வெண்ணிற ஆடை

Spread the love

 

மரணத்திடம்

நீ தோற்றாயாம்

பொய்

மரணத்திடம்

தோற்றிருந்தால்

ஒரு மனிதச் சுனாமிக்கு

நீ மையமானது எப்படி?

 

உன் கரைகளைக்

கடக்கும்போதுதான்

புல்லாங்குழல் ஊதுகின்றன

புயல்கள்

 

பூகம்பங்கள்

பூக்களைச் சொரிந்தன

உன் பாதங்களில்

 

உன் மின்னல் சொடுக்கில்

மௌனித்துப் போயின

இடிகள்

 

ஒரு பக்கம்

மலைகளைப் புரட்டினாய்

மறு பக்கம்

மயிலிறகால்

மக்களை வருடினாய்

 

கடிவாளமிட்ட

சிங்கங்கள்

சாத்தியமாக்கினாய்

 

வானவில்லும்

வர்ண ஜாலங்களும்

தோற்றுப் போயின – உன்

வெண்ணிற ஆடையிடம்

 

வெளிச்சங்களைத்

தண்டிக்க

சட்டங்களுக்குச்

சக்தியில்லை

சட்டம் ஓர் இருட்டறை

 

நீரை உருட்டிவிட்டு

மார்தட்டின மலைகள்

நீ வீழ்ந்து வென்றாய்

நீர்வீழ்ச்சியாய்

 

ஒற்றைச் சக்திகள் சாத்தியமே

ஒற்றைச் சூரியன்

ஒற்றைச் சந்திரன்

ஒற்றை நீ

 

அமீதாம்மாள்

 

 

Series Navigationபாரதியாரின் நவீனத்துவம்சோ – மானுடத்தின் பன்முகம்