வலியும் வன்மங்களும்

ஜாசின் ஏ.தேவராஜன்

பட்டணத்தையொட்டியுள்ள சேவல் இழுத்துப் போர்த்தித் தூங்கிக்கொண்டிருக்கிறது.

“ ‏இப்ப எந்திரிக்கப் போறியா இல்ல… தொடப்பக்கட்டையக் கொண்டாரவா!”

“ எந்திரிக்கிறேன்னு சொல்றேன்ல…! யேம்மா காலங்காத்தாலே நாய் மாரி கத்திக்கிட்டிருக்க… நிம்மதியா தூங்கக்கூட முடியாதா?”

“ ஓ அம்மாவையே நாயின்னு சொல்றீயா..! சொல்லுவடா சொல்லுவெ… சீனங்கடையில மங்கு கலுவி வேளா வேளைக்கிக் கொட்டுறேன்லெ… சொல்லுவெடா… நல்லா சொல்லு… இவ்வள நாளு ஒங்கப்பாதான் சொல்லிக்கிட்டிருந்திச்சு… இப்ப நீயுமா?”

“பெசாம வாயெ மூடுமா ! எப்பப் பாத்தாலும் கிறுக்குப் புடிச்ச மாரி…”

“ என்னாது கிறுக்கா!என்னத்தக் கேட்டுட்டேன்னு இப்பிடி எரிஞ்சி விலுறெ? நா அம்மாடா!”

“ இப்ப அதுக்கு என்னான்றெ..?”

“ அம்மாக்கிட்ட இப்பிடிப் பேசலாமாடா?”

“ நீ மட்டும் என்னா மரியாதியாவா பேசுறே? என்னிக்காவது க்கூலா பேசிரிக்கியா

நீனு”

“ கோய்ச்சிக்காதடா மணி… ஒலுங்கா பேசுன்னுதானெ சொல்ல வர்றேன்!”

“ அதுக்கு இப்பிடியா பேசுறது? என்னமோ ரொம்ப ஒலுங்கா மாரி?”

அவன் கடைசியாய்ச் சொன்னது முணகல்போல் இருந்தாலும் மனம் திடுக்கிட்டுச் சட்டென்று பேச்சு நின்றுபோனது கமலாட்சிக்கு. ஒழுங்காவென அழுத்தமாக அதுவும் இரகசியம் பேசுகிற மாதிரி கேட்கிறானே? ஊருலகம் ஆயிரம் பேசும். அததுங்களுக்கு பட்டாதானே வலி தெரியும். பேசட்டுமே! ஆனால்…இவன் பேசலாமா?

அலங்கோலமாய்க் கீழே விரிக்கப்பட்ட சப்பை மெத்தையில் கண்களைக் கசக்கியபடி நிமிர்ந்து உட்கார்ந்தபோது மணியின் முகத்தில் தலையணையிலுள்ள பஞ்சு திட்டுத் திட்டாய்  ஒட்டிக்கிடந்தது. அச்சோ…வெனத் தும்மியபோது பக்கத்தில் படுத்திருந்த ட்டோமி நித்திரை கலைந்து வாலைச் சுருட்டிக்கொண்டு ஓடியது.அப்படி இப்படியென்று போர்வையை உதறிவிட்டு எழுந்தபோது பொழுது பொல பொலவென வெளுத்திருந்தது. நெட்டி முறித்த கையுடன் பல்லைத் துலக்கி முகத்தை மட்டும் அலம்பிக்கொண்டு தே ஓவை ஒப்புக்குக் குடித்துவிட்டு சட்டைக்குமேல் சட்டையைப் போட்டுக்கொண்டு கிளம்பினான். பள்ளிக்கூடம் பிள்ளைகளை அடைத்துவைத்திருக்கும் நரகமாகவும், அவனைப் போன்றவர்களைத் துப்பித் தள்ளும் இயந்திரமாகவும் இருப்பது போல் உணர்வு. பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் படிப்பை மட்டும் திணிக்கும் போக்கு அவனுக்குக் கசாயமாய் இருந்தது. இதற்கு மாற்று மருந்தாகப் பள்ளிக்கூடத்துக்குப் போகிற சாக்கில் மனக்குழப்பம் முற்றி வேறு பக்கம் ஒதுங்கவேண்டிய நிலை அதுவாகவே உருவானது. மேயுற மாட்ட நக்குற மாடு கெடுப்பதுபோல போகிற வழியில இன்னொருவனும் அவன் கண்ணில் படவேண்டியாதாச்சு. மணி உசுப்பிப் பார்த்தான்.

“ வர்ரீயாடா?”

“ பொந்தெங்கா..? போடா! ஏற்கெனவே வாங்குனது பத்தலையா? இப்ப உங்கூட சுத்துனெனா அவ்ளதான்!” வந்தவன் வாய்விட்டே சொன்னான்.

“ ஒனக்கு மட்டுந்தானா? சும்மா பெருசா பீத்திக்காதெ!நம்மள மனுசனா மதிக்கிறதுக்கு நாம என்னா 8ஏ 10ஏ எடுக்கிற ஆளா? வுடுடா மச்சான்!இப்ப நான் சொல்ற எடத்துக்கு வர்ரீயா?”

“ ஸ்கூலு?”

“ அது பத்திரமா அங்கியேதான் இருக்கு!” கெக்கெக்கேவெனச் சிரித்தான் மணி.

“ டே ஒனக்கு பயமே இல்லியாடா?”

“ எதுக்குடா பயந்துக்கிட்டு ? அரசாங்கத்தோட காசத் தின்றமா? தண்ணி சிகரெட்டுன்னு அலையிறோமா? இல்ல பொம்பள புள்ளைங்க பின்னாடி சுத்துறோமா? போண்டான் மாரி பயந்துகிட்டேயிருந்தா பொளைக்க முடியாதுடோய். நாம என்னா ஊரான் பொளப்புலயா மண்ண போடுறோம்? ஸ்கூலுக்குப் போவாட்டி பின்னாடி ரெண்டு ரோத்தான் போடுவாய்ங்க. அப்புறம் மூனுவாட்டி சூராட் அமாரான் லெட்டரு அனுப்புவாய்ங்க. அதுக்கப்புறம் ஜபாத்தானுக்குப் போயி சைனு வாங்கிட்டு வரச் சொல்லுவாய்ங்க. அப்புறம் ஸ்கூலு மாத்துவாய்ங்க. கடசியா எங்கனாச்சும் பக்கமா ஸ்கூலு பாத்துப் போக வேண்டியதான். அப்புறம் இத்தனிக்கும் பிறகு நாம என்னா மந்திரியாவா போறம்? டே! ச்சும்மா இருடா…இதென்னா பெரிய விசயமா?”

“ நீ பருவால்ல ! எங்க அப்பாவுக்குத் தெரிஞ்சா பொளந்து கட்டிருவாரு. இப்பொ நான் எதுக்கு வர்றனுங்கிற? கொம்ப்யூட்டர் கேம் வெளையாடவா?”

“வாயில செவ செவயா வருது..! காலாங்காத்தாலேயே வாயைக் கிண்டாதெ! பேசுறான் பாரு கிண்டகாடன் புள்ளையாட்டம்! தேவையடா அது? பேக்கான் மாரி பேசாதெ! இப்ப எங்கூட வந்தீனா கொறைஞ்சது நூறு நூத்தியம்பது வெள்ளியாவது கெடைக்கும தெரிமா!”

“ யேண்டா எப்பப் பாத்தாலும் காசு காசுன்னு பொலம்பிக்கிட்டே இருக்கே?”

“ஒனக்கென்னா மச்சான்… வீட்டுல எல்லாரும் வேலை செய்யிறாய்ங்க! காசோட அருமெ ஒனக்கெங்கே தெரியும்?நான் வேலைக்கி போயித்தான்டா ஆகணும்.தெனைக்கும் வீட்டுல எப்பட்றா காசு கேக்குறது… சட்டெ சிலுவாரு வாங்கணும்… சப்பாத்து கிலிஞ்சி… மொதல வாயி மாரி போங்காவா கெடக்குது.. ஒம்போது வருசமும் அதையே போட்டாக்கா பின்ன எப்படியிருக்குமா? அதுவும் வாங்கணும்… ஸ்கூல்ல நெனைச்ச நேரத்துல அதுக்கு இதுக்குன்னு காச புடுங்குறாய்ங்க.வீட்டுச் செலவுக்கும் பாக்கணும்…நேத்து வீட்டுல ஒலுங்காகூட சாப்பாடு இல்ல தெரிமா? வாய்க்கு ருசியா சாப்பிட்டு நாளு கணக்காச்சி மச்சான் !”

மச்சான்.. மச்சான் என்ற மணியின் தளுதளுத்த பேச்சு அவனை என்னவோ போலாக்கியது. அவன் முன்னால் தலை கவிழ்ந்துகொண்டு பின்தொடரவேண்டியிருந்தது குணாளனுக்கு. கட்டுமானப் பகுதியையொட்டி அவர்களின் மிதிவண்டி அலேக்காகச் சென்றது. எங்கெங்கே என்ன இருக்குமென்று ஏற்கெனவே இடத்தையெல்லாம் பார்த்துச் சிலவற்றைப் பொறுக்கி நேற்றே புதர்ப்பக்கமாய் மறைத்தும் வைத்திருந்தான் மணி. பேசிக்கொண்டே வேலையில் இறங்கியபோது குணாளனையே நோட்டமிட வேண்டியிருந்தது. வேலைக்குப் புதுசு அல்லவா?

“ நல்ல கனமான இரும்பா பாத்துப் பொறுக்குடா மச்சான். சாதாரண டப்பியா இருந்தாலும் வுட்டுடாதெ! எல்லாமெ காசுதான்! அருமெ தெரியாம வீசிருக்கானுவ ! இங்க எவ்வனும் வரமாட்டான். கொறவன் மாரி முழிக்காம அள்ளு அள்ளு!நாம யாரோட பொருளயும் திருடல, தெரிமா?”

“ எவ்ளடா பொறுக்கணும்? இதெல்லாம் நம்மனால தூக்கிட்டுப் போக முடியுங்கிறே?”

“ ஒனக்கு இப்ப என்னாத்துக்கு மசுரு கேள்வின்றேன்? காசு வேணுமா வேணாமா?  நான் ஒண்டியா செய்யிலே? செம்ம காசு! அம்மா கையில கொண்டு போயி கொடுக்குறப்ப மனசு எப்பிடி இருக்கும் தெரிமா? வீட்டுல  ஓட்ட டீவி, ஓட்ட மோட்டரு, ஓட்ட சிலுவாரு எல்லாமே ஓட்டதான். அதுகூட பருவால்லெ. கையில காசு இல்லாட்டி எப்பட்றா ஓட்டறது? தோ முந்தாநேத்துகூட தாமான்ல முறுங்கக்கா போயி வித்தேன். பதினஞ்சு வெள்ளி கெடைச்சிச்சி. இன்னிக்கி இதுல! நம்மள கண்டா மொறைப்பாய்ங்க. ஆனா பயப்படக்கூடாது.நமக்குன்னு பாதுகாப்பு வேணும்!இந்தக் காச வச்சித்தான்  ஹென்போன் வாங்குனேன். ஏதும் ஒன்னுன்னா கைங்களுக்கு இதிலேயே ஒரு மிஸ் க்கோல் குடுத்தாபோதும்.. உயிரக் குடுக்கக்கூட வருவாய்ங்க! எனக்குத்தான் பொறந்த நேரமே சரியில்லன்னு அம்மா சொல்லும் …அதையும் மோப்பம் பிடிச்சி ஸ்கூல்ல ரம்ப்பாஸ் பண்ணி எம்பேர ஈ டிசிப்ளின்ல போட்டுட்டாய்ங்க!”

“ எனக்காவது பரவாலடா. அப்பா அண்ணன் அக்கான்னு இருக்கு…. ஏண்டா ஒங்க வீட்டுல மட்டும் இவ்ளோ பெரச்சனெ? யேன் ஒங்கப்பா என்னத¡ன் பண்றாரு?”

“ அதப்பத்திக் கேக்காதெ.. எங்க வீட்டுல அப்பாக்குப் பின்னாடி.. அம்மாக்குப் பின்னாடி.. பின்னாடி பெரிய பெரிய கதையே இருக்கு. அதச் சொன்னெனா மண்டைக்கு மேல ஏறிடும்! வேணாம்! … மசமசன்னு நிக்காம இரும்பையெல்லாம் எடுத்துப் பையில கட்டு மச்சான்.. சடையன் கடைய மூடிட்டுப் போயிட்டான்னா அப்புறம்  எங்க போயி வெக்கிறது? எவனாவது சின்னாங்கா லப்பிட்டுப் போகவா? இதெல்லாம் நம்மளோட ஒளப்பு தெரிமா?காலயிலருந்து சொட்டுத் தண்ணியில்லாம ஒ¨ளக்கிறோம். ஞாபகம் இருக்கட்டும்!”

“ உண்மையிலெ நீ நல்லா வேல செய்யுறடா! இன்னிக்கு எவ்வளடா கெடைக்கும்?”

“ நூத்தியம்பதுக்குக் கொறையாது பாரென்!”

உச்சி வெயில் சொல்லி வைத்தாற்போல் உச்சந்தலையில் குட்டியது. நாவின் மேற்பரப்பு சொற சொறவென்று வறண்டுபோக, தொண்டைக் குழிக்குள் அடிபட்ட பாம்பு புற்றுக்குள் நுழைவது போல உமிழ் நீர் தடுமாறி இறங்கியது. வேறு வழியின்றி சாலை மருங்கில் அமைந்த வாரூங்கில் சீராப் ஐஸ் வாங்கிக் குடித்துவிட்டு மீண்டும் பொறுக்கிய இரும்புத் துண்டுகளை மிதிவண்டியில் வளைத்து இறுக்கிக் கட்டி, உருட்டிக்கொண்டு நகர்ந்தனர்.

வெயில் நேரமானதால் அந்தப் பழைய இரும்புக் கடையில் ஆள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. கடைக்கு முன்னே ரெண்டுமூனு லோரிகள் மட்டும் இருந்தன. மணிக்குச் சீனம் பேச ஓரளவு தெரியும்.ரொம்பவும் கவனமாய்ப் பேரம் பேசி, நிறுத்துப் பார்த்து வாங்க வேண்டியதைக் கணக்காய் வாங்கிக் கொண்டான். பணம் கிடைத்த மகிழ்ச்சியில் இருவருக்கும் விலா பக்கத்தில் இறக்கை முளைத்தது. இடையில், மாமாக் கடையில் மீ கோரெங் சாப்பிட்டபோது உடலில் கொஞ்சம் தெம்பு கூடியிருந்தது. அவனுக்குச் சீக்கிரமாக வீட்டுக்குச் செல்ல மனமில்லை. போனாலும் ஒன்றுமில்லையென்பதால்,அவனது மாலை நேரம் தாமானில் உள்ள திடலில் கழிந்தது. அஞ்சாறு பொடியன்கள் சேர்ந்து ஓட்டைப் பந்து ஒன்றைத் தொலைவிலிருந்து உதைத்துக் கொண்டு வந்தார்கள். மணிக்குக் கால்கள் பரபரத்தன.உடல் சக்தி தீரும் அளவுக்கு அவர்களோடு காற்பந்து ஆடிவிட்டு அந்தி சாய்ந்தபின்தான் வீட்டிற்குப் புறப்பட்டான். போகிற வழியில் பத்துக் கிலோ ஜாத்தி அரிசி மூட்டையையும், மூன்று சார்டின்களையும், பத்து முட்டைகளையும் வாங்கிக்கொண்டான்,

மாலை 6.30 இருக்கும். கைநிறைய காசோடு அம்மாவை உட்கார வைத்து அவளது கைலியில் பணத்தைக் கொட்டிக் குதூகலப்படுத்தியபோது , அவன் பள்ளிக்குச் செல்லாதது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை காமாட்சிக்கு. காசைப் பார்த்த மகிழ்ச்சியில் அவனிடம் “சோறு சாப்பிட்றீயாடா? ” எனக் கேட்டார். கழற்றிய டி ஷர்ட்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டு தோளில் போட்டுகொண்ட மணி, குசினி நாற்காலியில் காலை அகட்டி உட்கார்ந்துகொண்டு , அம்மா போட்ட கருவாட்டுக் குழம்பைச் சோற்றோடு பிசைந்து ஆசை ஆசையாய் ரெண்டு மூனு கவளத்தை உள்ளே தள்ளினான். அந்த நேரம் பார்த்துத்தான் அவனுக்குப் பின் முனியாண்டி சாமி போல முட்டைக்கண்களும் முறுக்கு மீசையுமாய்த் திடீரென வந்து நின்றார்  முத்தையா. கமலாட்சிக்கு உள்ளூரக் கடபுடா கடபுடாவென்றிருந்தது.

“வந்து சேர்ந்திருக்கானுவ பாரு! அவங்கப்பன மாரிதானெ இருப்பான். தண்டக் கருமாந்தரம்! கண்ட கண்ட நாயிங்களுக்கெல்லாம் ஆக்கிக் கொட்டவேண்டிக் கெடக்கு!  அவனெ ஸ்கூலுக்குப் போகச் சொன்னியா இல்ல இரும்பு பொறுக்கப் போகச் சொன்னியா? பேரக் கெடுக்குறான்! பேரக் கெடுக்குறான்! வர்ற வழியில வாத்தியாரு என்னப் பாத்து மட்டமாக் கேக்குறாரு.. என்னான்னு சொல்றது? புள்ளையா இவன்! பெரியவங்களுக்கு ஆயிரம் இருக்கும்,இந்தப் பரதேசி நாயிக்கென்ன? எங்கெங்கே திருடுறானோ யாரு கண்டா… அதான் போறவன் வர்றவனுங்களே கத கதயா சொல்றானுன்களே இவன் லச்சணத்தெ! இங்க பாரு! நான் ஒருத்தன் இங்க தொண்ட கிலியக் கத்திக்கிட்டிருக்கேன்.. காதே கேக்காத மாரி..அவன பாரு… அவனப் பாரு… லபக் லபக்கின்னு பரதேசி நாயி தின்டற மாரி! செய்யுறதெல்லாம் செஞ்சிப்புட்டு முழிக்கிறான் பாரு கொறவனாட்டம்! பையனா இவன்! நெஞ்சழுத்தக்காரன்! கொஞ்சமாவது மசியிறானான்னு பாரு! இத இப்படியே விட்டா சரிப்படாது..எங்கிடி கட்டெ! கொண்டாடீ… கொண்டாடீ!அவனெ இன்னிக்கி இங்கேயே பொளக்குறதே சரி!!”

காதுக்குள் காய்ச்சிய ஈயம் ஊற்றப்பட்டாலும், இன்று அதிகமாகவே உழைத்திருப்பதால் ஒருவித வீராப்புடன் சோற்றுத் தட்டில் மையமிட்டிருந்தான் மணி. ஏதோ நடக்கப்போகிறது எனும் யூகத்துடன் அமர்ந்த இடத்திலிருந்து திரும்புவதற்குள் பருப்பு மத்து பொட்டென்று அவன் தலையில் விழுந்தது. டங்கென்று ஒரு சத்தம்! ஓட்டைக் குழாயில்  வழிகிற நீர்போல் நெற்றிக்கோட்டில் இரண்டு வகிடுகளாக வழிந்த இரத்தம், கொட கொடவெனக் கொட்டிக் கரிய முகத்தைக் குரூரமாக்கியது. மூச்சுக்காற்றில் கனற்புயல் வெளியேறியது. சோற்றுப் பருக்கைகள் வாய்க்கடையில் சிதறிக் கிடக்க, விருட்டென எழுந்து நாற்காலியைக் காலால் உதைத்தபடி விழிகளில் கந்தக நெருப்பு தகதகக்க, வழியேயின்றி தலையைப் பிடித்துக்கொண்டு குசினி வழியாக வெளியேறினான். வெற்றியின் குறி முகத்தில் பற்றிப் படர, குசினியின் சாப்பாட்டு நாற்காலியைக் காலால் இழுத்துப் போட்டு, உரோமம் மண்டிய தொந்தி வயிறு பிதுங்க பிட்டத்தை முன் நகர்த்தி அமர்ந்துகொண்டார் முத்தையா.

கமலாட்சிக்கு எதுவும் பேச உரிமையில்லை. அவரைவிட நான்கு வயது அதிகமென்றாலும் கமலாட்சிக்கு இப்படியெல்லாம் நடக்குமென்று தெரிந்திருந்ததால் கப்சிப்பென்றிருந்தாள். அவளுக்கும்கூட நெற்றியிலும் தாடையிலும் வெவ்வேறு காலக்கட்டத் தழும்புகள் இன்னும் உள்ளன. குடும்பத் தலைவி என்ற ஸ்தானந்தானேயொழிய அவள் இப்பொழுது குரல்வளை அறுக்கப்பட்ட குயில். இனிப் புதிதாய் அழுவதற்கு இந்த உலகத்தில் புதிய துன்பங்கள் ஏதும் இல்லை. மரணங்கூட அப்படியொரு வேதனையைத் தர முடியாது. இந்த வாழ்க்கையில் தன்னை ஏற்றிச் சென்றவர்கள் நடு வழியில் தாளவொண்ணாச் சுமைகளைத் தந்துவிட்டுப் பிரிந்துவிட்டார்கள். நிரந்தரப் பிரிவு என்று தூலவுடலை மண்ணில் புதைத்துவிட்டு இரண்டு பேர் அடங்கிவிட்டனர். யார் கேட்டு வந்த வரம் இவையெல்லாம் என்பதெல்லாம் மரத்துப்போன மனோநிலையில் வாழ்க்கைச் சக்கரத்தை நகர்த்திக்கொண்டிருப்பதுதான் கமலாட்சியின் தற்போதைய பாடு. யாருடைய சிக்கலிலும் தலையிட அவளுக்கு எவ்வித அருகதையும் இல்லை.

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு சுவரில் சரிந்து கிடந்தாள்.பூப்படைந்த வயதில் செங்காங் தோட்டத்தில் வெளிக்காட்டு வேலை செய்த சமயம், இளவயது கிராணி ஒருவன் முதன் முதலாக விளையாடிவிட்டுச் சபாவுக்கு மாறிப் போனான். காரில் ஏற்றிக்கொண்டு அவன் காண்பித்த அந்தரங்க உலகமும் அப்படியே கைச்செலவுக்குக் கொடுத்த பணமும் அப்பொழுது பெரிதாய் இருந்தன. அவன் போய்விட்ட பின்பு சில மாதங்கள்கூட தாக்குப் பிடிக்க முடியாமல் இச்சை உடல் வெக்கையில் கனன்று அலைக்கழித்தது. வீட்டுக்கு அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்த காளிமுத்து சில முறை . அது அவனது கல்யாணம் முடியும்வரை தொடர்ந்தது. அப்புறம் வேறொருவனோடு கல்யாணம் பேசி முடிக்கப்பட்டது. அவன் ஆம்பிளையே இல்லை. ஆள் அமைதியாய் இருந்துவிட்டால் மட்டும் போதி மரத்துப் புத்தனென்று நினைத்துக் கால்கட்டுப் போட்டுவிட்டார்கள் போல வீட்டில்! ஒரு வருசம் கழித்துப் புழு பூச்சி இல்லாததால் ஆள் ஊரை விட்டே ஓடிப் போய்விட்டான். அவன் போன நேரம் பார்த்தா வயிற்றில்  தங்கவேண்டும்? ஊர் மக்கள் யாரும் நம்புவதாயில்லை! பட்டணத்திலிருந்து ஒருவர் வந்து வீட்டு வேலைக்கென்று கூட்டிக்கொண்டு போய் வைத்துக்கொண்டார். ஆண் ஒன்று பெண் இரண்டென்று மூன்று பிறந்தது. சாலை போடுகிற குத்தகையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது லோரி ஏறி அந்த ஆளும் செத்துப் போச்சு. எத்தனையோ பேரிடம் கெஞ்சிக் கூத்தாடியும், தோ இப்ப தர்றேன் அப்போ தர்றேன்னு  எதுவுமே நடக்கவில்லை. தீபாவாளி காலத்தில் நாலு பேருக்கு முன்னாடி பல்லை இளித்துக்கொண்டு அரிசி மூட்டை, பால்டின், மிலோ தருவார்கள். அவ்வளவுதான். அவருடைய சீனன் தவுக்கேதான் வந்து ஒத்தாசை பண்ணினான். அவன் மட்டும் இல்¨லயென்றால்  சாப்பிடக்கூட வக்கில்லாம கூண்டோடு செத்துத் தொலைந்திருப்போம். அவன் தெய்வம்! திரும்பவும் வயிற்றில் தங்க ஆரம்பித்தது. முன்னர் பிறந்த நாலும் ஒருமாதிரியான நிறமென்றால், கடைசியாகப் பிறந்தது சப்பை மூக்கும் சின்னக் கண்களும் வெளுப்பாகவும் பிறந்தது. வெளியில் தலை காட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தபொழுது இப்பொழுதிருக்கிற லோரி கிளிண்டன் முத்தையா முதல் தாரம் இருக்கையிலே புது வாழ்க்கை கொடுத்தார். ஆளு கொஞ்சம் கறுப்பா வாட்ட சாட்டமாக இருப்பார். பேர் சொல்ல கடைசியாக ஒரு பெண் பிள்ளை பிறந்தது. அதுவும் மறு வருசம் நெஞ்சுச் சளி முற்றிப் போய் செத்தே போச்சு.  பாழாய்ப்போன குடிப்பழக்கம் புதுசா ஒட்டிக்கொண்டது.அப்புறம் ஆளே மாறி வாய்க்கு வந்தததயெல்லாம் கண்டபடி பேச ஆரம்பித்துவிட்டார். அடி உதை இல்லாத நாளே இல்ல!எல்லாம் தலை விதி! யாரைச் சொல்லி யாரை நொந்துகொள்ள? பிள்ளைகளில்  யாருக்குமே படிப்பு மண்டைக்கு ஏறவில்லை. சில ஆண்டுகளுக்கு முன், பதினாறிலும் பதினேழிலும் இரண்டும் ஊரை விட்டே ஓடியே போச்சு! தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளைகள் பதினாறு அடி பாய்கிற மாதிரி! ஏதாவது கேட்டால் நாக்கைப் பிடுங்குகிற மாதிரி திருப்பிக் கேட்கிறார்கள்! ஆனால், மணி அப்படியல்ல.

அன்றைக்கு மணி எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தானென்று தெரியாது. அவனால் பொறுக்க முடியவில்லை போல. மறுநாள் காலையிலேயே அப்பாவோடு திரும்பவும் பயங்கர லடாய்! சுருண்டு படுத்திருக்கிறவன் மீது அப்பனே சுடுநீரை ஊற்றுவாரா? ஊற்றிவிட்டாரே! மணி பொங்கிவிட்டான்! துரத்தித் துரத்தி அடிக்கப் பார்த்தான். கமலாட்சி நடுவில் நின்று தடுக்கப்போய் அவளுக்கும் முட்டி வீங்கியது. முத்தையா ஓடியே போய்விட்டார். இத்தனை நடந்தும் அம்மாம்பெரிய  பக்கத்து வீட்டுத் தவுக்கே கண்டுகொள்ளவே இல்லை. மாளிகை மாதிரி இடையில் பெரிய மதில் வேறு! மணியின் கொதிப்பை யாராலேயும் கட்டுப்படுத்தமுடியவில்லை. உடல் எரிச்சலைவிட உள்ளத்தின் குமுறல் படுபயங்கரமாய் இருந்தது. வேலை அளுப்பும் நேற்றுத் தலையில் விழுந்த அடியின் வலியும் சேர்ந்து அவனைப் பாடாய் படுத்த மிகவும் துவண்டுபோய் அம்மாவின் மடியில் குறுகிப் படுத்துக்கொண்டான்.

“ ம்மா! நான் என்னா திருடனா? யேம்மா அப்பா எப்பப் பாத்தாலும் கண்டமேனிக்கி ஏசிக்கிட்டிருக்குது? எம்மேல சுடுத்தண்ணிய கொண்டாந்து ஊத்தற அளவுக்கு நான் என்னாம்மா தப்புப் பண்ணேன்? யாருமேலயோ உள்ள கோவத்த நம்மக்கிட்ட யேம்மா காட்டணும்? நான் பொறந்தது தப்பாம்மா? அதுக்கு நான் என்னாம்மா செய்ய முடியும்? நான் எங்கியுமே திருடலம்மா… யாரையும் அடிச்சதில்லம்மா… ஸ்கூல்ல ஒருவாட்டி ஒன்னப் பத்தி அசிங்கமா பேசுனதால ஒரு பையனப் போட்டு தொவைச்சேன்.. அது தப்பாம்மா? நீனே பாருமா…அப்பாக்குக் கெடைக்கிற சம்பளத்தை மொத பொண்டாட்டி வூட்டுல போயி கொட்டுனாக்கா நாம எப்படிம்மா சாப்பிட்றது? அந்தப் புள்ளைங்க எல்லாம் நல்லாத்தாம்மா இருக்குதுங்க. இதெல்லாம் அப்பாக்கிட்ட எப்படித்தான் எடுத்துச் சொல்றது? இதெல்லாம் பாத்து யாருக்கும் செரமம் கொடுக்கக்கூடாதுன்னுதான் நானே வேலக்கிப் போக முடிவு பண்ணுனென். யேன் என்னைக் கண்டா அப்பாக்குப் புடிக்கமாட்டேங்குது?”

மடியில் சாய்ந்திருந்த மணியின் தலையைக் கோதியவாறு நாசியில் நீர் வழிய ஈனமாய் அரற்றிக்கொண்டிருந்தாள் கமலாட்சி. அவளால் அவனது வெற்றுடம்பைத் தொடக்கூட முடியவில்லை. ஆங்காங்கு கொப்புளம்போல் நீர் கோத்திருந்தது. வீட்டுக்காக உழைக்கும் காய்ப்பேறிய அவனது உள்ளங்கைகளைப் பார்த்தபோது ஓவென்று அழவேண்டும்போலிருந்தது அவளுக்கு.

மெளனத்தை உடைக்கிறபடி திடீரென வீட்டு வாசலில் தடதடவென்ற சத்தம். நான்கைந்து பேர்கள் நுழைந்தார்கள். அவர்களில் ஒரு தமிழரும் இருந்தார்.அதிகம் பேச்சுக் கொடுக்காமல் மூர்க்கத்துடன் பிடறியைத் தட்டி அவனது கையை வளைத்து முறுக்கி விலங்கிட்டார்கள். வலி தாளாத மணி முரண்டு பிடித்து “அம்மா!அம்மா! என்னெ உடச்சொல்லுமா!” வென அடித்தொண்டையில் கத்தினான். ஓங்கிப் பின்னந்தலையில் தட்டினான் அங்கிருந்த ஒருவன். மணியால் முறைப்பதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியவில்லை.

“ என்னடா மொறைக்கிறே…! பெத்த அப்பனையே அடிக்கிற அளவுக்கு வீரம் வந்துடுச்சோ?”

“ இல்லண்ணே! நா அப்பாவ அடிக்கல… அப்பாதான் தெனமும் எங்களப் போட்டு அடிக்கும்! வேணும்னா அம்மாவக் கேளுங்கண்ணே!”

“பொய்யி! ரொம்பப் பேசுற நீ! ஸ்கூல்லயிருந்து வெளியில வரைக்கும் ஒம்மேல நெறைய கேஸ்! இந்த ஏரியாவுலே நீ யாராரோட கொண்டெக் வச்சிருக்கேன்னும் தெரியுண்டா!ஒன்ன அடிக்கடி பெசி புரோக்குல பாக்குறோம்! சின்ன வயசுலேயே ஊரான் பொருள திருடுறே?!”

“இல்லண்ணே! இல்லண்ணே!”

மணி தரதரவென இழுத்துச் செல்லப்பட்டான். கமலாட்சி அவன் கைகளைப் பற்ற முயற்சித்துத் தோற்றுப்போனாள்.

அவன் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.அந்த இரவில் மணியின் ஓலம் காவல் நிலையத்தில் இன்னும் அகோரமாய்க் கேட்டது. அது சிறைக்குள் தொடருமோவெனப் பதறினாள் கமலாட்சி.

சோபையிழந்து கிடந்தது வீடு.எதுவுமே நடக்காததுபோல் பதிவிசாக வீடு வந்து சேர்ந்தார் முத்தையா. இது யாருடைய வேலையென்று கமலாட்சிக்கு எல்லாமும் தெரியும். தெரிந்தென்ன செய்ய…? அவள் ஞாபகம் முழுதும் மணியைச் சுற்றிச் சுற்றியே வந்தது. விசாரித்து அனுப்பிவிடுவார்கள் என்று சிலர் கூறியது பொய்த்துப்போனது.முதல்நாள் விழுந்த மரண அடியில், உடலில் உள்ள கொப்புளங்களும்  வெடிக்கத் தொடங்கியபோது அவனது அடிமனத்திலிருந்தும் ஏதோ குமுறத் தொடங்கியது!

***** முற்றும்

Series Navigationரிங்கிள் குமாரி – பாகிஸ்தானின் கட்டாய மதமாற்றக் கலாசாரம்தொங்கும் கைகள்