வஞ்சகத்தால் நிரம்பி வழிகிறது மனித மனம்

Spread the love

கோ. மன்றவாணன்

      கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டக் கிராமப் பகுதியில் பசியோடு வந்தது ஒரு பிள்ளைத்தாய்ச்சி யானை. அது யாருக்கும் தொல்லை கொடுக்கவில்லை. யாரோ சிலர், அந்த யானைக்கு அன்னாசிப் பழத்துக்குள் வெடிபொருட்களை மறைத்து வைத்துக் கொடுத்துள்ளார்கள். அது தனக்காகச் சாப்பிடவில்லை என்றாலும் தன் வயிற்றில் உள்ள குட்டிக்காகச் சாப்பிட வேண்டிய நிலை. அந்த வெள்ளந்தி யானை, மனிதர்களை நம்பி உள்ளது. அன்னாசிப் பழத்தை வாய்க்குள் நுழைத்துச் சாப்பிட முயல்கையில் அது வெடித்துவிட்டது. வலியால் யானை துடிதுடித்து உள்ளது. அதன் தும்பிக்கை, வாய்ப் பகுதிகளில் சதைகள் கிழிந்து சிதைந்து காயங்கள் ஏற்பட்டுள்ளன. பற்கள் யாவும் உடைந்துள்ளன. தாடைகள் நொறுங்கி உள்ளன. அப்படியானால் அது எவ்வளவு சக்தி வாய்ந்த வெடிபொருள் என்று ஊகிக்கலாம்.

      வலி பொறுக்க முடியாமல் ஓடிச் சென்று ஆற்றில் இறங்கி வாயையும் தும்பிக்கையும் தண்ணீரில் அழுத்தியபடியே சில நாள்களாக நின்றுள்ளது. தண்ணீர் ஒத்தடம் சற்று வலி குறைக்கும் என்று அந்த யானைக்குத் தெரிந்த மருத்துவமாக இருக்கலாம். அல்லது புண்களில் ஈக்கள் உட்காருவதைத் தவிர்ப்பதற்காக ஆற்றில் இறங்கி இருக்கலாம். வனத்துறையினர் கும்கி யானைகளைக் கொண்டுவந்து மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. அந்த யானையின் உயிர் ஆற்று நீரில் கலந்து கரைந்து ஓடியது. இந்தச் செய்தியைக் கேள்விபட்ட பலரும் மனம்பதைத்து உள்ளனர்.

      தேங்காயில் ஊசி செருகி யானையிடம் கொடுத்த  கதை ஒன்றை நம் சிறு பருவத்தில் கேட்டிருக்கிறோம். அது கற்பனைக் கதை என்று நம்பினோம். அன்னாசிப் பழத்துக்குள் வெடிவைத்துக் கொடுத்த நிகழ்வைப் படித்தபோது, அந்தக் கதைக்குத் தூண்டலாக அந்தக் காலத்தில் எங்கோ அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்கக் கூடும் என்றே மனம் நினைக்கின்றது. ஏன் என்றால்… முழுக்க முழுக்கக் கற்பனையாகக் கதை எழுத முடியாது. ஏதோ ஒரு நிகழ்வின் அடிப்படையில்தான் கற்பனையைக் கலந்து கதையை வளர்க்க முடியும். யானைக்குத் தேங்காயில் ஊசி செருகிக் கொடுத்த கொடூரன் அந்தக் காலத்தில் இருந்திருக்கலாம்.

      சிறுவயது நிகழ்வுகள் சில உண்டு. வாழைப்பழத் தோலைச் சாலையில் போட்டுவிட்டு, யாராவது வழுக்கி விழுகிறார்களா என்று ஆர்வத்தோடு பார்ப்பார்கள். நாயின் வாலில் வெடியைக் கட்டி, திரி கொளுத்துவார்கள். தும்பியின் வாலில் நூல்கட்டி அதன் சுதந்திரத்தைச் சிதைப்பார்கள். அடுத்தவர்களைத் துன்பப்படுத்தி அதில் மகிழ்ச்சி காணும் உளநோய் இது. அதன் தொடர்ச்சிதான் இத்தகைய கொடுமைகள்.

      தொன்று தொட்டு யானைகளும் தமிழர்களின் வாழ்வியலில் சேர்ந்தே வாழ்ந்து வந்திருக்கின்றன. மனிதர்களுக்கு யானைகள் பயனுடையவையாக இருந்து வந்துள்ளன.

      ஆனால்

      தற்காலத்தில் தந்தங்களுக்காவும் மருந்துகளுக்காகவும் யானைகளைக் கள்ளத்தனமாக வேட்டையாடுகின்றனர். இதில் கோடிக் கணக்கில் பணம் பார்க்கின்றனர் என்கிறார்கள். தற்போதும் ஆயிரக்கணக்கில் யானைகள் இந்தியாவில் இருந்தாலும் அவை அருகி வருகிற உயிரினமாகவே பார்க்க முடிகிறது. காடுகள் அழிப்பாலும்… வழித்தடங்களில் தடைகள் ஏற்படுவதாலும்… தண்ணீர், உணவு கிடைக்காமையாலும் யானைகள் ஊருக்குள் நுழைகின்ற சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்கின்றன. இதனால் மனிதர்களுக்கு உயிர் அச்சம் ஒருபுறம். கடன்பட்டுச் செய்த வேளாண்மையில் இழப்பு ஏற்படுமோ என்ற பயிர் அச்சம் மறுபுறம்.

      உயிர் அச்சம் பயிர் அச்சம் இவற்றுக்கு இடையில் யானையை விரட்ட பல முயற்சிகளை மக்கள் மேற்கொள்கின்றனர். தீப்பந்தங்கள் ஏற்றி வைக்கிறார்கள், ஊர் எல்லையில் பள்ளங்கள் வெட்டி வைக்கிறார்கள். வெடிச்சத்தம் முழக்குகிறார்கள், தகரங்கள் பாத்திரங்களைத் தட்டி அதிரொலி எழுப்புகிறார்கள். வனத்துறையினருக்குத் தெரிவித்து மயக்க ஊசி போட்டுப் பிடித்துச் சென்று காட்டில் விடச் செய்கிறார்கள்.. ஆனால் யானைகளை அவர்கள் கொல்ல நினைப்பதில்லை.

      யானை ஊருக்குள் வந்தால் அதை விரட்ட முயன்றிருக்க வேண்டுமே தவிர, பாச நடிப்புக் காட்டிப் பழத்தில் வெடிசெருகிச் சாப்பிட வைத்துக் கொன்றிருக்கக் கூடாது. கொலையிலும் இது கொடுமையான கொலை ஆகும். அந்த யானைக்கு வாய்ப்பேச்சு இல்லை என்பதால் மரண வாக்குமூலம் கொடுக்க முடியவில்லை. சில நாள்களாக உணவுண்ண முடியாமலும் உறக்கம்கொள்ள முடியாமலும் ஆற்றிலேயே நின்றிருந்த யானை என்ன நினைத்திருக்கும்? தன் வயிற்றில் வளரும் குட்டியைக் காப்பாற்ற முடியாமல் இறக்கிறோமே என்று கண்ணீர் விட்டிருக்கும். தன் உறவு யானைகளுக்குச் செய்தி சென்று சேர வழியில்லையே என்று கலங்கி இருக்கும். இந்தக் கொடூர மனிதர்களிடம் ஏமாந்து இன்னும் எத்தனை யானைகள் இறக்குமோ என்று வேதனைப் பட்டிருக்கும்.

      அவ்வப்போது யானைகள் கொல்லப்படும் நிகழ்வுகளை நாம் அறிவோம். ஆனால் அன்னாசிப் பழம் என்று நம்பி சாப்பிட்டு இறந்த இந்த யானைக்காக மட்டும் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறோம்.

      நம் நீதிமன்றங்களில் மனிதக் கொலைக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கிறார்கள். அதைத் தினச்செய்தியாக கடந்து போகிறோம். கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சத்தைப் பதற வைக்கும் அரிதினும் அரிதான மனிதக் கொலை வழக்கில் மட்டுமே தூக்குத் தண்டனையை விதிக்கிறார்கள். அதுபோல அன்னாசிப் பழத்தில் வெடிவைத்துக் கொடுத்து யானையைக் கொன்றதும் அரிதினும் அரிதான கொடுமையான விலங்குக் கொலைதான். அதனால்தான் அந்த நிகழ்வைக் கேள்விபட்டவுடன் நமக்கு நெஞ்சு பதறுகிறது.

      விலங்குகள் தாவரங்கள் உள்ளிட்ட எல்லா இயற்கைப் படைப்புகளுக்கும் இந்த உலகம் சொந்தம்.  ஆனால் உலகம் முழுமையும் தமக்கே சொந்தம் என்று நினைக்கிறான் தன்னல மனிதன். அதனால்தான் ஒவ்வொன்றாக அழித்து வருகிறான்.

      அன்னாசிப் பழத்தில் வெடிமருந்து வைத்து யானைக்குக் கொடுத்துள்ளார்கள் என்றும் சொல்கின்றனர்.. பயிரைக் காக்கும் பொருட்டு, காட்டுப் பன்றிகளைக் கொல்வதற்காக வைக்கப்பட்ட அன்னாசிப் பழவெடியைத் தானாகவே யானைச் சாப்பிட்டுள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்துப் பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

      எனினும்-

      உணவில் நஞ்சு வைத்துக் கொள்ளும் உத்தியைக் கையாளும் ஒரே உயிரினம் மனிதன்தான். விலங்குகளுக்கு இந்த வஞ்சக நெஞ்சம் இல்லை. அதிலும் உணவுப் பொருளில் வெடிசெருகிக் கொடுக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது விலங்குகள் மேன்மையானவை.

      கடவுள் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

      ஆனால் அவன் நேரில் தோன்றுவதில்லை.

      மனிதனைக் கண்டு அவனும் அஞ்சுகிறான்.

Series Navigationகாலப்பயணமும் , காலமென்னும் புதிரும்தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]