வியாழனுக்கு அப்பால்

நேதாஜிதாசன்

பிச்சை கேட்கும் குழந்தை
காணிக்கை கேட்கும் கடவுள்
லஞ்சம் கேட்கும் அதிகாரி
ரத்தம் கேட்கும் சாதிமன்ற தலைவன்
பணம் கேட்கும் விபச்சாரி
கடன் கேட்கும் அவன்
முத்தம் கேட்கும் மனைவி
பொம்மை கேட்கும் குழந்தை
இறைச்சி கேட்கும் நாய்
மீன்முள் கேட்கும் பூனை
வீடு கேட்கும் தெருவோரகுடிமகன்
மருந்து கேட்கும் வியாதிக்காரன்
என்னை கேட்கும் நான்
என எல்லோரும் இப்போது
எதை கேட்கப்போகிறார்கள்
ஒருவேளை நான் இல்லாமல்போனால்
ஆனால் நிச்சயம் நீங்கள் கேட்டதற்கு
பதிலாக கவிதை உண்டு
அதை உங்களால் படிக்க முடியுமா
என தெரியாது
ஆனாலும் நான் அதை எழுதுவேன்
இவ்வளவு நான் எனக்கு சுமையளித்த காலத்தின் காலில்
கட்டிவிடுவேன் என் கவிதையை
முடிந்தமட்டும் அது காலத்தின் அதிவேக ஓட்டத்தை குறைக்கும் என நம்புகிறேன்
ஏனெனில் என் கவிதைகளுக்கு நிறை அதிகம்
பூமியில் ஓரு நிறை
நிலவில் ஒரு நிறை
வியாழனில் ஒரு நிறை
வியாழனுக்கு அப்பால் ஒரு நிறை
இதை பற்றி கூட கவிதை எழுதுவேன்
அதையும் அந்த நிறையின் முதுகில் கட்டிவிடுவேன்
இப்போது நிறைக்கு நிறையால் நிறை ஏறி நிறைந்து செல்லும்
இந்த நிகழ்வு நடக்கும்போது
எங்கோ ஒரு மரம் காகிதமாகி கொண்டிருக்கும்
நிலவை ஒரு இயந்திரம் படமெடித்திருக்கும்
ஒரு குழந்தை பொம்மைக்கு ஏங்கி அழுதிருக்கும்
ஒரு கழிவறை சுத்தம் செய்யப்பட்டிருக்கும்
ஒரு கைதி விடுதலை ஆகியிருப்பான்
ஒரு கழுகு இரையை கண்டு கொண்டிருக்கும்
இந்த கவிதை கூச்சல் நின்றிருக்கும்

Series Navigationநாமே நமக்கு…கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு அழைப்பிதழ்