்கள், கட்டுபாடற்ற சுற்றுலாக்கள் (Unregulated Tourism), பொது நிகழ்ச்சிகள், போன்ற இடங்களில் யானைகளைப் பயன்படுத்தவோ அல்லது பிச்சை எடுக்கப் பயன்படுத்தவோ நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும், 1972-ஆம் ஆண்டு இந்திய வனவுயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யவேண்டும் என்றும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் அமைத்த யானைப் பணிக்குழு (Elephant Task Force) அளித்துள்ள பரிந்துரைகள் இன்னும் செயல்படுத்தப்படாமல் இருக்கின்றன.

 

 • அரசியல் சாஸனத்தின் க்ஷரத்து-14, க்ஷரத்து-21, க்ஷரத்து-48A மற்றும் க்ஷரத்து-51A(g) ஆகிய க்ஷரத்துகளின்படி, சிறைப்படுத்தப்பட்ட யானைகள் மற்றும் பிற வனவுயிரினங்கள் காப்பாற்றப்பட வேண்டுவதற்கும், பொது மக்களின் உயிருக்குப் பங்கம் ஏற்படாமல் இருப்பதற்கும், அரசியல் சாஸன அவசியம் இருக்கின்றது.

 

எனவே, சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு மத்திய மாநில அரசுகளுக்கு ஆணைகளும் உத்தரவுகளும் இடவேண்டும் என்று இந்த நீதிமன்றத்தை வேண்டிக்கொள்கிறோம் என்று WRRC அமைப்பு தன் மனுவில் தெரிவித்துள்ளது.

 

உச்ச நீதிமன்றத்தில் இதுவரை

wrrc-1

WRRC சமர்ப்பித்த மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் 18 ஆகஸ்டு 2015 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. WRRC மட்டுமல்லாமல் மேலும் சில அமைப்புகளும் அவ்வழக்கில் தங்களை இணைத்துக்கொண்டன. அதோடு மட்டுமல்லாமல், கேரள அரசு ஒரு குறுக்கீட்டு மனுவை சமர்ப்பித்தது. அந்தக் குறுக்கீட்டு மனுவையும் ஏற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட வழக்குரைஞரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி பானுமதி அடங்கிய அமர்வு பின்வருமாறு உத்தரவிட்டு குறுக்கீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

 

1972-ஆம் ஆண்டு இந்திய வனவுயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 40வது பிரிவின் படியும், கேரள அரசு வழக்குரைஞர் குறிப்பிட்ட 1960-ஆம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் 21, 22 பிரிவுகளைக் கவனத்தில் கொண்டும், மத்திய அரசின் சொலிஸிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டிய 1972-ஆம் ஆண்டு இந்திய வனவுயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 42வது பிரிவையும், 2012-ஆம் ஆண்டு கேரள சிறைப்படுத்தப்பட்ட யானைகள் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு விதிகளையும் கவனத்தில் கொண்டு கீழ்காணும் உத்தரவுகளைப் பிறப்பித்தது:

 

கேரள அரசு வனத்துறையின் தலைமை வனவுயிரினங்கள் பாதுகாப்பு அதிகாரி, கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைப்படுத்தப்பட்ட யானைகளையும் சரியாகக் கணக்கெடுத்து, அவற்றின் இருப்புக்கு உறுதிமொழிப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்றும், முறையான உரிமைச் சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளனவா என்றும், பார்த்து, அவ்வாறு நிறைவேற்றப்படாத பக்ஷத்தில், சம்பந்தப்பட்ட உரிமைதாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

யானைகள் பராமரிப்புக்கான பதிவேடுகள், யானைப் போக்குவரத்துக்கான விதிகள் ஆகியவற்றை முறையாக பின்பற்றாதவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

 

சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் பராமரிப்பையும் நிர்வாகத்தையும் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள மாவட்டக் குழுவில், இந்திய விலங்குகள் நலவாரிய உறுப்பினர் ஒருவரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 

திருவிழாக்களைப் பிரச்சனைகள் இன்றி நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள திருவிழாக் குழுக்கள், பின்வரும் திருவிழா விதிகளை முறையாக அனுசரிக்கின்றனவா என்பதை மாவட்டக் குழு உறுதி செய்ய வேண்டும்.

 

 • அணிவகுப்புகளிலும், ஊர்வலங்களிலும் பயன்படுத்தப்படும் யானைகளுக்கு இடையே போதுமான இடைவெளி இருக்க வேண்டும்.
 • மதம் பிடிக்கும் காலத்தில் உள்ள யானைகளைப் பயன்படுத்தக்கூடாது.
 • நோய்வாய்ப்பட்ட, பலவீனமான, காயம் அடைந்துள்ள, கர்ப்பமான யானைகளைப் பயன்படுத்தக்கூடாது.
 • சங்கிலிகள், முட்கள் கொண்ட சங்கிலிகள் மற்றும் கம்பிவலைகள் ஆகியவற்றால் யானைகளைப் பிணைக்கக்கூடாது.
 • ஓய்வில்லாமல், வெய்யிலில் தார் சாலைகளில் யானைகளை நடத்திச் செல்லக்கூடாது.
 • கடுமையான வெய்யிலில் யானைகளை நெடுநேரம் நிற்க வைப்பதோ, அவற்றுக்கு அருகிலேயே பட்டாசுகளையும் வெடிகளையும் வெடிப்பதோ கூடாது.
 • யானைகளுக்குத் தேவையான அளவு உணவும் குடிநீரும் அளிக்கப்பட வேண்டும்.
 • யானைகள் பாதுகாப்புக்காகப் பணியில் அமர்த்தப்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் முறையாக யானைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும்.
 • ஐந்து அல்லது அதற்கு அதிகமான யானைகள் பயன்படுத்தப்படும் திருவிழாக்களில் யானைப் பணிக்குழுவில் தகுதி வாய்ந்த விலங்குகள் நல மருத்துவர்கள் இருக்க வேண்டும்.
 • அருகில் உள்ள வனச்சரக அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் திருவிழா நடப்பதற்கு 72 மணிநேரம் முன்பாகவே திருவிழா பற்றிய அனைத்துத் தகவல்களையும் தரவேண்டும்.
 • ஊர்வலம் போகும்போது மட்டும் யானைகளின் கால்களில் சங்கிலிகள் கட்டப்பட்டிருக்கலாம்.
 • பாகன்கள் மது மற்றும் போதை மருந்துகள் உட்கொள்ளாமல் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
 • ஒன்றரை மீட்டருக்குக் குறைவான உயரம் கொண்ட கன்றுகளைப் பயன்படுத்தக்கூடாது.
 • பாரா ஊர்வலங்கள் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் தான் நடத்தப்பட வேண்டும். அவைகளுக்குத் தேவையான ஓய்வும் கொடுக்கப்பட வேண்டும்.
 • இரவு நேரங்களில் மின் தடைகளை சமாளிக்க ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
 • ஒவ்வொரு யானைக்கும் ரூ.3 லக்ஷம் செலுத்தி பொதுநலன் பொறுப்புக் காப்பீடு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 

மேற்கண்ட விதிகள் உழுமையாக முறையாகப் பின்பற்றப்படுமாறு செய்வது மாவட்டக் குழுக்களின் கடமையாகும்.

 

தேவஸ்தானங்களும், கோவில் நிர்வாகங்களும் தங்களிடம் உள்ள யானைகளின் விவரங்களைத் தந்து மாவட்டக் குழுவிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும். இன்றிலிருந்து 6 வாரங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். தேவஸ்தானங்களும், கோவில் நிர்வாகங்களும் குறிப்பிட்ட காலத்துக்குள் பதிவு செய்வதை உறுதி செய்வது மாநில அரசின் கடமையாகும். யானைகளுக்கு எந்தவிதமான துன்புறுத்தலும் சித்திரவதையும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது கோவில் நிர்வாகங்கள், தேவஸ்தானங்கள், திருவிழாக்குழு, மாவட்டக் குழு மற்றும் யானைகளின் உரிமையாளர்கள் ஆகியோரின் பொறுப்பு. யானைகள் துன்புறுத்தப்பட்டதாக அறியப்பட்டால், குற்றவியல் வழக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், யானைகளை அரசு மீட்டுக்கொள்வது உட்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். (http://supremecourtofindia.nic.in/FileServer/2015-08-18_1439896382.pdf )

 

மேற்கண்ட உத்தரவை அளித்த உச்ச நீதிமன்றம் குறுக்கீட்டு மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டு, பிரதான மனுவின் மீதான விசாரணையைத் தள்ளி வைத்தது.

 

உச்ச நீதிமன்றம் தடை செய்த கேரள அரசு ஆணை

government-of-kerala

மேற்கண்ட உத்தரவைத் தொடர்ந்து கேரள அரசு மாநிலத்தில் உள்ள சிறைப்படுத்தப்பட்ட யானைகளின் கணக்கைப் பதிவு செய்யத் தொடங்கியது. அவ்வாறு செய்யும்போது சட்டத்துக்குப் புறம்பாகப் பலர் யானைகளை வைத்திருந்த விஷயம் தெரியவந்தது. யானைகள் உரிமையாளர் சங்கம் அவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக இருக்கும் யானைகளுக்கும் உரிமம் வழங்கச் சொல்லி அரசுக்கு அரசியல் அழுத்தம் கொடுத்தது. அதற்கு இணங்கிய கேரள அரசு 26 ஃபிப்ரவரி 2016 அன்று சட்டத்துக்கு புறம்பாக இருக்கும் 289 சிறைப்படுத்தப்பட்ட யானைகளைப் பதிவு செய்து, உரிமையாளர்களுக்கு உரிமைச் சான்றிதழ் வழங்குமாறு அரசாணை வெளியிட்டது.

 

இந்த அரசாணை இந்திய வனவுயிரினப் பாதுகாப்புச் சட்டத்தையும், உச்ச நீதிமன்றத்தின் ஆகஸ்டு 2015 உத்தரவையும் மீறுவதாகும் என்று சொல்லி, PETA அமைப்பு கேரள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. கேரள அரசு முறையாக பதில் தராததால், அது சம்பந்தமாக WRRC அமைப்பு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. PFA (People For Animals) அமைப்பின் சார்பாக கௌரி முலேகி என்பவரும் ஒரு குறுக்கீட்டு மனுவை சமர்ப்பித்தார். அம்மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், கேரள அரசுக்கு பதில் அனுப்பும்படி உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 27ம் தேதி விசாரணைக்குத் தள்ளி வைத்தது. பிறகு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மே மாதம் 4-ம் தேதி அன்று கேரள அரசின் ஆணைக்குத் தடை விதித்து, அந்த ஆணையின் பேரில் அளிக்கப்பட்ட உரிமைச் சான்றிதழ்களையும் ரத்து செய்தது. மேலும் கேரள மாநிலத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு யானைகளை மாற்றக்கூடாது என்று யானைகள் உரிமையாளர்கள் சங்கத்துக்கும் உத்தரவிட்டது.

(http://www.thehindu.com/news/national/kerala/sc-stays-amnesty-scheme-to-legalise-289-captive-elephants/article8558836.ece)

 

 

உச்ச நீதிமன்ற வழக்கில் சங்கீதா ஐயரின் பங்கு

 

இதனிடையே நாம் சென்ற பகுதியில் பார்த்தபடி, கனடா நாட்டு ஆவணப்படத் தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான சங்கீதா ஐயரின் “Gods in Shackles” ஆவணப்படம் வெளியானதைத் தொடர்ந்து, அவருடைய படத்திலிருந்து சில பிரத்தியேகக் காட்சிகளை வெட்டி எடுத்து, அதையும் ஒரு ஆவணமாக WRRC அமைப்பு தன்னுடைய மனுவின் இணைப்பாக உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

 

மீண்டும் விசாரணை

 

WRRC அமைப்பும் மற்ற அமைப்புகளும் தொடர்ந்துள்ள இந்த முக்கிய வழக்கின் விசாரணை மீண்டும் வருகின்ற 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.

 

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

Series Navigationசில மருத்துவக் கொடுமைகள்