விண் தொட வா பெண்ணே!

மீனாட்சி சுந்தரமூர்த்தி

மாலையிட்டது ஒருவனுக்குதான்
மனைவியானதோ
ஐவருக்கு, கொடுமை பாஞ்சாலி.

அசோகவனத்தில் சிறையிருந்த
சீதைக்கு
இராமன் தந்தது
அக்கினிப்பிரவேசம்.

அதுவும் போதாதென்று நிறைமாதம்
சுமந்தவளை
வனம் போகச் சொன்னான்.

பொறுத்தது போதுமென்றுதான்
அவன் முகம் பாராது
பூமி பிளந்து புதைகிறாள் சீதை.

பெண்ணே ஆணையிட்டு வழிகாட்டும்
தலைவியாம்,
ஆதியில் தாய்வழிச் சமூகத்தில்.

புகழில் நாம் மயங்கியதால்
போகப்பொருளாய்
மாறிப் போனோம் பின்னாளில்.

அரசனின் அந்தப்புறத்தில்
கொலுபொம்மைகள்
அவன் இறந்தால் உடன்கட்டை.

கருவறை வாசல் திறந்தது,
காத்திருந்தது
கள்ளிப்பால் கல்லறை தந்திட.

கன்னியரை விதவையாக்க கை
கோர்த்தது
குழந்தை மணம்.

அடுப்படியும் படுக்கை அறையும்
வழக்கமாக
எட்டாமல் போனது படிப்பு.

நதியும் மதியும் தெய்வமும்
பெண்தான்
பயனேது? விதி ஆடியது.

நம்பிக்கை நூல் அறுந்திடாமல்

வந்தது
விடிவெள்ளி

நம்கதை மாறியது.

மீட்டு எடுத்தோம் உரிமைகளை,

ஆனால்
வன்கொடுமை,
அமிலவீச்சு மட்டும் ஆனது
தொடர்கதை.

புல்லுருவிகளை இனம் கண்டு
தொடர்கதைக்குப்
பாங்காய் எழுதுவோம் முடிவுரை.

இன்னும் நாம் பயணம்போக
தூரம் அதிகம்,
சலித்தால் யாருக்கு இலாபம்?

கனவுகளின் கைபிடித்து,

முயற்சியைக்

காதலித்து
விண்தொட நீ வா பெண்ணே!
meenakshi.sundaramoorthy57@gmail.com

Series Navigationமௌனியின் படைப்புலகம் பற்றிய தகர்ப்பும் முன்னுதாரணமும்: சிறுகுறிப்புஅணுக்கருத் தொடரியக்கம் தூண்டி முதன்முதல் அணுசக்தியைக் கட்டுப்படுத்திய இத்தாலிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி