வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் பகுதி-4 நிறைவுரை- உவேசாவும் க்ரியா ராமகிருஷ்ணனும் இலக்கிய வட்டமும்

 

[ரேடியோ டெலிவிஷன் ஹாங்காங்(RTHK) சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நிகழ்த்திய  தொடர் ஒலிபரப்பில் 19.9.15 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டத்தைக் குறித்த உரையாடல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் எழுத்து வடிவம் இங்கே இடம் பெறுகிறது. இது நான்காவது கடைசிப் பகுதி]

 

நிறைவுரை- உவேசாவும் க்ரியா ராமகிருஷ்ணனும் இலக்கிய வட்டமும்

 

மு இராமனாதன்;

நேயர்களே! நிகழ்ச்சியின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். ஹாங்காங் இலக்கிய வட்டம் எப்போது ஏன் தொடங்கப்பட்டது என்று பார்த்தோம். வட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்களைக் கேட்டோம். நிகழ்த்தப்பட்ட உரைகளிலிருந்து சில பகுதிகளையும் கேட்டோம். வட்டத்திற்கு எண்ணிக்கையில் குறைந்த இலக்கிய ஆர்வலர்களின் ஆதரவே இருந்து வருகிறது என்றும் சிலர் குறைபட்டுக் கொண்டார்கள். அதைப் பற்றிச் சில வார்த்தைகள் சொல்லலாம் என்று நினைக்கிறேன். அதற்கு முன்பாக ஒரு செய்தி.

 

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னால் நாளிதழ் ஒன்றில் க்ரியா ராமகிருஷ்ணனின் நேர்காணல் வெளியாகியிருந்தது .இவர் ஒரு பதிப்பாளர். ஆல்பர் காம்யுவின் ‘அந்நியன்’ என்ற பிரெஞ்சு நாவலின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பை க்ரியா பதிப்பகம் வெளியிட்டபோது, ஒரு தமிழ் புத்தகத்தை இவ்வளவு செய்நேர்த்தியோடும் இவ்வளவு சிறந்த உள்ளடக்கத்தோடும் வெளியிட முடியுமா என்று தமிழ் வாசகர்கள் வியந்து போனார்கள். இவரது முக்கியமான வெளியீடு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி. தமிழ் மொழியின் பேச்சு வழக்கில், பொதுவான பயன்பாட்டில் உள்ள சொற்களுக்கான அகராதி இது. 21,000 க்கும்  மேற்பட்ட சொற்களைக் கொண்ட அகராதியை தமிழறிஞர்களின்  துணையோடு 1991ல் கொண்டு வந்தார். இன்றைக்கு இது இணையத்திலே கிடைக்கிறது. நாள்தோறும் மேம்படுத்தப்படுகிறது. இந்த அகராதியை உருவாக்கிய காலத்தில், இவர் வங்கிகளையும் அரசுத் துறைகளையும் உதவிக்காக அணுகியிருக்கிறார். அவர்கள் ‘ஒரு தனி மனிதர் அல்லது ஒரு  சிறிய குழு எப்படி அகராதியை உருவாக்க முடியும்? ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணி அல்லவா இது?’, என்று கேட்டார்களாம். அதற்கு க்ரியா ராமகிருஷ்ணன்  ‘உ.வே.சா தனி நபரா பல்கலைக்கழகமா?’ என்று கேட்டு பதில் அனுப்பினாராம். அரசாங்க அதிகாரியின் கேள்வியில் நியாயமில்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் தமிழ்ச் சூழல் அப்படித்தான் நடக்கிறது.

 

உ. வே சாமிநாத ஐயரைத் தனி நபர் என்று சொல்ல முடியுமா ? அவர் ஓர் இயக்கம்தான். பல்கலைக்கழகங்கள்கூட செய்ய முடியாதவற்றை தனிநபராக அவர் செய்தார். 1887ல்  சீவகசிந்தாமணியை அச்சிட்டு வெளியிட்டார். நச்சினார்க்கினியாரின் உரையோடு வெளியிட்டார். அதன் ஏடுகளின் தேடுதலை திருவாடுதுறை ஆதீனத்திலிருந்து தொடங்குகிறார். திரிசிரபுரம் சென்னை, சேலம், உறையூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, சிதம்பரம், தஞ்சாவூர், கூடலூர், வீடூர், இராமநாதபுரம் என்று ஊர் ஊராகச் சென்று ஏடு தேடுகிறார். யாழ்பாணத்திலிருந்து ஏடுகள் சி.வை.தாமோதரம் பிள்ளையின் உதவியால் கிடைக்கிறது. ஏட்டில் உள்ளதை அப்படியே பதிப்பிக்கவில்லை உ.வே.சா. ஏடுகளில் உள்ள பாடல்களில் பேதம் இருக்கும்.பிழை இருக்கும். அவற்றை ஆராய்ந்து  செப்பம் செய்கிறார். அவரது பதிப்புரையில் நூலின் காலம் பற்றிய கருத்து,  நூலாசிரியர் பற்றிய செய்திகள் இருக்கின்றன, உரையாசிரியர் பற்றிய செய்திகள் இருக்கின்றன. சீவக சிந்தாமணியைத் தொடர்ந்து சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் , பெருங்கதையையும்  பதிப்பிக்கிறார். சங்க நூல்களான பத்துப்பாட்டையும், புறநானூற்றையும், ஐங்குறுநூறையும், பதிற்றுப்பத்தையும், பரிபாடலையும், குறுந்தொகையையும் பதிப்பிக்கிறார். இலக்கண நூல்கள், தலபுராணங்கள், சிற்றிலக்கியங்கள் என்று அவரது தமிழ்த் தொண்டு தொடர்ந்து கொண்டே இருந்தது. அவருக்கு ‘மகாமகோபாத்தியார் ‘ என்று பட்டம் வழங்கியது ஆங்கிலேய அரசு. சுதந்திர இந்தியாவின் தமிழக அரசு அவருக்குச் சிலை வைத்தது. ஆண்டுகள் பலவற்றுக்குப் பிறகு உ.வே.சாவின் தொண்டு அங்கீகரிக்கப்பட்டது. உண்மைதான்.  ஆனால் தமிழ்ச் சூழல் மாறியிருக்கிறதா ? சீரிய இலக்கிய முயற்சிகளுக்கு இன்றைக்கும் தமிழ்ச் சூழலில் ஆதரவு குறைவுதான். உ.வே.சாவைப் போன்றவர்கள், க்ரியா ராமகிருஷ்ணனைப் போன்றவர்கள்தான் தமிழை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லுகிறார்கள். இதுதான் யதார்த்தம். இதுதான் தமிழ்ச் சூழல். உலகெங்கிலுமுள்ள சிறிய தமிழ் இயக்கங்களும், குழுக்களும், தனிநபர்களும்  தமிழுக்கு அளித்துவரும் பங்கு அளப்பரியது. இப்படியான சூழலில் இலக்கிய வட்டம் சிறியதாக இருக்கிறது , குறைவான நபர்களே இலக்கிய வட்டக் கூட்டங்களுக்கு  வருகிறார்கள் என்று யாரும்  அதைரியப்பட வேண்டியதில்லை.தமிழில் அது அப்படித்தான் இருக்கமுடியும். இந்தக் குறைபாட்டோடுதான் நாம் இலக்கிய வட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்று  நினைக்கிறேன்.

 

இதுகாறும் இந்த நிகழ்ச்சியைச் செவிமடுத்த நேயர்களுக்கும் வாய்ப்பளித்த ரேடியோ டெலிவிஷன் ஹாங்காங் நிறுவனத்திற்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்; நன்றி. வணக்கம்.

 

முற்றும்

 

[ஒலியிலிருந்து எழுத்து: கவிதா குமார்]

 

[வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம், தொகுப்பு:மு.இராமனாதன், தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com]

 

Series Navigationஅவசரமான தேடல்களும் பாஸ்டு ஃபுட் வாழ்க்கையும்‘கலை’ந்தவை