ரியாத்தில் தமிழ் கலை மனமகிழ் மன்ற ((TAFAREG) விழா!

Inline image 1ரியாத்தின் குறிப்பிடத்தக்க தமிழர் அமைப்புகளுள் தஃபர்ரஜ்ஜும் ஒன்று. தஃபர்ரஜ் 2013 இஸ்லாமிய விழா கடந்த வெள்ளியன்று அல்முஸ்தஷார் மகிழகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மெளலவி இப்ராஹீம் ஜும்ஆ  உரையை அருந்தமிழில் ஆற்ற காரீ இம்ரான் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை நடத்திவைத்த பின்னர் விழா தொடங்கிற்று. எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்ற இவ்விழாவில் தஃபர்ரஜ் தலைவர் அஹமது இம்தியாஸ் வரவேற்புரை அளித்தார். துணைத் தலைவர் ஹைதர் அலி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். தமிழ்ச் சிலேடைப் புதிர்களை கவிஞர் இப்னுஹம்துன் பகிர்ந்துகொண்டார்.

குர்ஆனைப் புரிந்துகொள்ளும் கல்விப் பாடம் குறித்ததோர்  அறிமுகத்தை முஹையத்தீன் கஸ்ஸாலி, மன்சூர் ஆலிம் ஆகியோர் சிறப்பாக நடத்தினர். பின்னர் மனோதத்துவப் பேராசிரியர் முனைவர்.அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) மாணவர்களுக்குப் பலன் அளிக்கும் வகையில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவது எப்படி என்பதை மனோதத்துவ ரீதியில் விளக்கினார். எந்த ஒன்றிலும் வெற்றி காண Attitude எனப்படும் மனப்பாங்கும், Behaviour எனப்படும் நடத்தையும் இலக்கு நோக்கியதாக இருக்க வேண்டும் என்பதைப்  பேராசிரியர்  தனக்கே உரித்தான வகையில் தெளிவாக விளக்கினார். மாணாக்கர் தம்வெற்றிக்கு வழிகாட்டிய பேராசிரியரின் உரை மணாளர்தம் இல்லற வெற்றிக்கும் இஸ்லாமிய வழியில் வழிகாட்டும் விதமாக நீண்டு அமைந்தது.

பின்னர் காரீ இம்ரான் என்னும் திருக்குர்ஆன் நெறியாளர் திருக் குர்ஆனை இனிமையாகவும் இலக்கணச் சுத்தமாகவும் ஓத வேண்டியதன் தேவையை வலியுறுத்தி  தம் குரல்வள நிலைகளைக் கொண்டு சிறப்பானதொரு உரையை அளித்து அவையோர் தம் மனங்களில் குர்ஆன் பேறுகளைப் பதிவு செய்தார்

முன்னதாக, பேராசிரியர் அப்துல்லாஹ்வின் நேர்காணல்களின் தொகுப்பான ‘கம்பளிப் பூச்சியின் ரோமங்கள் உதிர்வது போல அறியாமை உதிர்ந்தது…’ என்ற நூலை கவிஞர் ஷாஜஹான் அறிமுகப்படுத்த, நூற்பிரதிகளை பேராசிரியரிடமிருந்து ஷாஹுல் ஹமீது, சீனி நியாஸ், மின்ஹாஜ், முஹையத்தீன், கஸ்ஸாலி,  அக்பர், ஃபெரோஸ் உள்ளிட்டவர்கள் பெற்றுக்கொண்டனர்.

தஃபர்ரஜ் செயற்குழு உறுப்பினர்கள் மன்சூர், ஆதம் அபுல்ஹசன், சிக்கந்தர் அனஸ், ஜாஹிர்ஹூசைன், காயல் கஸ்ஸாலி, அப்துல் அஸீஸ், ஜாஃபர் சாதிக், மீரான், ஷேக் அப்துல் காதர் உள்ளிட்டோர் விழாவின்  பின்னணியில் காரியமாற்றியிருந்தனர்.

இப்னு ஹம்துன் நன்றி நவில, விழா இனிதே நிறைவுற்றது.

Series Navigationவிண்கற்கள் தாக்குதலைக் கையாள அகில நாட்டு பேரவைப் பாதுகாப்புக் குடையை அமைக்க ரஷ்யத் துணைப் பிரதமர் அழைப்புகதையும் கற்பனையும்