வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய “சீதை பேசுகிறேன்” எனும் நூல் இப்போது விற்பனையில்.

Spread the love

நூல் பற்றி முன்னால் பேராசிரியர் H. பாலசுப்ரமணியம் அவர்கள் தனது அணிந்துரையில் கூறியது…

“பஞ்சவடியில் ராவணன் கவர்ந்து செல்லும் கட்டம் தொடங்கி, வானரப் படையுடன் இலங்கை வந்த ராம-லட்சுமணர்கள் ராவணவதம் முடித்து சீதையை மீட்பது வரையிலான கதையை கவிஞர்கள் கதையோட்டமாக வருணித்துச் செல்கிறார்களே தவிர, அந்தப் பனிரென்டு மாத இடைவெளியில் சீதைக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி விசேஷமாக அக்கறை கொள்ளவில்லை. குரூரமான ராட்சசிகள் மத்தியில், இடையிடையே ராவணனின் பசப்பு வார்த்தைகளையும் அச்சுறுத்தல்களையும் தாங்கிக் கொண்டு, தான் வாழ்ந்த இருள் நிறைந்த வாழ்க்கையை, தன் மனதின் எண்ண ஓட்டங்களை, சீதை ஒருவளால் மட்டும் தானே விபரமாக எடுத்துக் கூற இயலும். ஆனால், சீதையை பொறுமையின் சிகரமாக, பேசாமடந்தையாக மட்டுமே கவிஞர்கள் அமர்த்தி விட்டார்கள். இது சீதை என்ற ஈடிணையற்ற பாத்திரத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியே.

சீதைக்குப் பேசவா தெரியாது? அனுதினமும் சாத்திரங்கள் குறித்து பட்டிமன்றம் நடத்திய ஜனகமகாராஜாவின் மகள் சீதை. வேத சாஸ்திரங்களில் பயிற்சியுடன், வாள்வீச்சிலும் சொல்வன்மையிலும் தேர்ந்தவள். வனவாசம் செல்லப் புறப்பட்ட கணவர், தன்னை உடன் அழைத்துச் செல்லத் தயங்கியபோது, சீதை அசைக்கமுடியாத வாதங்களை முன்வைக்கிறாள், அவற்றைக் கேட்ட ராமபிரான் அயர்ந்து போகிறார். கடைசியாக ஜனகநந்தினி வலுவான அஸ்திரத்தைப் பிரயோகிக்கிறாள். “நீங்கள் சிவதனுசை முறித்து விட்டது கண்டு மகிழ்ந்து தந்தையார் என்னை உங்களுக்கு மணம் செய்து கொடுத்து விட்டார், உங்களை ஆண் வடிவில் பெண் (ஸ்திரியம் புருஷ விக்ரஹம்) என்று அவர் அறிந்திருக்கவில்லை” இவ்வாறு இராமனின் கோழைத்தனத்தைக் குத்திக் காட்டுகிறாள். அது மட்டுமல்ல, மரவுரி தரித்து கானகம் செல்லப் புறப்பட்ட போது கெளசல்யா தேவி சீதையிடம் இராமனுக்கு நன்கு பணிவிடை செய்யும்படி அறிவுரை கூறவே, சீதை “மிதிலையில் என் தந்தையார் இதையெல்லாம் நன்றாகக் கற்பித்திருக்கிறார்” என்று பணிவுடன் விடையளிக்கிறாள்.

பஞ்சவடியில் பொன்மான் மீது ஆசைப்பட்டு நாயகனைத் தூண்டி வேட்டைக்கு அனுப்பியதும், மாரீசனின் மாயக்குரலை ராமனுடையது என நினைத்து லட்சுமணனை வற்புறுத்தி அனுப்பியதும் தான் சீதை செய்த இரு பெரும் தவறுகள். அதனால்தானே தனக்கு இத்தகைய துன்பங்கள் வந்தன என்று அரற்றவும் செய்கிறாள். அதே சமயம் இவ்விரு தவறுகளும் நேரவில்லையெனில் ராமாயணக் கதை வனவாசத்துடன் முடிந்திருக்கும். காரிய காரணங்களை ஆய்ந்து நிதானமாகச் செயல்படும் மூவருமே தவறு செய்கிறார்கள் என்றால் அதை விதியின் விளையாட்டு என்றே கொள்ள வேண்டும்.

கதையின் இந்த திருப்பத்திலிருந்து தொடங்கி ராவணவதம் முடிந்து சீதை மீட்கப்படுவது வரையிலான நீண்ட இடைவெளியில் நிகழும் சம்பவங்கள் அனைத்தும் சீதையுடன் சம்பந்தப்பட்டவை. அதன் ஒவ்வொரு நிகழ்விலும் சீதையின் மனநிலை எவ்வாறிருந்தது, அவற்றுடன் எவ்வாறு எதிர்வினை புரிந்தாள், தன்னைக் காத்துக் கொள்ள எத்தகைய வியூகங்கள் வகுத்தாள் என்பனவற்றை இந்நூலாசிரியர் சீதையின் வாய்மொழியிலேயே பதிவு செய்திருக்கிறார்.

ஆக, சிறையிலிருந்த செல்வி சீதையின் சொல்லாடலை, ஓராண்டுக் காலமாக அவள் பட்ட அவதிகளையும் துயரங்களையும் சீதாப் பிராட்டியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்த பெருமைக்குச் சொந்தக்காரராகி விட்டார் எனது நண்பர் கிருஷ்ணமாச்சாரி. இது ஒரு வித்தியாசமான நூல்”

இந்தியாவில்வி லை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00

இந்நூலின் ஆசிரியர் அவ்வை தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக பணியாற்றியவர் என்பதை சொல்வதில் பெருமை கொள்கிறோம்.

ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும்.

நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள்.

இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் உங்கள் முகவரியை அனுப்பவும்.

Series Navigationஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்திருப்பூர் தொழில் துறை இடி விழுவதைத் தவிர்க்க வேண்டும் “ திருப்பூர் மாவட்டச் சிறப்பிதழ்” வெளியீட்டு விழா