‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  1. கைவசமாகும் கருவிகளும் கூராயுதங்களும்

’அகிம்சை என்பதும் வன்முறையின் வடிவமே
என்று
வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் விமர்சித்தவர்கள் _

டாட்டா பிர்லாவின் கைக்கூலி
என்று
அடிக்கொருதரம் வசைபாடியவர்கள் _

பெண்களை மதிக்கத்தெரியாத அயோக்கியன்
என்று
மிதிமிதித்துக் கசையடி தந்தவர்கள்_

மக்கள் போராட்டங்கள் முழுவெற்றியடைய வொட்டாமல்
உண்ணாவிரதமிருந்து குட்டிச்சுவராக்கியவர்
என்று குற்றஞ்சாட்டியவர்கள் _

ராமராஜ்யத்தைப் பேசி சனாதன தர்மத்தைப்
பரிந்துரைத்தவர்
என்று
சகட்டுமேனிக்குப் பழித்தவர்கள்_

பெற்றபிள்ளையைப் பேணாதவர் மகாத்மாவா
என்று
மட்டந்தட்டியவர்கள்_

எல்லோருமே இன்று கொண்டாடுகிறார்கள்
காந்தியை.
அவர்கள் எல்லோருக்கும் காந்தி தேவைப்படுகிறார்_
அரசியல் சூதாட்டத்தில் பகடைக்காயாய்……
அடுத்தவரை வெட்டிச்சாய்க்கக் கூர்தீட்டும்
அருங் கருவியாய்.

  •  
  • நகர்வலம்

’அதோ பாருங்கள் _ அந்தத் தூணில்
நான் கட்டப்பட்டிருக்கிறேன்’,
என்று
ஆஸ்கார் விருதுபெற்ற
முகபாவத்தில்
கூறுகிறார் அரசர்
அல்லது
அரசி.

அவை பதற்றமடைகிறது.
அய்யய்யோ என்று அழத்
தொடங்குகிறார்கள் சிலர்.

’அதோ என்னை எரிக்கத்
தீப்பந்தத்தைக்கொண்டுவரும்
அந்தக் கூட்டத்தைப் பாருங்கள்
அவர்கள் நெருங்கிவிட்டார்கள்
அவர்கள் என்னை எரிக்கத்
தொடங்குகிறார்கள்.’
என்று அரசர்
அல்லது அரசி
குரலெடுத்துக்கூவ _

அவையோர்
அழத்தொடங்குகிறார்கள்.

அடுத்திருந்தவர்களைத்
தள்ளிவிட்டு
தடுக்கிவிழுந்தவர்களை
மிதித்துக்கொண்டு
ஓடத்தொடங்குகிறார்கள்.

அவர்களில் சிலர்
கைக்குக் கிடைத்த சிலரைக்
கடைந்தெடுத்த எதிரியாக்கிக்
கொன்று தீர்க்கிறார்கள்.

இன்னும் சிலர்
அவசர அவசரமாக
இரங்கற்பா எழுத
முற்படுகிறார்கள்.

இல்லை, நானே வாசிக்கிறேன்
என்று அந்த அரசர்
அல்லது அரசி
அவையோர் முன்
நடவாத தன் மரண நிமித்தம்
மனதையுருக்கும் ஒரு கவிதை
வாசிக்கத் தொடங்குகிறார்.

’மக்கள் நாம் ஒற்றுமையாக
இருக்கவேண்டும்’ என்றும்
’மற்றவர்களெல்லோருமே
கற்றுக்குட்டிகள்,
வெத்துவேட்டுகள்
மொத்தப்படவேண்டியவர்கள்
என்றும்
கெட்ட வார்த்தையில்
திட்டித்திட்டி
அன்பைப் புகட்டும்
அந்த வரிகளைக் கேட்டு
அழாதவர் இருக்கமுடியுமா?

அப்படியிருக்கும்போது
சொன்னால் சிரச்சேதம்
_ உண்மையாகவே எனத் தெரிந்தும்
ஓரிருவர் மட்டும்
‘நீங்கள் உயிரோடிருக்கிறீர்கள்,
உங்களை யாரும் எதுவும்
செய்துவிடவில்லை’
என்று உண்மையை
முணுமுணுப்பாய்க்கூடச்
சொல்லிவிடமுடியுமா?
அரசரிடம்
அல்லது
அரசியிடம்.

அப்படி வாயைத் திறப்போரை
வெட்டிப்போட
வாட்படை காலாட்படை
முதல்
சகலமும் உண்டு _
முகநூலிலும்.

  •  

3.கண்ணிருட்டும் பசியும்
இன்னுமான நெடுந்தொலைவும்
குழந்தைகளின் கைகளில்
பானகம் நிரம்பிய கோப்பை தரப்படுகிறது
ஆளுக்கு ஒன்றாய்.

வெய்யிலில் வந்திருக்கிறார்கள்
குழந்தைகள்.

அவர்களுடைய விழிகள்
சோர்வில் அரைமூடியிருக்கின்றன.
நாவறள தோள் துவள கால் தளர
வரிசையில் காத்திருக்கும்
அந்தக் குட்டி மனிதர்களைச்
சூழ்ந்துகொள்கிறார்கள் பெரியவர்கள்.

’யாரைக் கேட்டுக் கொடுத்தீர்கள் பானகம்?
குறிப்பாக, எங்களை ஏன் கேட்கவில்லை’
யென்று
அத்தனை ஆவேசமாகக் கேட்கும்
‘அங்கிளி’ன் முழி பிதுங்கித்
தெறித்துவிழுந்துவிடுமோ
என்று பயந்துபோகிறார்கள் குழந்தைகள்.

பானம் என்றால் பானகம் தானா –
வேறு எதுவும் இல்லையா
காம்ப்ளான், இளநீர், கொய்யாப்பழ ஜூஸ்
ஏன், வெறும் தண்ணீரே கூடக் கொடுக்கலாமே
என்று ஒருவர்
நீதிமன்றத்தில் குறுக்குவிசாரணை செய்யும்
தோரணையில் கேட்கிறார்.

உண்மையில் எப்பொழுதுமே முன்முடிவோடு
தீர்ப்பெழுதி தண்டனை வழங்கும்
நீதியரசர் அவர்.

பேருந்துப் பயணத்திற்கு வழியில்லாமல்
பிஞ்சுக்கால்களால் அத்தனை தூரம்
அந்தக் குழந்தைகள் நடந்துவருவதைப்
பார்க்காதவர்
யாரேனுமிருக்கமுடியுமா என்ன?

ஆனால், அவர்களை நோக்கி ஆதுரத்தோடு
தண்ணீர்க்குவளையை நீட்டிய கை
அரிதினும் அரிது.

”அதற்காக?
யார் வேண்டுமானாலும்
அவர்களுடைய தாகம் தீர்க்கட்டும்
என்று விட்டுவிடமுடியுமா என்ன?”

”குழந்தைகளின் தாகத்தைத் தீர்ப்பதற்கு
பானகம் நல்லதுதானே,
யார் தந்தால் என்ன?” என்று கேட்டவரின்
வாயிலேயே ‘சப்’ என்று அறைந்தபடி
வேறுவகை விபரீத பானங்களை விற்கும்
அப்பட்ட வியாபாரி யொருவர்
ஆத்திரத்தோடு கூவுகிறார்:

”என்னைக் கேட்டால் நான்
தந்திருக்க மாட்டேனா?”

“நல்ல காரியத்தை யார் வேண்டுமானாலும்
தாமாகவே செய்யலாமே?”

“தாராளமாக. ஆனால்,
அவர்கள் யார் என்பதைத்
தீர்மானிப்பது நானாக இல்லாதவரை
உங்களுக்குத் தொல்லைதான்.”

சொன்னவர் குரலிலிருந்த உறுதி
அசாதாரணமானது என்று
அங்கிருந்த அவருக்கு வேண்டப்பட்டவர்கள்
கரகோஷம் எழுப்புகிறார்கள்.

திடீரென்று ஏதோவொரு வகையில்
வாக்குவங்கிக்கும் வெறுப்பு அரசியலுக்கும்
தொடர்புடையவர்களாகிவிட்ட
உண்மையை அறியாதவர்களாய்
வெள்ளந்தியாய் கோப்பையை ஏந்தி நிற்கும்
அந்த வாடிய முகங்களின்
பின்னணியில்
ஷெனாயின் துணையோடு
சன்னமாய்க் கேட்டுக்கொண்டிருக்கிறது _

’THERE IS MANY A SLIP BETWEEN THE CUP AND THE LIP’

  •  
Series Navigationபின்நகர்ந்த காலம் – வண்ணநிலவன் -இலக்கியப் பார்வையில்ஞானக்கண் மானிடன்