ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

Spread the love

 

 

வாசகக்காளான்கள் – 1


 

பத்தாயிரத்திற்கும் அதிகமான நாட்களுக்கு முன்பே 

கவிதைபாட ஆரம்பித்தவன் குரலை

இருந்தாற்போலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர்

தன் கையடக்க அலைபேசியில் பதிவுசெய்து 

ஃபார்வர்டுசெய்ய

வாசிப்பென்று துரும்பையும் எடுத்துக் 

கிள்ளிப்போடத் தயாராயில்லாத 

வாசகர்கள் சிலர்

அவர் கவிதையை அனா ஆவன்னாவிலிருந்து 

கேட்கத் தொடங்குவதாய்

கொஞ்சங்கூட கூச்சநாச்சமில்லாமல் 

பொதுவெளியில் பெருமைப்பட்டுக்கொள்ளத் 

தயார்நிலையிலிருப்பதை _

பறைசாற்ற ஒருவர் சிவப்புக்கம்பளம் விரித்து 

உவப்போடு இடமளிப்பதை _

_ எல்லாவற்றையும் ஒதுங்கி நின்று பார்த்துக்கொண்டிருக்கும் 

கவிதை

சொல்லவொண்ணா பரிதவிப்பில் 

தனது வரிகளை ஒவ்வொன்றாய்ப் உதிர்த்து 

ஒன்றுமில்லாமல் போகிறது. 

வாசகக்காளான்கள் – 2

கடற்கரைமணற்பரப்பில் அங்குமிங்கும் அலைந்துதிரிந்து 

அத்தனை கூர்மையாய் கண்களால் தேடித்துழாவி

பிறைநிலவாய் பாதிமணலில் புதையுண்டிருக்கும்

அத்தனை மணியான கிளிஞ்சல்களைக் 

கண்டெடுத்து

அப்படியுமிப்படியும் திருப்பி அழகுபார்க்கும்

ரசனையிலாழ்ந்த வாசகமனம்.

அடுத்தவர் எடுத்துவந்து காட்டினால்தான்

கிளிஞ்சலை அடையாளங்காணமுடியுமென்றால்

பின் கடலெதற்கு அலையெதற்கு கரையெதற்கு 

நண்டெதற்கு….

இன்னொருவர் பரிந்துரையின்பேரில் மட்டுமே 

ஒரு கவியைப் படிக்க தொடங்குபவன்

கையிலிருக்கும் புத்தகத்தில்

காணாமல் போகட்டும் வரிகளெல்லாம்.Series Navigationகவிதையும் ரசனையும் – 21