வடகிழக்கு இந்தியப் பயணம் : 14 

This entry is part 6 of 7 in the series 26 ஜூன் 2022

வடகிழக்கு இந்தியப் பயணம் : 14 சுப்ரபாரதிமணியன்

 

 

 

வடகிழக்கு இந்தியாப்பகுதிகளை சுற்றிப் பார்க்கிற போது  பல மணிநேரங்கள் பயணம்… அதன் பின்னால் ஒரு அருவியை, ஒரு பெரிய குகையை,  ஒரு பள்ளத்தாக்கினைப் பார்க்க நேரிடும். பல பேருக்கு இந்த நீண்ட பயணம்… .ஓர் இடம் என்பதெல்லாம் அலுப்பு தரக்கூடும் நான்கு மணி நேரம் பயணித்து விட்டோம் ஒரு அருவியை தூர இருந்து ரசித்து விட்டு வர வேண்டும் .அருவியில் குளிக்க வாய்ப்பு கூட இருக்காது இதற்கு ஒரு நான்கு மணி நேர பயணம் என்ற கேள்வி வரும். அருவியை பார்க்கிற அனுபவம் தாண்டி அந்த நான்கு மணிநரம் பேருந்திலோ வேறு வாகனத்திலோ பயணப்பட்டு மலைகளையும் குன்றுகளையும் பள்ளத்தாக்குகளிலும் தூரத்து காட்சிகளையும் பார்த்துக்கொண்டே செல்வது தான் ஒரு சிறந்த அனுபவம். முக்கியமான இடத்தை பார்க்கிற நல்ல அனுபவம் போலவே வாகனத்தில் செல்கிறபோது சுற்றிலும் இருக்கிற இயற்கை வளம் மிகுந்த இடங்களை பார்ப்பது கூட. இதை உணராமல் இவ்வளவு நேரம் பயணம் செய்து இதைத்தான் பார்க்க வந்திருக்கிறோம் என்று அலுத்துக் கொள்வார்கள் சிலர். பயணம் தான் முக்கியம் பயணத்தில் தென்படுகிற பெரும் மலைகளும் இயற்கை காட்சிகளும் பள்ளத்தாக்குகளும் சாலை விலங்குகளும் ,நடமாடக் கூடிய வெவ்வேறு மனிதர்களும் சிறுசிறு கிராமங்களும் முக்கியம்..கிராம சிறு உணவகங்களில் கிடைக்கும் பிரத்யேக உணவுகள் இன்னும் முக்கியம்.

 இது சார்ந்து பயணத்தின் குழு தலைவர் கிறிஸ்டோபர் ஒரு சம்பவத்தை சொன்னார்.அவருக்கு  அப்போது உயர்நிலைப்பள்ளி வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது கோவையிலிருந்து ஊட்டிக்கு எட்டு ரூபாய் கட்டணம் அவருடைய சகோதரர் அவருக்கு இருபது ரூபாய் பணம் கொடுத்து நீ ஊட்டி போயிட்டு வா என்று சொல்லி இருக்கிறார் ஊட்டியில் படகு சவாரி செய்யும் இடமும் பொட்டானிக்கல் கார்டன் மட்டுமே முக்கியமான இடங்கள் அல்ல. நீ செல்கிறபோது  இருக்கிற எல்லா இடங்களும் முக்கியமானவை. அழகான மலைகள் குன்றுகள் பள்ளத்தாக்குகள் இயற்கை காட்சிகள், மரங்கள் கடந்து செல்லும் மனிதர்கள் எல்லாம் முக்கியம். இவை எல்லாம் கடந்து படகு இல்லம், கார்டன் ஒரு செல்ல வேண்டும். அவற்றை எல்லாம் விட போகும் இடங்களில் இயற்கை காட்சிகள் மிக முக்கியம் அதை பார்த்துக் கொண்டே செல் என்று சொல்லியிருக்கிறார் .ஊட்டிக்கு போகிறபோது டிக்கெட்டுக்கான பணத்தை நடத்துனரிடம் தந்திருக்கிறார் அவர் ஒரு ரூபாய் மிச்சம் தர  வேண்டி இருந்திருக்கிறது நடத்துனர் அந்தப்பக்கம் வருகிற போதெல்லாம் பணம் தருவார் என்று எதிர்பார்த்திருக்கிறார். அவர் வருவதை போவதையே கவனித்திருக்கிறார் .அவர் பணம் தருவாரா மாட்டாரா என்ற குழப்பத்தில் அவரையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருக்கிறார். பிறகு ஊட்டி சேரிங் கிராஸ் வந்தபோது அந்த  நடத்துனர் நீங்கள் இங்கு தானே இருக்கவேண்டும் இறங்குங்கள் என்று சொல்லி அந்த மீதி பணத்தை கொடுத்திருக்கிறார். மீதி பணம் கைக்கு வரும் வராதா என்ற நினைப்பிலேயே அவரையே பார்த்துக் கொண்டிருப்பது, அவர்  இருக்கை அருகில் வருகிறபோது பணம் தருவார் என்று எதிர்பார்ப்பது, அவரைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது இப்படியே கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்கிற பயண நேரத்தை அவர் கழித்திருக்கிறார் அவர் பயணத்தின் போது என்னவெல்லாம் பார்க்க வேண்டும் என்று அவருடைய சகோதரர் சொன்னதை தவற விட்டதால் முதல்தரம் ஊட்டிக்கு போனபோது ஊட்டியின் அழகை பயணத்தில் ரசிக்கிற வாய்ப்பை இழந்திருக்கிறார். சரி திரும்பி வருகிறபோது பார்க்கலாம் என்று எண்ணி இருக்கிறார் மதியம் நல்ல சாப்பாடு அவருக்குக் கிடைத்திருக்கிறது வயிறு முழுக்க சாப்பிட்டு இருக்கிறார். பேருந்தில் ஏறி உட்கார்ந்தால் கொஞ்ச நேரம் தூக்கம் .பிறகு அதிகமாக சாப்பிட்டதால் வளைவுகளில் பேருந்து செல்ல வேண்டியிருந்ததால் கொஞ்சம் வாந்தி எடுக்க வேண்டியிருக்கிறது வாந்தி எடுத்த பின்னால் மனநிலையும் உடல் நிலையும்  மாறி இருக்கிறது ஆகவே உடல் சோர்வில் கண்களை மூடிக்கொண்டு கிடக்க வேண்டியது இருக்கிறது. அதனால் ஊட்டியிலிருந்து திரும்புகிற போது அவர் சகோதரர் சொன்னமாதிரி இயற்கை காட்சிகளை ரசிக்க முடியவில்லை. போகும் போதும்,  சரி வரும் போதும் சரி இந்த அனுபவம்தான் . அதனால்  ஓர் இடத்திற்குப் போகும் போது அந்த இடம் இரண்டாம்பட்சம்தான் போகிற வழியில் இருக்கிற இயற்கை காட்சிகளும் மற்றவையும் தான் முக்கியம் என்பதை கிறிஸ்டோபர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். பல மணி நேரம் பயணம் செய்து ஒரு இடத்தை அடைந்து அங்கு ஒரு பத்து நிமிடங்கள், அல்லது  அரை மணி நேரம் கழிப்பது என்பது  பலருக்கு முகம் சுளிக்கும் விசயமாக தான் இருந்திருக்கிறது. ஆனால்வேடிக்கை பார்ப்பதை சென்னை நண்பர்கள் கண்ணய்யா, செந்தமிழ்தாசன் ஆகியோரும் அனுபவித்தனர் .சில சிரமங்கள் இருக்கும். ஆட்டு வாலை வெட்டி விட்டு கன்றுக்குட்டியென  விற்கிறத்திறமை இது போன்ற பயண ஏற்பாட்டாளர்களிடம் எப்போதும் உண்டு என்பார் கோவை முத்துசாமி. . எங்கே போனாலும் இந்த சாலை, விரிவாக்கம் செய்வதைக் காண முடிகிறது. பஞ்சாப் போனாலும் இதே கதிதான் என்பார் மூர்த்தி. உடல் உபாதைகள் இருந்தாலும் தாங்கிக்கொள்ள பழகுவதும் பொறுமையும் பயணங்களில் சாதாரணம். வலது கடவாய்பல்லொன்று  ஆடிக்கொண்டேயிருந்தது. வலுக்கட்டாயமாக்கி விழுந்து விடச்செய்ய வேண்டும் என்று பேருந்துப் பயணங்கள் போது முயன்றேன். முடியவில்லை. கோவா திரைப்பட விழாவுக்குச் சென்ற போது இடது கடவாய்ப்பல்லொன்று இப்படித்தான் சிரமம் தந்தது. சேரே பஞ்சாபி ஓட்டல் ஒன்றில் உலக சினிமா பாஸ்கரனுடன் உட்காந்து மட்டன் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது , கடக் என்று வினோத சப்தம். மட்டன் எலும்பு கடிபடுகிற சத்தமா என்றிருந்தது. கடவாய் பல்தான் கழன்று விட்டது. ஆகா எவ்வளவு பாக்யம் என்றிருந்தது. அதேபோல் இந்த ஷில்லாங் பயணத்தில் வலது கடவாய்ப் பல்லுக்கு நேர்ந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன் .

மதமாற்றம் அதிகமாக ஒரு காலத்தில் இங்கு இருந்திருக்கிறது. ஞாயிறில் மக்கள் சாரைசாரையாக தேவாலயத்திற்குச் செல்வதைப் பார்க்க முடிந்தது.இந்து கோவில்கள் கண்ணில்படவில்லை.பல பயணங்களில் கூட இருக்கும் பி எஸ் என் எல் மூர்த்தி ஷில்லாங்கின் எட்டு டிகிரி குளிரிலும் வெறும் காலோடு அறையில் உலாவுவார்.பனி படர்ந்த நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்வார். கழுத்தில் மாட்டியிருந்த ருத்ராட்சி தீட்சைபெற்றதால் கட்டியதல்ல. பிடித்திருந்தது. கட்டிக்கொண்டேன் என்றார். கோவில் போவது , சடங்குகளில் அதிக விருப்பம் இல்லை என்றார்

பல சமயங்களில் இது போன்ற பயணங்கள் தனியாக அமைந்து விட்டால் தமிழில் பேச மாட்டோமா , தமிழைக்கேட்க மாட்டோமா என்றிருக்கும்.   நெல்லூரில் வசிக்கும் கிறிஸ்டோபர் பேரன் எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தான் மழலை மொழியில். “ இங்க தமிழ் பேச ஆளில்லெ “  என்று  அவரிடம் எப்போதும் தொலைபேசியில் சொல்வானாம்.

பயணம் என்பதில் சக மனிதர்களை சந்தித்தலும், இயற்கையை உள்வாங்கி கொள்வதும் தான் முக்கியமான அம்சங்களாக இருக்கிறது என்பதை வடகிழக்கு இந்திய பயணத்தில் வாகனங்களில் செல்லும்போது கண்டுணர்ந்த காட்சிகள் திரும்பத் திரும்ப என் மனதுள் என்னுள் வந்து கொண்டிருந்தன அது மகத்தான  அனுபவம்.

   

 

Series Navigationசொல்வனம் இணையப் பத்திரிகையின் 273 ஆம் இதழ்‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *