ராதையின் தென்றல் விடு தூது

Spread the love

 

கோவை எழிலன்

பொதிகைமலை தனில்தோன்றி தமிழ கத்தின்
பொருநையிலும் பொன்னியிலும் குளித்துப் பின்னர்
விதவிதமாய் மதுமலர்கள் வாசம் வீசும்
விந்தியமா மலைச்சாரல் தாண்டி இந்த
நதிக்கரையில் ராதையெனைத் தழுவி நிற்கும்
நல்லநறு மணங்கொண்ட தென்றல் காற்றே!
விதிவசத்தால் துணையிழந்த என்றன் நெஞ்சின்
வாட்டத்தைப் போக்கிடவே தூது செல்லாய்.

அடியவளின் தூதெனவே நீயும் இந்த
ஆய்பாடி நன்னகரை விட்ட கன்று
கடிநகராம் மதுராவில் ஏகி ஆங்கே
கண்ணன்வாழ் இல்லடைந்தே அன்னான் முன்னர்
கொடிகளையே அசைவிப்பாய்; அதனைக் கண்டால்
கோபாலன் கண்முன்னர் ராதை என்றன்
இடைதோன்றும்; இடையுடனென் உருவம் மற்றும்
ஈடில்லா எம்காதல் இணைந்து தோன்றும்

கண்ணனவன் நீராடுங் காலை நீயும்
கருங்குவளை மலர்களிடை புகுந்து செல்வாய்;
அன்னவன்தான் அதைக்காணும் போதில் என்றன்
அழகான கண்களினை நினைவில் கொள்வான்;
மன்னவன்தான் நீராடி முடிக்கும் போழ்தில்
மாசில்லா தாமரையை மூழ்கச் செய்வாய்;
என்முகம்தான் கண்ணீரில் குளிக்கும் காட்சி
இளையவனின் கண்முன்னே உடனே தோன்றும்.

அச்சுதன்தான் அலங்காரம் செய்யும் போழ்தில்
அவன்முத்து மாலையினை அசைவிப் பாய்நீ;
அச்சமயம் அடியவளின் செவ்வாய் கொண்ட
அழகியநற் பற்களவன் நெஞ்சில் தோன்றும்;
மெச்சிடவே அவனுறங்கச் செல்லும் போது
மெலிதாகத் தீச்சுடரை ஆட்டு விப்பாய்;
இச்சகத்தில் என்னுயிர்தான் துடிக்கும் காட்சி
இளையவனின் அகத்தினிலே உடனே தோன்றும்.

இச்செயல்கள் எல்லாம்நீ செய்தால் அந்த
இளையவன்தான் எனைக்காண ஏங்கி ஓடி
இச்சையுடன் வந்திடுவான்; நாங்கள் இங்கே
இனிமையாகக் களித்திருப்போம்; ஆங்கே நீயும்
அச்சுதனின் ஆசில்லா வேணு கான
அருவியதில் குளித்திடலாம்; அதனால் அந்தப்
பச்சைமா மாலவனை நோக்கி இன்றே
பறந்திடுவாய் விரைவாகத் தென்றல் காற்றே!

 

 

Series Navigationதொடுவானம் 108. கோகிலத்தின் நினைவலைகள் .இயந்திரப் பொம்மை