‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 11 of 14 in the series 27 மார்ச் 2022

 

 

 

1.ஒரு நடிகையின் விடுதலை

 

அம்மா அணிந்துகொள்ளச் சொன்ன

குட்டைப்பாவாடை

அறவே பிடிக்கவில்லை அந்தச் சிறுமிக்கு

அடிக்கடி கீழ்ப்பகுதியை

இழுத்துவிட்டுக்கொண்டாள்

அப்படிச் செய்யாதே என்று அம்மா

அடிக்காத குறையாய் கண்களால்

உருட்டி மிரட்டினாள்.

அந்தப் பிரமுகர் சிறுமியை இழுத்து

மடியில் அமர்த்திக்கொண்டு

மார்போடணைத்தது

சிறுமிக்கு அறவே பிடிக்கவில்லை

அழுகையழுகையாய் வந்தது.

அவளுக்குக் கூச்ச சுபாவம் என்று

மகளின் அழுகையை மிகப்பிழையாய்

தெரிந்தே பொருள்பெயர்த்தாள் அம்மா.

அத்தனையோரமாய் மாராப்பை ஒதுக்கிக்

கொள்ளச் சொன்னது

ஆறா அவமானமாய் மனதை அழுத்தியது

அந்த வளரிளம்பெண்ணுக்கு.

அந்த நடிகையைப் பார் என்றார் அம்மா

அவளும்தானே பாவம் என்றாள் மகள்.

அந்த ஊரில் நடந்ததைக் கேள்விப்பட்டாயல்லவா

அம்மணமாய்க் கிடந்தாள் அந்தப் பெண்

அய்யோ எத்தனை அவமானப்பட்டிருப்பாள் அவள்

அய்யோ…. அய்யய்யோ…”

_ ஆற்றமாட்டாமல் அழத்தொடங்கினாள் மகள்.

அவசர அவசரமாய் அந்தக் கேவலைப்

படம்பிடித்துக்கொள்ளும்படி இயக்குனரிடம்

பணிவாய் வாய்மேல் கையைக் குவித்தபடி

ஆலோசனை வழங்கிய அம்மா

பின்னாளில் க்ளைமாக்ஸ்காட்சிக்கு உதவும்

என்றதை

அங்கிருந்த அனைவருமே சிலாகித்தார்கள்.

சாராயமல்லவா மனிதர்களை சீர்கெடுக்கிறது

என்று சுட்டிக்காட்டிய அம்மாவிடம்

சீமைச்சரக்குகளை விட்டுவிட்டாயே அம்மா

என்று மகள் வேடிக்கையாகவா சொன்னாள்?

அத்தனை நெருக்கமாக நடிக்கமாட்டேன்என்று

அடம்பிடித்த மகளிடம்

படுக்கையறைக் காட்சியல்லவா, புரிந்துகொள்

என்றாள் அம்மா.

பழகிய அழுகிய வாடை மனதில் குமட்ட,

ஒரு நாள் உண்மையான காதல் கிட்டும்போது

உடல்நெருக்கம் மரத்துப்போயிருக்குமோ என்ற

வருத்தம் முட்டியது மகள் மனதில்.

மறுபடியும் ஒரு படத்தில் நடிக்கச்சொல்லி

ஆடைத்தேர்வு பெண்ணின் சுதந்திரம்என்ற

வழக்கமான சொற்களோடு அம்மா

ஆரம்பித்தபோது

சும்மாயிருக்கச் சொல்லி சைகை காண்பித்தவள்

அம்மா, என் ஆடைத்தேர்வு என் சுதந்திரம்

எனப் புரிந்துகொள்ளுமளவு

வளர்ந்துவிட்டேன் நான்என்றாள்.

அம்மா வாயடைத்துநின்றாள்

 

  1. கவித்துவம்

 

குருவியின் மூக்கும்

புறாவின் கண்ணும் பச்சைக்கிளியின் நிறமும்

மயிலின் தோகை மினியேச்சர் அளவிலும்

கழுகின் கால்வளைநகங்களும்

நாரையின் நீளக்கால்களும்

பொருத்தப்பட்டு

வானவில்லின் வர்ணங்களை

எழுநூறாகப் பெருக்கிக்காட்டும்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்

அண்டார்ட்டிக்காவில் உருவாக்கிய

பின்னணியிசையோடு

நின்றுகொண்டிருந்த பறவையின் விஸ்வரூபம் கண்டு

வியந்து பிரமித்து வீதிநிறைத்துப்

பெருகி வந்திறங்கியவர்கள்

தனித்தனியாய் நின்று அந்தப் பறவையோடு

புகைப்படமெடுத்துக்கொண்டார்கள்

செல்ஃபியிலும் செல்ஃபியிலுமாக.

காகாகாவிலுள்ள மெய்யுயிர் மனதிற்குப் பிடிபட

அந்தச் சிறுவன் மட்டும் எப்போதும்போல்

அதன்பாட்டுக்கு மரத்தில் உட்கார்ந்து

கரைந்துகொண்டிருந்த காகத்தையே

ஆசையாசையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

 

 

  1. மொழிமனம்

 

மண்புழுவை மகா பாம்பு என்று

கண்ணையுருட்டிச் சொன்ன சிறுவனை

தப்பாகச் சொன்னதற்காயொரு

அப்பு அப்ப எழுந்துகொண்டு்

மகா பாம்பா, மகாப்பாம்பாஎது சரி

என்று ஒருகணம் குழம்பிய

பிறகு

மக்கு மக்கு என்று குட்டப்போன

உறவுக்காரரின் கையைத்

தட்டிவிட்ட தந்தை

ஈன்றபொழுதின் பெரிதுவந்துரைத்தார்

பக்குவமாய்:

என் பிரிய மகன் அரும்புகிறான்

பெருங்கவியாக!

 

Series Navigationகதைகள் இல்லாத மனிதர்கள் ஏது? மனிதர்கள் இல்லாத கதைகள்தாம் ஏது? – வளவ. துரையன் கதைகள்வானவில்(இதழ் 135) வெளிவந்துவிட்டது

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *