வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு – அணிந்துரை

This entry is part 22 of 33 in the series 19 மே 2013

கி.சுப்பிரமணியன்

(ஐயா,

நான் தற்போது ’வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு’ என்ற நூலினை எழுதி வெளியிட்டு உள்ளேன், அந்நூலுக்கு கோவை ஐகேஎஸ் என்று அழைக்கப்படும் பேராசிரியர் முனைவர் கி.சுப்பிரமணியன் அவர்கள் எழுதி உள்ள அணிந்துரையை இத்துட்ன் இணைத்துள்ளேன். அதனை தங்களது இதழில் வெளியிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அவர் வள்ளலாரைப்பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தம்முடைய ஆய்வை ’நீர்மேல் மலர்ந்த நெருப்பு’ என்ற நூலாக வெளியிட்டு உள்ள அவர் இராமலிங்கரையும் இராமகிருஷ்ணரையும் ஒப்பிட்டு மேலாய்வு செய்து “The Sun and the Moon” என்ற நூலையும் வெளியிட்டு உள்ளார். “உள்ளம் பெருங்கோவில்”, “சிவநெறியே சன்மார்க்கம்”, “திருத்துழாய் மாலை,” “கருடாழ்வார் துதி”, “திருவாசகம் ஒரு அறிமுகம்”, “சேரமான் பெருமாள்”, “வீராடன் துதி”, “நம்மை பேணும் அம்மை”, “அந்தி விளக்கு”, “நாமமும் அனுமன் என்பேன்”, மற்றும் “நீறணி பவளக்குன்றம்”. என அவருடைய படைப்புகளின் பட்டியல் விரிகிறது.

இச்செய்தியையும் என்னுடைய நூலின் அணிந்துரையையும் வெளியிட்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள,

அர.வெங்கடாசலம்)

பேராசிரியர் அர.வெங்கடாசலம் எழுதியுள்ள வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு என்னும் நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதுவரை திருக்குறள் பற்றி வெளிவந்துள்ள நூல்களில் பெரும்பான்மை யானவை தமிழ்ப் புலவர்களாலும் பேராசிரியர்களாலும் அறிஞர்களாலும் எழுதப்பட்டவை. சிலவே பிறதுறை சார்ந்தோரால் உருவானவை. உளவியல் பேராசிரியராக இருந்து தமிழில் தோய்ந்து திருக்குறளைப் புதிய நோக்கில் அனுகித் பேராசிரியர்..வெங்கடாசலம் அவர்கள் எழுதியுள்ள இந்த நூல் ஒரு புதிய பார்வையைத் தருகிறது.

திருவள்ளுவ மாலை தொடங்கி இன்று வரை, பலரும் பலநோக்குகளில் திருக்குறள் என்னும் பளிங்குப் பெட்டகத்தைக் கண்டு தங்களுக்குள்ளே தோன்றிய கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அந்த வரிசையில் வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு என்ற இந்த நூல் வருகிறது.

பொதுவாகக் கட்டு திட்டங்களுக்கு உட்பட்ட இறுகிப்போன சமயச் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் வன்மையாகச் சாடும் திருக்குறளில் உடல்தாண்டி, மனம் தாண்டி ஓருயிர் ஆன்ம முன்னேற்றம் அடைய வேண்டும்; அதுவே வாழ்வின் நோக்கம். அந்த ஆன்மாவின் வழி காட்டுதலை மேற்கொள்ளும்போது அது மனிதனுக்கு வழிகாட்டுவதுடன் தானும் மேம்பாடு அடையும் என்பதும் அவ்வாறில்லாதபோது ஆன்மா வீழ்ச்சியடையும் என்பதும் அவ்வீழ்ச்சியிலிருந்து மீள அதற்குப் பல பிறவிகள் பிடிக்கும் என்பதும் வள்ளுவம் கூறும் செய்தி. என்று நூல் முகத்தில் ஆசிரியர் எழுதுவதே இந்த நூலின் அடிப்படைக் கருத்தாக அமைந்துள்ளது. இது ஒரு புதிய செய்தி.

இப்படி ஆன்மா, உயர்நிலை அடைந்தபிறகு ஒரு மனிதன் பெற்றிருக்கும் மனநல அடையாளங்கள் இவை எனப் பத்துக்கும் மேற்பட்ட கருத்துக்களைத் தெரிந்தெடுத்து முன் வைக்கிறார். இந்த அடிப்படையில், இவை வெளிப்படும் விதமாகத் தன் நூலுள் அறத்துப்பால் குறள்களுக்குப் புத்துரை எழுதி இருக்கிறார். இது ஒரு புதிய முயற்சி.

குறளுக்கு விளக்கம் எழுதும்போது, புதிய புதிய உவமைகளைக் கையாண்டு உளவியல் நோக்கில் கருத்துக்களை முன்வைக்கிறார். சிறந்த கருத்து புலப்படும் இட்த்தில் குறள்முத்து என்று மகுடமிட்டுத் தனியாகச் சுட்டுகிறார். கூடவே நாள்தோறும் மனப்பழக்கம் ஏற்படுத்தும் வகையாகச் செயல்படுத்திச் சில இடங்களையும் காட்டுகிறார்.

ஈகோ என்ற சொல் நூல் முழுவதும் கையாளப்படுகிறது. Ego என்ற ஆங்கிலச்சொல், தன்னுணர்வு என்று புலப்படுத்தப்பட்டு, செருக்கு அல்லாமல் ஒரு மனிதன் தன்னைத் தான் என்று அடையாளம் கணல் என்ற வகையில் உளவியல் கோட்பாட்டில் வருகிறது. நடைமுறையில் ஈகோ செருக்கு, ஆணவம் என்ற பொருளில் கையாளப்படுவதால், ஆசிரியர் ஈகோ என்று நூல் முழுதும் அப்படியே எழுதிவிட்டார் போலும்.

இந்த நூலை உருவாக்குவதற்காக அவர் கடுமையான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். உளவியல் பேராசிரியராக இருந்தும், பரிமேலழகர், மணக்குடவர், தொடங்கி ராஜாஜி, மு.வ., நாமக்கல் கவிஞர் எனப் பலர் எழுதிய உரைகளையும் ஆழமாகப் படித்து உணர்ந்த பின்னர்தான் இதைப் படைத்திருக்கிறார். இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தான் நினைத்ததை, தனக்குத் தோன்றியதை அப்படியே எழுதாமல், முன்னோர் வழி நின்று, ஆனால் மாறுபடும் இடங்களையும் காண்பிப்பது அவருடைய எழுத்தின் நேர்மையைக்காட்டும்.

பேராசிரியர் வெங்கடாசலம் சில குறள்களுக்குப் புது விளக்கம் தருவது அருமையாக உள்ளது. மக்கட்பேறு = மனிதவளம்; அடங்காமை = சுயவீக்கம்; உயிர்=ஆன்மா; கொல்லாமை = பல்லுயிரோம்பல் என்பன சில.

ப:61இல் வெஃகாமை பற்றி எழுதியிருக்கும் விளக்கம்: ப: 107ல் இன்னா செய்தாரை ஒறுத்தல் குறளுக்கு எழுதியுள்ள நீண்ட விளக்கம்; ப: 17ல் இன்றைய போலி முதலாளித்துவத்தின் முகத்தை உரித்துக்காட்டும் துணிச்சல்; ப:163இல் கயமை பற்றிக் குறித்துப் புதிய கயவர்கள் யார் எனச் சொல்லும் நேர்த்தி. . . என்று பலப்பல இடங்களில் தம்முடைய தனித்தன்மையை ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

தமிழாசிரியர் எழுதியது அன்று; உளவியல் பேராசிரியர் வடித்தது. ஆதலால் சில இடங்களில் தடுமாற்றம் தெரிகிறது; பொருள் மாற்றம் ஏதுமில்லை; ஆங்கில மொழியை வகுப்பில் கையாண்டு பழகியதால் அதன் சொற்கள் அதன் தாக்கம் மேற்கோள்களாகவும், சொற்களாகவும் மாற்றமின்றி வந்துள்ளன. இதைத் தவிர்க்கலாம்.

ஆசிரியர் முய்ற்சி பாராட்டுக்குரியது. தமிழறிஞர் துணை கொண்டு அவர் விரும்பும் இரண்டாவது தொகுதியை பொருட்பால், இன்பத்துப்பாலுக்கான உரையை – உளவியல் நோக்கில் எழுதி வெளியிடலாம்.

வாழ்த்துக்கள்

கோவை கி.சுப்பிரமணியன்

10.04.13 (ஐ.கே.எஸ்)

Series Navigationசுவீகாரம்வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -2 Cover image மூன்று அங்க நாடகம்

5 Comments

  1. Avatar சோழன்

    Mr Venkatachalam!

    unga book engee virkirathu? kadaippeerai sollavum.

  2. திரு சோழன் அவர்கள் கூறியுள்ளதுபோல், இதுபோன்று நல்ல நூல்களைப் பற்றி எழுதும்போது அல்லது விமர்சனம் செய்யும்போது அந்த நூல்கள் எங்கு கிடைக்கும் என்று குறிப்பிடுவது பயன்மிக்கது….இது ஒரு நல்ல நூல் முன்னுரை. .. டாக்டர் ஜி.ஜான்சன்.

  3. நண்பர்களது ஆர்வத்திற்கு நன்றி. என்னுடைய கீழ்கண்டமுகவரியில் புத்தகம் கிடைக்கும். புத்தகத்தை விபிபியில் அனுப்பிவைக்கிறேன். அல்லது மணி ஆர்டர் டிமாண்ட் டிராஃப்ட் ஆகியவற்றிற்றின் மூலமாகவும் பெறலாம். ஈn favor of R.Venkatachalam payable at Bangalore என்று டிராஃப்ட் எடுக்கவும். என்னுடைய முகவரி:
    R.Venkatachalam A 19 Vaswani Bella Vista, Seetharampalya Rd, Graphite India Junction, Bangalore 560048
    ph:9886406695 prof_venkat1947@yahoo.co.in
    நன்றி வணக்கம்

  4. Avatar IIM Ganapathi Raman

    என்ன சார் இது விலையைச் சொல்லாமல்?

    எவ்வளவு அனுப்பவேண்டும்?

  5. ஆகா என்ன பிழை செய்துள்ளேன்! அதை விட தளத்திற்கு உடனே வந்து என்ன நடந்துள்ளது எனப்பாராமலும் இருந்துவிட்டேன். பிழைபொறுக்கவும். ரூ85/- க்கு டிராப்ட் அல்லது செக்கெனில் பணம் பெறுவதற்கான கட்டணத்தையும் சேர்த்து செக் எழுதவும். என்னுடைய செலவில் தமிழ்நாட்டுக்குள் மட்டும் அனுப்பி வைக்கிறேன். பிற மாநிலமென்றால் பெங்களூரிலிருந்து 170 gm எடைக்கு பதிவுசெய்யப்பட்ட அக்னாலட்ஜ்மெண்டுடன் கூடிய புக் போஸ்டுக்கு எவ்வளவு ஆகும் என நெட்டில் சென்று பார்த்து அதற்கான கட்டணத்தையும் சேர்த்து செக் அல்லது டிராப்ட் அனுப்பவும். சிரமத்துக்கு வருந்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *