தொடுவானம் 105. குற்ற உணர்வு

This entry is part 3 of 19 in the series 31 ஜனவரி 2016

இரண்டாம் ஆண்டு பிரேதங்களுடனும், தவளைகளுடனும், மனித எலும்புகளுடனும், இரசாயனத்தோடும் அன்றாடம் புதியவை கற்பதிலும் வேகமாக ஓடியது. நாள் முழுதும் படிப்பில் மூழ்கியதால் நாட்கள் போனதே தெரியவில்லை!

வகுப்பிலும் அறையிலும் விடுதி உணவகத்திலும் அன்றைய உடற்கூறு, உடலியல் பற்றிதான் பேசிகொள்வோம். வேறு எதிலும் அக்கறையற்ற விந்தை மனிதர்கள்போல்தான் காணப்பட்டோம்.

அந்தச் சூழலிலிருந்து விடுபட நானும் சம்ருதியும் அந்தி சாயும் வேளையில் ஆரணி நெடுஞ்சாலையில் வெகுதூரம் பேசிக்கொண்டே நடந்து செல்வோம். திரும்பி வரும்போது பாகாயம் முனையில் தேநீர் கடையில் அமர்ந்து இளைப்பாறுவோம்.

பெஞ்சமின் ” ஜிம் ” செல்வான். அங்கு பாரம் தூக்கி உடற்பயிற்சி செய்வான். டேவிட் ராஜன் ஹாக்கி மட்டையுடன் விளையாட்டு மைதானம் செல்வான்.உஸ்காரி டென்னிஸ் விளையாடிக்கொண்டிருப்பான். தாமஸ் மாமன் சில சீனியர் மாணவர்களுடன் குத்துச்சண்டை பழகுவான் ஜெயமோகன் வேதநூல் படித்து வசனங்களில் கோடிட்டுக்கொண்டிருப்பான். ஏபெல் ஆறுமுகம் ஆங்கில நாவலில் மூழ்கியிருப்பான். பாபி தாமசும் ரோனி கீயும் எழுப்புதல் கூட்டங்கள் நடத்திக்கொண்டிருப்பார்கள்.எல்லாவற்றுக்கும் மேலாக காதல் ஜோடிகள் திரைப்பட அரங்குக்குச் செல்ல பேருந்துக்குக் காத்திருப்பார்கள்!

உடற்கூறில் அந்த கை முழுதும் அறுத்துப் பார்த்துவிட்டோம். சிக்கலான நரம்புகளையும் பெரிய சிறிய இரத்தக் குழாய்கள்களையும் தனித் தனியாக அடையாளம் கண்டு பெயர்களையும் படித்துவிட்டோம்.கால்களில் அறுத்து பார்த்தவர்களும் எலும்புகள்வரை உள்ளே புகுந்து பார்த்துவிட்டனர். அங்கு மேசையில் கிடந்த பிரேதத்தின் கைகளும் கால்களும் நார்நாராகக் கிழிந்து கிடந்தன.விடுமுறைக்குப்பின்பு அடுத்த தவணையில் நான் கால் பக்கம் சென்றுவிடுவேன். புதுப் பிரேதத்தின் கால் கிடைக்கும்.

உடலியலில் நாங்கள் தவளையை அறுத்து அதன் இருதயத்தின் துடிப்பை ஒரு உருளையில் பதிவு செய்தோம். உயிர் தவளையைப் பிடித்து அதன் தலைப் பகுதியில் இரு கம்பியால் உள்ளே ஆழமாகக் குத்தினால் அது மயங்கிய நிலையை அடைந்து விடும். அதை ஒரு பலகையின்மேல் மல்லாக்க படுக்கவைத்து கைகால்களை விரித்து சிறிய ஆணிகள் அடித்துவிடுவோம். வயிற்றில் நேராகக கிழித்து இருதயத்தை ஒரு கருவியுடன் இணைத்து அதன் துடிப்பை பதிவே செய்வோம்.பிறகு  இருதயத்தை தனியாக வெளியே எடுத்து வேறு சில பரிசோதனைகளும் செய்து பார்ப்போம்.

அன்றன்று நடக்கும் பாடங்களை இரவிலேயே அவற்றின் தடித்த பாட நூல்களில் படித்து விடுவேன்.இல்லையேல் நினைவில் வைத்திருப்பது சிரமம். இவ்வாறு பயில்வது சில சமயங்களில் உற்சாகமாகவும், வேறு சமயங்களில் சோர்வாகவும் இருக்கும்.எப்போது விடுமுறை விடப்படும் என்று ஆவலுடன் எதிர்நோக்கினோம். விடுமுறை விட்டதும் கொஞ்ச நாட்கள் இந்த தடித்த நூல்களிலிருந்து விடுப்பு எடுத்துகொள்ளவேண்டும்! அவ்வளவு மன இறுக்கத்துடன் படித்துக்கொண்டுருந்தேன்!

தவணை விடுமுறையும் வந்தது. இந்த முறை நான் வேறு எங்கும் செல்லாமல் நேராக கிராமத்துக்குச் செல்ல முடிவு செய்தேன்.அங்குதான் நல்ல ஓய்வு கிடக்கும் என்று தெரிந்தது. கிராமத்து சுற்றுச் சூழலும், அங்குள்ள எளிய மக்களின் வாழ்க்கை முறையும் எனக்கு மிகவும் பிடித்தது. அதோடு ஆடு மாடுகள் , சுதந்திரமாகப் பரந்து திரியும் பறவை இனங்களும் இயற்கைச் சூழலைத் தந்தன. வயல் வெளிகளில் படர்ந்திருக்கும் நாற்றுகள் கண்களுக்கு விருந்தாகவும் மனதுக்கு இதமகவும் இருக்கும்.ஆற்று நீரில் தூண்டில் போடுவதும் நல்ல பொழுதுபோக்கு. பால்பிள்ளை என் வருகைக்கு ஆவலுடன் காத்திருப்பான். அவன் மட்டுமா? கோகிலமும்கூடதான்!

உடற்கூறு நூலையும் சில கை கால் எலும்புகளையும் பிரயாணப் பையில் வைத்துக்கொண்டேன். ஊரில் ஓய்வான நேரத்தில் கொஞ்சம் பக்கங்களைப் புரட்டலாம்.எலும்புகளையும் மீண்டும் மறக்காமல் இருக்க தடவிப்பார்க்கலாம்.

வழக்கமாக நண்பர்களிடம் விடை பெற்றேன். வாடகைப் பேருந்து விடுதிக்கு வந்தது.சாமான்களை அதில் ஏற்றிக்கொண்டு வேலூர் கண்டோன்மென்ட் தொடர் வண்டி நிலையம் சென்றேன்.அது வெறிச்சோடி கிடந்தது. பெரும்பாலும் விழுப்புரம் வரை காலியாகத்தான் செல்லும். இந்த வழிப்  பாதையில் பிரயாணிகள் எப்போதும் குறைவுதான்.

கிராமம் பச்சைப் பசேலென்று பசுமையுடன் காட்சி தந்தது. வயல்கள் அனைத்தும் நடப்பட்டுவிட்டன. அந்த இளம் நாற்றுகள் காற்றில் ஒரே திசையில் அசைந்தாடியது கண்களுக்கு விருந்தானது. வீடுகளின் தோட்டங்களில் மரங்கள் செழிப்பாக வளர்ந்திருந்தன. பூவரச மரங்களெல்லாம் மஞ்சள் நிறத்தில் கொஞ்சம் சிவப்புடன் பூத்துக் குலுங்கின. அவரவர் வீட்டுத் தொழுவங்களில் ஆடு மாடுகள் கட்டப்பட்டிர்ந்தன. அறுவடை வரை அவை வெளியில் மேய முடியாது. அவிழ்த்து விட்டால் நேராக வயல்களில் பாயும்.விளைச்சலை மேய்ந்த்துவிடும்!

இந்த விடுமுறையில் அண்ணன் அண்ணி வரவில்லை. இராஜகிளி காலையிலேயே வந்துவிடுவார். கல்லூரி பற்றி விவரம் கேட்பார். நான் கதைகதையாகச் சொல்வேன். அவர் பொறுமையாக கேட்டுக்கொண்டிருப்பார்.

மாலையில் வரும் கோகிலம் இரவு வெகு நேரம் வரை அம்மாவிடமும், இடையிடையே என்னிடம் பேசுவாள்.சில இரவுகள் எங்களிடமே தங்கிவிடுவாள். சில இரவுகள் என்னிடம் வருவாள்.நான் எதற்கும் இடம் தராமல் விலகியே செல்ல முயன்றேன். அவளுக்கு கோபம் வந்தது. அழுவாள்.நான் செய்வதறியாது தவிப்பேன்.. காலையில் ஏதும் நடவாததுபோல்தான் பேசுவாள். ஆனால் முகத்தில் சோகத்தின் ரேகைகள்தான் படர்ந்திருக்கும்.

அவளுடைய சோகத்துக்கு நான்தான் காரணம். தவறு என்மேல் தான்! நான் துவக்கத்திலேயே அவளிடம் அன்பைக் காட்டியிருக்கக்கூடாது! அவளிடம் பேசாமலேயே இருந்திருக்கவேண்டும். நான் அன்பாகப் பேசியதால்தான் அவளும் காதலை வளர்த்துக்கொண்டாள் இப்போது நான் விலகிச் செல்லும்போது அவள் தடுமாறுகிறாள். என்னால் அவளுக்கு நிரந்தர பரிகாரம் செய்யமுடியாது என்று தெரிந்திருந்தும் நான் அவளிடம் அன்பு செலுத்தியது தவறுதான்! ஆயிரமானாலும் அவள் அடுத்தவன் மனைவிதானே. அவள் மீது இரக்கம் கொண்டதுகூடத் தவறுதான். இதை அவளிடம் பல முறை சொல்லிவிட்டேன். அவள் கேட்பதாக இல்லை. இப்படி சொல்லும்போதெல்லாம் தான் உயிர் விடப்போதாகச் சொல்லி அச்சமூட்டுகிறாள். நானும் அதையே சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து ஆறுதல் என்ற பெயரில் அவளுக்கு மேலும் ஆசையை வளர்த்துவருகிறேன்.

அவளை பார்க்கவும் பாவமாகவும் பரிதாபமாகவும் இருந்தது. முன்பே புண்பட்ட மனம் அவளுக்கு. இப்போது இனி பேசவேண்டாம் என்று சொல்லி அதைமேலும் புண்படுத்தினால் அவளால் தாங்கமுடியுமா? அப்படியே சொன்னாலும நான் சொல்வதைக் கேட்கும் நிலையிலா அவள் உள்ளாள்?

இத்தகைய குழப்பமான மனநிலையுடன் நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.

இப்போதெல்லாம் அவள் எனக்கு வேறு விதமாகத்தான் தோன்றினாள். ஒருவேளை உண்மையை உணர்ந்துவிட்டாளா. அப்படியென்றால் பரவாயில்லை. ஆனால் தூண்டில் போட போகலையா என்று கேட்பாள். பால்பிள்ளையிடம் செய்தியும் சொல்லி அனுப்புவாள். தூண்டிலுடன் நாங்கள் ஆற்றங் கரைக்குச் செல்லும்போதேல்லாம் வந்துவிடுவாள்.ஆனால் முன்புபோல் கலகலவென்று காணமாட்டாள். சோகமாகவே காணப்படுவாள். அதன் காரணம் எனக்குப் புரியும்.

          அன்றும் அப்படித்தான்.

” என்ன முகம் வாடிப்போயுள்ளது? அழுதாயா ” என்றேன்.

” நான் அழுதால் என்ன சிரித்தால் என்ன? ” பதில் கேள்வி கேட்டாள்.

” இப்போ என்ன ஆச்சு நீ இப்படி இருக்கே? ”

” எது ஆகலை? ‘

” எது ஆகணும்? ‘ நான் கேட்டேன்.

” இன்னும் ஆவதற்கு ஒண்ணு உண்டு. ”

” அது என்ன? ”

” என் சாவுதான். “\

          ” இதைத்தான் அப்போதிருந்தே சொல்கிறாயே! “
          ” ஓ… அப்படி ஒரு நெனப்பா ஒங்களுக்கு? இனிமே சொல்லமாட்டேன். இந்த மொறைதான் கடைசி.”

” ஏன் இப்படி பேசுறே? ”

” இனி நான் பேச மாட்டேன்.  இனி எப்போதுமே பேசமாட்டேன்.”

” புரியலை ”

” எப்போ திரும்ப பிரயாணம்?  ”

” இன்னும் இரண்டு நாளில்.”

அவள் பதில் பேசவில்லை. முகம் இருண்டது. கண்கள் கலங்கின.

” என்ன யோசனை? ”

” இந்த மொறை நீங்க போகும் போதும் போன பின்னும் இனி எப்போதும்  என்ன  மறக்கமாட்டீங்க  ”

” எப்படி?  ”

” அதை சொல்லமாட்டேன் ”

” பிறகு? ”

” நாளை சாயந்திரம் ஆண்டவர்  கோவிலுக்கு வாரீங்களா? சொல்லுறேன். ”

” என்ன திடீரென்று ஆண்டவர் கோவிலுக்கு? ”

” எல்லாம் காரியமாகத்தான். அங்கே ஒரு வேண்டுதல் ”

” என்ன விளையாடுகிறாயா? அங்கேதான்  இப்போ யாரும் சாமி கும்பிடுறதில்லையே? ” புரியாமல்தான் கேட்டேன்.

” விளையாடல. அங்க வாங்க புரியும். கட்டாயமா வாங்க.  நான் போறப்போ  ஒங்கள பாத்துட்டு போறேன். நீங்க பின்னாடி வாங்க. அங்க காத்திருப்பேன்.வரவும்.. வயல்வெளி  பாப்பதுபோல வாங்க  ” இப்படி சொல்லிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டாள்.

அவள் எதற்காக ஆண்டவர் கோவில் வரச்சொல்கிறாள் என்பது புரியாமல் நானும் வீடு திரும்பினேன்.

ஆண்டவர் கோவில் என்பது பெரிய கோவில் கிடையாது. அது நான்கு சுவர்கள் கொண்ட ஒரு சதுர வடிவில்தான் இருக்கும். அதன் மேல் கூரைக்கு பதிலாக சிவனின் சிலை இருக்கும். சுற்றிலும் வயல்கள் நிறைந்த நடு வெளியில் ஒரு சதுரமான சிறு மேட்டில்தான் அது அமைந்திருந்தது. அதன் சுவர்களில் பல வருடங்கள் சுண்ணாம்பு அடிக்காமல் கரை படிந்திருக்கும். அதை யார் எப்போது கட்டினார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. கிழக்கு வெளியில் இருக்கும் எங்கள் நிலங்களுக்கு நடந்து செல்லும்போதெல்லாம் அந்தக் கோவில் வழியாகத்தான் செல்லவேண்டும். வரப்புகள் மீது நடந்து செல்லும்போது அந்த சதுர மேடு மீது ஏறி இறங்கிதான் மீண்டும் வரப்பில் நடக்கவேண்டும். எனக்குத் தெரிந்து அங்கு பூஜை நடந்ததாகத் தெரியவில்லை. அதற்கு கதவுகள் கூட கிடையாது. எப்போதும் திறந்தே இருக்கும். நான் ஒரு தடவைகூட உள்ளே எட்டிப் பார்த்ததில்லை. பயமாக இருக்கும். அதை பாழடைந்த கோவில் என்பான் பால்பிள்ளை. உள்ளே பாம்புகள் இருக்கும் என்றும் கூறியுள்ளான். அதனால் உள்ளே செல்வது ஆபத்து என்று நான் தவிர்த்தேன்.

இதுபோன்ற தனிமையான  பாழடைந்த கோவிலுக்கு கோகிலம் வரச்சொல்கிறாள்! மனதில் ஒருவித பீதியையே அது உண்டுபண்ணியது!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationபுழுக்களும் மனிதர்களும்பி​ரெ​ன்ச் புரட்சி நூற்றாண்டில் கட்டி எழுப்பிய பொறியியல் நூதன ஐஃபெல் கோபுரம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *