விருது நகருக்கு ஷார்ட் கட்

author
0 minutes, 17 seconds Read
This entry is part 11 of 19 in the series 15 ஏப்ரல் 2018

 

 கோ. மன்றவாணன்

விழா நடக்க இருக்கும் மண்டப வாசலையொட்டி பிரமாண்டமான பேனர்களைக் கட்டிக்கொண்டிருந்தனர் ஆட்கள்சிலர். அவர்களை வேலை வாங்கிக்கொண்டிருந்தார் ஓவியர் ரமேஷ்.. பேனரில் செயற்கைப்பற்கள் ஜொலிக்கச் சிரித்துக்கொண்டிருந்தார் நல்லாசிரியர் பாலமுருகனார். ஓவியரின் போட்டோஷாப் திறத்தாலும் வண்ணக்கலவை நேர்த்தியாலும் கார், மோட்டார் சைக்கிளில் போவோரையெல்லாம் திரும்ப வைத்தன அந்தப் பேனர்கள். அதனால் விபத்து நிகழக்கூடிய இடமாக மாறியது அந்த மண்டபம் இருந்த வீதி.

 

அப்போது அங்குவந்த மதியழகன், நல்லாசிரியருக்குப் போட ஆள்உயர மாலைக்குச் சொல்லீட்டீங்களா என்று கேட்ட  போதுதான் தெரிந்தது ஆர்டர் பண்ண மறந்தது. “அவரென்ன நெடுநெடுன்னு வளர்ந்து நிற்கும் நெடுஞ்செழியனா? அண்ணாவைவிட அரையடி குள்ளம்தானே. எந்த மாலையைப் போட்டாலும் ஆள்உயர மாலைதான்” என்றார் சிவபெருமாள்.

 

மாலை ஐந்து மணிக்கெல்லாம் விழா தொடங்கிவிடும். அதற்குள் குளித்து முடித்து, மினிஸ்டர் ஒயிட் சட்டை வேட்டிக் கட்டிப் ப்ரஷா வந்திடலாம்ன்னு நெம்பர் போர்டு இல்லாத பைக்கில் வீட்டுக்குக் கிளம்பினார் ரமேஷ்..

 

ஃஃஃ

அவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். நல்லாசிரியர் பாலமுருகன்னா எல்லாருக்கும் தெரியும். நல்லாசிரியர் விருது அரசாங்கம் கொடுத்ததில்ல.  நிகழ்ச்சிக்கு அவரை யார் அழைச்சாலும் அதில் அவர் பெயருக்கு முன் நல்லாசிரியர்ன்னு போடச் சொல்லிடுவார். அப்படிப் போட்டுப்போட்டு நல்லாசிரியர் ஆனவர் அவர். ஆட்சியில் எந்தக் கட்சி இருந்தாலும் அந்தக் கட்சிதான் அவருடைய கட்சி. இனப்பாசமும் பணப்பாசமும் அவருக்கு அதிகம். இனப்பாசம் என்றால் தமிழினப் பாசம் என்று நினைச்சிடாதீங்க. அவருடைய சாதிப் பாசம்தான் அது. சாதியா பணமா என்று பட்டி மன்றம் வைத்தால் அதற்கும் அவரே நடுவராகிப் பணத்தின் பக்கம் சாய்ந்துவிடுவார். அவருக்குத்தான் நம்ம கவர்மெண்டு தமிழ்க்காவலர் விருதும் நிதியும் கொடுத்திருக்கு. வாட்ஸப் பேஸ்புக் எல்லாம் நிரம்பி வழிந்தன அவர் படத்தோட அந்தச் செய்தி. கூடவே அசல் தமிழன்னா ஷேர் பண்ணவும் என்று தமிழ்டெஸ்ட் வைத்திருந்தார்கள்.

 

சும்மா சொல்லக்கூடாது. அவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம் என்றோர் அமைப்பை நிறுவி, பட்டிமன்றங்கள் நடத்தி வந்தார். அந்தப் பட்டிமன்றங்களுக்கு அவர்தான் தொடர்ந்து நடுவர். பத்திரிகைகளில் அந்தச் செய்திகள் வர, சிறப்பு ஏற்பாடுகள் செய்வதில் அவர் வல்லவர். நடந்தது நடக்காதது எல்லாம் கலந்து அந்தச் செய்திகளில் அவர்மட்டுமே தூக்கலாகத் தெரிவார்.

 

அவருக்கு ஒரு சுயநலம் உண்டு. ஊரில் தான்மட்டும்தான் தமிழ்ப்பணி ஆற்ற வேண்டும். வேறு யாருக்கும் அந்தப் பெருமை போய்விடக் கூடாது என்று. அதனால் என்ன தப்பென்னு கேக்குறீங்களா?

 

இளஞ்சேரன் என்றொருவரும் தமிழ்ப்பணி செய்துவருகிறார். முப்பது நூல்கள் எழுதி உள்ளார். தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளாமல் தமிழை முன்னிலைப் படுத்தி நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். பலருக்கு ஏணியாகவும் தோணியாகவும் இருப்பவர். அவர் எப்போது நிகழ்ச்சி நடத்தினாலும் அவருக்கு மறைமுகமாகப் பலவகைகளில் தொந்தரவு கொடுப்பார். அவருக்கு உதவியாக இருக்கும் நண்பர்களை வலைபோட்டுப் பிடிப்பதில் நிகரற்ற வலைஞர் இவர்தான். பல தமிழ்அமைப்புகளும் தோன்றியவண்ணம் இருக்கின்றன. இரண்டொரு நிகழ்வுகளுக்குள்ளாகவே அந்த அமைப்புகளில் பலரை உருவியெடுத்து மூடுவிழா நடத்திவிடுவார். நல்ல தமிழ்நூல்களைக் கடல்கொண்டதுபோல், நல்ல தமிழ்அமைப்புகள் பலவற்றை இல்லாமல் செய்துவிட்டார்..

 

திருக்குறளைப் பார்த்து எழுதினாலும் பிழையாகத்தான் எழுதுவார் என்பதே அவருடைய தமிழாற்றலுக்குத் தரச்சான்று.  பாலமுருகன் என்ற தன்பெயரைப் பலமுருகன் என்றெழுதிவிட்டுப் பின்னர் சமாளிப்பார் பாருங்க… பலமான முருகன்னு… பல வகையான முருகன்னு… அப்பப்பா அவருடைய தமிழாராய்ச்சிக்குக் தமிழ்க்காவலர் விருது என்னா… பத்ம விபூஷண் விருதே தரலாம்.

 

சரி அதவிடுங்க. யாருக்கு என்ன விருது கொடுத்தா என்ன? கொடுக்காவிட்டா என்ன? விழாவுக்குப் போயிட்டு வருவோம். அழைப்பிதழில் கடைசியில் பெரிய தடித்த எழுத்தில் சிற்றுண்டி உ:ண்டு என்று போட்டிருக்கிறதப்  பாக்கலீங்களா நீங்க?

 

ஃஃஃ

 

நகரில் உள்ள பெரிய பெரிய பிரமுகர்கள் எல்லாரும் வந்த வண்ணம் இருக்கிறார்கள். அவர்களை நல்லாசிரியர் அணைத்துத் தழுவி வரவேற்கிறார்.

 

அதிகாரி மண்டப வாசலில் வருவதை மண்டபத்துள் வைத்திருந்த டிவி திரையில் பார்த்துவிட்டார் நல்லாசிரியர். கட்டிய வேட்டி காலைத் தடுக்கிவிடச் சமாளித்து ஓடினார் அவரை வாசலிலேயே வரவேற்க. உடன் ஓடிவந்த உலகேசன் பையிலிருந்து ஜிகினா சால்வை எடுத்துக் கொடுக்க… அதை அதிகாரிக்கு அணிவித்துக் காமிராவுக்குப் போஸ்கொடுத்தார். அதிகாரியைப் பவ்யமாக அழைத்துச் சென்று மேடையின் முன்வரிசையில் இருந்த மெதுமெது நாற்காலியில் அமர வைத்து அடுத்து வருவோரை வரவேற்க ஓடினார். இந்த வயதிலும் நல்லாசிரியருக்குத்தான் என்ன சுறுசுறுப்பு?

 

அதிகாரி தன் இடதுகை முட்டியை நாற்காலியின் மரப்பிடியில் ஊன்றி, கைவிரல்களைச் சற்றே உள்மடக்கிக் கன்னத்தில் முட்டுக் கொடுத்துக்கொண்டார். அவரது சிந்தனை வட்டம் சுழல்கிறது என்பதற்கு அது அறிகுறி போலும்.

 

ஃஃஃ

அன்றுவந்த நாளிதழ்களைத் தன்அலுவலக மேசையில் விரித்து வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார் அதிகாரி.

 

தமிழ்க்காவலர் விருதுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஒவ்வொரு நாளிதழிலும் வெவ்வேறு பக்கங்களில் வெவ்வேறு அளவுகளில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அப்போது மணி காலை             11. 30 இருக்கலாம். கம்பீரத் தோற்றம் கொண்ட ஒருவர் அதிகாரியைப் பார்க்க வந்தார்.

 

நெடிய திருமால்போல் கருப்பு உருவம். மரபுக்கவிதை யாப்புப்போல வெண்பல் வரிசை. உரத்த சிரிப்பொலி. மடிப்புக் குலையாத வெண்சட்டை வேட்டி அணிந்திருந்தார். ஆங்கில எழுத்து யு(U) வைத் தலைகீழாகத் தொங்கவிட்டவாறு கழுத்தைச் சுற்றித் தோளில் பச்சைத் துண்டு அணிந்திருந்தார். அதிகாரியைப் பார்த்து நெஞ்சருகில் இருகை கூப்பி வணக்கம் தெரிவித்தவாறு எதிரே போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டார். ஒரு நாடக நடிகரின் அத்தனை நளினங்களும் அவரிடத்தில் இருந்தன.

 

“நான் முனைவர் வேல்சாமி. ஐம்பது ஆண்டுக்காலமாகத் தமிழ்த்தொண்டு ஆற்றி வருகிறேன். அய்யா உங்களுக்கே தெரியும். கடல்கொண்ட குமரியில் அன்றிருந்த தென்மதுரையில் முதல் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான் காய்சின வழுதி. கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை அமைத்தான் பாண்டியன் கடுங்கோன். இன்றைய மதுரையில் பாண்டியன் முடத்திருமாறன் மூன்றாம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தான். அதற்குப் பன்னூறு ஆண்டுகளுக்குப் பின்னர் பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச்சங்கம் கண்டார். அடுத்து நூறாண்டு காலம்வரை வேறு தமிழ்ச்சங்கம் இல்லை. ஐந்தாம் ஆறாம் தமிழ்ச்சங்கங்கள் என்று யார்யாரோ ஆரம்பித்து அப்படியே கைவிட்டுவிட்டார்கள். எனவே ஒருநாள் தமிழன்னை என்கனவில் தோன்றி ஏழாம் தமிழ்ச்சங்கம் தொடங்கச் சொன்னார். அதன்படி ஏழாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவியதோடு பத்தாண்டுகளாக விழாக்கள் நடத்தித் தமிழை உலகளவில் வளர்த்து வருகிறேன்” என்று மேடையில் பேசுவதைப் போலவே திருத்தமாகப் பேசினார்.

 

”அட உங்கள அடிக்கடி தினத்தந்தியில் பார்த்திருக்கிறேன். என்ன விஷயம்?

 

நாளிதழில் தங்கள் அறிவிப்பு இன்று வெளியாகி இருந்தது. தமிழ்க்காவலர் விருதுக்கு விண்ணப்பம் கொடுத்துவிட்டுச் செல்லலாம் என்று வந்தேன் என்று சொன்னவர், கட்டைப்பையில் இருந்த மூன்று பைண்ட் செய்யப்பட்ட ஆல்பம் போன்ற கோப்புகளை மேசைமீது எடுத்து வைத்தார்.  அவற்றைப் புரட்டிப்பார்த்த அதிகாரிக்கு வியப்பு மேலிட்டது. பங்கேற்றுப் பேசிய விழா அழைப்பிதழ்கள். ஒருங்கிணைத்து நடத்திய தமிழ்மாநாடுகள். நாளிதழ்களில் வெளிவந்த செய்திக் கத்தரிப்புகள், வண்ணப் புகைப்படங்கள் என விரிந்தன அவை. அவற்றை நிதானமாகப் பார்த்து முடிக்க ஒருநாள் ஆகலாம். படித்து முடிக்க ஒருமாதம் ஆகலாம்.

 

“விண்ணப்பம் இல்லீங்களா?” என்றார் அதிகாரி

 

காலையில் தட்டச்சுச் செய்த விண்ணப்பத்தோடு கணினியில் தயாராக வைத்திருந்த சிறப்பு விவரக் குறிப்புகளில் மேலும் சிலவற்றைச் சேர்த்துப் பிரிண்ட்டெடுத்துக் கொண்டு வந்ததை எடுத்து நீட்டினார். உறையைப் பிரித்துப் படித்துப் பார்த்த அதிகாரிக்கு முனைவர் வேல்சாமி தகுதியானவர்தான் என அறிந்து மகிழ்ந்தார்.

 

“கண்டிப்பா உங்களுக்குத்தான் தமிழ்க்காவலர் விருது. இந்த ஆண்டிலிருந்து விருதுடன் ஐம்பதாயிரம் பொற்கிழியும் உண்டு”.

 

கலகலவென சிரித்த வேல்சாமி, தன்மீசையைத் தானே செல்லமாகத் தடவிக்கொடுத்தபடியே, “அய்யா வீட்ல எல்லாரும் நலம்தானே. அனைவருக்கும் என் நல்லாசிகளச் சொல்லிடுங்க” என்று சொல்லிக் கிளம்பினார் நம்பிக்கையோடு.

 

இரண்டு நாள்கள் கடந்தன.

 

அதிகாரியின் அறைக்குள் நுழைந்தார் சமுத்திரக்கனி. அவரும் கட்டுக்கட்டாக பேப்பர் கட்டிங்குகளை எடுத்துவந்து அதிகாரியிடம் காட்டினார். அவரைப் பற்றிய பத்திரிகைச் செய்திகளை லேமினேஷன் செய்து அழகாக வைத்திருந்தார். நம் மாவட்டத்திலேயே அதிகமான நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிற தமிழறிஞர் அவரென்று அறிமுகப் படுத்திக்கொண்டார்.

 

நாள், வார, மாத இதழ்களில் வெளிவந்த அவர் படைப்புகளைக் காட்டினார்.

 

அவரும் தமிழ்க்காவலர் விருதுக்கு விண்ணப்பம் கொடுத்துவிட்டு அதிகாரியிடம் சொன்னார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தனக்கு நெருங்கிய நண்பர் என்று. அதையேன் சொன்னார் என்று இதுநாள் வரை தெரியவில்லை..

 

“சார்… நான்தான் இந்த மாவட்டத்துல மூத்த எழுத்தாளர்.”

 

“நல்லா தெரியும் சார். தினமலர்ல அடிக்கடி உங்களப் பாத்திருக்கேன். உங்களுக்கு முனைவர் வேல்சாமி பத்தித் தெரியுமா?”

 

“அவன  அறிமுகப்படுத்தியதே நான்தான். பேச்சுத் திறமை நிறைய இருக்கு. என்னவொரு விசேஷன்னா அவன் நாவுல இருந்து வர்றதெல்லாம் பொய் பொய் பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை. அவனும் விண்ணப்பம் கொடுத்திருப்பானே…”

“ஆமாம் கொடுத்திருக்கிறார்.”

“ஏழாம் தமிழ்ச்சங்கம் வைச்சிருக்கிறதா சொல்லி இருப்பானே”

“ஆமாம்.”

“ஒரு நிகழ்ச்சிகூட அவன் நடத்தியதே இல்லீங்க. நடத்தியதா போட்டோ ஷாப்புல போலி அழைப்பிதழ்கள அச்சடித்து வைத்துக்கொண்டு போன வருஷம் கனடாவில் இருக்கும் தமிழர்களிடமிருந்து 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்அமைப்பு அவனதுதான்னு பட்டமும் பாராட்டும் பணமுடிப்பும் வாங்கிட்டு வந்துட்டான்னா பாத்துங்குங்களேங்.”

 

அதிகாரிக்கு நம்ப முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. சமுத்திரக்கனியைப் பார்த்துக்கொண்டிருந்தார் விழியசைவு இல்லாமல்.

 

“சொன்னா நம்ப மாட்டீங்க. அவன் பத்தாம்கிளாஸ் தாண்டல. முனைவர் பட்டத்த அவனே போட்டுக்கிட்டுத் திரியுறான். அடுத்த தடவ வந்தா… எந்த யுனிவர்சிட்டியில் முனைவர் பட்டம் வாங்கினன்னு கேளுங்க. அத்தோடு உங்கப் பக்கம் திரும்ப மாட்டான்.”

 

“இப்படியெல்லாமா ஏமாத்துவாங்க?”

 

“அதுமட்டுமில்லீங்க. கிராமத்து லைப்ரரிகளுக்கு தமிழ்ப்புத்தகங்கள் கொடுக்கப்போறோம். பழைய, புதிய புத்தகங்கள் இருந்தா அனுப்பி வையுங்க என்று பொதுமக்களுக்குப் பத்திரிகையில அறிவிப்பு கொடுத்தான். ஆயிரக் கணக்கில் புக்ஸ் சேந்துச்சி. அந்தப் புத்தகக் குவியிலில் நாற்பதுகளில் ஐம்பதுகளில் பல தமிழறிஞர்கள் எழுதுன புத்தகங்கள் நெறைய இருந்துச்சி. அந்தப் புத்தகங்களின் காப்பி எந்த நூலகத்துலயும் இப்பக் கிடையாது. அதனால அந்தப் புத்தகங்கள  இவன் எழுதியதுபோல் அச்சிட்டுப் புதுசா வெளியிடுறான்…. யாரு கண்டுபிடிக்கப் போறாங்க என்ற தைரியத்துல.”

 

கண்ணாடி ட்ரேயில் வைத்துச் சூடாகக் காபி வந்தது. அதிகாரி காபி கோப்பையை எடுத்து, “சாப்பிடுங்க” என்றார். “அட நான் காபி சாப்படற நேரம் தெரிஞ்சிக் கொடுக்கற மாதிரி இருக்கு”ன்னு சப்புக்கொட்டிச் சாப்பிட்ட சமுத்திரக்கனி, “வசந்தபவன் காபியாச்சே” என்றார் தன் அனுபவ அறிவிலிருந்து.

 

விடைபெறும்போது நம்பிக்கையோடு இப்படிச் சொன்னார்.

 

“தமிழ்க்காவலர் விருதுக்கு என்னைவிட வேறு யாரு இருக்காங்கன்னு எனக்குத் தெரியல. விசாரிச்சுப் பாருங்க… நீங்களே என்னத்தான் தேர்ந்தெடுப்பீங்க”

 

“அப்படியே ஆகட்டும் வாழ்த்துகள்” என்று சொல்லிய அதிகாரி,  அவருக்கு விடைகொடுத்தார்.

 

காபி கொண்டுவந்து வைத்த அலுவலக உதவியாளர் வசந்தா, அதிகாரியிடம் சொன்னார்.

 

“சார்… இதோ வந்துட்டுப் போறாரே சமுத்திரக்கனி எங்கத் தெருவுலதான் இருக்காரு. எங்கப்பாவுக்கு ஃபிரண்டு வேற. நிகழ்ச்சி நடத்தாமலே நடந்ததா பேப்பர்ல செய்தி வரவச்சிடுவாரு. யாராவது விழா நடத்தனாங்கன்னா அங்கப்போய் இவரோட மன்ற பேனர கட்டிவச்சுப் போட்டோ எடுத்துக்குவாருன்னு எங்கப்பா சொல்வாங்க. இன்றைய பொய் நாளைய வரலாறு என்பதுல அவருக்கு அவ்வளவு நம்பிக்கையாம்”

 

உருண்டோடிவிட்டது இரண்டு மாதங்கள். வேறு வேறு வேலைகள் வந்து குவிந்துவிடவே, தமிழ்க்காவலர் விருது செலக்ஷன் பற்றி மறந்தே போய்விட்டது. வேல்சாமி, சமுத்திரக்கனி ஆகியோரின் விடாமுயற்சியின் தொடர்ச்சியாக நடுநடுவே சாதி சங்கங்களிலிருந்து… அரசியல் கட்சியினரிடமிருந்து சிபாரிசுகள் வந்தன என்பது நினைவுக்கு வந்து போனது.

 

ரீங்கரிரிரிரிரிரிரித்தது தொலைபேசி

ஆபிஸ் கண்காணிப்பாளர் தொலைபேசியை எடுத்து ஹலோ என்றார்

………..

“தலைமைச் செயலகத்தில் இருந்து செக்கரட்டரி பேசுறாரு” என்று சொல்லி அதிகாரியிடம் கொடுத்தார்.

“சார்..”

”தமிழ்க்காவலர் விருது வழங்கும் விழாவுக்கு  அடுத்த வாரமே வர்றதா முதலமைச்சர் தேதி கொடுத்திட்டார். ஒங்க மாவட்டத்துல இருந்து ஒருத்தர இன்னைக்கே தேர்ந்தெடுத்து அஞ்சு மணிக்கெல்லாம் ஃபேக்ஸ் அனுப்பிடுங்க. இன்விட்டிசேன் அடிக்கணும்… மத்த மத்த வேலையெல்லாம் செய்யணும். வெரி அர்ஜண்ட்” என்றவர், பதிலுக்குக் காத்திராமல் போனை வைத்துவிட்டார்.

 

இருண்டு பேர்தான் விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள். யாரைத் தேர்ந்தெடுக்கிறது என்று குழம்பினார் அதிகாரி. “முனைவர் வேல்சாமி மோசம்ன்னு சொல்லிட்டுப் போனார் சமுத்திரக்கனி. சமுத்திரக்கனி டுபாக்கூர் என்று வசந்தா சொல்லிருக்கு. யார் பேச்சை நம்பறது?  ஒருத்தர ஒருத்தர் போட்டுக் கொடுக்கறதுதான் நமது தேசிய குணமாச்சே.  யார் மோசம் யார் டுபாக்கூர் என்றால் என்ன? அரசாங்கத்த பொறுத்தவரைக்கும் டாக்குமெண்ட்தான் முக்கியம். ரெக்கார்டுதான் பேசும். அப்படிப் பார்த்தா சமுத்திரக்கனிக்கே விருத கொடுத்திடலாம்”ன்னு முடிவுக்கு வந்த அதிகாரி, சத்யாவைக் கூப்பிட்டுக்  கடிதம் டைப் பண்ணச் சொன்னார்.

 

“சார் உங்களப் பாக்கறதுக்கு ஒருத்தர் வந்திருக்கார். வரச் சொல்லட்டுங்களா?”

“யாரு?”

“தெரியலிங்க… குள்ளமா இருக்காரு”

“உள்ள வரச்சொல்”

 

அறைக்குள் நுழைந்த நல்லாசிரியர் பாலமுருகன், அதிகாரிக்குச் சால்வை ஒன்றைப் போட்டார். அவர் பணம்கொடுத்து வாங்கிய சால்வை இல்லை. அவருக்குப் பிறர் போட்டதை மடித்து வைத்திருந்து இப்போது எடுத்துவந்து போடுகிறார். இலக்கிய வட்டத்தில் அரசியல் வட்டத்தில் இவையெல்லாம் வழக்கமானவைதாம். நல்லாசிரியரே பேச்சைத் தொடங்கினார்.

 

“அமைச்சர் உங்களப் பாக்கச் சொன்னார்.”

“என்ன செய்யணும் நான்?”

“தமிழ்க்காவலர் விருதுக்கு என்னை சிபாரிசு பண்ணனும்”

“நீங்க விண்ணப்பமே தரலியே. கடைசி தேதி வேற முடிஞ்சிடுச்சே”

“நீங்கவேணா அமைச்சர்கிட்ட பேசுங்க”

“வேணாம் வேணாம்”

ஆனாலும் நல்லாசிரியர் செல்பேசியில் அமைச்சரை அழைத்து அந்தச் செல்லை அதிகாரியிடம் கொடுத்தார்.

சார்… வணக்கம்.

…….

சரிசார்…

…..

சரிசார்…

……

சரிசார்…

அமைச்சரும் அதிகாரியும் பேசி முடித்துவிட்டனர்.

 

“விண்ணப்பம் ஒண்ணு எழுதிக்கொடுங்க. உங்களப் பத்தின சிறப்பான   விஷயங்கள எழுதிக்கொடுங்க.. ஆதாரங்கள் இருந்தா அதையும் இணைச்சிடுங்க” என்ற அதிகாரியின் சொற்கள், நல்லாசிரியரின்   செல்வாக்கைத் தெரிவித்தன.

எல்லாம் செய்து முடிக்கப்பட்டது

“சத்யா”

வந்தார்.

“தமிழ்க்காவலர் விருது தேர்வுக் கடிதத்தில் சமுத்திரக்கனி என்ற பேரை எடுத்திட்டு நல்லாசிரியர் பாலமுருகன்னு டைப்செய்திட்டு வாங்க.  உடனே ஃபேக்ஸ் பண்ணனும்.”

 

ஃஃஃ

கடந்த வாரம் சென்னையில் தமிழ்க்காவலர் விருதை முதலமைச்சர் திருக்கரங்களால் பெற்றுத் திரும்பிய நல்லாசிரியருக்கு இன்று மண்டபத்தில் பாராட்டு விழா. அதற்குப் பார்வையாளராகச் சென்ற அதிகாரிதான் விருது தொடர்பான நினைவுகளை அசைபோட்டுக்கொண்டிருந்தார்.

 

வீட்டுக்குச் சென்றிருந்த ஓவியர் ரமேஷ் மேக்கப் பொலிவோடு வெள்ளையும் சள்ளையுமாக வந்து என் அருகில் அமர்ந்துகொண்டார்.

 

“நம்ம மாவட்டத்துல தமிழ்ச்சேய்னு ஒருத்தர் இருக்கார். பொறியியல் பட்டம் பெற்றவர். புலவர் பட்டமும் பெற்றவர். ஆட்சிச்சொல் அகரமுதலி எழுதிச் சொந்தச் செலவில் வெளியிட்டு, எல்லா அலுவலகங்களுக்கும் இலவசமாகவே கொடுத்திருக்கார். மின்னியல் தொடர்பான அனைத்துக் கலைச்சொற்களுக்கும் தமிழ்ச்சொற்களைக் கண்டறிந்து அதற்கொரு அகராதி போட்டுள்ளார். எளிய முறையில் எல்லாரும் இலக்கணம் கற்கலாம் என்று புத்தகம் போட்டுள்ளார். சங்க இலக்கியங்கள் குறித்துத் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறார். அவருக்குத் தமிழ்க்காவலர் விருது கொடுத்திருக்கலாம்” என்றேன்.

 

“ அவரு விண்ணப்பம் கொடுத்திருக்க மாட்டாரு.  விருதுக்கு விண்ணப்பிக்கச் சொல்லும் அறிவிப்பைக்கூடப் பாத்திருக்க மாட்டாரு” என்றார் ரமேஷ்.

 

“தகுதியானவர்கள் விண்ணப்பம் கொடுத்திருந்தா மட்டும் என்ன செலக்ட் பண்ணவா போறாங்க?” என்ற என் கேள்வியின் உட்பொருள், அந்த அதிகாரிக்குத் தெரிந்தா ஒப்புக்கொள்வார்.

 

ஃஃஃ

கூட்டம் மண்டபத்தில் நிரம்பி வழிந்தது. சிறப்புப் பேச்சாளராக வந்த சினிமா பாடலாசிரியர் சிரிக்கச் சிரிக்கப் பேசினார். அந்தப் பேச்சில் நல்லாசிரியரின் தமிழ்காப்புப்பணியைக் குறிப்பிட அவரிடத்தில் தகவல் எதுவும் இல்லை.

 

-கோ. மன்றவாணன்

 

Series Navigationதமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழாமருத்துவக் கட்டுரை தொடர் எளிய மூக்கு அழற்சி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *