‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

Spread the love

  1. நாவினால் சுட்ட வடு

பொருளிழந்த நிலையில் ஒரு வார்த்தை
பொருள்முதல்வாதப் பயன்பாடுகள் சில கருதி
திரும்பத்திரும்ப உச்சரிக்கப்படும்போதெல்லாம்
உயிர் துளைத்து உட்புகுந்து வரவாக்கும் ரணம்
வழக்கமாகிவிட்ட பின்னரும் _

வெடித்துமுடித்து வீதியோரம் வீசியெறியப்பட்டிருக்கும்
குருவி வெடிகளைக் காணும்நேரம்
குலைநடுங்கி யதிர்வதுபோல்
அஞ்சி நடுங்கும் மனம் _

இன்னொரு முறை யந்தச் சொல்லைக்
கேட்க நேரும் தருணத்தின் அவலமெண்ணி
அல்லும் பகலும்
அலைக்கழிந்துகொண்டிருக்கும்.

  •  

2.சிறகு மட்டுமல்லவே பறவை!

அறுந்த சிறகின் இன்மையை ஏற்க மறுத்து
சில காலம் மேலெழும்பப் பார்த்து
பொத்தென்று விழுந்து
மலங்க மலங்க விழிக்கும்….

நாள் செல்லச் செல்ல
சுவரோரமாய்த் தத்தித் தத்திச் சென்றபடி
சிறகிருந்த கால நனவோடையில்
நீந்திக்கொண்டிருக்கும்.

அடிக்கடி சொப்பனங்களில்
மீண்டும் பொருந்திய சிறகுகளோடு
ஆனந்தமாய்ப் பறக்கும்.

எத்தனை சிறகுகளிலிருந்தாலும்
தொடும் வான் ஆக வழியில்லாத
தொடுவானைக் கண்டு
தொலைந்த சிறகின் வலியிலிருந்து
தன்னைத் தாற்காலைகமாகவேனும் மீட்டெடுத்துக்கொள்ளும்
தருணங்களும் உண்டு.


  •  
  • யாருக்கு யார் யார்….?

ஒரு உறவிலான நம் இடம்

நிலையாக இல்லாமல்

நேரத்திற்கொருவிதமாய் மாறிக்கொண்டே

யிருக்கிறதே என்று

அதற்கான காரணம் தேடி

துயருற்ற மனதிடம்

சூரியனைச் சுற்றிவரும் பூமி

சாம்பலாகாமலிருப்பதை எண்ணிப்பார்

என்ற கவிதை

யளித்த ஆறுதலுக்கு

காலத்தைப் பரிசாக அளித்தாலும்

போதாது….

  •  
Series Navigationஅப்பால்…..நாடு கேட்கிறது