வெகுண்ட உள்ளங்கள் – 12

author
0 minutes, 3 seconds Read
This entry is part 12 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

கடல்புத்திரன்

கனகன் கடலால் வந்து குளிக்கிற போது பூமணி படலையைத் திறந்து கொண்டு ஓடி வந்தாள். “அண்ணை தெரியுமே, சுலோ செத்திட்டாளாம்” என்று கத்தி விட்டு “கமலம், கமலம்” என்று உள்ளே ஒடினாள்.

அவனுக்கு அந்தரமாக இருந்தது. பர,பரவென சைக்கிளை ஒழுங்கு படுத்தி விட்டு காசையும் எடுத்துக் கொண்டு ஒடினான்.அவன் சந்தைக்கு போற வழியில் குவனை இருந்தது. சுந்தரம் மாஸ்டரின் தோட்டக் காணியில் இருந்த பாழுங் கிணற்றில் இருந்து பிரேதத்தை எடுத்து அருகில் வைத்திருந்தார்கள். காலைப் போதில், தண்ணிர்  இறைக்க வந்த மாஸ்ரரின் மக்கள், முதலில் பழைய கிணற்றையும் எட்டிப் பார்த்திருக்கிறார்கள். கண்டு விட்டு ஆட்களைக் கூட்டினார்கள். அவர்களுக்கு அதிர்ச்சியில், செத்து மிதக்கிறாள் என்பது புரியவேயில்லை. ‘தத்தளிக்கிறாள்’ என்று நினைத்தார்கள். பிறகு தான் இறந்து விட்டது தெரிந்தது.

அக்கிணற்றிலிருந்து உடலை எடுக்க சிறிது தயக்கம் நிலவியது. முன்பும் யாரோ ஒருவன் அதில் விழுந்து தற்கொலை செய்திருந்தான். ‘பேய்க்கிணறு’ என்று சொல்லப்பட்டது. அதனாலே மாஸ்ட்ரும் வேறு ஒரு கிணறு பக்கத்தில் தோண்டியிருந்தார். இரண்டு கிணறுகளிலும் நல்ல தண்ணிர் வந்ததால் ஊரார் , புதிய கிணற்றில் நீர் எடுப்பதற்கும் ,குளிப்பதற்கும் அங்கே வருவது வழக்கமாக இருந்தது. பழையக் கிணற்றில்.என செய்தி பரவிய போது சனம் அங்கே திரண்டு விட்டது. 

அக்கின்ணற்றில் இருந்து அவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு எடுக்க‌ மனிதத் தனம் செத்துவிட்டது… யாரோ ஒருத்தன் இறங்கி அவள் இடுப்பில் உருகுதடம் மாட்டி விட, இழுத்து வெளியே எடுத்தார்கள்.

எதிர்ப் புறத்தில் தன்னுடைய மரவள்ளிப் பாத்தியில் வந்த‌ சிவகாமியம்மா கத்தினாள். “இங்கே இரத்தக் கறை, தடிகள் முறிந்து கிடக்கு. எடியே விசாலாட்சி உவங்கள் பிள்ளையை இங்கை போட்டு மல்லுக் கட்டியே இழுத்துக் கொண்டு போய் கிணற்றில் போட்டிருக்கிறாங்கள்” விசாலாட்சியும் “ஓமணை, பெடிச்சியை கொன்றுதான் போட்டாங்கள்” என்றாள்.

சுலோவின் அயல் வீட்டுக்காரி சரசம்மா முணுமுணுக்கிற மாதிரி தெரிவித்தாள். “நேற்றிரவு பிந்தியே இவன் வந்தான். ஒரு பன்னிரண்டரை ஒண்டு இருக்கும். சண்டை நடந்தது. பெட்டைச்சி அழுது கொண்டிருந்தாள். பாண் வாங்கியாடி என்று அவன் சத்தம் போட்டான். அர்த்த சாமத்தில் மூர்த்தி கடைக்கு வெளிக்கிட்டவள் இப்படிக் கிடக்கிறாள்” வருத்தப் பட்டாள்.

மூர்த்தி அவ்விடத்தாள் தான். சிறிய வயல் வெளியைக் கடக்கிற அடுத்த பகுதியில், வீடு ஒன்று மலிவாகக் கிடைக்க வாங்கி குடியிருப்பை மாற்றிக் கொண்டவர். அதிலேயே சிறிய கடையும் வைத்திருந்தார். சிகரெட், மற்றும் இரவில்,அவசரத்திற்கு சாமான் வாங்க அவர் கடைக்கே குலனை ஆட்கள் ஒடுவார்கள். ஒரளவு நியாயமாய் விற்றதால் கடைக்கும் நல்ல பேர். பெரிதாக லாபம் வைத்து விற்காததால் கடை வருமானம் போதியதாக இருக்கவில்லை. எனவே பகலில் பலரைப் போல் அவரும் மேசன் வேலைக்குப் போய் வருவார். குண்டு வீச்சு  நடக்கும் போது மேசன் வேலை எங்கே நடக்கும்? கடையில் தான் பெரும்பாலும் நின்றார். தமது கடைப் பெயர் அடிபட “பெட்டைச்சி என்ரை கடைக்கு சாமத்தில் வரவில்லை” என்றார். “அதற்கிடையில் தான் கொன்று விட்டார்கள்” என்று சரசம்மா தளதளத்தாள்.

ராஜன் தலையைக் கவிழ்த்திருந்தான். ராணி, “என்ரை சுலோ, ஐயோ.சுலோ. என்னடியம்மா இப்படிச் செய்து விட்டாய்” என்று கரைந்து அழுது கொண்டிருந்தாள். கனகனுக்கும் துயரமாக இருந்தது.’கொலை, கொலை என்று ஊர் அழுத்திச் சொல்லிற்று. அதில் அவர்களுக்கு இருந்த ஆத்திரம் தெரிந்தது.

ராணியின் புருசன் கேச‌வன் செய்தியை விஜயனுக்குத் தெரியப்படுத்தினான். வானிலே பெடியளுடன் வந்திறங்கிய அவன் முன்னெச்சரிக்கையாக வாசிகசாலைக் குழுவை அணுகினான். அவன் இன்னொரு இயக்கப் பிரதிநிதி.

“நாங்க பிரேதபரிசோதனை செய்ய விரும்புறம் அனுமதி தரவேணும்” தலைவர் வாயைப் பொத்திக் கொண்டு அழுதார். “எங்களை மீறின விசயங்கள்” என்றார்.
“இரண்டு இரண்டரைக்கிடையில் திருப்பி ஒப்படைப்பம்” என்றவன் “டேய் வானில் ஏற்றுங்கடா” என கட்டளையிட்டவன். ராஜனையும் கைது செய்து முன் சீட்டில் ஏத்தினான். சனம் கலையத் தொடங்கி விட்டது.

கனகன் அப்படியே சந்தைக்கு போய் விட்டான். “சீ என்ன கொடூரம்? அவனுக்கு மனைவி மேல் இனம் புரியாத காதல் வந்தது.

சந்தையில் குஞ்சனைக்  கண்டான். அவனை விட நாலு,ஐந்து வயசு இளையவன். ‌ அயலிலே சற்று தொலைவில் இருந்த‌ அவனின் அண்ணனின் கடைக்கு சாமான்கள் வாங்க வந்திருந்தான். சைக்கிளில் வைத்துக் கட்டிக் கொண்டு இருவரும் திரும்பினார்கள். வழியில் “டேய், நீ யாரையும் விரும்பி இருக்கிறியா?” என்று கேட்டான். அவன் சிரிக்க, “ டேய் யாரையும் காதலிச்சிடாதை பிறகு கஷ்டம்” என்றான் கனகன்.

“அண்ணே, உன்ர மாமன் வீட்டில் கசிப்பு பார்ட்டி நடந்ததாக கதைக்கினம். உண்மையோ?” என்று இவனைக் கேட்டான். நண்பனின் தம்பி ஆனாலும் அவனும் வேறொரு இயக்கத்தில் இருப்பவன். அவன் கடமைகள் வேறு என்றது கண நேரத்தில் நினைப்பு வர, “தெரியல்லையே” என்று பதிலளித்தான்.

வீட்டுக்கு வந்தபின் “கமலம் நேற்று உங்கப்பன் தொழிலுக்குப் போகலையா?” என்று கேட்டான்.‘போயிருக்கமாட்டார். நான் சொன்ன போதே. உங்க நண்பர்களிட்ட சொல்லியிருக்கலாம். ராஜன் அங்கே தான் இருந்திருப்பான்” என்றாள். “எங்கட வீட்டிலே ஏதோ விசேசம்”என்று சொல்லி இருந்தாள்.அவன் அதை ‌காதிலே வாங்கிக் கொள்ளவில்லை.அவளுடைய அப்பனின் பேரைச்  சொன்னாலே அவனுக்கு இப்பவெல்லாம் பிடிப்பதில்லை.

நாட்டு அரசியலை விட குடும்ப அரசியல் மோசமானதாகப் பட்டது. ஒருவேளை நகுலனுக்கு, அல்லது அன்டனுக்குச் சொல்லியிருந்தால் சுலோ தப்பியிருப்பாளோ? அல்லது அவள் அப்பாவியாக  இருக்கப் போய்த் தான் இந்த முடிவைத் தேடிக் கொண்டாளோ?

விஜயனும் அச்செய்தி அறிந்து அவர்கள்த் தேடி வாசிகசாலைக்கு வந்தான். “இவன் யார் வீட்டில் இருந்து கசிப்படித்தவன் என்று தெரியுமோ?” எனக் கேட்டான். “தெரியாது” என்று குழு சொன்னது.

“டேய், உங்களுக்காவது ஏதாவது தெரியுமா” என கனகன் தொட்டு நின்ற பெடியள் செற்றைப் பார்த்துக் கேட்டான். அவர்களும் துப்புக் கொடுக்க விரும்பவில்லை. அவனும் மெளனமாக இருந்துவிட்டு வீட்டே வந்தான்.

பெண் பிரதிநிதி போல் கமலம் கேட்ட கேள்விக்கு சரியான பதில் கனகனால் சொல்லமுடியவில்லை. “அவள்  உண்மையிலே கொல்லப்பட்டால் எவரும் ஒன்றும் செய்யப் போவதில்லையா?” சமூகக் கட்டுப்பாடுகளை என்னால் மீற முடியவில்லை என  …கழிவிரக்கமாக நினைத்தான்.

“பெண்கள் அமைப்பு என்று ஏதாவது அமைத்து வழக்கு மன்றம் நடத்தாத வரைக்கும் உடந்தையாக இருப்பது தொடரப் போகிறது” என்றான் அவன். அவள் துயரத்துடன் சிரித்தாள்.

பின்னேரம், சவம் வந்துவிட்டதாக செய்தி வந்தது. மனம் கேளாமல் அவனும் செத்த வீட்டுக்கு போனான். ராஜனை கிரியைகள் செய்ய அனுமதித்திருந்தார்கள். அங்கே நகுலன், திலகன், லிங்கன் என நண்பர்களைப் பார்த்த போது அந்த விசயம் எல்லோரையும் பாதித்துவிட்டது தெரிந்தது.

“மச்சான், மன்னி உன்னைக் கூப்பிட்டவ. போகேக்கை வந்திட்டுப் போ” என்றான் கனகன்.

புனிதத்துக்கு தம்பியை கன நாளைக்குப் பிறகு கண்டபோது கண்ணிர் வந்தது. அவனும் வீட்டுக்கு துப்புரவாகப் போறதில்லை, என்று அறிய அவளுக்குத் துயரமாக இருந்தது. “நீயும் என்னைப் போலாகி விட்டாய்” என்று கரைந்தாள்.

அவன் என்ன பதில் சொல்வான்? கனகனைப் பார்த்து மெல்லச் சிரித்தான். அவர் குசினிக்குள் நுழைந்து தண்ணிரை அடுப்பில் வைத்தார்.

அவர்கள் திறந்த மண் விராந்தையில் இருந்தார்கள். பாபு அவன் மேல் ஏறி பிச்சுப் பிடுங்கிக் கொண்டு இருந்தான். கலாவை கனகன் தூக்கி சமாளித்தான்.

படலையடியில் செல்வமணி அவர்களை அனுதாபத்தோடு பார்த்து விட்டு கடந்து போனாள். தொழிலுக்கு ஆயத்தம் செய்திருந்த முருகேசு “தம்பி இண்டைக்கு கடலுக்குப் போகலையோ?” என்று கேட்டான்.”மனசு சரியில்லை அண்ணை, போகேலை” என்றான். அவன் திலகனை ஆதரத்துடன் பார்த்தான் ‘தம்பி தீவுப் பக்கமோ இப்போ?” என்று விசாரித்தான். ‘ஓம்’ என்று தலையாட்டியவன் பார்வை செல்வமணியைத் தொடர்ந்து போவதைப் பார்த்து கனகன் பெருமூச்சு விட்டான்.

முருகேசு போன பிறகும் கன நேரமாய் அங்கே கதைத்துக் கொண்டிருந்தஈர்கள். அவர்களுக்கிடையில் ஏதும் தனிப்பட கதைக்க விரும்பலாம் என்ற நினைப்பு வர “அப்ப திலகன் நான் வாறன்’ என்று விடைபெற்றான்.

அடுப்படி அலுவல்களை முடித்துவிட்டு வந்த கமலம் “அக்காவும், தம்பியும் என்னவாம்?” என்று கேட்டாள். “வேறென்ன அவவுக்கு அவன் மேல் பாசம் கூட!” என்றான்.

“இயக்கத்தைவிட்டு இவயளால் விலகவே முடியாதா?” என்ற பழைய கேள்வியைத் திரும்பக் கேட்டாள். “அவயள், விலகிறதை ‘பிழை’ என்று கூறியே அரசியல் பேசுகிறார்கள். அப்படி வந்தாலும் கூட‌, சூழல் நல்ல படியாய்யா இருக்கிறது?, சரியான முறையில் போராட விட்டாலும் எதிரியால் சாகமுன், இவங்கள் ஒருத்தருக்கொருத்தர் அடிபட்டே செத்துப் போயிடுவாங்கள் போலயிருக்கிறது” என்றான். ஆயுதம் மிக்கவர் ’சமூக விரோதிகள்’ ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சாட்டி அடிபடுறதாகவல்லவா வெளியில் இருக்கிறது,

  ‘இயக்கம்’ என்றதால் விலகினால் தமக்குள்ளே எதிர் வினையாற்றும் தடங்கலும் இருக்கிறது. எப்படி பகைமை பாராட்டுறாங்களோ தெரியாது? இதனா லே, எல்லாம் மக்கள், பெடியள் உறவுகள் முறிகின்றன. எவருமே முற்போக்காக செயற்படாட்டி… சீரழிவு தான் மிஞ்சும்” . அட, நான் கூட அரசியல் பேசுகிறேனே? என்ற  நினைப்பு அவனுக்கும் ஆச்சரியத்தை மூட்டியது. அவன் பேசுவது ஒன்றுமே விளங்காததால் அவள் அவன் அணைப்பில் உறங்கிப் போனாள்.   

Series Navigationஒரு கரும்பறவையைக் காணும் பதிமூன்று வகைகள்‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *