வித்தியாசமான கதை…

author
0 minutes, 10 seconds Read
This entry is part 6 of 14 in the series 20 நவம்பர் 2022

அழகியசிங்கர்

            பள்ளிக்கூடம் படிக்கிற வயசில் பள்ளி  நூல் நிலையத்தைப் பயன்படுத்தினேன். இதெல்லாம் 1965-66 வாக்கில். அப்போது நான் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன்.

            ‘தென்னாட்டுப் பழங்கதைகள்’ என்ற புத்தகம்.  ஒவ்வொரு புத்தகமும் 320 பக்கங்கள் இருக்கும்.  கிட்டத்தட்ட 8 பாகங்கள் இருக்கும். 

            இராமசாமிப் புலவர் தொகுத்தது.  அந்தப் புத்தகங்களை எடுத்துப் படிக்கும்போது பரவசம் அடைந்து விடுவேன். சைவ சித்தாந்த கழகம் வெளியிட்ட புத்தகம்.  ஒவ்வொரு புத்தகக் காட்சியின்போது, சைவ சித்தாந்த கழகத்திடம் போய், ‘இந்தப் புத்தகம் இருக்கிறதா?’ என்று கேட்பேன். அவர்கள் கை விரிப்பார்கள்.

            இந்த அற்புதமான புத்தகத்தை ஏன் அவர்கள் மறு பிரசுரம் செய்யவில்லை என்று தெரியவில்லை.  அந்தப் புத்தகத்தைக் கொஞ்சம் பிரதிகள் அடித்தால்  கூடப் போதும்.  அவர்களால் முடியும்.

            எனக்கு அச்சடிக்க அனுமதி கொடுத்தால் நான் விருட்சம் வெளியீடாக இந்த அற்புதமான புத்தகத்தைக் கொண்டு வந்து விடுவேன்.

            பல வருடங்களுக்கு முன்னால் வாங்கிய புத்தகம் என்பதால் அட்டையெல்லாம் போய் ரொம்ப மோசமான நிலையில் இந்தப் புத்தகத்தைப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

            இப் புத்தகத்தைப் பத்திரமாக எடுத்துப் படிக்க வேண்டும். கொஞ்சம் புரட்டினாலும் பக்கங்கள் நொறுங்கி விடும்.  அப்படி மெதுவாக எடுத்துப் படித்த கதைதான். ‘சிற்றுண்டிக் கடைக்காரனின் உலகப் பற்று’ என்ற கதை.

            இது ஒரு நான் லீனியர் கதை. மெஜிக்கல் ரியலிஸம் என்றால் என்ன என்பதை இக் கதையைப் படிப்பது மூலம் உணரலாம்.  நான் சின்ன வயதில் இந்தப் புத்தகம் படித்ததால் எனக்குப் பெரும்பாலான கதைகள் ஞாபகமில்லை.

            தற்செயலாக மேலே குறிப்பிட்ட கதையைப் படிக்கும்போது ஆச்சரியப்பட்டேன்.  

            மேஜிக் ரியலிஸம் என்றெல்லாம் சொல்கிறார்களே அதைத் தூக்கிச் சாப்பிடுவதுபோல இந்தக் கதை இருக்கிறதே என்று தோன்றியது.

            சுருக்கமான வடிவில் இந்தக் கதையைக் கூற முயல்கிறேன்.

            இந்தக் கதையைத் தொகுத்தவர் வித்தியாசமான முறையில் தொகுத்துள்ளார்.   

            சின்ன சின்ன தலைப்புகளாகக் கொடுத்து கதையைக் கொண்டு போகிறார்.

            உதாரணமாக 

            ‘ஒரு சிற்றுண்டிக்காரன்’ என்ற தலைப்பைக் கொடுத்து கதையை ஆரம்பிக்கிறார். 

            ஒரு சிற்றூரிலே சிற்றுண்டிக் கடைக்காரன் ஒருவன் இருந்தான்.  அவனுடைய பெயர் பற்றறுத்தான் என்பது.  பெயர்தான் பற்றறுத்தானே தவிர அவனுக்கிருந்த உலகப்பற்று எதையும் விடவில்லை என்று குறிப்பிட்டு சிற்றுண்டிக் கடைக்காரனைப் பற்றி இன்னும் விவரிக்கிறார். அவனுக்கு மனைவி இரண்டு குழந்தைகள் இருந்தனர்.  தன் வாழ்க்கைக்கு வேண்டியதைச் செலவு செய்தது போக  எஞ்சிய பொருளை மனைவிக்குத் தெரியாமல் படுக்கையறையில் புதைத்து வைத்துக் கொண்டு வந்தான்.

            இந்த விபரங்களை ஒரு சிற்றுண்டிக் கடைக்காரன் என்ற தலைப்பிட்டு விவரிக்கிறார் தொகுப்பாசிரியர். 

இரண்டாவது உபதலைப்பு ‘ஒரு துறவி.’  இந்தத் தலைப்பில் ஒரு துறவியை அறிமுகப்படுத்துகிறார். ஒரு துறவியைப் பார்க்கிறான் சிற்றுண்டிக் கடைக்காரன். துறவியின் உடையைப் பார்க்கும்போது பொத்தலாக இருக்கிறது. கடைக்காரன் வேண்டிய உதவிகள் செய்கிறான்.  அவன் இருப்பிடத்தில் இரவு தங்குகிறார்.

            அடுத்த தலைப்பைப் பாருங்கள்.  ‘கோலோகஞ் செல்லுகின்றாயா’ என்ற தலைப்பு.

            இந்தத் தலைப்புகளைப் படித்துக்கொண்டு வந்தாலே என்ன சொல்கிறது இந்தக் கதை என்று தெரிந்து விடும்.  

            கடைக்காரனின் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகியவற்றைப் போக்கி அவனுக்கு அருள் செய்ய நினைக்கிறார் துறவி.

            கடைக்காரனை மனைவி, மகன்களை அவனுடைய உடைமைகளை விட்டுவிட்டு அவருடன் வரச் சொல்கிறார் துறவி.

            ‘கோலோகஞ் செல்ல மறுப்பு’  என்ற அடுத்த தலைப்பு கொடுக்கிறார் கதாசிரியர்.

            துறவியுடன் செல்ல மறுத்து விடுகிறான் கடைக்காரன்.  அந்தத் தருணத்தில் ஒரு காரணத்தைச் சொல்கிறான்.

            அவன் சொல்கிறான்.  தன்னுடைய தற்கால நிலைமையை ஒருவாறு சொல்கிறேன்.  தன்னுடைய இரண்டு சிறுவர்களையும் காப்பாற்றுவதற்கு அவனைத் தவிர வேறு எவரும் இலர். எனவே அவர்களைப் பிரிந்து வருவது கடினம் என்கிறான் கடைக்காரன்.

            அடுத்த தலைப்பு ‘துறவி செல்லுதல்’. தன்னுடைய பிள்ளைகள் மீது அக்கறை கொண்ட கடைக்காரன் மீது இரக்கங்கொண்டார் துறவி. அவன் வேண்டுகோளுக்கு இணங்கினார்.  அவனைத் திரும்பவும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்க வருவதாகக் கூறிப் புறப்பட்டார்.

            அடுத்து ‘மீண்டும் வருதல்’ என்ற தலைப்பில் கதைப் போகிறது. திரும்பவும் வணிகனிடம் கேட்கிறார்.  இப்போது என்னுடன் வர முடியுமா என்று.

            கடைக்காரன் சொல்கிறான் : என்னுடைய இரண்டு பிள்ளைகளைப் பாருங்கள் அவர்கள் மிகவும் கெட்டவர்களாகி விட்டார்கள்.  தீயோர்களுடைய கூட்டுறவினாலும் கட் குடியினாலும் அவர்கள் நான் சேர்த்துவைத்த பொருள்களையெல்லாம் அழித்து விட்டார்கள். அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்து குடும்ப வாழ்க்கையில் அழுத்த வேண்டும் என்பதால் வணிகன் துறவியுடன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வர முடியவில்லை என்று துறவியுடன் போக மறுத்து விடுகிறான்.

            திரும்பவும் எட்டாண்டுகள் பொறுத்து வருவதாகக் கூறிப் புறப்பட்டார் துறவி.

            இப்போது உபதலைப்பு ‘மூன்றாவது முறை வருதல்.’   மூன்றாவது முறை வரும்போது முன்னிருந்த கடைக்குப் பதிலாகச் சிறிய குடிசையொன்று காணப்பட்டது.எளிய மக்களுக்கு வைக்கப்பட்ட ஒரு சிறுகடை இருந்தது. 

            அங்கு அகவை இருபத்தைந்து மதிப்பிடக் கூடிய இளைஞன் இருந்தான். அவனிடம் துறவியார் பழைய பலகாரக் கடைக்காரனைப் பற்றி விசாரிக்கிறார் துறவி.

            தான் அவருடைய மகன் என்றும், என் தம்பி அடுத்த வயலில் உழுது கொண்டிருக்கிறான் என்றும் கூறிப் பக்கத்தில் வயலில் உழுதுகொண்டிருந்த ஓர் இளைஞனைக் காட்டினான்.  மேலும் தங்களைத் துன்பக் கடலில் ஆழ்ந்திவிட்டுத் தங்களுடைய தந்தை காலமாகி ஏழு ஆண்டுகள் ஆகியென என்று கூறுகிறான்.

            அடுத்த தலைப்பு ‘எருதுப் பிறவி.’  அதில் அந்த வணிகன் எருதாகப் பிறந்து இளையமகன் கண்காணிப்பில் உள்ளதாக உணர்கிறார் துறவி.  நண்பகலில் யாரும் இல்லாத சமயத்தில் எருதாக மாறியிருந்த கடைக்காரன் மீது கமண்டலத்திலிருந்து நீரைத் தெளிக்கிறார் துறவி. இப்போது எருது துறவியைப் பார்த்துப் பேசுகிறது. 

            எருது வடிவத்தில் கடைக்காரன் கூறுகிறான்: தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.  தீயவர்களான என்னுடைய புதல்வர்கள் இருவரும் நான் தேடி வைத்த பொருள்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டார்கள்.  இன்னும் இரண்டாண்டுகளில் வறுமை மிகுதிப் பட்டுப் பிச்சையெடுக்கத் தொடங்கி விடுவார்களென்பது திண்ணம். இந்நிலையில் எருதாக இருந்து சிலகாலம் உழுதுகொண்டிருந்தாலாவது அவர்கள் பொருள் தேடிக்கொள்ள மாட்டார்களா என்று காத்துக் கொண்டிருக்கிறேன். எருது சொன்னதைக் கேட்டு எத்தனை அறிவுரைக் கூறினாலும் இவன் திருந்த மாட்டேங்கறானே என்று எண்ணி இன்னும் சில காலம் கழித்து வரலாமென்று அந்த இடத்தை விட்டு அகலுகிறார்.

            ‘நான்காவது முறை வருதல்’ என்ற உபதலைப்பில் இந்தக் கதை மேலும் தொடருகிறது.  பழைய இடத்தைத் தேடி வருகிறார்.  அங்குப் பழைய இடம் காணவில்லை. மேலும் உற்றுப் பார்க்கும்போது ஒரு குடிசை மட்டும் இருக்கிறது.  எலும்பும் தோலுமாக ஒரு நாய் மட்டும் இவரைப் பார்த்துக் குலைக்கிறது. உடனே துறவி அந்தக் குடிசையில் உள்ளவர்களைக் கூப்பிடுகிறார்.  அவர்கள் குடும்ப நலங்களைப் பற்றி விசாரிக்கிறார்.  இறுதியில் அவர்களுடன் இருந்த எருதைப் பற்றி விசாரிக்கிறார். மூத்த மகன் அந்த எருது இறந்து போய் ஓராண்டு ஆகிவிட்டது என்கிறான்.  அது இருந்தவரை காலையில் ஏர் பூட்டினால் இரவு வரை கடுமையாக உழைத்தது.  அது மாதிரியான எருதை இன்னொன்றைப் பார்க்க முடியாது என்கிறான்.

            அந்நாயின் அருகாமையில் போய் யாரும் பார்க்காத சமயத்தில்  தன்னிடம் வைத்திருந்த தூய நீரைத் தெளிக்கிறார்.  அது உடனே துறவியைப் பார்த்து வணங்கியது.  தீய நடவடிக்கையினால் என் பிள்ளைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பொருள்களை இழந்து கொண்டிருக்கிறார்கள்.  இனி எஞ்சியிருக்கும் பொருள்களைக் கள்ளர்களிடம் விட்டுவிடாமல் இருக்க நான் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அடியேன் மீது கருணை புரிந்து இன்னுஞ் சில காலம் பொறுத்துக்கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன் என்றது நாய்.

            மேலும் சில நாட்கள் பொறுத்து வருவதாகக் கூறி அந்த இடத்தை விட்டுச் செல்கிறார் துறவியர். 

 

            ‘ஐந்தாவது முறை வருதல்’ என்ற தலைப்பில் ஐந்தாவதாக வருகிறார் சில ஆண்டுகள் கழித்து துறவி.

            ஆனால் அங்கு ஒரு குடிசைக்குப் பதிலாக இரண்டு குடிசைகள் இருந்தன. மன வேறுபாட்டால் இரண்டு சகோதரர்களும் பிரிந்து விட்டனர். 

            துறவி மெதுவாகப் போய் குடிசையை எட்டிப் பார்த்தார்.  நாய் காணப்படவில்லை. 

            ‘பாம்பு பிறப்பு’ என்ற தலைப்பில் கதை இன்னும் முன்னேறுகிறது.  நாயாக இருந்த கடைக்காரன் தான் நல்ல நிலையிலிருந்தபோது சேர்த்து ஒளித்து வைத்த பணத்தைக் காவல் காக்கப் பாம்பாகப் பிறந்து பாதுகாத்துக்கொண்டிருக்கிறான்.  இதை உணர்ந்தார் துறவி.  அவர் அங்கிருக்கும்போது சகோதரர்களுக்கிடையே சண்டை போட்டுக்கொண்டு வெளியே வந்தார்கள். அவர் துறவியைப் பார்த்தவுடன் தங்களுடைய வெறுப்புகளைத் துறவியிடம் காட்டினார்கள்.  தங்களுடைய இந்த நிலைக்கு இந்தத் துறவிதான் காரணம் என்று நினைத்தார்கள்.  

            ‘ஏ துறவிக் கோலம் பூண்ட நாடோடி.  எங்கட்கு முன் நில்லாதே.  நின்றால் உனக்குக் கெடுதி நேரிடும்’ என்று சொன்னார்கள்.  

            உடனே துறவி அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் வறியவர்களாகப் போய் விட்டீர்கள்.  உங்கட்குப் பொருள்தான வேண்டும்.  உங்கள் பெற்றோர்கள் உயிரோடு இருந்த காலத்தில் அவர்கள் படுக்கையறையாகப் பயன் படுத்திய இடத்தை இப்பொழுது வெட்டிப் பாருங்கள்.  அங்கே மிகுந்த பொருள் இருக்கிறது. அதனை எடுத்துக்கொண்டு நலமுடன் நீங்கள் வாழலாம்’ என்கிறார் துறவி.

            ‘பாம்பைக் கொல்லுதல்’ என்ற உபதலைப்பு.  அவர்கள் இருவரும் பொருள் புதைத்த இடத்தைத் தேடுகிறார்கள்.  புதைத்து வைக்கப்பட்ட பித்தளை யேனத்தின் பக்கத்தில் வெட்டு விழுந்தவுடன் அதைக் காத்துக்கொண்டிருந்த பாம்பு சீறிக்கொண்டு அவர்களை விரட்டியது.  இருவரும் ஓடிப் போனார்கள்.  தங்களுடைய துன்பத்திற்குக் காரணம் துறவிதான் என்று அவரை அடிக்கச் சென்றார்கள்.  துறவி அவர்களைப் பார்த்து பித்தளை யேனத்தின் விளிம்பு கண்ணுக்குத் தெரியவில்லையா? துறவியர் கூறியபடி அவர்களுக்கு பித்தளையேனம் அவர்கள் கண்களுக்குத் தெரிந்தன.  துறவியின் மீது இருந்த சினத்தைப் பாம்பின் மீது மாற்றி, பாம்பை கொன்றுவிட்டு ஏனத்தை வெளியே எடுத்து, அதில் உள்ள பொருள்களை பங்குப் போட்டுக் கொண்டார்கள். 

            கடைசியாக வீடுபேறு என்ற உபதலைப்புடன் கதை முடிகிறது. கடுமையான உலகப்பற்றை மேற்கொண்டிருந்த சிற்றுண்டிக்காரனுடைய உயிரைத் துறவியார் தம்முடைய இருப்பிடத்திற்குக் கொண்டு சென்றார். அவனுக்கு அரசகுலத்தில் சிறந்த பிறப்பை யுண்டாக்கிப் வீடு பேற்றை அடையுமாறு அருள் புரிந்தார்.

            இந்தக் கதையின் நீதியாக ஒவ்வொருவரும் உலகப் பற்றிலிருந்து விடுபடுவதற்கு முயற்சி செய்தல் வேண்டும் என்று கூறப்படுகிறது. 

            உபதலைப்புகளைக் கொடுத்துக் கதை எழுதப்பட்டிருப்பது சிறப்பு.

            சிற்றுண்டிக் கடைக்காரனின் உலகப்பற்று என்ற வித்தியாசமான இக் கதை படிக்கப் படிக்க மெஜிக்கல் ரியலிஸக் கதை போல் படுகிறது.  

Series Navigationநாவல்: முத்துப்பாடி சனங்களின் கதைவீரமறவன்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *