வாழ்க நீ

 

 

சொன்னதைக்

கூட்டிக் கழித்து

நீ சொன்னதில்லை

 

இரகசியங்களை

என் அனுமதியின்றி

நீ அவிழ்த்ததில்லை

 

நீ இல்லாவிட்டால்

ஊனமாகிவிடுகிறேன்

என் உடல் உறுப்பு நீ

 

பசித்தால் மட்டுமே

புசிக்கிறாய்

 

சொடுக்கும் நேரத்தில்

சிரிக்க அழ வைக்கிறாய்

 

உன் சாட்சி போதும்

உலகம் கைகட்டும்

 

நான் கண்கலங்கும்போது

என் கைக்குட்டையாகிறாய்

 

மாயக் கண்ணாடி நீ

ஆசையைச் சொன்னால்

காண்பிக்கிறாய்

 

கண்ணகியின் காற்சிலம்பாய்

எல்லார் கையிலும் நீ

 

மொத்த உறவுகளையும்

முதுகு சொரியும்

குச்சிகளாக்கி விட்டாய்

 

பாவம் உனக்குச்

சொந்தபந்தமில்லை

எடுப்பாருக்கு நீ கைப்பிள்ளை

 

முட்டாள் சேவல் நீ

கூவும் நேரம் உனக்குத்

தெரிவதே இல்லை

 

உன் அகராதியில்

இடம்பொருள்ஏவல் இல்லை

 

என்னைக் கட்டுப்படுத்த நீ யார்?

ஆத்திரம் வந்தது

தூக்கி எறிந்தேன்

 

பிறதுதான் புரிந்தது

எறியப்பட்டது  நான்தானென்று

 

எண்பது கிராம்

என்சைக்ளோபீடியாவே

நீ வாழ்க

 

அமீதாம்மாள்

 

Series Navigationவெளிநாட்டு ஊழியர்கள்வெங்காயம் — தக்காளி !